Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
தங்கையின் மாற்றத்தை பார்த்து வெங்கியின் முகம் புன்னகையுடன் காணப்பட்டது.

எல்லோரிடமும் நன்றாக பேசுபவள் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று நினைக்கும்போது எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
 
அப்படி இருக்கும் வேளையில்தான் காயத்ரி மதுமிதாவிடம் ஒன்று கேட்டாள்.
 
"எங்க கூட மட்டும் பேசிட்டு இருக்கே! விக்ரம் கூட பேச மாட்டியா?"
 
அதற்கு அவள் என்ன சொல்ல போகிறாள் என்று பதறியவாறு மதுமிதாவின் முகத்தை பார்த்தேன்.
 
"இவனிடம் என்ன பேசுவது?” என்பது போல் ஏளனமாக என்னை ஒரு பார்வை பார்த்தாள்.
 
நான் முகத்தை திருப்பி கொண்டேன்.
 
அவளது பார்வை புரிந்து என்னைப்பற்றி வேறு எதுவும் கேள்விகள் கேட்காமல் அனைவரும் சாதாரணமாக பேச ஆரம்பித்தனர்.
 
விக்ரம் அதிகமாக மதிப்பெண் எடுத்த காரணத்தினால் மதுமிதா கோபமாக இருக்கிறாள். இப்போது அதைப்பற்றி கேட்டால் தன்னிடமும் பேசாமல் சென்று விடுவாள் என்று வெங்கியும் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டான்.
 
இப்போது நான் மட்டும் மகிழ்ச்சி இழந்து காணப்பட்டேன். அதை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் அவளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
 
எனக்கு அதற்கு மேல் அங்கே இருப்பதற்கு மனம் இல்லை. அதனால் வேகமாக சாப்பிட்டு முடித்தேன்.
 
"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! கிளாஸுக்கு போறேன்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
 
வகுப்பறைக்கு சென்று தனியாக அமர்ந்து மனதிற்குள்ளேயே அழுது புலம்பினேன்.
 
சிறிது நேரத்தில் என்னுடைய நண்பர்கள் அனைவரும் அவளிடம் சிரித்து பேசிக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தனர். அனைவரும் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்தார்கள்.

மதுமிதா என்னை ஏறிட்டுக் கூட பார்க்காமல் அவளுடைய இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
 
இவள் நிச்சயமாக என்னிடம் பேசவே மாட்டாள் என்று நான் நன்றாக புரிந்துக்கொண்டு மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தேன்.
 
"என்னடா இப்படி மூஞ்சிய உர்ருன்னு வச்சு இருக்கே? ரிலாக்ஸா இருடா!"
 
தினேஷ் நிலைமை புரியாமல் சொன்னான்.
 
நான் எதுவும் பதில் பேசவில்லை.
 
அவனும் என்னை கண்டுக்கொள்ளாமல் மற்ற வேலைகளை பார்க்க தொடங்கினான். அதன்பிறகு ஆசிரியர் வந்த காரணத்தால் கவலையுடன் வகுப்பை கவனிக்க தொடங்கினேன்.
 
ஒரு வழியாக மாலை வகுப்புகள் அனைத்தும் முடிந்தது. மதுமிதா எப்போதும் போல் கிளம்பினாள். ஆனால் அதில் ஒரே ஒரு மாற்றம் கூடவே வெங்கியையும் வர சொல்லி அழைத்து சென்றாள்.
 
இப்படியே அனைவரும் கிளம்பினார்கள். நான் மட்டும் அங்கிருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோகத்துடன் அமர்ந்தேன்.
 
"டேய்! இப்போ நீ வர போறியா இல்லையா?"
 
அருகில் இருந்த தினேஷ்தான் கத்தினான்.
 
"நான் வரல! நீ போடா!"
 
"நீ இப்படி அவளையே நினைச்சுட்டு இரு! நான் கிளம்புறேன் போடா!"
 
தினேஷ் கோபமாக வகுப்பறையை விட்டு வெளியேறினான்.
 
நான் அவனை தடுப்பதற்கு மனமில்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
 
மதுமிதாவிடம் எப்படியெல்லாம் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால் இன்று தனியாக அமர்ந்திருக்கிறேன்.
 
அவள் என்னை பற்றி புரிந்துக்கொள்ள வாய்ப்பே இல்லையா?
 
அதோடு இனி எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லையா?
 
இப்படியே நீண்ட நேரம் அழுது புலம்பினேன்.
 
