Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பின்ன என்ன, விடியக்காலமை எழும்பி அவன் சுவாமிக்கு விளக்கு வைக்க முன்னமே வந்து நிண்டு ரூம் இருக்கா எண்டு கேட்டால் யாருக்குதான் சந்தேகம் வராது? பின்னால் எட்டிப் பார்த்தால், அவள் வந்த ஓட்டோ திரும்பிப் போய்க்கொண்டிருந்தது. தனிய வந்திருக்கிறாள், யாரும் கூட வரவில்லை.
"எங்கயிருந்து வாறீங்கள்?"
"கொழும்பிலிருந்து.." திகைத்துப் போய் அவளைப் பார்த்தான். எந்த சலனமுமில்லாமல் நின்றுகொண்டிருந்தாள்.
பேசாமல் புத்தகத்தை எடுத்து பதியத் தொடங்கினான். வழக்கமான கேள்விகள்.
"வந்ததுக்கான கரணம்?"
"வன்னிக்குப் போகவேணும். அதுவரைக்கும் இங்கைதான் நிப்பன்." அதிர்ந்தான். இன்னும் கொஞ்சம் பிலத்து சொல்லியிருந்தால் இதில ஒரு பிணம் விழுந்திருக்கும். ஓடிப்போய் வெளியே பார்த்தான். நல்லகாலம், சென்றிப் போயன்ட்ல நைட் duty ஆமிக்காரன் போய்விட்டிருந்தான். மற்றவன் இன்னும் வரவில்லை. நிம்மதிப் பெருமூச்செடுத்தவாறு உள்ளேவந்து அவளை மேலும் கீழுமாய்ப் பார்த்தான்.
கறுப்பு ஜீன்ஸ் போட்டிருந்தாள். அதுக்கு மாட்சிங்கா வெள்ளையில் கறுப்புப் புள்ளிவைத்த டாப். தோளில் ஒரு சின்ன கறுத்தப் பை, அவ்வளவுதான். ரெண்டு நாளிலே பாஸ் கிடைத்துவிடும் எண்டு நினைத்துக்கொண்டு வந்திருக்கிறாளா என்ன? அதுக்கெல்லாம் எவ்வளவு நாள் அலையவேணும். ஆனால் அவளைப் பார்த்தால் அப்படியும் தெரியவில்லை. எதோ பயங்கரத் திட்டத்தில் வந்தவள் போல இருந்தது. கரும்புலியாய் இருக்குமோ?
"IC இருக்கா?" ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் குடுத்தாள். வியப்பாக இருந்தது அவனுக்கு.
IC என்பது ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் எவ்வளவு முக்கியம் எண்டு எல்லாருக்குமே தெரியும். அதுமட்டும் இல்லை எண்டால் அவன் செத்ததுக்குச் சமன். அதை இப்படிப் பொறுப்பில்லாமல் வெறுமனே பாக்கெட்க்குள் வைத்துக்கொண்டு வாறாள் எண்டால்..
"எத்தினை நாளைக்கு இப்ப புக் பண்ணுறது?"
"அஞ்சு நாள்."
"ஒருநாளைக்கு சப்பாட்டோடை சேத்து எழுநூத்தைம்பது ஆகும்... ரெண்டுநாள் அட்வான்ஸ்.." முடிக்கவில்லை, அடுத்த பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள் எண்ணாமலேயே. ஆயிரத்து ஐநூறு சரியாய் இருந்தது.
பதிந்த துண்டையும், சாவியையும் எடுத்துக் கொடுத்தான்.
"இப்பிடியே மேலை போய் இடதுபக்கம் திரும்பினா ரூம் வரும்.. டே.. இங்கவா.. இவ கூடப் போய் கொஞ்சம் ரூமைக் காட்டிவிடு. அப்பிடியே என்ன சாப்பாடு எண்டு கேட்டு குடு."
"நான் இப்பதான் சாப்பிட்டு வந்தனான். அதால வேண்டாம்.."
"சரி, அப்ப மத்தியானத்துக்கு கொண்டே குடு."என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் போய் விட்டிருந்தாள்.
இவளில் ஒரு கண் வைக்க வேண்டும் என்று அப்பமுடிவு பண்ணி தான் இப்படி அடிக்கடி போன் பண்ணுறான். பேசாமல் போனை எடுத்து வெளியே வைக்கலாம் எண்டு பாத்தாலும் எங்க ரூமுக்கே வந்துவிடுவானோ எண்ட பயத்திலை பேசாமல் விட்டுவிட்டாள்.
தாகமாயிருந்தது. நேற்றிரவு ட்ரெயினில் அவன் குடித்துவிட்டுத் தந்த தண்ணீர்ப் போத்தல் அப்படியே இருந்தது. எடுத்து அடியில் பார்த்தாள், எதுவுமில்லை. மெலிதாகச் சிரித்துக்கொண்டே கொஞ்சம் குடித்த போது, அவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்லாமல் வந்துவிட்டது உறைத்தது. என்ன நினைத்திருப்பான்?
*****
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாகம் எட்டு : சகோதரன்
எங்கேயாவது போய்விடவேண்டும் என்று முடிவெடுத்து புகையிரதநிலையம் வரை வந்துவிட்டவளுக்கு எங்கு போவது என்றுதான் தெரியவில்லை. பிளாட்பாரத்தில் டிக்கெட் எடுக்க பெரிய வரிசை நின்றது. எந்த வரிசையில் நிற்பது என்று குழம்பிக்கொண்டிருந்தபோது ஒரு போர்ட்டர் வந்து காசு தந்தா டிக்கெட் எடுத்துத் தருவதாய் சொன்னபோது சரியெண்டு தலையாட்டினாள்.
"எங்கே போரீங்கம்மா?"
"வவுனியா.." அவளுக்கே தெரியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.
"சரி. ஒரு அரை மணித்தியாலம் கழிச்சு வாங்கோ, டிக்கெட் கொண்டுவந்து தாறன்" என்றுவிட்டு காசைவாங்கிக்கொண்டு போனவனை நம்பிக்கையில்லாமல் பார்த்தாள். இவன் எமாத்திக்கொண்டுதான் போகப்போகிறான்.. எதுவோ நடக்கிறது நடக்கட்டும் என்றுவிட்டு அருகிலிருந்த கடைக்குச் சென்றால் அவன் போய்விட்டிருந்தான். திரும்பிவந்து ஸ்டேஷன்ல் உட்கார்ந்துவிட்டாள். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கழிந்திருக்கும். எத்தினை மணிக்கு train வெளிக்கிடுது எண்டு கூடப் பார்க்காமல் இருந்துவிட்டாள்.
"இந்தாங்கோ உங்கடை டிக்கெட். train ஓம்பதரைக்குத்தான் இங்கிருந்து வெளிக்கிடுது. அதுவரைக்கும் ரெஸ்ட் ரூமில ஓய்வேடுக்கிரதேண்டா போய் இருங்கோ." சாவிகொடுத்த பொம்மையாட்டம் தலையை ஆட்டிவிட்டு உள்ளே போய் ரெஸ்ட்ரூம்ஐ பார்த்தாள் ஒரே சனமாய் இருந்தது. ஒரு ஓரமாய் சென்று உட்கார்ந்தாள்.
அவளுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? சுதாவைக் காதலித்தது அவளின் தப்பா? என்னதான் கோபம் இருந்தாலும் ஒரு பெண்ணைப் பார்த்து "உனக்கு அப்பிடி அவசராமாய் ஏதும் தேவை எண்டால் உலகத்திலை எத்தினை ஆம்பிளைகள் இருக்கினம், அவையளைப் போய்ப் பிடிக்கிறதுதானே" என்று அவன் கேட்டபோது சுக்குநூறாய் உடைந்துபோனாள். ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு "ப்ளீஸ், ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்.. ஐ லவ் யு.." அவளின் குரல் உடைந்துபோய் காற்றில் கரைந்து தேய்ந்தே போனது. அவனோ சற்றும் கவனியாது திரும்பிய வேகத்தில் கையிலிருந்து விழப்போன புத்தகங்களை சரிசெய்துகொண்டு வேகமாய்ச் சென்றுகொண்டிருந்தான்.
இதுவரைக்கும் அவனைப் பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்பதைத் தவிர அவளுக்கு வேறெந்தத் தேவைகளுமே இருக்கவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் இப்போது எதற்கோ அலைவதாய் பொருள்படக் கூறியது அவளைக் கண்டம் துண்டமாய் வெட்டிக் கடலில் வீசியது போலிருந்தது. அவனைப் பொறுத்தவரை அவை கோபத்தில் வந்த சாதாரண வார்த்தைகள். ஆனால் அவைதான் அவளின் வாழ்க்கையையே மாற்றி எழுதிய இன்னொரு பிரம்மனின் தலைஎழுத்து.
