screw driver ஸ்டோரீஸ்
அசோக் முதலில் அந்த காகித கவரை கசக்கி எறியத்தான் நினைத்தான்..!! பிறகு ஒருகணம் நிதானித்தவன்.. தனது கையை பிரித்து அந்த கவரை பார்த்தான்..!! மிளக்காய்த்துகள் தயாரிக்கிற அந்த கம்பனியின் ப்ராண்ட்.. அந்த கவரில் சிகப்பு நிறத்தில் அச்சிடப் பட்டிருந்தது..!!

"Mirchi..!!!!"

அதைப்பார்த்ததுமே அசோக்குக்கு சுருக்கென்று ஒரு உணர்வு..!! அவனுடைய மூளை நரம்பில் யாரோ ஊசி ஏற்றிய மாதிரி சுரீர் என்று இருந்தது..!! அவனும் மீராவும் முதன்முதலாக பேசிக்கொண்டபோது நடந்த அந்த விஷயத்தை.. அவனுடைய நினைவடுக்கு, அவன் மனதுக்குள் படமாக ஓட்டிக் காட்டியது..!!

"உன் பேர் என்ன..??"

"ம்ம்ம்... மிர்ச்சி..!!"

"ம்ம்ம்... மிர்ச்சி..!!"

"ம்ம்ம்... மிர்ச்சி..!!"

அசோக்கின் கேள்விக்கு மீரா திரும்ப திரும்ப பதில் சொன்னாள். சொல்லிக்கொண்டே, திரும்ப திரும்ப மிளகாய்த்துகள் பாக்கெட்டை கிழித்து, தட்டின் மீதிருந்த பிஸ்ஸாவின் மேல் தூவினாள்.


அசோக்கிடம் இப்போது குப்பென்று ஒரு திகைப்பு..!! 'ஒருவேளை.. ஒருவேளை.. இப்படி இருக்குமோ..??' என்று அவனுடைய மூளை.. மிக கூர்மையாக ஒரு சந்தேகத்தை கிளப்ப.. அவனது மனதுக்குள் ஒரு மெலிதான கிலி பரவ ஆரம்பித்தது..!! சற்றே மிரண்டு போன முகத்துடன்.. தலையை மெல்ல நிமிர்த்தி பார்த்தான்..!! அவ்வாறு பார்த்ததுமே.. அவனுடைய பார்வையில் பட்ட அந்த விளம்பர போர்ட்.. அவனை ஸ்தம்பித்து போக வைத்தது..!! அதிர்ந்து போனவனாய்.. அவனையும் அறியாமல் சேரில் இருந்து எழுந்தான்..!! வெறித்த பார்வையுடன்.. கண்களுக்கு கொடுத்திருந்த குளிர்கண்ணாடியை கழட்டினான்..!! 

[Image: RA+38.jpg]

அந்த விளம்பர போர்டின் வாசகங்கள்..

"Learn 'MAYA' at Aptech Computer Education..!!"

"இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!"

"ஓ..!! என்ன கோர்ஸ்..??"

"ம்ம்.. மாயா...!!!!"


மீரா சொன்னது நினைவு வர.. அசோக்குக்கு உடலெல்லாம் ஜிலீர் என்று ஒரு சிலிர்ப்பு..!! அவனுடைய இதயத்தை இப்போது ஒரு இனம்புரியாத பயம் வந்து இரக்கமே இல்லாமல் கவ்விக்கொண்டது..!! வியர்த்து வெளிறிப்போன முகத்துடன்.. தலையை மெல்ல மெல்ல சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மற்ற விளம்பர போர்டுகளையும்.. ஒவ்வொன்றாக கவனமாக பார்த்தான்..!!

"காரைக்குடி - செட்டிநாடு உணவகம்..!!"

"ஹைதராபாத் பிரியாணி சென்டர்..!!"

ஃபுட்கோர்ட் கவுன்ட்டர்களில் இருந்த அந்த இரண்டு போர்டுகளும் அடுத்தடுத்து அவன் கண்ணில் பட்டன..!!

"பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" - மீரா அசோக்கின் மனதுக்குள் தோன்றி சிரிப்புடன் சொன்னாள்.

அசோக்குக்கு இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது..!! உலையில் இட்ட அரிசியாக.. உதிரம் கொதிப்பது போல ஒரு உணர்வு அவனுக்கு..!! மீரா இன்னும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் தன்னைப்பற்றி சொன்னாள் என்று யோசித்தான்..!!

"என் அப்பா பேரு சந்தானம்..!!"

"ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??"

"ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!!"


யெஸ்..!!!! அக்ஸார் பெயின்ட் டப்பாவை கையில் தாங்கியவாறு.. நடிகர் சந்தானம் ஒரு அட்வர்டைஸ்மன்ட் போர்டில் காட்சியளித்தார்..!! அருகிலேயே.. அரசியல்வாதி கெட்டப்பில்.. தொடையை தட்டிக்கொண்டு.. பவர்ஸ்டாரின் படப்போஸ்டர் ஒன்று..!!

"உன்னோட ஃபேவரிட் மூவி எது..??"

"ம்ம்... டைட்டானிக்..!!


அசோக் தனது மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தான். டைட்டான்..!!!

"ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??"

"ம்ம்... சோனியா..!!"


டேபிளில் இருந்த தனது மொபைலை பார்த்தான். சோனி எரிக்ஸன்..!!

அசோக்குக்கு இப்போது தலை சுற்றுவது மாதிரி இருந்தது..!! மூளை எல்லாம் சூடாகிப்போய்.. வெடித்துவிடுமோ என்றொரு உணர்வு..!! அப்படியே தளர்ந்து போய்.. தலையைப் பிடித்துக்கொண்டு.. சேரில் பொத்தென்று அமர்ந்தான்..!!

"ஹலோ ஹனிபனி..!!" என்ற வாசகங்களை தாங்கிய.. ஐடியா மொபைல் விளம்பர போர்ட் வேறு.. இப்போது புதிதாக அவனுடைய கண்ணில் பட்டது..!!

"வாட் என் ஐடியா ஸர்ஜி..!!!" என்று அபிஷேக் பச்சன் இவனை பார்த்து ஏளனமாக சிரித்தார்.

அசோக்கால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை..!! ஆயிரம் பேர் ஒன்றாக கூடி நின்று.. அதிகபட்ச டெசிபலில் வயலின் வாசிப்பது மாதிரியான ஒரு அதிர்வு அவனுக்குள்..!! பார்க்கிற திசை எல்லாமே.. மீரா தன்னைப்பற்றி சொன்ன பர்சனல் விஷயங்கள் அத்தனையும்.. பப்ளிக்காக பல்லிளித்தன..!! திரும்புகிற பக்கம் எல்லாம் மீரா தோன்றி..

"என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!"

"என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!" என்று இவனைப்பார்த்து கைகொட்டி சிரித்தாள்.


[Image: RA+39.jpg]

அசோக்குக்கு தலைக்குள் ஒவ்வொரு பாகமும் தீப்பற்றி எரிவது போல இருந்தது..!! கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. இரண்டு கைகளாலும் தலையை பிடித்தவாறு.. இடிந்து போய் அமர்ந்திருந்தான்..!! 'எப்படி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறாள்..?' என்று நினைக்க நினைக்க.. அவனுடைய இதயம் குமுறியது..!!

இந்த விளம்பர போர்டுகளை எல்லாம் அசோக் எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்..!! அவனும் விளம்பரத்துறையில் இருப்பதால்.. அவன் கண்ணில் படுகிற சிறு சிறு விளம்பர போர்டுகளை கூட மிக கவனமாக பார்ப்பான்..!! அட்வர்டைஸ்மன்ட் தீம்.. அவர்களது ப்ராண்ட் லோகோ.. உபயோகப்படுத்துகிற கேப்ஷன்ஸ்.. எல்லாமே அவனுடய கவனத்தை ஈர்க்கும்..!! 'அப்படி இருந்துமே இப்படி ஏமாந்திருக்கிறேனே.. கண்ணிருந்தும் குருடனாய் கவனியாது போனேனே..??' அவனுடைய உள்மனம் அழுது அரற்றியது..!! அதே நேரம்..

