பாகம் - 1
மார்கழி மாதத்தில், கும்பகோணத்தில் உள்ள ஒரு அக்ராஹாரத்தில் ஒரு நாள் காலை 5 மணி போல், 10 அடி தூரம் தாண்டிப் பார்க்க முடியாத படி மூடுபனி. அந்த அக்ராஹாரத்தின் ஒரு முனையில் இருக்கும் பெருமாள் கோவிலின் மணி அடித்தது. பெருமாள் கோவிலில் இருந்து சுப்ரபாதம் கேட்டது. அப்போது, ஒரு பருவ வயது வாலிபன், அந்த பெருமாள் கோவிலின் பக்கத்தில் இருக்கும் திருப்பத்திலிருந்து வேகமாக சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்தான். எவ்வளவு வேகமாக சைக்கிளை மிதிக்க முடியுமோ, அவ்வளவு வேகமாக மிதித்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக, அந்த வீடுகளை எட்டியும் பாராமல் ரோட்டை மட்டுமே பார்த்தப்படி, பேப்பரை தூக்கி வீசிக் கொண்டு வந்தான். பல வீடுகளில் பேப்பர் சரியாக சென்று விழுந்தது. அனால் சில வீடுகளில், அப்படி இல்லை. இருந்தும் அந்த வாலிபன் அதனைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல், வேகமாக சைக்கிள் ஒட்டியபடி அடுத்த வீட்டிலும் அதே மாதிரி பேப்பரைத் தூக்கி வீசினான். திடீரென்று சைக்கிளின் வேகம் குறைய துவங்கிற்று. அந்த வாலிபன் சைக்கிளை மிதிப்பதை நிறுத்தி விட்டு, பிரேக் அடித்து, எவ்வளவு மெதுவாக உருட்ட முடியுமோ, அவ்வளவு மெதுவாக உருட்டிக்கொண்டே 3 வீடுகளுக்கு பேப்பரை வழக்கம் போல தலையை திருப்பாமல் தூக்கி வீசினான். கடைசியாக ஒரு வீட்டிற்கு பேப்பர் போடும்போது, அவன் தலை முதல் முறையாக அந்த வீட்டின் பக்கம் திரும்பியது. சைக்கிளும் நிற்கின்றதா அல்லது நகர்கின்றதா என்று அறிய முடியாத வேகத்தில் சென்றது. அவன் அந்த வீட்டை எட்டிப் பார்த்த படியே அந்த வீட்டினுள் பேப்பரை போட்டு விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி இருந்த தலையை நேராக்கி, சைக்கிளின் மிதிக்கட்டையை ஓங்கி அழுத்தினான். சைக்கிளின் வேகம் மீண்டும் கூடியது. மூடுபனியை கிழித்து கொண்டு அவன் சைக்கிள் கண் இம்மைக்கும் நேரத்தில் அக்ராஹாரத்தைத் தாண்டியது.
சிறிது நேரம் கழித்து, பால் பாக்கெட் போடுபவனும், அதே போன்று, எல்லா வீட்டிலும், வண்டியை எப்போது நிறுத்தினான்; பால் பாக்கெட்டை எப்போது போட்டான்; மீண்டும் வண்டியை எப்போது எடுத்தான் என்று சொல்ல முடியாத வேகத்தில், அரக்கப் பறக்க போட்டுக்கொண்டு இருந்தான். அவனும் அதே போன்று, அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு 3 வீடுகளுக்கு முன், வேகத்தை குறைத்தான். குறிப்பாக அந்த ஒரு வீட்டிற்கு பால் பாக்கெட் போடும்போது, சாவகாசமாக வண்டியை நிறுத்தி, மாமனார் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளை போல் அலட்டிக் கொள்ளாமல் பால் பாக்கெட்டை எடுத்து, வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தபடி, மெல்ல நடந்து வீட்டின் கேட்டில் உள்ள கூடையில் வைத்து விட்டு, ஒரு சோகம் கலந்த முகத்துடன், மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினான்.
