15-01-2019, 10:26 AM
![[Image: _105175165_3faeb4f1-d8d7-4b0c-831b-501d5c81d5d6.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/DB5D/production/_105175165_3faeb4f1-d8d7-4b0c-831b-501d5c81d5d6.jpg)
"நாம் இப்போது சுத்திகரிப்பது மிக மிகக் குறைவு. நம்முடைய கழிவுநீர் மொத்தத்தையும் சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும். காரணம், குடிநீர் வாரியம் எந்த அளவுக்கு நீர் விநியோகம் செய்கிறதோ, அதைவிட அதிகமாக கழிவுநீர் உருவாகிறது. ஆகவே, கழிவு நீர் முழுவதையும் சுத்திகரித்து வழங்கினால், புதிதாக நீர் ஆதாரம் எதையும் தேடவேண்டியதில்லை” என்கிறார் ஜனகராஜன்.
கடல் நீரை சுத்திகரித்து வழங்குவதைவிட மிகக் குறைவான செலவில் கழிவுநீரைச் சுத்திகரிக்க முடியுமென்று கூறும் அவர், இவை ஏரியில் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதோடு, அந்தந்தப் பகுதிகளுக்கு ஆங்காங்கே சுத்திகரிப்பு செய்து வழங்க முடியும். இதனால், மையப்படுத்தப்பட்ட விநியோகத்தில் உள்ள அழுத்தம் குறையும். உதாரணமாக கடல் நீரை குடிநீராக்கினால், கடலோரத்தில் சுத்திகரித்து நகரின் பல பகுதிகளுக்கும் குழாய் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு தண்ணீரை மோட்டர்களின் மூலம் 'பம்ப்' செய்ய வேண்டும். ஆனால், கழிவுநீரை ஆங்காங்கே உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் செய்வதால் விநியோகம் செய்வது எளிது என்கிறார் ஜனகராஜன்.
கழிவுநீரைச் சுத்திகரித்த பிறகு உருவாகும் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். சென்னைக் குடிநீர் வாரியம் மிகச் சிறிய அளவில் அதைச் செய்துவருகிறது. "பெரிய அளவில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும்போது, இன்னும் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும். எஞ்சியிருக்கும் திடக் கழிவை உரமாகப் பயன்படுத்த முடியும். இது எல்லாவிதத்திலும் நன்மைதரக்கூடிய விஷயம்" என்கிறார் ஜனகராஜன்.
சென்னையில் தற்போது சுமார் 4800 கி.மீ நீளமுள்ள நீர் விநியோகக் குழாக்களும் சுமார் 4200 கி.மீ. தூரத்திற்கான கழிவுநீர் குழாய்களும் உள்ளன. சுமார் 7 லட்சம் பயனாளிகள் சென்னைக் குடிநீர் வாரியத்தின் மூலம் குடிநீரைப் பெற்றுவருகின்றனர்