♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
Episode 191

[Image: FB-IMG-1790508938177.jpg]

அவன் தன் கைகளைப் பார்த்தான்.

விரல்களை மடித்துப் பார்த்தான்.

தோள்களைச் சுழற்றினான்.

புதிதாகக் கிடைத்த உடலைச் சோதித்துப் பார்ப்பதைப் போல, ஒவ்வொரு அசைவையும் நிதானமாகச் செய்தான்.

பின்னர் முழுமையாக எழுந்து நின்றான்.

சில நொடிகளுக்கு முன்பு வரை மரணத்தின் விளிம்பில் கிடந்த உடல்...

இப்போது அவர்களது முன்னால் உயிரோடு நின்றது.

அந்தக் காட்சியைப் பார்த்த இரு காட்டுவாசிகளின் முகங்களிலும் இருந்த கடைசி நம்பிக்கையும் சிதைந்தது.

அவர்களில் ஒருவன் நடுங்கியபடி பின்னால் நகர்ந்தான்.

அவனது காலில் இருந்த சக்தி திடீரென விலகியது.

அவன் தடுமாறி கீழே விழப் போனான்.

மற்றவன் அவனைப் பிடித்துக் கொண்டான்.

ஆனால் அவனது பார்வையும் அந்த அசுர உருவத்திலிருந்து விலகவில்லை.

அந்த நேரத்தில்...

காத்தவராயனின் பார்வை மெதுவாக அவர்களை நோக்கித் திரும்பியது.

அவன் உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது.

அது அந்தக் காட்டுவாசியின் புன்னகை அல்ல.

தன் சாபத்தைத் தாண்டி, உயிருள்ள உடலைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட காத்தவராயனின் வெற்றிப் புன்னகை.

காத்தவராயன் அந்த உடலை முழுமையாகக் கைப்பற்றி, உயிர் பெற்று எழுந்த அந்த அடுத்த நொடி—

இதுவரை அமானுஷ்யமாக முடங்கிக் கிடந்த அந்தத் தீவு மீண்டும் உயிர் பெற்றது.

சில நொடிகளுக்கு முன்பு அசைவின்றி உறைந்திருந்த மரங்களின் இலைகள் திடீரெனப் பேய்வேகத்தில் சலசலத்தன.

காற்று மீண்டும் சீறிப் பாய்ந்தது.

கடலும் தன் கோபத்தை மறந்திருக்கவில்லை என்பதுபோல், அடங்கிக் கிடந்த அலைகள் மீண்டும் கரையை நோக்கி ஆர்ப்பரித்துப் பாய்ந்தன.

சூறாவளிக் காற்று மரக்கிளைகளைப் பிடுங்கி வீசும் அளவுக்கு மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியது.

இயற்கையே...

தனக்குள் அடைத்து வைத்திருந்த மூச்சை ஒரே நேரத்தில் வெளியே விட்டது போலிருந்தது.

ஆனால் அந்த இரு காட்டுவாசிகளின் மூச்சு மட்டும் இன்னும் அடங்கவில்லை.

அவர்களது கண்களில் மரண பீதி உறைந்து கிடந்தது.

அவர்களில் ஒருவன் நடுங்கியபடி முணுமுணுத்தான்:

“இறந்துபோன ஒருவன்... எப்படி மீண்டும் உயிரோடு வர முடியும்?”

அவனது பார்வை மணலில் கிடந்த அந்தத் தங்க முக்கோணப் பாம்பின் விஷம் தோய்ந்த அம்பை நோக்கிச் சென்றது.

“இந்த விஷம் உடலுக்குள் பாய்ந்தால்... எப்பேர்ப்பட்ட வீரனாலும் உயிர் பிழைக்க முடியாதே...”

அவன் மீண்டும் காத்தவராயனைப் பார்த்தான்.

“அப்புறம்... இது எப்படி நடந்தது?”

அவனது குரல் தானாகவே நடுங்கியது.

“இது... மனிதனால் செய்யக்கூடிய காரியமா?”

