Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#90
"மச்சி கிளம்பலாமாடா?" என்ற கேட்டேன்.

"ஹ்ம்ம்..." என்று கூறிவிட்டு சைக்கிள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
 
“அவ அடிச்சதுனால சோகமா இருக்கான் போல கொஞ்சம் ஆறுதலா பேசலாம்” என்று அவனுடன் நடந்தேன்.
 
"தினேஷ்! அவ அடிச்சத நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காத! உன்னோட ப்ளான்தான் சொதப்பல் ஆகிருச்சு! இனிமே எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்!"
 
இப்படி சொன்னதும் நடந்துக்கொண்டிருந்தவன் சைக்கிள் ஸ்டாண்ட் வெளியே நின்று பேச ஆரம்பித்தான்.
 
"டேய்! அவ அடிச்சதுக்கெல்லாம் நான் ஒன்னும் கவலைப்படல! ஆனா திரும்ப திரும்ப நான் போட்ட பிளான் சொதப்பிடிச்சுன்னு சொல்லுறியே அது தான் எனக்கு கடுப்பா இருக்கு! உண்மையா சொல்லனும்னா நான் போட்ட ப்ளான் சக்சஸ்தான் ஆகிருக்கு!"
 
அவன் கோபத்துடன் என்னை பார்த்து கத்தினான்.
 
என்ன இவன் அவளிடம் அடி வாங்கிவிட்டு இப்படி சொல்கிறான் என்று ஆச்சர்யமாக இருந்தது.
 
"தினேஷ்! நிஜமாதான் சொல்றியா? ப்ளான் சக்சஸா?"
 
"என்னடா இப்படி சந்தேகத்தோட கேக்குறே! முதல்ல இருந்து சொன்னாதான் உன்னைய மாதிரி தத்திக்கெல்லாம் புரியும்!"
 
தினேஷ் தத்தி என்று சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவன் தொடர்ந்து சொல்வதை ஆர்வமுடன் கவனித்தேன்.
 
"இன்னக்கி அவளை அடிக்க வைக்குறதுதான் என்னோட பிளானே! அதுக்குதான் அவள கோபப்படுத்தி அடிக்க வச்சேன்! நான் நினைச்ச மாதிரியே என்னை மட்டும்தான் அவ அடிச்சா! உன்னைய அவ அடிக்கவே இல்லயே பாத்தியா?"
 
"ஆமா! என்னைய அடிக்கலயே!" என்று ஆச்சர்யப்பட்டேன்.
 
"உன் மேல கோபமே இருந்தாலும் அடிக்குறதுக்கு மட்டும் அவளுக்கு மனசே வரல பாத்தியா! அதுனாலதான் ப்ளான் சக்சஸ்னு சொன்னேன்!"
 
"சூப்பர் மச்சி! நீ எங்கயோ போயிட்டே! உன்னோட அறிவ பத்தி நினைச்சாலே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு" என்று அவனது இரு தோள்களையும் பற்றினேன்.
 
"ரொம்ப பாசத்துல பொங்காத! அடச்சீ கைய எடு!"
 
என்னை தள்ளிவிட்டு சைக்கிளை வெளியில் எடுத்து வந்தான்.
 
"ஏன் மச்சி இப்படி கோபப்படுறே? நம்மளோட அடுத்த ஆப்ரேசன் என்ன?"
 
சிரித்துக்கொண்டே நானும் சைக்கிளை எடுத்து வந்தேன்.
 
"கொஞ்ச நாளைக்கு மூடிகிட்டு இரு! நானே பொறுமையா சொல்லுறேன்!" என்று என்னுடைய வாயை அடைத்தான்.
 
அதனால் நானும் வாயை மூடிக்கொண்டு அவனுடன் சேர்ந்து சைக்கிளை இயக்கி வீட்டிற்கு சென்றேன்.
 
அந்த சம்பவத்திற்கு பிறகு வந்த நாட்களில் மதுமிதாவின் போக்கில் மாற்றம் தெரிந்தது.
 