5 நிமிடம் கழித்து ஒரு 75 வயது தாத்தா, அந்த குறிப்பிட்ட வீட்டின் எதிர் வீட்டில் இருந்து வெளியே வந்து ஸ்வெட்டரையும், மப்ளரையும் போட்டுகொண்டு, குளிரைப் பொருட்படுத்திடாமல், அந்த வாலிபன் வீசிச்சென்ற பேப்பரை தன் கையில் எடுத்து, தன்னுடைய மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி, வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்தார். வயதாகி விட்டதால் மூக்கு கண்ணாடி போட்டும் பார்வை சற்றே மங்கலாக தெரிந்ததால், கண்களை உருட்டி உருட்டி, பேப்பரை படிக்கும் சாக்கில், எதிர்த்த வீட்டை பார்த்தபடியானார். 2 நிமிடம் கழித்து ஒரு பெண்மணி அதே வீட்டின் கதவுகளை மீண்டும் திறந்து, கையில் ஃபில்டர் காபியை ஆத்தியபடி வந்து, அந்த ஃபில்டர் காப்பியை அந்த பெரியவரிடம் கொடுத்து, 'ஏன் மாமா இப்படி பனில வந்து உக்காந்துட்டுருக்கேள்? ஜன்னி புடிச்சிக்க போகுது. உள்ள வாங்கோ!' என்று கூற அதை காதில் வாங்காத படி அந்த தாத்தா, மும்முரமாக பேப்பர் படிக்கும் நாடகத்தை நடத்தினார். சொல்லி பாடில்லை, என்று உணர்ந்த அந்த பெண்மணி, 'என்ன சொக்குபொடி போட்டாளோ தெரியல! 18 வயசு அம்பில இருந்து இருந்து பல்லு போன கிழவன் வரைக்கும், அவ பின்னாடியே மந்திரிச்சு விட்ட மாதிரி சுத்துறா' என்று யாரையோ சலித்துக்கொண்டு, வீட்டினுள் நடையை காட்டினாள்.
திடீரென்று அந்த வீட்டின் ஜன்னலின் கொக்கியை யாரோ கழட்டுவது போல் சத்தம் கேட்டது. அனால் ஜன்னல் திறக்கவில்லை. சற்றே உற்று பார்த்தால், ஜன்னலின் இடையில் இரு கண்கள் மட்டும் தெரிந்தது. அது வேறு யாரும் இல்லை, தாத்தாவிடம் காப்பியை கொடுத்து விட்டு, எதிர் வீட்டைப் பார்த்து யாரையோ சலித்து கொண்ட பெண்மணியின் கணவன் தான். மனைவியிடம் திட்டு வாங்குவதைத் தவிர்ப்பதற்காக, ஜன்னலை முழுவதும் திறக்காமல், மூடி இருப்பதை போல ஒரு காட்சிப் பிழையை உருவாக்கி, எதிர் வீட்டை ஆவலாக எட்டி பார்த்து கொண்டிருந்தார்.
திடீரென்று, அந்த குறிப்பிட்ட வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பனியும், ஃபில்டர் காபியின் ஆவியும் படிந்து, மங்கலான கண்ணாடியை மீண்டும் அவசரமாக துடைத்துக்கொண்டு தாத்தா தன்னுடைய கண்களை விரித்து ஆவலுடன் யாரையோ எதிர்பார்த்தார். உள்ளே மாமாவும், மனைவி வந்து விடுவாளோ என்ற பதட்டத்துடன், ஜன்னலை இன்னும் சற்று திறந்து ஆவலுடன் தயாரானார். கதவு முழுதும் திறந்தது, ஆவலுடன் பார்த்திருந்த இருவரின் முகத்திலும் ஏமாற்றம்.
கதவைக் திறந்து ஒரு மாமா வெளியே வந்தார். அவர் பால் பாக்கெட்டையும், பேப்பரையும் எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல தயாராகும்போது, அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் கோலம் போட்டுக்கொண்டிருந்த ஒரு மாமி மாமாவை அழைத்தார்.
மாமி: மாமா
மாமா யார் அழைப்பது என்று தெரியாமல், சுற்றும் முற்றும் பார்த்தார்.
மாமி: (மீண்டும்) மாமா! இங்க பாருங்கோ!! நான் தான்.
மாமா: (மாமியை பார்த்தவுடன்) சொல்லும்மா
மாமி: காலம்பற எனக்கு முன்னாடியே எந்திரிட்சி, வாசல் பெருக்கி, தண்ணி தெளிச்சு, கோலம் போட்டுட்டு போயிருப்பாளே! இன்னும் கோலத்தக் காணோமே! என்னாச்சு?
பதிலைக் கேட்பதற்காக எதிர் வீட்டு தாத்தாவும் மாமாவும் தயாரானர்.
மாமா: பெருசா ஒன்னும் இல்லம்மா. ராத்திரி கொஞ்சம் வேல. அதனால சத்த தலைவலின்னு படுத்துட்டிருக்கா! அதான் நான் வந்து பால் பாக்கெட் எடுத்துண்டு போய், காபி போட்டு தரலாம்னு.
இதைக்கேட்ட அடுத்த நொடியே, தாத்தா பேப்பரையும் ஃபில்டர் காபியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார். சற்றே திறந்திருந்த ஜன்னலும் மூடியது.