"பிள்ளை.. உன்னைத்தான் அவர் கூப்பிடுறார்." என்று அங்கு வேலை செய்யும் பெண் ஒருத்தியின் குரல்கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.
"உங்கடை train வெளிக்கிடப்போகுதே ஏறையில்லையா?" என்று கேட்ட போதுதான் மணி ஒன்பதரையாயிருந்ததைக் கவனித்தாள்.
எதுவும் பேசாமல் சென்று உட்கார்ந்தாள். கரையோர சீட். அவன் சொல்லி எடுத்திருப்பான் போல.
"பக்கத்து சீட்ல யாரும் வரமாட்டினம் எண்டு நினைக்கிரன். இரவில நீட்டி நிமிந்து படுக்க வசதியாய் இருக்கும். பத்திரமா போய்ட்டுவாங்கோ." சரி என்று தலையாட்டினாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கொஞ்சத்தூரம் போனவன் திரும்பிவந்து பின்னால் இருந்தவனிடம் எதோ சிங்களத்தில் பேசியபோது தான் அவளுக்கு திக் என்றிருந்தது. இவன் எதோ பிளான் பண்ணித்தான் என்னை இதில எத்தியிருக்கிறான். உஷாராகி பின்னாலிருந்தவனை உற்றுப் பார்த்தாள். அதற்கிடையில் அவளது மனஓட்டத்தைக் கணித்தவன் போல்,
"பயப்படாதீங்கம்மா. அவர் ஆர்மி தான், அனுராதபுரம் போறாராம். நீங்கள் தனியாப் போறிங்கள் எண்டு கொஞ்சம் பார்த்துக்கொள்ளச் சொன்னன்". நம்பிக்கையில்லாமல் அந்தப் புதியவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள். அவளை விட ஓரிரு வயசு கூட இருக்கலாம், ஆனால் பார்க்க சின்னப் பெடியனாக இருந்தது. பரவாயில்லை ஏதாவது பிரச்சனை எண்டாலும் சமாளிக்கலாம் என்று தோன்றியது.
"ஓயா, சிங்கள தன்னத்த?" (உங்களுக்கு சிங்களம் தெரியாதா?)
இல்லையென்று தலையாட்டினாள். அவன் புன்னகைத்துவிட்டு போர்டேருக்கு எதோ சொல்லவும் train வெளிக்கிடவும் சரியாக இருந்தது.
அதுவரை அடக்கிவைத்திருந்த உணர்வுகள் அத்தனையும் பீறிட்டுக் கிளம்பியது. அவளது தேவைகள் பூர்த்தியாகியிருந்தனவோ இல்லையோ ஆசைகள், கனவுகள் அத்தனையுமே சுக்குநூறாகி சிதைந்துவிட்டிருந்தன. அவனைப் பழிவாங்குவதாய் நினைத்துக்கொண்டு எவ்வளவு முட்டாள்தனம் பண்ணிவிட்டோம் என்று புரிந்தது. அழுதாள்.. அழுதாள்.. இரவு முழுவதும் அழுதுகொண்டேயிருந்தாள் சத்தமில்லாமல். எத்தனை மணிக்குத் தூங்கினாள் என்று தெரியாது, யாரோ தட்டுவது போலிருந்ததால் திடுக்கிட்டு எழுந்தாள். அவன்தான்,
"நங்கி, ஓயா.. " சற்று யோசித்துவிட்டு, "சாப்ட.. சாப்ட..?" கையையும் தலையையும் ஆட்டி ஆட்டி அவன் கேட்ட தோரணை பார்க்க சிரிப்பாய் இருந்தது. ஆங்கிலம் தெரியாது போலும்.
"எப்பா.." (வேண்டாம்) என்றுவிட்டு மீண்டும் படுக்கச் சென்றால், சிறிது நேரத்திலே அடுத்தே ஸ்டேஷன் வந்துவிட்டது. வண்டி அங்கு சிறிது நேரம் நிற்கும் என்று அறிவித்தார்கள். பெரும்பாலுமே வண்டி நிற்கும் போதுதான் கள்ளர் ஏறி கத்திமுனையில் களவுஎடுப்பார்கள் என்று கேள்விப்பட்டதால், தூக்கம் போய்விட்டிருந்தது. அவன் வேறை இறங்கி எதுவோ வாங்குவதற்க்காய்ப் போயிருந்தான். அப்போதுதான் சிறிது பயம் தலைதூக்கியது. அம்மா வேற வீட்டிலை அழுதுகொண்டிருப்பா. ஆனாலுமே அவர்களுக்கு இப்படி ஒருபிள்ளை இருந்து தினம்தினம் சாகடிப்பதை விட இல்லாமல் போய்விடுவதே மேல் என்றுதோன்றியது.
வண்டி புறப்படும் வேளையில் அவன் ஓடிவந்து ஏறினான். மூச்சிரைக்க,
"நங்கி, வத்துறு ஒன்னத?" (தங்கச்சி, தண்ணீர் வேண்டுமா?) இவன் விட மாட்டான் போலிருந்தது. மினறேல் வாட்டர் தான் ஆனால் மூடி திறந்திருந்தது. சந்தேகமாய்ப் பார்த்தால், அவள் மனவோட்டத்தை அறிந்து கொண்டவன் போல் சிரித்துவிட்டு, அவள் கண்முன்னே கொஞ்சம் குடித்துவிட்டு நீட்டினான்.
"ஹரித?" (சரியா..?) சிரித்துக்கொண்டே கேட்டபோது அவளால் தட்ட முடியவில்லை. வாங்கினாள்.. ஆனால் குடிக்காமல் பையில் வைத்துவிட்டாள்.
"நங்கி, கொய்த யன்னே?" (தங்கச்சி, எங்க போறீங்க?) வார்த்தைக்கு முன்னூறுதரம் தங்கச்சி போட்டுக்கொண்டிருந்தான். அவன் குரலில் பாசம் இருந்ததா தெரியவில்லை, ஆனால் உண்மை இருந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வன்... வவுனியா.." வன்னி எண்டு வந்ததை ஒருவாறு விழுங்கி விட்டிருந்தாள். நல்லகாலம்.
அதன் பிறகு அவன் கேட்டதெல்லாத்துக்கும் கொஞ்சம் சிங்களம் கொஞ்சம் சைகை கொஞ்சம் இங்கிலீஷ் எண்டு பாதி புரிந்தும் புரியாமலும் ஏதேதோ கதைத்தார்கள். அவன் லீவு முடிந்து போகிறானாம். களத்தில முன்னரங்கிலை நிக்கிற பணியாம். எந்தநிமிசமும் உயிர் போகலாம் என்று சிரித்துக்கொண்டே சொன்னபோது, இதே மாதிரி முன்னரங்கில நின்ற ஒரு போராளி அக்காவுடன் கதைத்தது ஞாபகம் வந்தது.
அவாகூட இப்படித்தான் எந்த நிமிஷம் சாவருமெண்டே தெரியாது என்று சிரித்தபடியே சொன்னபோது ஆச்சரியமாயிருந்தது அவளுக்கு. மடுவில் ஒருநாள், அவளும் தோழியும் பாடசாலையிலிருந்து வரும்போது மறித்துப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். இது அவளுக்கொன்றும் முதல் தடவை இல்லை என்பதால் பேசாமல் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தான் வீட்டுக்கொரு பிள்ளை என்பதால் எல்லாம் முடிந்து கடைசியில விட்டுட்டுத்தான் போகிறவர்கள். ஆனால் அவளின் தோழிதான் நிறையவே பயந்துவிட்டிருந்தாள். அவளை சமாதானப் படுத்தவே போதும் போதுமேன்றாகியிருன்தது.
அப்போது கூச்சலிட்டு நையாண்டி செய்துகொண்டு அந்தவழியே போன சில பெடியன்களைக் காட்டி ஏன் அவங்களைக் கேட்கவில்லை என்று அவள் கேட்டதுக்கு, "தலைவர் ஒழுக்கமானவர்களைத்தான் போராட்டத்தில் இணக்கச் சொல்லியிருக்கிறார். இப்படித் தறுதலைகளை இணைத்தால் எங்களது புனிதமான போராட்டத்துக்குத் தான் இழுக்கு" என்று அவர் சொன்னதற்கு "அப்போ ஒழுக்கமானவர்கள் எல்லாம் போய் நின்று இந்த தறுதலைகளை காக்கவா போராடிச் சாகிறோம்" என்று அவள் கேட்கையிலேயே, கூட்டிப் போக அவளது அப்பா யாரோ சொல்லி அங்கு வந்துவிட்டிருந்தார்.