முன்பெல்லாம் எப்போதும் என்னை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் என்னை சாதாரணமாகவே பார்த்தாள்.
 
அந்த பார்வையில் ஏக்கமும் தவிப்பும் இருந்தது மட்டும் எனக்கு நன்றாக தெரிந்தது. ஆனால் இதற்காக அவளிடம் மீண்டும் சென்று பேசலாம் என்று மனது நினைத்தாலும் தேவை இல்லாத பிரச்சனை வேண்டாம் என மூளை சொன்னது. பிறகு அவளை அதிகமாக கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்.
 
என்னைப்போல் தினேஷும் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தான்.
 
அவனுடைய அடுத்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்று என்னிடம் பேச வந்தான்.
 
"விக்ரம்! அடுத்த பிளான் என்னனு முடிவு பண்ணிட்டேன்!"
 
"சூப்பர் மச்சி! என்ன பிளான்டா?"
 
"சொல்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு! இருந்தாலும் இத நீ பண்ணா நல்லதுன்னு நினைக்குறேன்!"
 
"எதுவா இருந்தாலும் சொல்லுடா! நான் பண்ணுறதுக்கு ரெடி!"
 
"ஹ்ம்ம்... அடுத்த மாசம் எக்ஸாம் வருதுல்ல..."
 
"ஆமா வருது! அதுக்கு என்னடா?"
 
"நீ அந்த எக்ஸாம்ல மதுமிதாவ விட மார்க் கம்மியா வாங்கணும்!"
 
எனக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. பேசாமல் அமைதியாக இருந்தேன்.
 
"என்னடா சைலெண்டா இருக்கே? இத பண்ணறதுக்கு உனக்கு விருப்பம் இல்லையா?"
 
"ஆமாடா! எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு! இப்படி பண்ணா மதுமிதா மாறுவாளான்னு எனக்கு தெரியல! அதோட டீச்சர்ஸ் எல்லாரும் என்னைய தப்பா நினைக்க மாட்டாங்களா?"
 
“டேய்! அதெல்லாம் யாரும் உன்னைய தப்பா நினைக்க மாட்டாங்க! அதுக்கு அடுத்து வர்ற டெஸ்ட்ல நீ நல்ல மார்க் வாங்குனா இதை எல்லாத்தையும் மறந்துடுவாங்க!" என்று தைரியம் கூறினான்.
 
இந்த ஒருமுறை மட்டும்தான் மதிப்பெண் குறைவாக எடுக்க போகிறேன்.
 
அடுத்தமுறை விட்டதை பிடித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
 
"மச்சி! நீ சொன்ன ஒரே காரணத்துக்குதான் ஒத்துக்குறேன் எதாச்சும் தப்பு நடந்துச்சு..." என்று இழுத்தேன்.
 
"எதுவும் நடக்காது! எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்!"
 
அவன் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே சொன்னான்.
 
நானும் அவன் இருக்கிற தைரியத்தில் அதை செய்வதற்கு ஒப்புக்கொண்டேன். அதோடு நமது நண்பர்களிடமும் இதைப்பற்றி கூறவேண்டும். மதியம் உணவு இடைவேளையின்போது சொல்லலாம் என்றதும் தினேஷ் ஒப்புக்கொண்டான்.
 
கார்த்தி! ரம்யா! காயத்ரி! ஆகியோர் இந்த திட்டத்தை கேட்டதும் என்னுடைய மனநிலை புரிந்து நல்ல முடிவு என்று ஊக்கம் அளித்தனர்.
 
ஆனால் வெங்கட் இதை ஒரு பொருட்டாக எண்ணாமல் “நீ எது வேணாலும் செய் அவகிட்ட அடி மட்டும் வாங்காமா இரு” என்று எச்சரித்தான்.
 
நான் அதைபற்றி பெரிதாக எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்னுடைய முடிவில் தெளிவாக இருந்தேன்.
 
