screw driver ஸ்டோரீஸ்
அத்தியாயம் 22

வடபழனி NGO காலனி மெயின் ரோட்..!! வளர்ந்து அடர்ந்திருந்த பச்சை மரங்கள்.. வழிநெடுக தார்ச்சாலைக்கு குடைவிரித்திருந்தன..!! கிளைகளையும், இலைகளையும் ஊடுருவ முடியாத சூரியக்கதிர்கள்.. செறிவற்ற வெளிச்சத்தையே செல்கிற பாதையில் தெளித்திருந்தன..!! மத்தியில் வெண்ணிறப்பட்டை இழைக்கப்பட்ட கருஞ்சாலையின் தேகம் எங்கும்.. மஞ்சள் நிறத்திலான இலைதழைகள் மண்டிப்போய் கிடந்தன..!! சன்னமாய் புகை துப்பியவாறே அசோக்கின் பைக்.. சரக்கென அச்சாலையில் சீறியபோது.. பதறிப்போன மஞ்சள் இலைகள்.. பறந்து சிதறி.. பாதையில் இருந்து விலகி வழிவிட்டன..!!

வண்டியின் வேகத்தை அதிகம் குறைக்காமல்.. வலதுபுறம் செல்கிற சாலையில் அசோக் திரும்பினான்..!! எதிர்பாராத விதமாய் ஒரு ஆட்டோ.. எதிர்ப்புறம் இருந்து வெளிப்படவும்.. ஷகிரா இடுப்பசைப்பது மாதிரியான ஒரு லாவகத்துடன்.. பைக்கை நெளித்து சுளித்து வளைத்து.. ஆட்டோவின் மூக்குரசி முத்தமிடுவதை இறுதி நொடியில் தவிர்த்தான்..!! சடனாக பிரேக்கிட்ட ஆட்டோ ட்ரைவர்.. சத்தமாய் உதிர்த்த கெட்ட வார்த்தை.. காற்றோடு கலந்து காதில் விழுவதற்குள்.. காத தூரம் பறந்திருந்தான்..!!

அடுத்த இரண்டாம் நிமிடத்தில்.. அசோக்கின் பைக் அந்த தெருவுக்குள் நுழைந்தது..!! அப்படி நுழைந்ததுமே.. அந்த தெருவில் நிலவிய ஒருவித அமைதியை.. அசோக்கால் உடனடியாக உணர முடிந்தது..!! வீதியின் இருபுறமும் கோடிகளை தின்று கொழுத்துப் போயிருந்த வீடுகள்..!! எல்லா வீடுகளுக்கு முன்பாகவும், ஏதாவது ஒரு காஸ்ட்லி கார் மினுமினுப்புடன் நின்றிருந்தது..!! அந்த வீடுகளை விடுத்து வெளிப்பட்டிருந்த மனித தலைகள்.. கேட்டுக்கருகே கொத்துக்கொத்தாய் குழுமியிருந்தன.. கிசுகிசுப்பான குரலில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தன..!!


தூரத்தில் ஒரு காவல்த்துறை வாகனம்.. ஈச்சமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது..!! தெருவுக்குள் நுழைந்த அடுத்த நொடியே.. அந்த வாகனத்தை கவனித்துவிட்ட அசோக்.. அதை நோக்கித்தான் தனது வண்டியையும் செலுத்தினான்..!! அந்த வாகனத்துக்கு அருகாகவே.. தனது பைக்கையும் பார்க் செய்தான்..!! ஈச்சமரத்துக்கு எதிர்ப்புறம் இருந்த வீடு.. அடர்பச்சையும் இளமஞ்சளுமான வர்ணப்பூச்சோடு.. அழகோடும் கம்பீரத்தோடும் காட்சியளித்தது..!! அந்த வீட்டு கேட்டுக்கருகிலும்.. கிசுகிசுப்பு பேச்சுடன் ஒரு சிறு மனித கும்பல்..!! அசோக் அந்த வீட்டை நோக்கி நடந்தான்..!!

[Image: RA+52.jpg]



கும்பலோடு கும்பலாய் இரண்டு கான்ஸ்டபிள்களும் நின்றிருந்தார்கள்..!! தங்களுக்குள் பேசிக்கொண்டு நின்றிருந்தவர்களில்.. தனசேகரன் என்ற பெயர்ப்பட்டயத்தை மார்பில் தாங்கியிருந்த ஒரு கான்ஸ்டபிள்.. அசோக் அவர்களை நெருங்குவதை கவனித்ததும் பேச்சை நிறுத்தினார்.. நெற்றியை சுருக்கியவர், அசோக்கை ஏறிட்டு வித்தியாசமாக பார்த்தார்..!! அவரது பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அசோக்.. அவனாகவே..

"எஸ்பி ஸாரை பாக்கணும்..!!" என்றான்.

"நீ யாரு..??"

"என் பேரு அசோக்.. ஆர்காட் ரோட்ல அட்வர்டைஸ்மன்ட் ஏஜன்சி வச்சிருக்கேன்..!!"

"ஓ..!! என்ன விஷயமா அவரை பாக்கணும்..??" கேட்டுவிட்டு தனசேகரன் அசோக்கை கூர்மையாக பார்க்க, அவனிடம் இப்போது மெலிதான ஒரு தயக்கம்.