அனுராதபுரம் வந்துவிட்டது. அவன் இறங்கிக் கையசத்துவிட்டுப் போகையில், அதுவரை ஆர்மி என்றாலே கொல்லுவான் இல்லை bang பண்ணுவான் என்றிருந்த ஒரு தோற்றப்பாடு அவளிடம் அடியோடு மாறியிருந்தது. நம்மில் சில கூழாங்கற்கள் போல் அவர்களிலும் சில மாணிக்கங்கள் இருக்கிறார்கள் என்று தோன்றியது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாகம் ஒன்பது : மாமன்
அவளைக்கேட்டால் அவர் மனிதருள் மாணிக்கம் என்பாள். படிப்பில் புலியாயிருந்த அவரை campus நுழையவிடாது தடுத்தவர்கள் பின்னாளில் அதற்குக் கொடுத்த விலை மிகமிக அதிகம் தான். ஈழத்தில் நடந்தது ஒரு குருஷேஸ்திரம் என்றால், அதில் கிருஷ்ணர் இவராய்த் தான் இருந்திருப்பார். அவர் இருந்தவரை அர்ஜுனனைத் தோற்கவிட்டதில்லை. அர்ஜுனன் தோற்ற போது அவர் உயிரோடு இருந்திருக்கவில்லை.
அப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரைப் பற்றி அவள் சொல்லப்போனால் அது மாபெரும் சமுத்திரத்தை ஒரு சிறுமி அள்ளிவிட முயற்சிப்பது போல்தான் இருக்கும். ஆனாலுமே அவள் அள்ளிய அந்த சிறு துளிகளும் சேர்ந்துதானே ஒரு சமுத்திரமாகிறது?
"உனக்கு இன்னும் வயசிருக்கு. ஒரு மூண்டுனாலு வருசத்துக்குப் பிறகு வரேக்கை சொல்லு, கூட்டிட்டுப் போறன்..". எங்கே போவதேண்டு தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று முன்னொருநாள் அவர் சொல்லி விட்டுப் போன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது.
இத்தனை நாள் எப்படி மறந்தோம் அவரை? பார்த்தது பேசியது என்னமோ ஓரிரு தடவைதான். ஆனால் அந்தச் சிறு சிறு தருணங்களிலேயே அவளை முழுதாய்க் கொள்ளையடித்துச் சென்றிருந்தார். அவளைப் பொறுத்தவரை அவளின் முதலும் கடைசியுமான ஹீரோ.. நிஜ ஹீரோ.. அவர் தான்.
காந்தியையும் நேருவையும் பற்றி கதையளப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்தியாவின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திரபோசைப்பற்றிக் கதைக்க தைரியம் இருக்கு? வாய்வீரத்துக்கு மதிப்புக்கொடுப்பவர் யாரும் செயல்வீரர்களைக் கண்டுகொள்வதேயில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு மாவீரர்.. செயல் வீரர் தான் அவர்.
அவரை ஒரு போராளியாய் சந்தித்த அந்த முதல் நாள் இன்னும் பசுமையாய் நெஞ்சிலிருக்கு. அப்போது ஒரு சிறு கைத்துப்பாக்கிதான் வைத்திருந்தார். ஆறு குண்டு போட்டு அடிக்கிறது. விவரம் தெரியாத வயது. அப்பெல்லாம் AK47 எண்டு பெரிய பெரிய துவக்கு தூக்கிக்கொண்டு பலர் போறதைப் பார்த்தவள், இவர் ஏன் இந்தச் சின்னத் துவக்கைத் தூக்கிக்கொண்டு திரியிறார் எண்டு நினைத்திருக்கிறாள்.
"ஒருதரம் சுட்டுப் பார்க்கவேணும்" எண்டு அவள் ஆசைப்பட்டபோது, "துவக்குத்தான் எங்கடை உயிர் அதை யாருக்கும் குடுக்ககூடாது" எண்டு அவர்சொன்னதைப் புரிந்து கொள்ளும் நிலையிலில்லை.
கடைசியாய் அவளது தொந்தரவு தாங்காமல், தூக்கி மடியிலிருத்தி அந்தச் சின்னக் கையை எடுத்து துவக்கின்மேல் வைத்து தன் கையால் மூடி, பிஞ்சு விரல்களின் மேல் அவர் விரல்கள் மெதுவாய் அழுத்தியபோது, அது வெடித்தா என்ன? ஓடிச்சென்று முற்றத்தில் பார்த்தாள். எதையுமே காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிவந்து "நீங்க என்னை நல்லா எமாத்திப்போட்டீங்க" என்று கண்கலங்கி அறைக்குள் சென்று படுத்தவள்தான் அவர் திரும்பிப் போகும்வரை வெளியே வரவேயில்லை.
பிறகொருதரம் அவரின் அம்மாவின் ஈமைச்சடங்கில் தூரத்தில் நின்று பார்த்தது. துருவித் துருவிப் பார்த்தும் கண்ணில் ஒருசொட்டுக் கண்ணீரை காணோம். இறுகிப் போய் நின்றிருந்தார். "இயக்கத்துக்குப் போனா அழக்கூடாதாம்" பக்கத்தில் நின்ற யாரோ சொன்னார்கள். 'பந்தபாசமெல்லாம் ஒருமாயை' என்று எங்கேயோ புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வர அவர்மேல் மரியாதை இன்னும் கூடிவிட்டிருந்தது.
அவள் ஓடிச்சென்று யன்னல்வழியே கேற்றைப் பார்த்தாள். புழுதி மூடிப்போய் ஒரு பிக்-அப் வாசலில் நின்றிருந்தது. அம்மாவின் தம்பிகள் எல்லாருமே வெளியூர்தான், வருவது அபூர்வம். அப்பிடியிருக்க அக்கா என்று சொல்லிக்கொண்டு உரிமையாய் அதுவும் இதிலை வந்து இறங்குவது யாராயிருக்கும்? யோசனையுடன் கதவைத் திறந்தாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"என்னடி.. இப்பிடி நல்லா வளந்திட்டாய்?" என்று சொல்லித் தோளில் தட்டியவரை நிமிர்ந்து பார்த்தபோது, பெரியவளாகு முன்னமே நாணம் எட்டிப்பார்த்தது.
"அம்மா.. அம்மா.. கண்ணன் மாமா வந்திருக்கிறார். ஓடியாங்கோ.." மகிழ்ச்சிபொங்க கத்திக் கொண்டே ஓடிப்போய் அறைக்குள் ஒளித்துக்கொண்டாள். நெஞ்சு படபடவென்றது.
"என்ன நீ..? இப்படிக் கறுத்துப்போய் வந்திருக்கிறாய்?" அம்மாதான் கேட்டது. 'காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு' தானே என்றெண்ணிச் சிரித்துக்கொண்டாள்.
"என்னக்கா செய்யுறது? ஒரே வெய்யிலுக்கை தானே திரியிறது. போராட்டமெண்டு போயிட்டா இதெல்லாம் பாக்க ஏலுமே?" சொல்லிவிட்டு "எங்கையக்கா உவளைக் காணேல்லை. வரேக்க வாசல்ல நிண்டாள். பிறகு ஓடிட்டாள்" என்றபடி திரும்பிப் பார்த்தபோது அதுவரை திரைசீலைக்குள் மறைந்து நின்று அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவளைக் கண்டுவிட்டார்.
"இஞ்சை வா. முந்தி வந்தா என்னெண்டா துவக்கைத் தரச்சொல்லி அடம்பிடிப்பாய். இப்ப என்ன புதுசா வெட்கப்படுறாய்? " அவர் இத்தனை நாளாகியும் அந்த நிகழ்ச்சியை ஞாபகம் வைத்துக் கேட்டபோது அவளின் சந்தோசத்தைக் கேட்கவா வேண்டும். அதுவரை அவர் பக்கத்தில் துப்பாக்கியுடன் 'உர்ர்' எண்டு மூஞ்சியை வைச்சுக் கொண்டு சுற்றும் முற்றும் நோட்டம்விட்டுக்கொண்டிருந்தவன் கூட இப்போது சிறிதாய்ப் புன்னகைத்தான்.
"இருந்து சாப்பிட்டுப் போவன்?"
"இல்லையக்கா. நான் அவசரமாப் போகவேணும்."
"வீட்டை போட்டே வாறே?"
"இல்லை.. இனித்தான்." எழுந்தவரை,
"இவ்வளவு தூரத்திலிருந்து வந்திட்டு.. ஒரு டீயாச்சும் குடிச்சிட்டுப்போ."