சில வாரங்களில் பரிட்சைக்கான நாளும் வந்தது.
 
நான் எல்லா தேர்வுக்கும் எப்போதும் போல் நன்றாகவே படித்தேன். ஆனால் தேர்வு எழுதும் போது சில கேள்விகளை மட்டும் நிராகரித்துவிட்டு மீதி இருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதினேன்.
 
இவ்வாறு அனைத்து தேர்வுகளையும் எழுதிவிட்டு எப்போதையும் விட அதிக ஆர்வத்துடன் முடிவுக்காக காத்திருந்தேன்.
 
சில நாட்களுக்கு பிறகு தேர்வின் முடிவு வந்தது.
 
நான் எதிர்பார்த்தது போலவே மதுமிதா முதல் மதிப்பெண் எடுத்திருந்தாள். அனைத்து ஆசிரியர்களும் விட்ட இடத்தை பிடித்துவிட்டாய் என்று வெகுவாக அவளை பாராட்டினார்கள்.
 
மதுமிதா மகிழ்ச்சி கடலில் தத்தளித்தாள்.
 
அவளுடைய முகமெங்கும் புன்னைகை ததும்பி வழிந்தது.
 
அன்றுதான் முதல் முதலாக அவள் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பை பார்த்தேன்.
 
அந்த சிரிப்பு என்னுடைய துயரினை நீக்கி மனதிற்கு நிம்மதியை அளித்தது.
 
மேலும் இரண்டாம் இடத்திற்கு வேறு ஒரு மாணவி வந்திருந்தாள். ஆகையால் நான் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தேன்.
 
இதனால் எல்லா ஆசிரியர்களும் முதல் இடத்தை விட்டு ஏன் இப்படி கீழே சென்றாய் என்று திட்டி தீர்த்து பல அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றனர். ஆனால் எனக்கு அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.
 
மதுமிதாவின் மகிழ்ச்சி என்னை எல்லாவற்றையும் மறக்க செய்தது.

முதல் மதிப்பெண் வாங்கும்போது கூட இப்படி ஒரு ஆனந்தத்தை அனுபவித்தது இல்லை.
 
இதே போன்று எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று மனது துடித்தது. ஆனால் இவ்வளவு நடந்தும் மதுமிதா என்னை ஒரு முறை கூட திரும்பி பார்க்கவே இல்லை. அது மட்டும் எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.
 
"தினேஷ்! அவ இவ்வளவு சந்தோசமா இருக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குடா! ஆனா ஒரு தடவ கூட என்னைய திரும்பி பாக்கவே இல்லடா!"
 
"மச்சி! எல்லாத்துக்கும் பொறுமை ரொம்ப அவசியம்! மனச போட்டு குழப்பாம அமைதியா இரு!"
 
இவன் இப்படி சொன்னதும் அமைதியாக என்னுடைய படிப்பு சம்பந்தமான மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். அதன் பிறகு ஆசிரியர் வந்து வகுப்பை தொடங்கினார். மாலை வரை வகுப்பு தொடர்ந்து நடந்து முடிந்தது.
 
இன்றும் வழக்கம் போல் முதல் ஆளாக எழுந்து மதுமிதா வீட்டிற்கு சென்றாள். அதனால் எனக்கு வகுப்பை விட்டு கிளம்ப மனம் இல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
 
தினேஷை தவிர மற்ற நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டனர். இப்போது நானும் தினேஷம் மட்டும் வகுப்பில் அமர்ந்திருந்தோம்.
 
"விக்ரம்! வாடா வீட்டுக்கு போலாம்! இங்க இருந்து என்னடா பண்ண போறே?”
 
"தெரியல மச்சி! இவ்வளவு நடந்தும் அவ பேசாம போனது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!"
 
"டேய்! ஸ்கூல்ல இருக்குற எல்லா ஸ்டுடெண்ட்ஸும் கிளம்பி வீட்டுக்கு போயிட்டாங்க! நாம மட்டும் இங்க இருக்குறது எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்குடா!".
 