அதற்கு அவனுடன் இருந்தவன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

அவனது கண்கள் மட்டும் அந்த உருவத்தின் மீதே நிலைத்திருந்தன.

அந்த நேரத்தில்...

காத்தவராயன் அவர்களை நோக்கித் திரும்பினான்.

புதிதாகக் கிடைத்த அந்த உடலை ஒரு கணம் உணர்ந்துகொண்டதைப் போல நின்றான்.

பின்னர்—

முதல் அடி.

அவன் கால் மணலில் பதிந்தது.

சுற்றியிருந்த சருகுகள் காற்றில் சுழன்று எழுந்தன.

மணல் சற்றே அதிர்ந்தது.

அவன் நின்ற இடத்திலிருந்து பரவிய அந்த அமானுஷ்ய அழுத்தத்தை உணர்ந்த இருவரும் அறியாமலேயே ஒரு அடி பின்னால் நகர்ந்தனர்.

காத்தவராயன் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

பின்னர்...

இரண்டாவது அடி.

இந்த முறை அவனது நடையில் தயக்கமே இல்லை.

அது ஒரு சாதாரண மனிதனின் நடை அல்ல.

தன் முன்னால் நிற்பவர்களுக்கு இனி அவர்களது உயிர் தன்னுடைய கருணையில் மட்டுமே இருக்கிறது என்பதை அறிந்த ஒருவனின் நடை.

அவன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தபோதும், காலடியில் கிடந்த உலர்ந்த இலைகள் காற்றில் சுழன்றெழுந்தன.

அந்த இருவரும்...

ஒவ்வொரு அடிக்கும் இரண்டு அடிகள் பின்னால் நகர்ந்தனர்.

ஒருவனின் முதுகு இறுதியில் ஒரு மரத்தின் தண்டில் மோதி நின்றது.

அவன் தப்பிக்க வழியில்லாமல் சுற்றிலும் பார்த்தான்.

மற்றவன் அவனருகில் வந்து நின்றான்.

இருவரின் பார்வையும் மீண்டும் காத்தவராயனை நோக்கித் திரும்பியது.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை...

அவன் அவர்களது குலத்தைச் சேர்ந்த ஒரு காட்டுவாசி.

இப்போது...

அதே உடலுக்குள் நின்றுகொண்டிருந்தவன் யார் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர்கள் அறிந்த மனிதனின் உடல் மட்டுமே அது.

அதற்குள் இருந்தவன்...

மரணத்தையே கடந்து திரும்பி வந்த ஒரு அசுர இருப்பு.

காத்தவராயன் இன்னொரு அடியை முன்னால் வைத்தான்.

அவனது குருதிச் சிவந்த கண்கள் இருவரையும் ஊடுருவிப் பார்த்தன.

அந்தக் கணத்தில், அவர்கள் இருவருக்கும் ஒரே உணர்வு மட்டுமே இருந்தது—

தாங்கள் எதிர்கொண்டு நிற்பது ஒரு மனிதனை அல்ல.

மரணத்தின் கொடூரக் கரங்கள் கண்களுக்கு எதிரே தெளிவாகத் தெரிந்த அந்த நொடி...

பயத்தின் எல்லையைத் தாண்டிய ஒரு மிருகத்தனமான தற்காப்பு உணர்ச்சி அந்த இருவரில் ஒருவனுக்குள் திடீரென விழித்துக்கொண்டது!

சாகப் போகும் ஒரு உயிர், தன் கடைசி மூச்சு வரை போராடத் துடிக்கும் அந்த ஆதி இயற்கை விதி அவனை முழுமையாக ஆட்கொண்டது.

சுற்றிலும் மரண பீதி உறைந்து கிடந்த அந்த விநாடியில், அவனது பார்வை பக்கத்தில் கிடந்த ஒரு கனமான பாறையின் மீது விழுந்தது.

யோசிக்க ஒரு துளி நேரமும் இல்லை.