"அ..அது.. அது கொஞ்சம் பர்சனல் ஸார்..!!"

அசோக் சொன்ன பதிலில்.. அந்த தனசேகரன் சற்று எரிச்சல் ஆகி இருக்கவேண்டும்.. அது அவரது குரலிலேயே தெளிவாக தெரிந்தது..!!

"பர்சனலா..?? ஏன்யா.. பர்சனல் விஷயம் பேசுற எடமா இது..?? க்ரைம் ஸ்பாட்டுயா.. உள்ள விசாரணை நடந்துட்டு இருக்குது.. இங்க ஆளாளுக்கு டென்ஷன்ல இருக்குறோம்.. நீ என்னடான்னா..?? போ போ.. போயிட்டு மத்தியானத்துக்கு மேல ஸ்டேஷன்ல வந்து பாரு..!!"

"இ..இல்ல ஸார்.. அவருக்கு என்னை நல்லா தெரியும்.. நான் வந்திருக்கேன்னு அவர்ட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்..!!"

"ப்ச்.. சொல்றேன்ல.. இங்கல்லாம் இப்படி வந்து பாக்க கூடாதுயா.. நீ மத்தியானத்துக்கு மேல.."

"ஹையோ.. என்னை இங்க வர சொன்னதே அவர்தான் ஸார்..!!" அசோக் சற்றே சலிப்பாக சொல்ல, தனசேகரனின் முகத்தில் இப்போது ஒரு வியப்பு.

"என்னது.. அவர்தான் வர சொன்னாரா..??"

"ஆமாம்..!! நீங்க உள்ள போய்.. அவர்ட்ட கொஞ்சம் சொல்றீங்களா.. ப்ளீஸ்..!!"

அசோக் பொறுமையற்ற குரலில் சொன்னான். தனசேகரன் இப்போது ஒருமாதிரி அவஸ்தையாக நெளிந்தார். அவருடைய குரலிலும் ஒருவித தடுமாற்றம்.

"எ..எங்களை வெளில நிக்க சொல்லிருக்காருயா.. உ..உள்ள போனா திட்டுவாரு..!!" தனசேகரன் அவ்வாறு தயக்கமாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,

"தனசேகர்..!!!!" என்று வீட்டுக்குள் இருந்து ஒரு தடித்த குரல் ஒலித்தது.

அந்த குரலை கேட்டதுமே மூன்று பேரும் உடனடியாய் திரும்பி, வீட்டுக்குள் பார்வையை வீசினார்கள். அங்கே கான்ஸ்டபிள் கனகராஜன் நின்றுகொண்டிருந்தார். இவர்கள் திரும்பிப் பார்த்ததும்,

"ஸாருக்கு தெரிஞ்ச பையன்தான்.. உள்ள அனுப்பு..!!" என்றார்.

அசோக் இப்போது தனசேகரனை ஏறிட்டு ஏளனமாய் ஒரு பார்வையை வீசினான். அதற்கு மேலும் அவருடைய அனுமதி தேவையில்லை என்பதை உணர்ந்தவன், அவரது பதிலுக்காக காத்திராமல் அவரை கடந்து சென்றான். வீட்டுக்குள் நுழைந்தவன், அங்கு நின்றிருந்த கனகராஜனுடன் சேர்ந்துகொண்டான். அவர் திரும்பி உள்ளறைக்கு நடக்க, அசோக் அவரை பின்தொடர்ந்தான்.

"என்னய்யா.. ஃபோன் நம்பரை வச்சு, அந்த பொண்ணு அட்ரஸ கண்டுபுடிச்சிட்டீங்களா..??" கனகராஜனின் குரலில் ஒருவித எள்ளல் தொனித்தது.

"அ..அதைப்பத்தி பேசுறதுக்குத்தான்.. ஸார் வர சொல்லிருக்காரு..!!" அசோக் அடக்கத்துடனே அவருக்கு பதில் சொன்னான்.

"ஹ்ம்ம்..!! உன்னை சொல்றதா.. இல்ல.. உனக்கு ஒத்து ஊதுற அவரை சொல்றதான்னு தெரியல..!! அந்தப்பொண்ணு மேல இவ்வளவு பைத்தியமா இருக்கியே.. உன் லவ்வு மேட்டர்லாம்.. உன்னை பெத்து வளத்தவங்களுக்கு தெரியுமா..??"

"ம்ம்.. தெரியும்..!! அவங்களுக்கும் தெரியும்.. அவங்களை பெத்து வளத்தவங்களுக்கும் தெரியும்..!! ஏன் கேக்குறீங்க..??"

அசோக் அவ்வாறு இயல்பாக கேட்க.. இப்போது கனகராஜனின் முகத்தில் ஒரு பெருத்த ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது..!! காதல் என்ற பெயரில்.. வீட்டை ஏமாற்றுகிற விடலைப்பையன் என்பது.. அசோக்கைப் பற்றிய அவரது அனுமானமாக இருந்திருக்கும் போலிருக்கிறது..!!

"ஒ..ஒன்னுல்ல.. சு..சும்மா கேட்டேன்..!!" என்று தடுமாற்றமாய் சமாளித்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 01-08-2019, 05:55 PM



Users browsing this thread: 6 Guest(s)