10-01-2019, 10:51 AM
Monthly Rasipalan
துலாம்: 4-ல் சூரியன், கேது; 2-ல் குரு; 2,3-ல் சுக்கிரன்; 4, 5 -ல் புதன்; 6, 7 -ல் செவ்வாய்; 3-ல் சனி; 10-ல் ராகு மாதம் முழுவதும் குரு, சனி, சுக்கிரன், மாத முற்பகுதியில் செவ்வாய், புதன் ஆகியோரால் நற்பலன்கள் ஏற்படும். பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். அலுவலகத்தில் இது வரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 22, 23, 24, 25, 31, பிப்: 1, 2, 3, 6, 7, 11, 12 சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 17, 18 அதிர்ஷ்ட எண்கள்:1,3,7 வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர் பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடவும்.