தன் உடலுக்குள் எஞ்சியிருந்த அத்தனை பலத்தையும் ஒன்றுதிரட்டி, அந்தப் பாறையை இரு கைகளாலும் இறுக்கமாகப் பற்றினான்.

“ஆஅஹ்ஹ்ஹ்...!”

என்ற காட்டுமிராண்டித்தனமான அலறலுடன் அவன் முன்னால் பாய்ந்தான்.

அவனது கால்கள் மணலைக் கிழித்தன.

மூச்சு தடுமாறியது.

நெஞ்சுக்குள் பயம் கொதித்தாலும், அந்தப் பயத்தையே கோபமாக மாற்றிக்கொண்டு காத்தவராயனை நோக்கி வெறிபிடித்தவனைப் போல ஓடினான்.

காத்தவராயன் மட்டும் அசையவில்லை.

அவன் வருவதைப் பார்த்தும்...

ஒரு அடிகூட பின்னால் நகரவில்லை.

அந்த அமைதியே அவனைத் தாக்க வந்தவனின் உள்ளத்தில் இன்னும் அதிகமான வெறியைத் தூண்டியது.

“ஆஅஅ...!”

தன் முழு எடையையும் பாறையோடு சேர்த்து, காத்தவராயனின் அசுர மார்பின் மீது அந்தப் பாறையை ஆக்ரோஷமாக மோதினான்!

படாஅர்!

அந்த மோதலின் சத்தம் இரவைக் கிழித்தது.

பாறை அவனது மார்பில் மோதி, அவனது கைகளிலிருந்து நழுவி மணலில் விழுந்தது.

தாக்கியவன் மட்டும் ஒரு கணம் மூச்சை இழுத்தபடி நின்றான்.

அவன் கண்களில் ஒரு நொடிக்குச் சிறிய நம்பிக்கை மின்னியது.

“அவனை... வீழ்த்திட்டேனா...?”

அவன் மனம் கேட்டது.

அடுத்த கணமே...

அந்த நம்பிக்கை உறைந்துபோனது.

காத்தவராயன் அசையாமல் நின்றுகொண்டிருந்தான்.

அவனது மார்பில் ஏற்பட்ட தாக்கத்தின் தடம் மட்டும் தெரிந்தது.

அவன் மெதுவாகத் தன் மார்பைத் தொட்டுப் பார்த்தான்.

பின்னர்...

அந்த மனிதனை நோக்கித் தலையை உயர்த்தினான்.

அவனது கண்களில் கோபம் இல்லை.

வலி இல்லை.

மாறாக...

“இவ்வளவுதானா?”

என்று கேட்பதுபோல் ஒரு குளிர்ந்த புன்னகை மட்டும் தோன்றியது.

அந்தப் புன்னகையைப் பார்த்தவுடன், பாறையைத் தூக்கிய அந்த மனிதனின் கைகளில் இருந்த பலம் முழுவதும் வடிந்துபோனது.

அவன் பின்னால் தடுமாறி நகர்ந்தான்.

அப்போது காத்தவராயன் மெதுவாக அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.

அந்த ஒரு அடியே...

அவனுக்குள் மீதமிருந்த தைரியத்தையும் நசுக்கியது.

காத்தவராயனின் உதட்டிலிருந்த ஏளனப் புன்னகை, அடுத்த நொடியே கொடூரமான ஆத்திரமாக மாறியது!

“அற்பப் பதரே... என் மீது கை வைக்க எவ்வளவு துணிச்சல் உனக்கு?!”

அவனது குரல் அந்த இரவின் இருளையே அதிர வைத்தது.

அடுத்த கணமே—

காத்தவராயனின் அசுரக் கரம் மின்னல் வேகத்தில் நீண்டது.

அந்தக் காட்டுவாசியின் கழுத்தை ஒரே பிடியில் இறுக்கமாகப் பற்றியவன், அவனை அப்படியே தரையிலிருந்து தூக்கி காற்றில் உயர்த்தினான்.

“அக்...க்...!”

மூச்சு அடைபட்ட காட்டுவாசியின் கால்கள் காற்றில் துடித்தன.