"வேண்டாமக்கா. வெறும் தண்ணி மட்டும் குடுங்கோ.."
"சும்மாயிரு. கனநாளைக்குப் பிறகு வந்திட்டு.. இப்பல்லாம் என்ன குடிக்கிறனீ? கோப்பியோ.. டீயோ?"
"எதெண்டாலும்.." என்று இழுத்தபடி, அருகிலிருந்தவனை என்ன என்பதுபோல் பார்க்க, அவன் பேசாமல் தலையாட்டினான். எப்படி இவரால் கண்களாலேயே கதைக்க முடிகிறது? வியந்தாள்.
"ரெண்டு போடுங்கோ.." சொல்லிவிட்டு ஷோகேசுக்கு மேலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்க் கதிரையில் அமர்ந்தார்.
"இஞ்சை வா.. வந்து உந்த வயலினில் ஏதோ இயக்கப்பாட்டு வாசிப்பியே அதை அவனுக்கு வாசிச்சுக் காட்டன்.." அவள் மாட்டேன் மாட்டேன் எண்ணவும் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து விட்டுவிட்டு கையிலை வயலின் பெட்டியை திணித்துவிட்டு குசினிக்குப் போய் விட்டார் அம்மா.
வெட்கத்தில் காலால் மார்பிள்நிலத்திலேயே கோலம் போட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்தவர் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, கைகளை நெஞ்சுக்குக் குறுக்கால் கட்டிக்கொண்டு, "என்ன பாட்டு? எங்கை எனக்கு வாசிச்சுக் காட்டு பாப்பம்?" அவருக்கேயுரிய அந்தப் புன்சிரிப்புடன் ஒருபக்கம் லேசாய் தலையைச்சரித்து கேட்டதை ரசித்தாள்.
அவள் வயலினை எடுத்து ஷோகேசுக்குப் பின்னால் மறைந்திருந்து "குயிலே பாடு.." வாசிச்சு முடிக்கவும், "இவள் இப்பெல்லாம் ஒரே இயக்கப் பாட்டுத்தான் வாசிச்சுக் கொண்டிருக்கிறாள். எக்ஸாம்ல கேக்குறதை வாசிச்சுப் பழகு எண்டு சொன்னாலுமே கேக்கிறாளில்லை. அதால எப்பவுமே செக்கன்ட் கிளாஸ்தான் வருகுது." குசினியிலிருந்தவாறே அம்மா வத்திவைக்க, அவள் கோபமாய் வயலினின் சட்ஜ நரம்பை அறுத்துவிடுவது போல் தட்டினாள். வெளியில் நாய் குலைத்தது. கூடவந்தவன் எழுந்து சென்று என்னவென்று பார்க்கப் போய்விட,
அப்போதுதான் கிட்டவந்து, அவள் கைகளிலிருந்து மீளத்துடித்த வயலினுக்கு விடுதலை கொடுத்துவிட்டு, கோபத்தில் சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். குனிந்ததலை நிமிராமலிருந்தவளின் நெற்றியில் விழுந்திருந்த முடியை விரல்களால் விலக்கி... "அம்மா சொல்றதைக் கேட்டு, நல்லாப் படிக்க வேணும் என்ன?" என்றபடி கன்னத்தை தட்டிவிட்டார். உடல்சிலிர்த்திட நிமிர்ந்தவள், அந்தக் கண்களை முதன் முதலாய் நேருக்கு நேர் இவ்வளவு அருகில் இப்போது தான் பார்க்கிறாள். எவ்வளவு தீர்க்கம்? காந்தக் கண்கள் என்பது இவைதானா? கண்ணன் என்பதன் காரணப்பெயர் இப்போது புரிந்தது.
ஒரு ஆணின் கண்களுக்கு இவ்வளவு சக்தியிருக்க முடியுமா என்ன? அவை அவளை ஆழமாய் ஊடுருவிச் செல்லத் தயங்கித் தடுமாறியவள், ஒருவாறு சமாளித்துப் பின் எச்சிலை விழுங்கியபடி,
"நானும் உங்க கூட வரட்டுமா..?" வெட்கத்தை விட்டுக் கேட்டே விட்டாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தாள். மெலிதான தோற்றம், சற்றே உயரமாயிருந்த அவனை முன்பின் பார்த்ததில்லை. "எதுவும் கதைக்காமல் பின்னாலையே வா." மெலிதான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறு எண்டு போய் இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூமிட்க்குள் சென்று மறைந்து விட்டான்.
போவதா வேண்டாமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கையில் போன் அடித்தது.
"அவன் கூடப் போ. வன்னிக்குப் போகிறத்துக்கு ஹெல்ப் பண்ணுவான்." சொன்னது யார்? தெரியவில்லை.
இதுவரைக்கும் வந்தாச்சு. பேசாமல் போய்த்தான் பாப்பமே? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போய்ப் பார்த்தால் அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருந்தனர், ஒரு பெண் உட்பட.
ஒருவிதத் தயக்கத்துடன் உள்ளே சென்றதும் முதலில் வந்தவன் அவசர அவசரமாய்க் கதவைப் பூட்டி விட்டு,
"எங்கை வந்து என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறாய் எண்டு தெரியுமே? யாரும் கேள்விப் பட்டால் உன்ட உடல்ல உயிர் இருக்காது." அவன் குரலில் பதற்றமிருந்தது.
உயிருக்குப் பயந்தவள் எண்டால் இதுவரை வந்திருப்பாளா என்ன? அவர்களும் யோசித்திருப்பார்களோ?
சிறிது நேர அமைதியைக் கலைத்தபடி அந்தப் பெண்தான் கேட்டாள்.
"சரி, உமக்கு உள்ளை யாரையும் தெரியுமே?"
இப்போது அவளுக்குச் சந்தேகம் வந்தது. இவர்கள் உண்மையிலேயே தொடர்பா? இல்லை..?
"உங்களை நான் எப்பிடி நம்புறது?", ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
"நம்பத் தேவையில்லை, நீ போகலாம்.." அதுவரை அமைதியாயிருந்த அந்தப் பெரியவர் சொன்னார்.
அவரைப் பார்த்தால் வயது ஒரு நாப்பதுக்கு மேலிருக்கும். தலைவரின் முகச்சாயல் இருந்தது. தலைவரை இதுவரை அவள் நேரில் பார்த்ததில்லை. என்ன ஆனாலும் சரி, சாவதுக்குமுன் எப்படியாச்சும் ஒருமுறை பாத்திட வேணும், அவரையும் தான்!
"கண்ணன் மாமாவைத் தெரியும்.. பிறகு.. அவரின்டை.." எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்..
"இயக்கத்திலை எத்தனை கண்ணன்கள் இருக்கினம். நீ ஆரைச் சொல்றே?"
"இயக்கத்திலை எத்தினை கண்ணன்கள் எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் என்ட கண்ணன் மாமாவை இயக்கத்திலை இருக்கிற எல்லாருக்குமே தெரியும். அவர்தான் ........." ஆக்ரோஷமாய் அவரின் பெயரை அவள் சொல்லி முடித்தபோது எல்லோர் முகங்களும் பேயறைந்த மாதிரி ஆகிவிட்டிருந்தது.
*****
தொடரும்..
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாகம் பத்து : முடிவுரை
கோபமாய் எழுந்து வந்துவிட்டவள், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். ஆத்திரமும் ஏமாற்றமும் மாறிமாறி வந்து அவளை வதம் செய்தன. அன்று மட்டும் எப்படியாவது அடம்பிடித்து அவருடனேயே போயிருந்திருந்தால் இவ்வளவும் வந்திருக்காதே என்று தோன்றவும் தன் மீதே அவளுக்கு கோபம்கோபமாக வந்தது. கதவைப் 'படார்' என்று அறைந்து சாத்திவிட்டு கீழே வந்தாள். மேனேஜர் அப்போதுதான் சுவாமிக்கு விளக்குக் கொளுத்திவிட்டு 'மருதமலை மாமணியே முருகையா' பாடுப் போட்டிருந்தான். மெதுவாகத்தான் என்றாலுமே குன்னக்குடியின் வயலினிசை அவளது இதயநரம்பை முறுக்கி என்னமோ செய்தது.
பல்லைக்கடித்துக்கொண்டு வேகமாய் தெருவில் இறங்கி நடந்தாள். சென்றியில் இருந்த ஆமிக்காரன் பக்கத்தில் நின்றவனிடம் இவளைக் காட்டி,
"லஷ்சன முனு.. நேத?" (அழகான முகம் இல்லையா?) கிண்டலாய்ச் சொல்லிச் சிரித்தான்.
