screw driver ஸ்டோரீஸ்
அத்தியாயம் 24

'கண்ணிழந்தான்.. பெற்றிழந்தான்.. எனவுழந்தான்..' என்கிற கம்பராமாயண வரிகள் கொண்டு.. அசோக்கின் மனநிலையை கொஞ்சமேனும் அளந்திட, அறிந்திட முயலுவோம்..!! கண்பார்வையற்ற மனிதவாழ்வு மிகவும் கொடுமையானதொரு வாழ்வுதானே.. கனவென்ற போலிமகிழ்ச்சி பெறவும் கொடுத்துவைத்திடாத வாழ்வுதானே..?? பிறவியிலிருந்தே பார்வையற்ற ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும்.. தொடுகிற பொருட்களின் தோற்றம் கண்டிட துடிக்கும் அவனது ஏக்கம் எப்படி இருக்கும்..?? துயரம்தானே..??

அதைவிட பெருந்துயரம் எது தெரியுமா..?? மண்ணில் ஜீவித்த நாள்முதலாய், கண்ணில் ஜீவனன்றி வாழும் ஒருவனுக்கு.. விழிகளில் ஒளி கொடுத்து.. வெளிச்ச வெள்ளத்தில் அவனை நனைத்து.. உலகின் அழகை அவனுக்கு உணர்த்தி.. வண்ணங்களின் அற்புதத்தை அக்கண்களில் வார்த்து.. கண்பார்வையின் அருமையை முழுதாக அறியவைத்து.. பிறந்ததன் பலனை அடைந்துவிட்டதாய் அவன் பறந்து திரிகையில்.. மீண்டும் அவனது பார்வையை பறித்து இருளில் தள்ளினால்.. அவனது மனநிலை எப்படி இருக்கும்..?? முன்பிருந்ததைவிட பெருந்துயரம்தானே..??

காதலும் கூட கண்பார்வை போன்றதுதான்.. அசோக்கின் நிலையும்கூட கிட்டத்தட்ட அத்தனை கொடிதுதான்..!! பெரியவன் ஆனதிலிருந்தே பெண் நட்பு அறியாதவன்.. காதலர்களுக்கு மத்தியிலே காலம் சென்றாலும், அவனுக்கென்று ஒரு காதல் அமையப் பெறாதவன்.. வெளியிலே வெறுப்பென்று நடித்து திரிந்தாலும், உள்ளுக்குள் காதலுக்காக உண்மையாய் ஏங்கியவன்..!! தேடியிருந்த தேவதையாய் மீரா அவன் வாழ்வில் வந்தாள்.. பெண்ணின் ஸ்பரிஸத்தை அவனுக்கு உணர்த்தினாள்.. காதலெனும் உன்னத உணர்வை அவனுக்குள் ஊற்றினாள்.. அந்த உணர்வு தந்த ஆனந்தத்தில் அவன் திளைத்துக் கொண்டிருக்கும்போதே.. கண்ணைப் பிடுங்கிப் போனது மாதிரி.. அவனது காதலைப் பறித்துச் சென்றால்..??


அசோக்கையும் அவன் மனநிலையையும் யாருமே துல்லியமாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்..!! அவன் மீராவின் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான காதலாலும்.. அவளை அடையமுடியாமல் போய்விடுமோ என்கிற அச்சுறுத்தலாலும்.. மனதளவில் தளர்ந்து போயிருந்தான்.. புத்தியளவில் குழம்பி போயிருந்தான்..!! நம்பிக்கையான வார்த்தைகளையே அவன் மனம் நாடியது.. தெளிவான வழிகாட்டலே அவன் புத்திக்கு தேவையாயிருந்தது..!! ஆனால்.. அவனுக்கு கிடைத்தது என்ன..??

ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. அசோக்கின் நண்பர்களும் சரி.. அவனது குடும்பத்தாரும் சரி.. அவனிடம் அன்பு கொண்டிருந்தார்களே ஒழிய.. அவனது அவசியத்தை அறிந்துகொண்டார்கள் இல்லை..!! அவன் மீதிருந்த அன்பின் காரணமாக.. அவனது நிலையை பார்க்க சகியாமல்.. அவநம்பிக்கையான வார்த்தைகளை சிந்திவிட்டனர்..!! அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மை புரியவில்லை.. அவநம்பிக்கையை ஊட்டுகிற அன்பு எப்போதுமே.. மனித மனதில் மறுதலையான மாற்றத்தையே தோற்றுவிக்க கூடும்..!! அசோக்கின் மனதிலும் அத்தகைய மாற்றமே..!!

பதைபதைப்புடன் படிக்கட்டு ஏறிய பாரதி, மூச்சிரைக்க அசோக்கின் அறையை வந்தடைந்தாள்.. அவரசமாக கதவை திறந்து, அறைக்குள் பார்வையை வீசினாள்..!! உள்ளே அவள் கண்டகாட்சியில்.. ஒருவித நிம்மதியும், குழப்பமும் ஒருசேர அவளுடைய முகத்தில் படர்ந்தன..!! அசோக் சுயநினைவுடன் இருந்ததினால் வந்தது அந்த நிம்மதி.. குழப்பத்துக்கு காரணம் அவன் அமர்ந்திருந்த நிலை..!!