அவன் இரு கைகளாலும் காத்தவராயனின் கரத்தைப் பிடித்து விலக்க முயன்றான்.

“விடு...!”

ஆனால் அந்தப் பிடி அசையவே இல்லை.

அவனது முகம் சிவந்தது.

கண்கள் பிதுங்கின.

மூச்சுக்காகப் போராடியபடி, கால்களை வெறித்தனமாக உதைத்தான்.

தன் நண்பன் காற்றில் தொங்கியபடி மரணத்துடன் போராடுவதைக் கண்டதும், மற்ற காட்டுவாசிக்குள் இருந்த பயம் ஒரு கணத்தில் வேறொன்றாக மாறியது.

தோழனை காப்பாற்ற வேண்டும் என்ற ஆதி உணர்வு!

யோசிக்க அவனுக்கு நேரமில்லை.

பக்கத்தில் கிடந்த தடிமனான மரக்கிளையை இரு கைகளாலும் இறுகப் பற்றினான்.

பற்களைக் கடித்தபடி, தன் உடலின் எஞ்சியிருந்த ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டினான்.

“அவனை விட்டுடா!”

என்று அலறியபடி பின்பக்கமாக இரண்டு அடிகள் ஓடினான்.

அடுத்த கணம் முழு வேகத்தில் பாய்ந்து வந்து—

“ஆஅஹ்ஹ்ஹ்!”

என்று அலறியபடி, அந்த மரக்கிளையை காத்தவராயனின் முதுகில் ஓங்கி இறக்கினான்!

டொமீர்!

அந்தப் பயங்கரமான மோதலின் வேகத்தில், தடிமனான மரக்கிளையே தாங்காமல் படபடவென உடைந்து, அதன் துண்டுகள் நாலாபுறமும் சிதறின.

காத்தவராயன் அந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

மரக்கிளை முதுகில் மோதிய அதிர்ச்சியில் அவனது உடல் ஒரு கணம் முன்னால் தடுமாறியது.

அந்த ஒரே கணம் போதுமானதாக இருந்தது.

அவனது விரல்கள் சற்றுத் தளர்ந்தன.

காற்றில் துடித்துக்கொண்டிருந்த காட்டுவாசியின் கழுத்து அந்தப் பிடியிலிருந்து திடீரென விடுபட்டது.

அவன் தரையில் விழுந்ததும், இரு கைகளாலும் தொண்டையைப் பற்றிக்கொண்டு மூச்சுக்காகத் திணறினான்.

“ஹா... ஹா...”

அவன் மூச்சை இழுத்தான்.

“நான்... நான் உயிரோடிருக்கேனா...?”

ஆனால்...

அடுத்த கணத்தில் காத்தவராயன் மெதுவாக நிமிர்ந்து நின்றான்.

அவனது முதுகில் விழுந்த அடியின் தாக்கம் இன்னும் உடலில் இருந்தாலும், அவன் முகத்தில் வலி இல்லை.

மாறாக...

மெல்லத் தன் தலையைத் திருப்பி, பின்னால் நின்றவனை நோக்கிப் பார்த்தான்.

அந்தப் பார்வை பட்டவுடன், மரக்கிளையைத் தூக்கியவனின் உடலிலிருந்த துணிச்சல் மீண்டும் நடுங்கத் தொடங்கியது.

தான் செய்தது காத்தவராயனை வீழ்த்தவில்லை...

அவனது கோபத்தை மட்டுமே இன்னும் ஆழமாக்கியிருக்கிறது என்பதை அந்தக் கண்களே சொல்லிவிட்டன.

அவன் செந்நிறக் கண்களில் கொதித்தெழுந்த கோபத்துடன் அதிவேகமாக முன்னேறி வர, பயத்தின் உச்சத்தில் இருந்த அந்தக் காட்டுவாசி நிலைதடுமாறி மணலில் மல்லாந்து விழுந்தான்.

அவன் எழுந்து நிற்பதற்குள்...

தடால்!

காத்தவராயனின் அசுரக் கால் அவனது மார்பின் மீது ஓங்கி மிதித்தது.

