Romance உன் ஆசை முகம் தேடி
#19
அலுவலகத்திற்கு அவசரமாக கிளம்பி கொண்டிருந்த மகேஷ், ப்ரியா அறையின் ஓரத்தில் நின்று அவனையே பார்த்திருப்பதை கவனித்தான்.

“என்ன டார்லிங், காலையிலேயே இப்படி மயக்குற லுக் விடுற? இன்னைக்கு லீவ் போட்டுறவா?”
“அது மட்டும் தான் இப்போ குறைச்சல்...”

“ஹேய் என்ன இப்படி அலுத்துக்குற?”

“வேற என்ன செய்ய, சொல்லுங்க... நீங்க என்னிடம் என்ன சொன்னீங்க? கிளம்பும் முன் எனக்கு...”

“ஓ! ஓ! கடலை மிட்டாய் வாங்கி தரேன்னு சொன்னேன்... சாரி கண்ணா...” கெஞ்சலாக சொன்ன போதும் மகேஷின் முகத்தில் கேலி புன்னகை தோன்றி இருந்தது...

குமார மங்கலத்தில் வீட்டிலேயே செய்யப்படும் கைத்தொழிலாக கடலை மிட்டாய் தயாரிப்பும் இருந்தது. காதலிக்கும் போது,  ஒருமுறை அதை அவன் ப்ரியாவிற்கு வாங்கி கொடுத்ததில் அவளுக்கு மிகவும் பிடித்து போக, அவ்வப்போது, அதை கேட்டு சிறு குழந்தையாக அடம் பிடிப்பது அவளின் வாடிக்கையானது...

“நாளைக்கு குழந்தை பிறந்த பிறகு, நீங்க இரண்டு பேரும் ஒவ்வொரு பக்கம் இப்படி மிட்டாய்க்கு சண்டை போடுவீங்க போல இருக்கே...”

“அதுக்கு எல்லாம் ரொம்ப நாள் இருக்கு... இப்போவே என்ன அதை பற்றிய பேச்சு?”

“ஹேய், என்ன நீ புதுசா பிளான் சொல்ற?”

“ஆமாம் மேகி... முதல்ல சுபாஷ்க்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் நாம் குழந்தை பற்றி எல்லாம் யோசிப்போம்...”

“ம்ம்ம்...”

பேசியப் படி இருவரும் தங்களின் அறையை விட்டு வெளியில் வந்து உணவறையை அடைந்தார்கள். அங்கே சுபாஷ் மலையின் மீது இருக்கும் வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தான்.

“ஓகே ப்ரியா, மகி, நான் கிளம்புறேன்... உங்களுக்காக தான் வந்தேன்... அம்மாவை கவனிச்சுக்கோங்க...” என்றான் சுபாஷ்.
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனின் செல்போன் ஒலி எழுப்பியது...

“ஒரு நிமிஷம்...” என்று இருவரிடமும் சொல்லி விட்டு கைப்பேசியை எடுத்து அவன் பேச தொடங்கவும், ப்ரியா கணவனிடம்,

“கடலை மிட்டாய்...” என கிசுகிசுத்தாள்.

கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு,

“சரி இங்கே பக்கத்தில் இருக்கும் கடையில் இருந்து இப்போ வாங்கி தரேன், ஈவ்னிங் வரும் போது, உனக்கு பெரிய பாக்கெட் வாங்கி தரேன், சரியா?”

“ஓகே ஓகே... தேங்க்ஸ்...”

மனைவியின் முகத்தில் பொங்கிய சந்தோஷத்தை பார்த்து ரசித்த படியே பர்ஸை எடுத்து சில்லறையை தேடினான் மகேஷ்.

“அடடா, ப்ரியா எல்லாமே நூறு ரூபாய் நோட் தான் கண்ணா இருக்கு... சில்லறை இல்லாமல் அந்த கடைக்கு போவது வேஸ்ட்...”

“ப்ச்... போங்க நீங்க எப்போதும் இப்படி தான்...”

“ஹேய் கண்ணா ப்ளீஸ்...”

“இருங்க இருங்க, உங்களுக்கு சில்லறை தானே வேணும்? சுபாஷுடைய பர்ஸ் இங்கே இருக்கு, அவரிடம் சில்லறை இருக்கான்னு பார்ப்போம்...”