மாமி: என்ன மாமா?! ராத்திரி வேல அவளுக்கு மட்டும் தானா? இல்ல உங்களுக்குமா?
மாமா: அடப்போமா! னோக்கு எப்போவுமே இதே பேச்சு தான்.
மாமி: சரி மாமா! நான் அப்புறம்மா அவளாண்ட பேசிக்கறேன்.
மாமா: சரிம்மா!
மாமா பால் பாக்கெட்டையும், பேப்பரையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்று கதவைத் தாழிட்டார்.
காலை 8 மணி போல, அக்ராஹாரத்தின் மற்றொரு முனையில், 2 வாலிபர்கள் வெகு நேரமாக யாரையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
அம்பி 1: நாழியாயிடுத்து. என்னடா இன்னும் காணோம்?
அம்பி 2: நேக்கும் தெரியலடா அம்பி. இந்நேரம் வந்திருக்கணுமே.
அம்பி 1: இன்னைக்கு தரிசனம் கெடைக்காது போல. நமக்கும் காலேஜ்க்கு நாழியாயிடுத்து. போகலாம். நாளைக்கு வந்து பாக்கலாம்.
அம்பி 2: போகலாம் வா.
வாட்டத்துடன் அந்த இரு வாலிபர்களும், நடையைக் கட்டினார்கள். அந்த இரு அம்பிகளும் நடையைக் கட்டுவதைப் பார்த்திருந்த, ஒரு மளிகைக்கடைக்காரர், தேங்காய் பத்தை வாங்க வந்திருக்கும் பாட்டியின் கூச்சலை சற்றும் காதில் வாங்காமல், பதற்றத்துடன், தலையை நீட்டி அந்த வீடு இருக்கும் திசையில் நோக்கினார். தான் எதிர்பார்த்த யாரோ வரவில்லை என்று தெரிந்து அவரின் முகமும் அந்த தேங்காய் பத்தையை போல் வாடிற்று.
அடுத்த முனையில் இருந்த ஒரு ஆட்டோக்காரரும் இந்த முனையை பார்த்தபடியே நின்று கொண்டு, வரும் சவாரிகளை எல்லாம் வேண்டாம் என்று உதறித்தள்ளிய படி, வாட்டத்துடன் நின்றிருந்தார்.
காலை ஒரு 9:30 மணி அளவில், ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கின்ற இருவர், உரையாடுகின்றனர்.
பணியாளர் 1: என்ன சார், ஆபீஸ் இன்னைக்கு வெறிச்சோடி இருக்கு?
பணியாளர் 2: ஆமா சார், வர வேண்டியவங்க இன்னும் வரல. அதான் சார்.
பணியாளர் 1: சரியா நேரத்துக்கு வந்துடுவாங்களே! இன்னும் காணோமே!?
பணியாளர் 2: அதான் சார் எனக்கும் தெரியல. ஏதாவது காரணம் இருக்கும். கொஞ்ச நேரம் பொறுத்துப் பாப்போம்.
அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருக்கையில், ஒரு பெண்மணி, அலுவலக கேட்டின் வெளியே, ஒரு ஆட்டோவில் இருந்து இறங்கி, இவங்களை நோக்கி வந்து,
பெண்மணி: என்ன சார்? வழக்கமா சீட்ட விட்டு எந்திரிக்கவே யோசிப்பீங்க. இப்டி வெளிய நின்னு பேசிட்டுருக்கீங்க? அதிசயமா இருக்கே!
பணியாளர் 1 : சும்மா காத்தோட்டமா நின்னு, ஆஃபீஸ் ஃபைல்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம் மேடம்.
பெண்மணி: (உள்ளே எட்டிப் பாத்து, ஓஹோ!! இதான் விஷயமா?) நல்லா சாவகாசமா நின்னு ஃபைல்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க சார்.
என்று சொல்லிவிட்டு ஒரு நக்கல் சிரிப்பு சிரித்து விட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றார்.
யார் இவர்கள்? யாரைப் பற்றி பேசிக்கொண்டுள்ளனர்? எதற்காக அந்த நபரை பார்க்க முடியாததால் வாழ்வின் ஒரு நாள் பறிபோன மாதிரி வாட்டமடைகின்றனர்?
கதையின் தலைப்பிலேயே வாசகர்களுக்கு தெரிந்திருக்கும், யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று. ஆம்!!! நம்முடைய கதையின் நாயகி மங்களா மாமியைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். யார் அந்த மங்களா மாமி? ஏன் ஆண்கள் அனைவரும் அவள் மீது பித்து பிடித்து அலைகின்றனர். அடுத்த பாகத்தில் பார்ப்போம்.