"டமார்..!!!"

என்று பலூன் வெடிக்கிற சப்தம் பெரிதாக கேட்டது..!! கண்ணுக்கு அழகாய் காட்சியளித்த அந்த இதய பலூன்.. கணநேரத்தில் இப்போது உடைந்து சிதறிப் போயிருந்தது..!!

"பலூனு.. என் பலூனு..!!!" கையையும் காலையும் உதறியவாறு, சூர்யா தரையில் புரண்டு கதறிக்கொண்டிருந்தான்.

"ஐயோ.. சூர்யா.. என்ன இது.. எந்திரி..!!" அவன் அம்மா பதறினாள்.

"பலூனு.. என் பலூனு..!!!"

"ப்ச்.. எந்திரின்றன்ல..?? மம்மி உனக்கு வேற பலூன் வாங்கி தரேன்..!!"

"எனக்கு அந்த பலூன்தான் வேணும்..!!"

சூர்யா 'ஓ..!!!!' என்று அழுது வீறிட்டான்..!! ஏமாந்து போன அந்த சிறு குழந்தையின் துயரத்தை பார்த்த அசோக்குக்கு.. அவனையும் அறியாமல் கண்களில் குபுக்கென்று நீர் கொப்பளித்து ஓட ஆரம்பித்தது..!! அவனுமே அந்த சூர்யாவின் நிலையில்தான் இருந்தான்.. அவனுக்குமே அதுமாதிரி அலறி அழ வேண்டும் போலிருந்தது..!!

அப்போதுதான் திடீரென அவன் மனதுக்குள் அந்த சந்தேகம்..!! நீர்த்திரையிட்ட கண்களை அவசரமாய் துடைத்துக்கொண்டு.. சரக் சரக்கென தலையை அப்படியும் இப்படியுமாய் திருப்பி.. அந்த வளாகத்தில் மிச்சமிருக்கிற விளம்பர போர்டுகளை எல்லாம்.. ஒவ்வொன்றாக பார்த்தான்..!! அவனுடைய பார்வை பரிதாபமாக அலைபாய்ந்தது.. 'அந்த வார்த்தை மட்டும் என் கண்ணில் பட்டுவிடக்கூடாது கடவுளே..' என அவனது மனம் இரைந்து மன்றாடியது..!!

ஒரு அரை நிமிடத்திற்கு அந்த மாதிரி.. வியர்த்த முகத்துடன்.. தவிக்கிற பார்வையுடன்.. கொதிக்கிற உள்ளத்துடன்.. தேடி தேடி பார்த்தான்..!! எங்குமே அந்த வார்த்தை அவனது கண்ணில் படவில்லை..!! இப்போது அவனது மனதுக்குள் மெலிதான ஒரு நிம்மதி பரவியது..!!

"அட்லீஸ்ட்.. அவ பேராவது.. உண்மையான பேரை சொன்னாளே..!!" என்ற அற்பத்தனமான நிம்மதி.

கண்களை துடைத்துக் கொண்டான். இதயம் இன்னும் திடும் திடும் என அடித்துக் கொண்டிருக்க.. டேபிளில் கையூன்றி.. முகத்தை மூடியவாறே மேலும் சிறிது நேரம் அமர்ந்திருந்தான்..!!

பிறகு அவன் இமைகளை மெல்ல பிரித்தபோது.. எதேச்சையாக அவனது பார்வையில் அது பட்டது..!! ரொம்ப ஸ்பெஷல் என்று மீரா சொன்ன அந்த டேபிளின்.. பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருந்த அந்த வாசகம்..!!

"Meera Furnitures & Home Appliance..!!"

அவ்வளவுதான்..!! அந்த மாதிரி ஒரு வலியை.. ஏமாற்றத்தை.. வேதனையை.. அசோக் தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை..!! ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவனது இதயம்.. இப்போது சில்லு சில்லாக வெடித்து சிதற ஆரம்பித்தது..
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 10-07-2019, 11:43 AM



Users browsing this thread: 5 Guest(s)