“ஹேய் அதெல்லாம் சரி இல்லை...” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே அங்கே மேஜை மீது இருந்த சுபாஷின் பர்ஸை எடுத்து அவள் நோண்ட தொடங்கினாள். உள்ளே இருந்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து மகேஷிடம் கொடுத்தவள்,

“சீக்கிரம் வாங்கிட்டு வாங்க...” என்று கணவனை அனுப்பி வைத்தாள்.

“உன்னை என்ன செய்றது?” என்று செல்லமாக கோபித்தபடி, அவள் கொடுத்த பத்து ரூபாயுடன் சென்றான் மகேஷ்.

அவன் செல்வதை சற்றே பெருமையுடன் கவனித்திருந்துவிட்டு, சுபாஷின் பர்ஸை மூட அவள் அதை திருப்பிய போது, அதன் உள்ளே இருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது. குனிந்து அதை எடுத்து பார்த்தவள், ஆச்சர்யத்தில் வாயை பிளந்தாள்!

பத்து நிமிடத்தில் சின்ன கடலை மிட்டாய் பாக்கெட்டுடன் வந்த மகேஷ்,

“ப்ரீ, உனக்காக நானே நடந்து போய் வாங்கிட்டு வந்திருக்கேன், இதற்கு எல்லாம் எனக்கு தனி பீஸ் வேணும் ஓகே?” என்றான் கண்ணை சிமிட்டியப் படி...

ஆனால் ப்ரியா எப்போதும் போல் அவனை காதலுடன் பார்க்காது ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தாள். அதை பற்றி கேட்க மகேஷ் வாயை திறந்த கணம், சுபாஷ் வேகமாக வந்தான். அவனுடனே ராஜேஸ்வரியும் வந்தாள்.

“சரி நான் கிளம்புறேன்... பை...” என்றபடி மேஜை மீது வைத்திருந்த ஜீப் சாவியை எடுத்த சுபாஷிடம்,

“சுபாஷ், உங்க பர்ஸ் கீழே விழுந்திருச்சு... இந்தாங்க...” என்று கையில் வைத்திருந்த பர்ஸை கொடுத்தாள் ப்ரியா.

இவள் ஏன் பொய் சொல்கிறாள் என்று மகேஷ் மனதினுள் குழம்பிய நேரத்தில், சுபாஷ் அவனின் பர்ஸை வாங்கி அவசரமாக திறந்து பார்த்தான். அவன் பர்ஸினுள் துழாவுவதை கவனித்த பிரியா,

“என்ன ஆச்சு சுபாஷ் ஏதாவது மிஸ் ஆகுதா?” என்றாள்.

“ஆமாம் ஒரு சின்ன பேப்பர்... ரொம்ப முக்கியமான பேப்பர்... பர்சுக்குள்ளே தான் வைத்திருந்தேன்... ஆமாம், பர்ஸ் எங்கே விழுந்தது ப்ரியா? அங்கே கீழே விழுந்திருச்சோ என்னவோ?

“அதோ அந்த பக்கம் தான் விழுந்தது சுபாஷ்...” என்று கையை காட்டியவள், சுபாஷ் திரும்பிய நேரத்தில், கையில் இருந்த அந்த காகிதத்தை கீழே போட்டு விட்டு, அதை அப்போது தான் கவனித்தது போல்,

“இதுவா பாருங்க சுபாஷ்...” என்றாள்.

அவள் காட்டிய திசையில் இருந்த அந்த காகிதத்தை, அவள் குனிந்து எடுக்கும் முன் அவசரமாக வந்து குனிந்து எடுத்த சுபாஷ், அதை முழுதாக திறந்துக் கூட பார்க்காமல்,

“ஆமாம் இது தான் ப்ரியா...” என்றான் ஒரு விதமான திருப்தியான குரலில்... பின்,

“சரி, அம்மா நான் கிளம்புறேன்... பை ப்ரியா, பை மகேஷ்...” என்றபடி கிளம்பினான்.

அதுவரை அங்கே நடந்த ப்ரியாவின் விசித்திரமான நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் இருந்த ராஜேஸ்வரியும், மகேஷும், அவளை கேள்வியோடு பார்த்தனர்.


“சுபாஷ் கல்யாண மேட்டரில் எனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்கே!” என்றாள் அவள் குதூகலமாக.
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 16-09-2019, 07:05 PM



Users browsing this thread: 10 Guest(s)