அவளுக்கிருந்த ஆத்திரத்தில் அப்பிடியே அவனது துவக்கைப் பறித்து எல்லோரையும் சுட்டுத் தள்ளிவிடலாம் போலிருந்தது. அவள் கோபத்தில் இருக்கும்போதுதான் அழகாய்த் தெரிகிறதா எல்லோருக்கும். எல்லோருக்குமெண்டல்..? யோசனையாய் ரெண்டு அடி எடுத்துவைத்தவள், குறுக்கால் ஒரு போலீஸ் வண்டிவந்து மறித்து நிற்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். பயத்தை மறைத்தபடி அதைத்தாண்டிச் செல்லமுயல்கையில் தற்செயலாய் உள்ளேபார்த்தவள் அதிர்ந்துபோய் நின்றாள். அது.. கடைசியாய் விடைபெறுமுன் அவளைச் சமாதானப்படுத்துவதற்காய், அவள் தொடுவதற்கு அனுமதித்த அவனது 'உயிர்'..
அவசரமாகத் திரும்பி அறைக்கு ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள். கதவு திறந்தேயிருந்தது. ஒரே எட்டில் உள்ளே சென்று பார்த்தால், அறை முழுக்க கிளறிக் கொட்டியிருந்தது. அதைப்பற்றிக் கவலைப்படுக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை. அவசர அவசரமாய்த் தேடி ஒருவாறு எடுத்துவிட்டாள்.. அந்தப் படத்தை. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டவள், பேர்சின் அடியில் மறைத்து வைத்திருந்த இந்தப் படத்தை மட்டும் ஏனோ விட்டுவைத்திருந்தாள்.
கண்நீர்த்திரையிட, நடுங்கும் கரங்களால் எடுத்துப் பார்த்தாள். அந்தக் கண்கள்.. அன்று எதுவோ சொல்லியதே..? வயலினை வாங்குவதற்காய் நீண்ட அந்தக் கரங்கள்.. அன்று.... நினைக்க நினைக்க தலை சுற்றியது. கடவுளே.. இத்தனை நாளாய் நடந்ததெல்லாம் வெறும் கற்பனையா இல்லை அதன் பிரதிபிம்பங்களா..? கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா?
"வீட்டை போன் பண்ணிச் சொல்லிட்டம். இப்ப உடனை train பிடிச்சு இரவைக்குமுந்தி வந்திடுவினம். அதுவரைக்கும் இவ, உன்கூடவே இங்கைதான் இருப்பா.. சரியே?" அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைகள் எதையுமே காதில் வாங்காமல் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.
"இந்த T-ஷர்ட்.." இன்னும் விலை பிரிக்கப்படாத அந்தக் கறுப்பு T-Shirtஐ அவர் எடுத்தபோது, பயித்தியம் பிடித்தவள்போல் பாய்ந்து சென்று "அதைத் தொடாதீங்கோ.. அது அவரின்டை.." கதறியபடி பறித்துக் கட்டிலில் போட்டு அதன்மேல் விழுந்து விக்கிவிக்கி அழுதாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முன்னொருதடவை அவன் கருப்புச்சட்டை அணிந்துவந்து பார்த்திருக்கிறாள். ஆனால் இது எதற்காய் வாங்கியது என்பது நினைவிலிருந்துவிலகி அவள் எண்ணம், சொல், செயல் முழுவதும் இப்போது அவன் மட்டுமே வியாபித்திருந்தான்.
"என்ன நடந்தது?" கேட்டுக்கொண்டே அருகில்வந்து சமாதானப்படுத்த முயன்றவரை வெறிகொண்டவள் போல் தள்ளிவிட்டு,
"வில் யு ப்ளீஸ் கெட்-அவுட்" வாசலைக் காட்டிக் கர்ச்சித்தாள். அவர்கள் தயங்கி நிற்கவும்,
"எல்லாரும் வெளியே போங்கோ.. இப்பவே.." பத்திரகாளியாகிவிட்டிருந்தாள்.
அவளை ஒருமாதிரியாகப் பார்த்துக்கொண்டே அவர்கள் வெளியேறவும் கதவை அறைந்து சாத்தியவள் அப்பிடியே மயங்கிச் சரிந்தாள்.
*****
அவளது உயிரிலே கலந்துவிட்ட அந்தச் சில மணித் துளிகளுக்குள்ளேயான வாழ்க்கை அவளுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும். யாரும் அவளைத் தொந்தரவு செய்யாதிருக்கட்டும்.
*****
நன்றி.
வணக்கம்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"அவள்" ஒரு தொடர் கதை ... : ரெண்டு பவுண்
பாகம் ஒன்று : ரெண்டு பவுண்
யாழ்ப்பாணத்தைப் பிடிப்பதற்காய் சண்டை மும்முரமாய் நடந்துகொண்டிருந்த சமயம், கடைசி முறையாக அந்த ரெண்டு பவுனுக்கு வந்திருந்தார்கள்.
"வீட்டிலை பெரியவங்கள் யாராச்சும் இருக்கினமே?" கேட்டவரை முன்னம் பார்த்ததில்லை.
"அம்மா மட்டும்தான். ஆட்டுக்கு குழை ஓடிச்சுக்கொண்டு வளவிலை நிக்கிறா." 'திரும்பி வர எத்தினை நாளாகுமெண்டு தெரியாது. அதுவரை ஆடு பசியிலை நிக்ககூடாது. அதால நிறைய குழை ஓடிக்கவேணும்' எண்டு சொல்லி அவளை வாசல்லை காவல் வைச்சிட்டு போயிருந்தா.
"அவவைக் கூப்பிடுறீங்களே ஒருக்கா?"
"நீங்க யார்.. என்ன எண்டு கேட்டா.." தயங்கியவளிடம்
"இயக்கத்திலை இருந்து மண் மீட்பு நிதி வாங்க வந்திருக்கிறம் எண்டு சொல்லுங்கோ.."
முன்னம் கூடப் பலதரம் இவ்வாறு வந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் எங்களாலும் கூட போராட்டத்துக்கு ஏதோ ஒருவிதத்திலை பங்களிப்புச் செய்ய முடியுதே என்று பெருமைப் பட்டிருக்கிறாள். ஆனால் இந்தமுறை காசாககூடத் தரலாம் என்ற போதுதான் அவளுக்கு சந்தேகம் முதல் முதலாய் எட்டிப் பார்த்தது. அவர்களின் ஊரில் இப்படித்தான் பலபேர் காசை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி பிறகு வெளிநாடுகளில் காரும் பங்களாவும் எண்டு செட்டில் ஆகியிருக்கினம் எண்டு கேள்விப் பட்டிருக்கிறாள். ஒருவேளை அது உண்மையாகவிருக்குமோ? பெரியமாமா வேறை ரெண்டு கிழமைக்கு முன்னம் தான் "நீ இயக்கத்தை வெறுக்கப் போற நாள் கூடிய சீக்கிரம் வரப்போகுது." என்று தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார்.
இப்படித்தான் ஒருமுறை அவர்கள் மீட்புநிதி வாங்குவதற்காய் வந்திருந்தபோது அம்மம்மா வேறுவீட்டில் இருந்ததால் அவர்களும் தனியாய் ரெண்டு பவுன் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் வீடுகட்டி முடித்ததாலோ என்னமோ பிறகு மாமாமாரிடம் வங்கித்தருவாதாய்ச் சொல்லி அம்மாவை கொடுக்கச்சொல்லியிருந்தா. அப்போ பலிகொடுக்கப்பட்டது அவள் சின்ன வயசில போட்ட ஒருசோடிக் காப்புத்தான். இந்தச் சின்ன வயசிலையே தன்னால போராட்டத்துக்கு பங்களிப்புச் செய்ய முடியுதே எண்டு ஒருவித கர்வம் வந்தது. 'எப்பிடியும் இதுவும் காணாமத்தான் வரும். அம்மா ஒளிச்சு வைச்சிருக்கிற என்ரை அறுந்துபோன தூக்கணத்தை எடுத்துக் குடுக்கச் சொல்லலாம்' என்று நினைத்துக்கொண்டிருக்கையில்,
"ரெண்டு பவுனுக்கு ரெண்டு மஞ்சாடி கூட நிக்குது" என்று சொன்ன எடை போட்டுப் பார்த்த அண்ணாவை வினோதமாய்ப் பார்த்தாள். இதுவரை எந்த நகைக்கடையிலும் கேட்காத வார்த்தையிது. எவ்வளவு போட்டாலுமே "பழைய நகை தானேயம்மா.. செய்கூலி, சேதாரம் எண்டு போக ரெண்டு மஞ்சாடி தொக்கிநிக்குது" எண்டுதான் சொல்லுவினம். அதனேலேயே அதுவரை அவர்களின் மேலிருந்த மதிப்பு இன்னும் உயர்ந்துவிட்டிருந்தது.