மடமடவென்று...

எலும்புகள் நொறுங்கிய சத்தம் அந்த இரவின் அமைதியைப் பிளந்தது.

அவனது மார்புக்கூடு உள்ளே அமுங்கியது.

நெஞ்சைப் பிளக்கும் வலி உடல் முழுவதும் பரவ, அவனது கண்கள் மெல்ல இருண்டன.

வாயின் ஓரத்திலிருந்து செந்நிறக் குருதி குபுக்குபுவென வழிந்தது.

ஆனால்...

அவனது உடலிலும், நண்பனைக் காப்பாற்றத் துணிந்து காத்தவராயனைத் தாக்கிய மற்ற காட்டுவாசியின் உடலிலும் இன்னும் உயிர் மிச்சமிருந்தது.

அதுவே அவர்களின் துரதிர்ஷ்டம்.

காத்தவராயன் தன் கொடூரமான பார்வையை இருவர் மீதும் செலுத்தினான்.

அடுத்த கணமே—

அவர்களது கால்களைத் தன் இரும்பைப் போன்ற கரங்களால் இறுக்கமாகப் பற்றினான்.

“இல்லை... இல்லை...!”

என்று அவர்கள் அலறுவதற்குள், அவர்களை மணல் பரப்பில் தரைதட்டாய்—

“தரதர...”

என்று இழுத்துச் செல்லத் தொடங்கினான்.

மணல் அவர்களது உடல்களை உரசியபடி பின்னால் சிதறியது.

“அம்மாடி... விட்டுடுடா...!”

“காப்பாத்துங்கடா!”

இருவரின் மரண அலறலும் அந்த அமானுஷ்ய இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு தீவு முழுவதும் எதிரொலித்தது.

அந்த அலறல்..

[Image: rukmini-vasanth-addicts-rukmini-vasanth-...d-san.webp]

இந்தத் தீவில் யாருக்குக் கேட்க வேண்டுமோ—

அவர்களுக்கு அது துல்லியமாகக் கேட்டுவிட்டது.

ஆனால் காத்தவராயனின் வெறி இன்னும் அடங்கவில்லை.

இருவரின் கால்களையும் பிடித்தபடியே, அவன் தன் முழு அசுர பலத்தையும் திரட்டினான்.

ஒரே இழுப்பில் இருவரையும் தரையிலிருந்து தூக்கினான்.

அடுத்த நொடி—

அவர்கள் தலைகீழாகக் காற்றில் தொங்கினர்.

காத்தவராயன் அவர்களைச் சுழற்றத் தொடங்கினான்.

முதலில் மெதுவாக...

பின்னர் வேகம் அதிகரித்தது.

காற்று அவர்களது காதுகளைக் கிழித்துச் சென்றது.

உடல்கள் ஒவ்வொரு சுற்றிலும் வெறுமையில் சுழன்றன.

“ஐயோ...!”

“நிறுத்து...!”

அவர்களது குரல்கள் காற்றில் சிதறின.

காத்தவராயனின் கர்ஜனை அந்தச் சுழற்சிக்குள் கலந்து பயங்கரமாக ஒலித்தது.

பின்னர்...

ஒரே கணத்தில் அவன் தன் பிடியைத் தளர்த்தினான்.

“செத்துத் தொலைங்கடா!”

என்ற காத்தவராயனின் கர்ஜனையுடன்—

அவர்களது இரு உடல்களும் அவனது பிடியிலிருந்து பிய்த்தெறியப்பட்டன!

ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்ட பந்துகளைப் போல, இருவரும் பல அடி தூரம் வரை பறந்துசென்றனர்.
தடால்!

ஒருவனது உடல் மணலில் மோதி உருண்டது.

மற்றவன் அருகிலிருந்த பாறையின் விளிம்பில் மோதி கீழே சரிந்தான்.

சில நொடிகளுக்கு முன்பு உயிரைக் காப்பாற்ற ஓடிய அந்த இரு மனிதர்களும் இப்போது அசைவற்றுக் கிடந்தனர்.

