05-09-2019, 12:53 PM
மருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..? மெய் - விமர்சனம்
மருத்துவ உலகில் நடக்கும் ஊழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது மெய். அமெரிக்காவில் மருத்துவம் படிக்கும் நாயகன் நிக்கி சுந்தரம் தன் குடும்பப் பிரச்சனை காரணமாக இந்தியாவிற்கு வருகிறார். வந்த இடத்தில் மருத்துவ பிரதிநிதியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இவருக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையே ஒரு மருந்துக்கடையில் வேலைபார்த்துக்கொண்டே மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார் நிக்கி. அந்த சமயம் ஒரு நாள் தன்னுடன் வேலைபார்க்கும் நண்பனுக்கு வலிப்பு ஏற்படுகிறது. அவரை நிக்கி ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்ய, எதிர்பார்க்காத வகையில் நிக்கியின் நண்பர் இறந்துவிடுகிறார். நண்பர் இறப்பில் கொலையாளியாக நிக்கி மாட்டிக்கொள்ள, அந்தக் கொலையிலுருந்து நிக்கி தப்பித்தாரா, நிக்கி நண்பர் எப்படி இறந்தார், இந்த இறப்பிற்கும் மருத்துவத் துறையில் நடக்கும் குற்றங்களுக்கும் என்ன சம்பந்தம், அவை எப்படி அம்பலமாகின்றன என்பதே மெய் படத்தின் கதை.
பலமுறை பார்த்துப் பழகிய கதையை விறுவிறு திரைக்கதை மூலம் ரசிக்கவைக்கலாம் என்று நம்பி முயற்சி செய்துள்ளது இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் அன்ட் டீம். அடுத்தடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை கணிக்கும்படி காட்சியமைப்புகள் இருந்தாலும் ஓர் அளவு எங்கேஜிங்கான திரைக்கதை ஆங்காங்கே ரசிக்கவும் வைத்துள்ளது. புதுமுகம் நிக்கி சுந்தரம் நிஜத்திலும் ஃபாரின் ரிட்டர்ன் என்பதால் அவரின் உச்சரிப்பு, நடை, உடை, பாவனை என அத்தனைத்திலும் அவருக்கு அதிக வேலை இல்லை. நிஜத்தில் எப்படியோ படத்திலும் அவர் அப்படியே இருக்கிறார். அது கதையையும் டிஸ்டர்ப் செய்யாமல் இருப்பதால் தப்பித்துக்கொள்கிறார்.
நிக்கி புதுமுகம் என்பதால் அவருக்குண்டான வேலையையும் சேர்த்து ஐஸ்வர்யா ராஜேஷ், சார்லி, பழைய ஜோக் தங்கதுரை, கிஷோர் ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்கள் பார்த்துக்கொள்கின்றனர். இது கதையோட்டத்திற்கு பக்கபலமாகவும் அமைந்துள்ளது. நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தைப் பார்க்கவைக்கும் இழுவை சக்தியாக இருந்து படத்தை கரைசேர்க்க முயற்சி செய்துள்ளார். தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சம்பிரதாய போலீசாக கிஷோர் வந்தாலும் அதிலும் கவனம் ஈர்க்கும்படி நடித்து பாத்திரத்திற்கு சிறப்பு செய்துள்ளார். அனுதாப கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி எப்போதும்போல் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார்.
வி.என்.மோகனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரிச்சாக உள்ளன. ப்ரித்வி குமாரின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. மிஸ்டர் ரோமியோ, என்னை அறிந்தால், காக்கிச் சட்டை, ஈ, மெர்சல் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் கையாளப்பட்ட மருத்துவத்துறை குற்றங்களை இந்தப் படமும் கையாண்டுள்ளது. ஆனாலும் இது இன்னும் பெரிய ஸ்கோப் உள்ள ஒரு களம்தான். ஆனால், பெரிதாக எந்த புதுமையையும், சுவாரஸ்யத்தையும் திரைக்கதைக்குள் கொண்டுவரவில்லை திரைக்கதையாசிரியர் சேந்தா முருகேசன் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்குனர் அன் டீம்.
மெய் - நல்ல களம்தான், அதில் சரியாக விளையாடிருக்கலாம்...!
first 5 lakhs viewed thread tamil