அப்படிப் பட்டவர்கள் இப்போதுவந்து காசு கேட்கிறார்கள், அதுவும் ரெண்டுநாளில் எங்கடை இடத்துக்கு ஆர்மி வந்துவிடுவான் என்கிற நிலையில் நேற்றுத்தான் மூட்டைமுடிச்செல்லாம் கட்டி ஓடுவதுக்கு தயாராக வைத்திருந்தோம். "ரோட்டிலை யாராச்சும் மூட்டைமுடிச்சோட வெளிக்கிட்டுப் போனா சொல்லு, நாங்களும் வெளிக்கிடவேணும் சரியே?" என்றுசொலித்தான் அம்மா அவளை வாசல்ல காவலுக்கு வைத்திருந்தார்.
வீட்டில் காசுநிலவரம் எதுவும் அவளுக்குத் தெரியாது. எல்லா கணக்கு வழக்கும் அம்மாதான் பாக்கிறது. தோட்டத்தில தேங்காய் மாங்காய் விக்கிற காசு பார்த்திருக்கிறாள். மற்றபடி அப்பா உழைக்கிறது அவளுக்கு சீதனம் சேர்க்கப் போகுது எண்டுதான் சொல்லியிருக்கிறார். சைக்கிள் ஒட்டுவதுக்கேண்டு மாசத்திலை ஒருக்கா வாங்கிற அந்த ரெண்டு ரூவாயை விட அவள் கையிலை ஒரு சல்லிக்காசு கொடுப்பதில்லை. வாழ்க்கை முழுது சந்நியாசியாயிருந்து உழைக்கிற காசிலை அப்பிடி ஒருகலியானம் தேவைதானா என்று பலதடவை யோசித்திருக்கிறாள்.
"அக்காண்ட கலியாணத்துக்கு இருக்கிற நகைநட்டைவிட எப்பிடியும் ஒரு இருவத்தஞ்சு முப்பது லட்சம் தேவைப்படும். நான்தான் உழைச்சுக் கட்டவேணும். வைரத்தோடு வேற வேணுமாம்." என்றவனை வினோதமாய்ப் பார்த்தாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இருவத்தஞ்சு முப்பது வருசமா அப்பா உழைச்சு உழைச்சு ஓடாத்தேஞ்சு அவளுக்கு சீதனமாய்ச் சேர்த்த காசுகூட அவ்வளுவு வருமோ தெரியாது. எதற்காய் இப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயம் எல்லாம்? மனிசரை நிம்மதியாய் வாழவிடாமல் கடன் மேல கடன் வாங்கி.. இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் தேவைதானா? அவளுக்கு விளங்கவில்லை.
"அப்போ எங்கடை கலியாணம் இப்போதைக்கு இல்லை எண்டு சொல்லவாறியா?" ஒருபக்கம் சந்தோசமாக இருந்தது. அப்பாவின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் தான் இந்தப் பேச்சே எடுத்தது.
"இன்னும் எனக்கு வேலை கிடைக்கேல்லை. கிடைச்சபிறகுதான் எதையும் யோசிக்கலாம்."
'அப்போ அந்த முப்பதுலட்சம்?' நாக்கு நுனிவரை வந்துவிட்ட கேள்வியை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். யார் எப்படிப் போனால் அவளுக்கென்ன.
பேசாமல் மேல படிக்க வெளிநாட்டுக்குப் போய்விடலாம் என்றாலும் காசுவேணும். "என்ன எண்டாலும் கலியாணத்தைக் கட்டிட்டு பிறகு செய்." அப்பா தீர்மானமாய் சொல்லிவிட்டிருந்தார். பெண்ணைப் பிறந்தாலே யாராச்சும் ஒருத்தரின் கயிலை பிடிச்சுக்கொடுத்திட வேண்டும் எண்ட தவிப்பில் அவளின் உரிமைகள் மறுக்கப்படுவதை யாருமே உணர்வதில்லை.
அவளது தேவைகள் என்றால் மிகக் குறைவுதான். நிறையவே இல்லாவிட்டாலும் அவளது அரசாங்க உத்தியோகம், ஒரு பத்துப் பதினஞ்சு வருசத்தில பென்ஷன் வரும். யாருடைய தயவும் வேண்டியிருக்காது. ஆனால் அத்துடன் விட்டார்களா அவளை?
"இத்தினை நாளாய் எனக்கு தாறத்துக்குத்தான் உழைக்கிறன் எண்டு சொல்லிட்டு, இப்படி தூக்கிக் கொடுக்கிறத்துக்குத்தான் இத்தினை வருசமா தனிய இருந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்சநீன்களா?" அவளின் கடைசிக் கனவும் தகர்ந்ததில் கோபம் கோபமாய் வந்தது.
"எங்கடை கடமையைத்தான் செய்தம். கலியானத்துக்குப்பிறகு நீ கடன் அதிதெண்டு கஷ்டப்படக் கூடாது அதுதான்." இவர் குடுத்தாலுமே, அவர்கள் கடன் வாங்கத்தான் போகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு பொம்பிளைபிள்ளையை வைச்சுக்கொண்டே அவளிண்ட அப்பாவுக்கு இவ்வளவு கனவெண்டா, அவர்கள் ரெண்டு பெடியங்களையுமேல்லே பெத்துவைச்சிருக்கினம்.
அவனைப்பிடிக்கும்.. நிறையவே.. இதுவரை கண்ணீரைத் தவிர வேறெதையுமே அறியாத அவளை தினம் தினம் சிரிக்க வைத்தான். பேச வைத்தான். மறுபடி எழுதவைத்தான். ஆனா அதுக்காக கலியாணம் எண்டபேரில யாரோட வாழ்க்கையையும் பாழாக்க முடியாது. அவனுக்குமெண்டு தன் மனைவியைப் பத்தி ஒரு கனவிருக்கும்தானே.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"அதுக்கு..? எனக்கெண்டு இதுவரைக்கும் பெரிசா எதுவும் கேட்டிருக்கிறனா? இதுவரைக்கும் படிச்சது கூட scholarshipல தானே.." அவள் அங்கை போய் ஒண்டும் படிச்சுக் கிழிக்கப் போறதில்லை. ஆனாலும் நிம்மதியா கொஞ்சநாளாச்சும் யாரோடை தொனதொனப்புமில்லாமல் இருக்கலாமே எண்டுதான். அவளால் எல்லாரையும் போல சராசரி மனைவியாய் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு இதுதான் வாழ்க்கை எண்டு அதுக்குள்ளயே சுத்திச் சுத்தி வரமுடியாது.
ஆயிரம் ஆயிரம் வேங்கைகளைப் போலவே அவளுக்குமொரு கனவிருந்தது. ஒரு தேசமிருந்தது. அது காலத்தின் கட்டாயத்தில் அழிக்கப்பட்டாலுமே அதன் வலியிருக்கிறதே. அதைப் பதிவு செய்ய வேண்டும். ஆழமாக.. மிக ஆழமாக.. அவளின் கனவுகளை.. அவர்களின் கனவுகளையும் சேர்த்தே..
"இது நீ கேட்காமலே நாங்கள் செய்யவேண்டியது. அது எங்கடை கடமை." கடமையாவது மண்ணாங்கட்டியாவது. அவளது தோழிகள் பத்துப் பதினைஞ்சு பவுணிலை கழுத்தைச் சுத்திப் போட்டுக்கொண்டிருக்கிறதை அவளுக்கும் மாட்டி அழகுபாக்கவேனும். அதுதானே?
முந்தி அங்கை எண்டாலும் பரவாயில்லை அவங்கள் இருக்கேக்கை நடுநிசியிலையுமே நகையைப் போட்டுக்கொண்டு தைரியமாப் போகலாம். இங்கை இப்ப பொட்டுத் தங்கத்துக்காக பட்டப்பகல்லையே கொலை நடக்கிற இடத்தில இருந்தும் கூட 'பொம்பிளைப் பிள்ளையள் நகை போடாமல் வெளிய போகக் கூடாது' என்ற அம்மாவின் அரியண்டத்துக்காகவே இப்பகொஞ்சநாளா அவளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒருசோடித் தோடு, அந்த முக்கால் பவுண் சிங்கப்பூர் செயின், ஒரு ராசிக் கல்லுவைத்த மோதிரம். எல்லாம் சேர்த்து என்ன ஒரு ரெண்டு பவுன் இருக்குமா..?