"ஏன்டா! என்னைய நிம்மதியா இருக்க விடமாட்டியா? சரி வா போலாம்!" என்று வகுப்பை விட்டு வேகமாக வெளியேறினேன்.
 
"டென்ஷன் ஆகாம இருடா! அவ நிச்சயமா உன்கிட்ட பேசுவா!" என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே நடந்து வந்தான்.
 
நான் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தேன். சிறிது நேரத்தில் நாங்கள் இருவரும் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே வந்தோம்.
 
அப்போது அந்த அதிசயம் நடந்தது.
 
மதுமிதா எங்களை நோக்கி நடந்து வந்தாள்.
 
எனக்கு அது கனவா இல்லை நிஜமா என்று புரியாமல் கண்களை போட்டு கசக்கிக்கொண்டு பார்த்தேன்.
 
அவள் எங்களை நோக்கிதான் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
 
"விக்ரம்! உன்கிட்ட பேசுறதுக்குதான் மதுமிதா இங்க வர்றானு நினைக்குறேன்!"
 
"ஆமாடா! எனக்கும் அப்படிதான் தோணுது! என்ன பேசுறதுன்னு தெரியலையே! நீயும் என்கூட இருடா!"
 
"உங்களுக்குள்ள ஏதாச்சும் பர்சனல் விஷயம் இருக்கும்! அதனால நான் சைக்கிள் கிட்ட நிக்குறேன்! ஆல் தி பெஸ்ட் மச்சி!"
 
அவன் வாழ்த்து சொல்லிவிட்டு சைக்கிள் இருக்கும் இடத்திற்கு ஓடினான்.
 
நான் அவ்வளவு தடுத்தும் என்னுடன் நிற்காமல் இப்படி என்னை தனியாக விட்டு சென்று விட்டானே! இனி என்ன செய்வது என்று புரியாமல் கை கால்கள் உதறியது.
 
மெதுவாக அதை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும்போதே மதுமிதா என் அருகில் வந்து அமைதியாக நின்றாள்.
 
சரி நாம் முதலில் பேசலாம் என்று முடிவு செய்து பேச ஆரம்பித்தேன்.
 
"ஹாய்! மதுமிதா!"
 
அப்படி சொன்னதுதான் தாமதம்!
 
அவள் என்ன நினைத்தாளோ எனக்கு தெரியவில்லை!
 
மிக வேகமாக அவளது கையை எடுத்து பளாரென்று என்னுடைய கன்னத்தில் அறைந்தாள்.
 
நான் மதுமிதாவிடம் வாங்கும் முதல் அடி!
 
அவளது ஐந்து விரல்களும் நன்றாக பதிந்ததும் எனக்கு சுர்ரென்று வலித்தது.
 
அதை தாங்க முடியாமல் மிகுந்த வேதனையோடு துடித்தேன்.
 
மதுமிதா அறைந்துவிட்டு கண்கள் சிவக்க என்னை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
 
காலையில் மகிழ்ச்சியுடன் பார்த்த முகத்தை இப்படி ஒரு கோபத்தோடு மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை! சட்டென்று தலையை குனிந்துக்கொண்டேன்.
 
"அடப்பாவி தினேஷ்! எல்லாத்தயும் நான் பாத்துக்குறேன்! நான் பாத்துக்குறேன்னு சொல்லும்போதே எனக்கு சந்தேகம் வந்துச்சுடா! கடைசியா என்னையும் இவக்கிட்ட அறை வாங்க வச்சுட்டியே!"
 
அவன் சொன்னதை நினைத்தபடி சைக்கிள் ஸ்டாண்டை திரும்பி பாத்தேன்.
 
அங்கே தினேஷ்! எப்படியாவது தப்பித்து பிழைத்தால் போதும் என்று சைக்கிளை வேகமாக தள்ளிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினான்...
[+] 4 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 19-02-2024, 12:11 AM



Users browsing this thread: 1 Guest(s)