கால்கள் தரையில் பதிந்திருக்க கட்டிலில் அமர்ந்திருந்தான்.. முழங்கைகளை தொடைகளில் ஊன்றி, முகத்தினை உள்ளங்கைகளில் கவிழ்த்திருந்தான்.. மூச்சு விடுவதற்கு சாட்சியாய் அவனது முதுகு விரிந்து சுருங்கிக் கொண்டிருந்தது..!! அடுத்து என்ன செய்வது என்று புரியாத ஒரு சூனிய உணர்வில் ஆழ்ந்திருக்கிறான் என்பதினை.. அவன் அமர்ந்திருந்த தோற்றத்தில் இருந்தே அறிந்துகொள்ள முடிந்தது..!!

பதற்றம் குறையாத பாரதியின் உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருக்க.. படியேறி ஓடிவந்ததில் அவளது நெஞ்சுக்கூடு காற்றுக்காக அடித்துக்கொண்டு கிடக்க.. அதற்குள்ளாகவே சப்தம் கேட்டு அசோக் தலையை நிமிர்ந்து பார்த்தான்..!! வாசலில் தாயின் உருவம் கண்டதும்.. அவனது நெற்றியில் உடனடியாய் ஒரு சுருக்கம்..!! அதுவும்.. அவள் வந்து நின்றிருக்கிற கோலம் அவனை சற்றே திகைப்பில் ஆழ்த்தியது..!!

ஒருசில வினாடிகள்தான்.. அசோக்கிற்கு புரிந்து போனது.. வாசலில் அவள் நின்ற கோலமும், வந்திருப்பதற்கான காரணமும்..!! சிறிது தடுமாறியவன், பிறகு பொறுமையாக பக்கவாட்டில் திரும்பினான்.. கையை நீளமாக்கி சற்றே எட்டி அதை எடுத்தான்.. எடுத்ததை பிறகு உள்ளங்கையில் வைத்து அம்மாவிடம் நீட்டினான்.. தூக்க மாத்திரைகள் நிரம்பிய டப்பா..!!

வாசலின் இருபுறமும் கையூன்றி நின்று.. மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்த பாரதி.. இப்போது அறைக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!! மகனை நெருங்கியவள்.. அவன் கையிலிருந்த டப்பாவை கைப்பற்றிக்கொண்டாள்..!! அவளுடைய முகத்தில் இன்னமும் முழுநிம்மதி வந்திருக்கவில்லை.. அச்சம் இன்னும் மிச்சம் இருந்தது..!! அம்மாவின் எண்ண ஓட்டம் அசோக்கிற்கு புரிந்திருக்கவேண்டும்..!!

"சா..சாப்பிடலாம்னுதான் எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிடல..!!"

தளர்வான குரலில் சொன்னவன்.. தலையை மெல்ல குனிந்துகொண்டான்..!! பாரதி இப்போது மகனின் தாடையை பற்றி.. அவனது முகத்தை நிமிர்த்தினாள்..!! அம்மாவை ஏறிட்டு அவளது கூர்மையான பார்வையை சந்தித்த அசோக்கிற்கு.. தனது வார்த்தைகளில் அவளுக்கு நம்பிக்கையில்லை என்று தோன்றியது..!!

"சாப்பிடல மம்மி.. ப்ராமிஸ்..!!" என்றான் சற்றே சலிப்பாக.

பாரதிக்கு இப்போது மகனின் வார்த்தைகளில் நம்பிக்கை வந்தது.. அவளிடம் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.. 'என்னாயிற்றோ ஏதாயிற்றோ' என்று பதைபதைப்புடன் ஓடிவந்திருந்ததில், அவளது இருதயம்தான் இன்னும் 'படக் படக்' என துடித்துக்கொண்டிருந்தது..!! படபடப்பை குறைக்கும் பொருட்டு.. பாரதியும் அசோக்கின் அருகாக மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்..!! கையிலிருந்த டப்பாவை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு.. கண்களை மூடி.. சுவாசத்தை சீராக்கிக்கொள்ள முயற்சித்தாள்..!!

"ஆ..ஆனா.. கூடிய சீக்கிரத்துல எனக்கு அந்த நெலமை வந்துடுமோன்னு பயமா இருக்கு மம்மி..!!"

[Image: RA+60.jpg]



அசோக் அவ்வாறு சொன்னதும்.. பாரதி இப்போது தலையை திருப்பி.. பக்கவாட்டில் தெரிந்த மகனின் முகத்தை கலவரமாக பார்த்தாள்..!! அம்மாவை கவனியாத அசோக்.. எங்கேயோ வெறித்து பார்த்தபடி தொடர்ந்து பேசினான்..!!

"ஆளாளுக்கு அவளை மறந்துடு மறந்துடுன்னு சொல்றீங்க..!! எ..என்னால முடியல மம்மி.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், என்னால அவளை மறக்க முடியும்னு எனக்கு தோணல..!!"

"..............................."

"அவளோட பிரச்சினையை சொல்லி கஷ்டப்படுத்தக்கூட விரும்பாம.. என்னைவிட்டு பிரிஞ்சு போயிருக்கா.. எந்த அளவுக்கு என்னை உண்மையா நேசிச்சிருக்கணும்.. எந்த அளவுக்கு எதையுமே எதிர்பார்க்காம என்மேல அவளுக்கு காதல் வந்திருக்கணும்..?? அந்த மாதிரி ஒருத்தியை எப்படி என்னால மறக்க முடியும் மம்மி..??"
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 11-08-2019, 11:06 AM



Users browsing this thread: 9 Guest(s)