*****
தொடரும்..
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாகம் இரண்டு : ஒரு கொடி
"எல்லாம் சரி தான். ஆனா கொடி வாங்கிறத்துக்கு எப்படியும் ஒரு ரெண்டு லட்சம் வரும். கடன் தான் எடுக்க வேணும்." என்றபோதே கடன்தான் வாழ்க்கையாகிவிட்டிருன்தது புரிந்தது. வேறுவழியில்லை.
பேசாமல் முன்வீட்டு அக்கா போட்டுக்கொண்டிருந்ததைப் போல ரெண்டு பவுணிலை ஒருதாலிய வாங்கி மஞ்சள் கயித்தில கட்டிவிட்டா கலியாணம் எண்டு சொல்ல மாட்டினமே? தினமும் மஞ்சள் பூசிக் குளித்துவரும் அவவின் முகத்தைப் போலவே தாலியும் பார்க்க அழகா இருக்கும். எங்கடை தாலி மாதிரி இல்லாம அவங்கடை இலச்சினை பொறிச்சு, பாயும் புலியின் கண்களைப் போலவே சும்மா தகதகவென்று மின்னும். பத்துப் பவுனில தாலிய செஞ்சு பெட்டில பூட்டி வைக்கிறத்துக்கு, இது எவ்வளவோ மேல் என்று தோன்றியது.
ஒவ்வொரு முறையும் அவா வயலின் கிளாஸ்சுக்கு வரேக்க அவளுக்கு ஒருக்கா எடுத்து காட்டவேணும். இல்லாட்டி மூஞ்சிய தூக்கி வச்சுக்கொண்டு இருப்பாள்.
"உள்ளை யாரையேன் பாத்து வைச்சிருக்கிறியே என்ன? " கடைசியாய் வந்தபோது அம்மா கேட்டதுக்கு
"அதெல்லாம் இல்லை.." என்று அவர் சொன்னதைக்கேட்டு கொஞ்சம் நிம்மதியாய்த்தானிருந்தது.
"போய் ஏழு வருசத்துக்கு மேலை தானே. கலியாணம் கட்டலாம் தானே?" அம்மா விட்டபாடில்லை.
"அதுக்கெல்லாம் எனக்கு இப்ப நேரமில்ல சும்மா போங்கோ" சிரித்துக்கொண்டே சொன்னபோது கொஞ்சம் கவலையாய் இருந்தது.
அடுத்தமுறை வரேக்கை அவரிட்டை சொல்லி இப்படி ஒரு தாலி செய்து கொண்டுவரச் சொல்லவேணும். ஆனா யாரேன் அறிஞ்சா இன்னும் பெரியவளே ஆகேல்லை அதுக்குள்ளை கலியாண ஆசையைப் பார் எண்டு கிண்டல் பண்ணுவினம். அதாலை அதுவரைக்கும் அவவிண்ட தாலியைப் பாத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
"கொடியெல்லாம் வேண்டாம். பேசாமல் மஞ்சள் கயித்தில தாலியைக் கட்டலாம் தானே?" அவள்தான் கேட்டாள்.
"எங்கடை தகுதிக்கு சரிப்பட்டு வராது. நாலுபேர் நாலுவிதமா நாக்கிலை பல்லைப்போட்டு கதைக்குங்கள். குறைஞ்சது ஒன்பது பவுனிலையாச்சும் கொடி போட வேணும்." அவள் அம்மா சொன்ன தகுதி என்னவென்று புரியவில்லை. ஒரு பத்துப் பவுன் கொடியிலை போற தகுதியைக் காப்பாத்த வாழ்க்கை முழுவதும் போராட வேணுமா என்ன?
ஒரு தொப்புள் கொடி உறவுக்காய்.. சமூகத்தில் அதன் அங்கீகாரத்திற்காய்.. சன்றோனாக்கும் அதன் கல்விக்காய்.. தொலைந்துபோன உரிமைகளுக்காய்.. வாழ்க்கைப் பாதையில் போராடிப் போராடி.. கடைசியில் என்னத்தைக் கண்டோம்?
"ஏற்கனவே போராட்டம் போராட்டம் எண்டு போய் எங்கடை சனம் இருக்கிறதையும் இழந்ததுதான் மிச்சம். வெளிநாட்டிலை போய் யாராருக்கெல்லாமோ கொடிதூக்கிக்கொண்டு அடிமையாய் இருந்து அவங்களுக்கு உழைச்சுக் கொட்டுறதை கொஞ்சம் பொறுமையாய் இருந்து சொந்த நாட்டிலையே செய்திருந்தால் இன்றைக்கு எங்கடை சனம் எவ்வளவு முன்னேறி இருக்கும்." சொன்னது நிச்சயமாய் அவளில்லை.
அவளுக்கு உந்த அரசியல் தெரியாமலிருக்கலாம், புரியாமலிருக்கலாம். ஆனால் சாதாரண ஒரு பெண்ணாய் எல்லோர் வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்த ஒரு சராசரித் தமிழன் போல அவளுக்குமெண்டு ஒரு பார்வை இருக்கும் தானே. அதைச் சொல்ல நிச்சயமாய் அவளுக்கு உரிமையுண்டுதானே?
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"சிங்களவன் எங்களை அடிமைப் படுத்துறான் எண்டு சொல்லிக்கொண்டு தமிழனைத் தமிழனே ஏமாத்தி அடிமையாய் வைத்திருந்தது தான் மிச்சம். போராடிச் செத்ததைவிட, உரிமையை மீட்டுத் தருவதாய்ச் சொல்லிய அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட தமிழர்கள் தானே அதிகம்." என்று அவள் சொல்லப்போனால் முளைச்சு மூணுஇல்லை விடேல்லை நீயெல்லாம் போய் அரசியல் தெரியுமெண்டு கதைக்கிறியா என்று அரசியலைக் கரைச்சுக் குடிச்ச மேதாவிப் பெரியவர்கள் சொல்லுவினம். அதுவேறை அவளின் வீட்டிலை நவக்கிரகம் மாதிரி ஒவ்வொருவருக்கும் தனித்தனி அரசியல் பார்வைகள். ஒரு வீட்டிலையே இப்படி ஒன்பதுபேர் எண்டா நாட்டிலை கேட்கவா வேணும்? மக்கள் பாவம்.
"அண்டைக்கு மட்டும் அமிர்தலிங்கத்தை சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ சமாதானம் வந்திருக்கும். எங்கடை உரிமையும் கிடைச்சிருக்கும்." கூடவேயிருந்த பெரியண்னர் சொன்னபோது ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.
"அமிர்தலிங்கம் அற்ப சலுகைகளுக்கு விலைபோன ஒரு துரோகி."
"நாங்கள் தான் முதல்ல போராட்டத்தை தொடக்கினம். அதிலை ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கிறம் தெரியுமே."
"உங்கடை ஆக்கள் கொள்ளையடிச்ச நகையை எல்லாம் அவங்கள் தானே மீட்டது"
"காதலுக்காக துவக்கெடுத்து சுட்டவந்தானே.. இவன் எப்படி மக்களைக் காக்கிறது?"
"தலைவர் ஒழுக்கத்தைத்தான் முன்னிலைப் படுத்துறவர். அதாலைதான் இத்தினை வருஷ போராட்டத்திலயும் அவங்கள் பெண்கள் விசியத்திலை எல்லை மீறினதில்லை. மீறவிட்டதுமில்லை."
"அதுக்கு நடுச் சந்தியில கட்டி வைச்சு அதில சுடுறதே. பாக்கிறதுகளுக்கு மனநிலை பாதிக்குமேல்லே"
"தண்டனை கூடவாயிருந்தால் தான் குற்றங்கள் குறையும். ஆனா அதுக்காண்டி எல்லாரும் நீதியைக் கையிலை எடுக்ககூடாது."
சத்தியமாய் இவை ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நவக்கிரகங்களின் வாதப் பிரதிவாதங்கள். ஒருவரை ஒருவர் ஆமோதிப்பதுபோல் எதிர்ப்பது, எதிர்ப்பதுபோல் ஆமோதிப்பது. என்ன கன்றாவி அரசியலோ..?