காத்தவராயன் மட்டும்...

அங்கே நின்றுகொண்டிருந்தான்.

அவனது மூச்சு மட்டும் கனமாக வெளியேறியது.

அவனது செந்நிறக் கண்களில் இருந்த வெறி இன்னும் அணையவில்லை.

பாறைகளின் மீது தூக்கி எறியப்பட்டு, உடலெங்கும் ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்த இரு காட்டுவாசிகளும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடுங்கினர்.

“எங்களை... யாராவது காப்பாற்ற வர மாட்டார்களா...?”

என்ற அவர்களின் மரணக் கதறல் இரவின் இருளுக்குள் கரைந்து போனது.

காத்தவராயன் மட்டும் நின்றுவிடவில்லை.

அவன் மெதுவாக அவர்களை நோக்கி முன்னேறினான்.

இன்னும் ஒரே ஒரு அடி.

அவன் இரு அசுரக் கரங்களையும் விரித்துக்கொண்டு, அவர்களின் உயிரைப் பறிப்பதற்காகக் கீழே குனிந்த அந்தக் கணத்தில்—

“டமார்!”

மேலிருந்து ஏதோ ஒன்று மின்னலைப் போலப் பாய்ந்து வந்தது!

அடுத்த நொடி—

பளார்!

அந்த உருவத்தின் கால் காத்தவராயனின் தலையில் சரியாகப் பதிந்தது.

எதிர்பாராத அந்தத் தாக்குதலில் காத்தவராயனின் உடல் கட்டுப்பாட்டை இழந்தது.

அவன் பல அடி தூரம் ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டு, மணலில் சுழன்றபடி சென்று—

தடால்!

என்று விழுந்தான்.

ஒரு கணம்...

காத்தவராயனுக்கே என்ன நடந்தது என்பது புரியவில்லை.

கண்களுக்கு முன்னால் நட்சத்திரங்கள் சிதறுவது போலத் தோன்றியது.

தலைக்குள் பேரதிர்வு.

மூச்சு தடுமாறியது.

கொஞ்ச நேரத்திற்கு முன்புதான், கனமான பாறையால் மார்பில் முழு பலத்துடன் தாக்கப்பட்டபோதுகூட அசையாமல் நின்றவன் அவன்.

ஆனால் இப்போது...

இந்த ஒற்றை உதை அவனது அசுர உடலை மட்டுமல்ல—

அவனது அகங்காரத்தையே உலுக்கியிருந்தது.

மணலைப் பற்றிக்கொண்டு காத்தவராயன் மெதுவாக எழுந்தான்.

அவன் கண்களைச் சுருக்கிக்கொண்டு எதிரே பார்த்தான்.

தாக்குதலால் எழுந்த தூசு இன்னும் முழுமையாக அடங்கவில்லை.

நிலவொளிக்குள்...

ஒரு உருவம் மட்டும் அசையாமல் நின்றுகொண்டிருந்தது.

காத்தவராயனின் செந்நிறக் கண்கள் அந்த உருவத்தின் மீது நிலைத்தன.

அது யார்?

அவன் அறிந்தவளா?

அல்லது இந்தத் தீவின் இருளிலிருந்து வந்த வேறொரு சக்தியா?

அந்த உருவம் மெதுவாக முன்னேறியது.

தட்...

மணலில் ஒரு காலடி.

மீண்டும்...

தட்...

மற்றொரு காலடி.

காற்றில் நீண்ட கூந்தல் மெதுவாக அசைந்தது.

முகம் இன்னும் காத்தவராயனுக்குத் தெரியவில்லை.

ஆனால் அந்த உருவத்தின் முதுகு மட்டும் நிலவொளியில் தெளிவாகத் தெரிந்தது.

அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த இரு காட்டுவாசிகளும் திடீரென உறைந்தனர்.

ஒருவன் கண்களை விரித்தான்.

அடுத்த நொடி அவனது முகத்தில் இருந்த மரண பயம் மெதுவாக விலகியது.