ஆனால் திடீரென்று எனக்கு மனதில் ஒன்று தோன்றியது.
 
நான் எதற்காக இப்படி அழ வேண்டும்?
 
அவள் என்னிடம் பேசாமல் இருந்தால் வாழவே முடியாதா?
 
ஏன் முடியாது?
 
இனிமேல் நான் உண்டு! என்னுடைய படிப்பு உண்டு! என்று இருந்தால் நிச்சயம் முடியும்.

எதை பற்றியும் கவலைப்படவே கூடாது என்று கண்களை வேகமாக துடைத்தேன்.
 
இப்படி தனியாக அமர்ந்து புலம்புவது தவறு என்று தீர்மானித்து தெளிவான மனதுடன் வகுப்பைவிட்டு வெளியேறினேன்.
 
சிறிது நேரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் சென்றடைந்தேன்.
 
அங்கே என்னுடைய சைக்கிள் மட்டும் தனியாக இருந்தது.
 
இனி எப்போதும் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அது உணர்த்துவது போல் எனக்கு தெரிந்தது.
 
சைக்கிளை எடுக்கலாம் என்று கை வைத்தேன்.
 
அப்போதுதான் அந்த குரல் கேட்டது.
 
"டேய்! விக்ரம்!"
 
அது மதுமிதாவின் குரல்தான்.
 
இவள் இன்னும் கிளம்ப வில்லையா?
 
எதற்காக என்னை அழைக்கிறாள்?
 
அந்த பயத்துடன் திரும்பி பார்த்தேன்.

"இவ்வளவு நேரம் கிளாஸ்ல உக்காந்துட்டு என்னடா பண்ணே?"
 
கண்கள் சிவக்க கோபத்தில் கத்தினாள்.
 
என்ன இவள் இப்படி கத்துகிறாள்!
 
இதற்கெல்லாம் பயந்துவிடக்கூடாது என்று நானும் பேசினேன்.
 
"நான் எங்க இருந்தா உனக்கென்ன? முதல்ல வழிய விடு நான் வீட்டுக்கு போகனும்"
 
நான் சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்க சென்றேன்.
 
உடனே அவள் என்னை விடாமல் கையை பிடித்து இழுத்தாள்.
 
"ஏன்டி! இப்படி தொல்ல பண்றே? என்னைய நிம்மதியா இருக்க விட மாட்டியா?"
 
மனதில் தேங்கி இருக்கும் வலியுடன் கேட்டேன்.
 
"நீ நிம்மதியா இருக்கதான்டா இப்படி இழுக்குறேன்!"
 
மதுமிதா அப்படி சொல்லும்போதே அவளது முகத்தில் கோபம் மறைந்து புன்னகை தோன்றியது.
 
என்ன இவள் சிரிக்கிறாள்?
 
இவளுக்கு பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டதா என்று குழம்பினேன்.
 
"நீ என்ன லூசு ஆகிட்டியா?"
 
"அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்! முதல்ல உன்னோட கைய குடு!"
 
வேகமாக எனது இடது கையை பற்றி இழுத்தாள்.
 
"எதுக்குடி இப்போ இழுக்குறே? "என்று கத்தினேன்.
 
"விக்ரம்! இது எப்பவும் உன்கிட்டதான் இருக்கணும்!"
 
மதுமிதா சொல்லிக்கொண்டே நேற்று நான் அவளிடம் கொடுத்த கைக்கடிகாரத்தை என்னுடைய கையில் கட்டினாள்.
 
நான் அப்படியே ஆச்சர்யத்துடன் அவளை பார்த்தேன்.
 
இவளாக முன்வந்து கடிகாரத்தை கட்டிவிடுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் என்னுடைய கோபம் முழுவதும் காற்றில் பறந்து சென்றது.
 
நானும் அவளது முகத்தை பார்த்து மெல்ல சிரிக்க தொடங்கினேன்.
 
அவள் என்னுடைய கைகளை பற்றியபடியே சிரித்த முகத்துடன் என்னிடம் கேட்டாள்.
 
"நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா இருக்கலாமா?"

இதற்குத்தானே இவ்வளவு நாட்களாக ஏங்கிக்கொண்டு இருந்தேன் என்று நினைக்கும்போதே என் கண்களின் ஓரத்தில் இருந்து நீர் துளிகள் எட்டிப்பார்த்து மெல்ல வழிந்தது!
[+] 6 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 04-03-2024, 12:15 AM



Users browsing this thread: 1 Guest(s)