"நாங்கள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லதை நினைச்சுத்தான் தொடங்கினம். ஆனா இவங்கள் வந்து எல்லாரையுமே போட்டுத்தள்ளிட்டு தாங்கள் தான் மக்களிண்டை ஏகப் பிரதிநிதி எண்டு சொல்லிக்கொண்டு சனத்தைச் சாகடிச்சது தான் மிச்சம்." என்ற சித்தப்பாவின் முப்பதுவருஷ அரசியல் அனுபவத்தில் வந்த வார்த்தைகளில் உண்மையாகவே ஆதங்கம் இருந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உண்மைதானே.. இதுவரை தனிநாடு, தனிக்கொடி எண்டுசொல்லிக்கொண்டு, ஏத்தின கொடிகளைவிட போர்த்திய கொடிகள் தானே அதிகம். ஆனால் நீங்களெல்லாம் ஆளுக்கொரு கட்சி எண்டு தொடக்கிவைத்து 'சகோதரயுத்தம்' எண்டு உங்களுக்கையே அடிபட்டுச் சாகாமல் கொஞ்சம் தன்னும் விட்டுக்கொடுத்துப் போயிருந்தால் இவ்வளவும் வந்திருக்காதே. அது இயக்கமாகவே இருக்கட்டும்.
தமிழனைத் தமிழனே விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகமுடியவில்லை. ஆயிரத்தெட்டு கொடிகள்.. கொள்கைகள்.. முரண்பாடுகள்.. பிறகெப்படி சிங்களவன் மட்டும் எங்களைப் புரிந்துகொள்வது? சமாதானம் பேசுவது? ஒருவனுடன் பேசினால் இன்னொருவனுக்கு குமைச்சல். அவர்களும்தான் எத்தனை பேரைப் பார்த்து எத்தனை விதமாய் பேசி எத்தனை கொள்கைகளை விளங்கி எத்தனை தீர்வை வைத்து எத்தனை பேரை சமாதானப் படுத்தி எத்தனை திருத்தங்களைச் செய்து எத்தனை அறிக்கைகளை வாசித்து எத்தனை பேரின் இத்தனை எத்தனை கேள்விகளுக்கு என்று பதிசொல்வது?
உலகமறிய சமாதானக் கொடியுடன் வந்தவர்களையே ஒட்டுமொத்தமாய் சுட்டுப்போட்டுவிட்டு தமக்கு எதுவுமே தெரியாதென்றவர்களுக்கு நாட்டுக்குள்ளயே காதும் காதும் வைத்ததுபோல இத்தனை கொடிகளையும் கொள்கைகளையும் கிழித்துப் புதைக்க எத்தனை நாளாகும்? எல்லாம் வெறும் கண்துடைப்பு. தமக்கு வாலாட்டுபவர்களைத் தடவிக் கொடுத்து சீறிப் பாய்பவர்களை சுட்டுத்தள்ளுவது தானே மேல்த்தட்டு அரசியல். அது தெரிந்திருந்தும் கையில் ஒரேயொரு ஆசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு "நாங்கள் தமிழரின் உரிமைகளை மீட்டுத்தருவோம்" என்று சொல்வது உங்களுக்கே அபத்தமாய் தெரியவில்லை?
மக்களுக்கு அரசியலை புரியவிடாமல் அரசியல் செய்ய எங்கடை தமிழனால் மட்டும்தான் முடியும். இல்லையெண்டால் நாப்பத்தெட்டாம் ஆண்டு ஒரேநாட்டில ஒரேகொடியில ஒண்டா சேர்ந்து இருப்பம் எண்டு சொன்னபோது தலையாட்டிய மக்கள், பின்பு இல்லை பிரிவதுதான் சரி என்றபோது அதுக்கும் சரி எண்டுசொல்லி துவக்குத் தூக்கியிருக்க மாட்டினம். ஆரம்பத்தில் நல்லவனாய் முட்டாளாய்த் தெரிந்த சிங்களவன் திடீரென்று அறிவாளியாகி கெட்டவனாய் ஆகிவிட்டிருந்தான்.
பின்பு ஒருவாறு கஷ்டப்பட்டு அரசாங்கத்துடன் சமரசம் செய்து தங்கள் அற்ப சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நேரத்தில வந்து அவர்களின் அரியணைக்குக் காவலாய் இருப்பார்கள் எனநினைத்து வளர்க்கப்பட்டவர்களே எதிராய்த் திரும்பி தனிக்கொடி, தனித் தமிழீழம் என்று சொல்லி அவர்களின் நெஞ்சுக்கே குறிவைத்தால் ரத்தம் கொதிக்காதா என்ன?
*****
தொடரும்.
•
Posts: 11,798
Threads: 97
Likes Received: 5,684 in 3,424 posts
Likes Given: 11,113
Joined: Apr 2019
Reputation:
39
(21-03-2019, 10:57 AM)johnypowas Wrote: உண்மைதானே.. இதுவரை தனிநாடு, தனிக்கொடி எண்டுசொல்லிக்கொண்டு, ஏத்தின கொடிகளைவிட போர்த்திய கொடிகள் தானே அதிகம். ஆனால் நீங்களெல்லாம் ஆளுக்கொரு கட்சி எண்டு தொடக்கிவைத்து 'சகோதரயுத்தம்' எண்டு உங்களுக்கையே அடிபட்டுச் சாகாமல் கொஞ்சம் தன்னும் விட்டுக்கொடுத்துப் போயிருந்தால் இவ்வளவும் வந்திருக்காதே. அது இயக்கமாகவே இருக்கட்டும்.
தமிழனைத் தமிழனே விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகமுடியவில்லை. ஆயிரத்தெட்டு கொடிகள்.. கொள்கைகள்.. முரண்பாடுகள்.. பிறகெப்படி சிங்களவன் மட்டும் எங்களைப் புரிந்துகொள்வது? சமாதானம் பேசுவது? ஒருவனுடன் பேசினால் இன்னொருவனுக்கு குமைச்சல். அவர்களும்தான் எத்தனை பேரைப் பார்த்து எத்தனை விதமாய் பேசி எத்தனை கொள்கைகளை விளங்கி எத்தனை தீர்வை வைத்து எத்தனை பேரை சமாதானப் படுத்தி எத்தனை திருத்தங்களைச் செய்து எத்தனை அறிக்கைகளை வாசித்து எத்தனை பேரின் இத்தனை எத்தனை கேள்விகளுக்கு என்று பதிசொல்வது?
உலகமறிய சமாதானக் கொடியுடன் வந்தவர்களையே ஒட்டுமொத்தமாய் சுட்டுப்போட்டுவிட்டு தமக்கு எதுவுமே தெரியாதென்றவர்களுக்கு நாட்டுக்குள்ளயே காதும் காதும் வைத்ததுபோல இத்தனை கொடிகளையும் கொள்கைகளையும் கிழித்துப் புதைக்க எத்தனை நாளாகும்? எல்லாம் வெறும் கண்துடைப்பு. தமக்கு வாலாட்டுபவர்களைத் தடவிக் கொடுத்து சீறிப் பாய்பவர்களை சுட்டுத்தள்ளுவது தானே மேல்த்தட்டு அரசியல். அது தெரிந்திருந்தும் கையில் ஒரேயொரு ஆசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு "நாங்கள் தமிழரின் உரிமைகளை மீட்டுத்தருவோம்" என்று சொல்வது உங்களுக்கே அபத்தமாய் தெரியவில்லை?
மக்களுக்கு அரசியலை புரியவிடாமல் அரசியல் செய்ய எங்கடை தமிழனால் மட்டும்தான் முடியும். இல்லையெண்டால் நாப்பத்தெட்டாம் ஆண்டு ஒரேநாட்டில ஒரேகொடியில ஒண்டா சேர்ந்து இருப்பம் எண்டு சொன்னபோது தலையாட்டிய மக்கள், பின்பு இல்லை பிரிவதுதான் சரி என்றபோது அதுக்கும் சரி எண்டுசொல்லி துவக்குத் தூக்கியிருக்க மாட்டினம். ஆரம்பத்தில் நல்லவனாய் முட்டாளாய்த் தெரிந்த சிங்களவன் திடீரென்று அறிவாளியாகி கெட்டவனாய் ஆகிவிட்டிருந்தான்.
பின்பு ஒருவாறு கஷ்டப்பட்டு அரசாங்கத்துடன் சமரசம் செய்து தங்கள் அற்ப சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நேரத்தில வந்து அவர்களின் அரியணைக்குக் காவலாய் இருப்பார்கள் எனநினைத்து வளர்க்கப்பட்டவர்களே எதிராய்த் திரும்பி தனிக்கொடி, தனித் தமிழீழம் என்று சொல்லி அவர்களின் நெஞ்சுக்கே குறிவைத்தால் ரத்தம் கொதிக்காதா என்ன?
*****
தொடரும்.
நம்ம கேபி படத்தின் டைட்டில் வச்சி அசத்தலான கதை எழுதி இருக்கீங்க நண்பா
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்க நண்பா
•
|