18-07-2019, 08:32 PM
‘சரவணபவன் அண்ணாச்சி’ துயரத்தில் முடிந்ததோர் பெருந்திணை காதல்!
சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால்... இந்தப் பெயரை நாம் இதுவரையிலும் ஜீவஜோதி மீதான பொருந்தாக் காதலுக்கு மட்டுமே உதாரணமாகப் பல ஆண்டுகளாக நினைவு கூர்ந்து வந்திருக்கிறோம். இந்தப் பெயருக்குப் பின்னால் சரவண பவன் எனும் சங்கிலித்தொடர் உணவகத்தின் வெற்றிக்கதையும் அடங்கியிருக்கிறது. அது ஏன் நம் கருத்தை விட்டு மறைந்ததென்றால் காரணம் அண்ணாச்சியின் பெருந்திணைக் காதல். தன்னை விட வயதில் மிக இளையவரான ஜீவ ஜோதியை அண்ணாச்சி மணக்க விரும்பியது ஏன்? மூடநம்பிக்கை என்கிறது இவ்வழக்கின் பழைய வரலாறு.
ராஜகோபாலுக்கு முன்னரே இரண்டு மனைவிகள் இருந்த போதும் அவர் ஜீவ ஜோதியை மணக்க விரும்பியது ஜோதிடத்தின் மீது கொண்ட கண்மூடித்தனமான நம்பிக்கையின் பால் மட்டுமே. ஜீவஜோதியை மணந்தால் ராஜகோபால் மேலும் பணம் படைத்தவராகவும், மேலும் புகழ் மிக்கவராகவும் மாறுவார் என ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் கூற அதை அப்படியே நம்பிய ராஜகோபால் தனது உணவகத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவரின் மகளான ஜீவஜோதியின் மேல் காதல்வயப்பட்டார். இதைக் காதல் என்பதா? பேராசை என்பதா? பெருந்திணைக் காமம் என்பதா? என்று புரியத்தான் இல்லை. ராஜகோபாலின் நினைப்பு இப்படித் தறிகெட்டு ஓட, மறுபுறம் பள்ளி மாணவியான ஜீவஜோதியோ, தான் டியூஷன் சென்ற இடத்தில் சந்தித்த ப்ரின்ஸ் சாந்தகுமார் என்பவர் மீது காதல் வயப்பட்டார். அவர்களது காதல் திருமணத்திலும் முடிந்தது. விஷயம் இப்படி என்று தெரிந்ததும் ஜீவஜோதியின் திருமணத்தை முறிக்க ராஜகோபால் பெரிதும் முயன்றிருக்கிறார்... முயற்சிகள் எதுவும் கதைக்காகாத பட்சத்தில் ஜீவஜோதியின் கணவரான ப்ரின்ஸ் சாந்தகுமாரைக் கொலை செய்வது என்று முடிவெடுத்தார் ராஜகோபால்.
முடிவெடுத்ததோடு 26.10.2001 அன்று ப்ரின்ஸ் சாந்தகுமாரை ஆள் வைத்துக் கடத்தவும் செய்தார். கணவரைக் காணோம் என்று தவித்த ஜீவஜோதி வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் சரவணபவன் உணவக உரிமையாளரான ராஜகோபால், தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், தனக்கு திருமணமான பிறகும் கூட அந்த வற்புறுத்தல் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், கணவர் காணாமல் போன விஷயத்தில் தனக்கு ராஜகோபால் மீது தான் அழுத்தமான சந்தேகம் இருப்பதாகவும் ஜீவஜோதி தனது புகாரில் குறிப்பிடுகிறார். ஜீவஜோதி புகார் அளித்த 5 நாட்களுக்குப் பின் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் கொடைக்கானல் மலைச்சாலையில் ப்ரின்ஸ் சாந்தகுமாரின் உடல் சடலமாக மீட்கப்படுகிறது. இதையடுத்து தான் காதல் கணவரின் கொலைக்கு நீதி கேட்டு ராஜகோபாலுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை வலுவாகக் கையிலெடுத்தார் ஜீவஜோதி.
ஜீவஜோதியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ராஜகோபால் தரப்பு, இது தொழில் போட்டி காரணமாக யாரோ தூண்டி விடுகிற சதி, ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலைக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை’ என்றது. ஆயினும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ராஜகோபால், அவரது உணவக மேலாளர் டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது ராஜகோபாலின் உணவக மேலாளர் டேனியல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ராஜகோபாலுக்கான தண்டனை உறுதியானது. விசாரணையின் முடிவில் 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களுகு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது
first 5 lakhs viewed thread tamil