அவனது உதடுகள் நடுங்கின.

“அவளா...?”

என்று கிட்டத்தட்ட மூச்சுக்குள் சொன்னான்.

அருகில் கிடந்த மற்றவன் அந்த உருவத்தை உற்றுப் பார்த்தான்.

அவளது நடை...

அவளது நீண்ட கூந்தல்...

அவளது தோளின் அமைப்பு...

அவள் நின்றுகொண்டிருந்த விதம்...

அவர்களுக்கு அவளை அடையாளம் காண இவை போதுமானதாக இருந்தன.

அவன் கண்களில் திடீரென நம்பிக்கை ஒளிர்ந்தது.

“ஆமாம்...”

அவன் மூச்சை இழுத்தான்.

“அவள்தான்...”

அந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்டவுடன், மற்றவன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான்.

சில நொடிகளுக்கு முன்பு மரணத்துக்காகக் கதறிய அதே இருவரும்...

இப்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அவர்களின் கண்களில் மீண்டும் உயிர் திரும்பியிருந்தது.

“அவள் வந்துட்டா...”

ஒருவன் மெதுவாகச் சொன்னான்.

“நம்மைக் காப்பாத்த வந்துட்டா...!

அவனது குரலில் இருந்த நம்பிக்கை, மரணத்தின் விளிம்பில் நின்றிருந்த அவனுக்கே ஒரு புதிய உயிரை ஊட்டியது.

அவர்களுக்கு முன்னால் நின்றிருப்பவள் யார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

அவள் வந்துவிட்டால்...

காத்தவராயனின் முன் தாங்கள் இனி தனியாக இல்லை.

அந்த நம்பிக்கை மட்டும் அவர்களுக்குள் போதுமானதாக இருந்தது.

ஒருவன் வலியைப் பொருட்படுத்தாமல் சற்றே எழ முயன்றான்.

“நம்மைக் காப்பாற்ற... அவள் வந்துட்டா...”
என்றான்.

மற்றவன் பதில் சொல்லவில்லை.

அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான்.

அதே நேரத்தில்...

காத்தவராயன் அவர்களை நோக்கித் திரும்பிப் பார்த்தான்.

அவர்களது முகத்தில் சில நொடிகளுக்கு முன்பு இருந்த மரண பயம் இல்லை.

அதற்குப் பதிலாக...

நம்பிக்கை.

அந்த மாற்றத்தைப் பார்த்ததும் காத்தவராயனின் கண்கள் சுருங்கின.

அவன் மீண்டும் அந்த மர்ம உருவத்தை நோக்கித் திரும்பினான்.

அவள் இன்னும் முதுகைக் காட்டியபடியே நின்றுகொண்டிருந்தாள்.

அவளது முகம் அவனுக்குத் தெரியவில்லை.

அவள் யார் என்பது அவனுக்கு இன்னும் புரியவில்லை.

ஆனால் காட்டுவாசிகளின் முகத்தில் தோன்றிய அந்த நம்பிக்கை...

அவள் சாதாரணமானவள் அல்ல என்பதை மட்டும் அவனுக்குச் சொல்லிவிட்டது.

காத்தவராயன் மெதுவாகக் கைமுட்டிகளை இறுக்கினான்.

அவனது உதடுகளில் கொடூரமான புன்னகை ஒன்று மலர்ந்தது.

“அப்படியா...”

அவனது குரல் இருளுக்குள் ஒலித்தது.

“என்னை எதிர்த்து நிற்க... உனக்காக இத்தனை பேர் காத்திருக்கிறார்களா?”

அந்த உருவம் அசையவில்லை.

ஒரு கணம்...

காற்று மட்டும் அவளது கூந்தலை முகத்தின் குறுக்கே கொண்டு வந்தது.

அவள் மெதுவாகத் தலையைச் சாய்த்தாள்.

அவ்வளவுதான்.

ஆனால் அந்தச் சிறிய அசைவைக்கூட பார்த்த இரு காட்டுவாசிகளின் முகத்தில் மீண்டும் நம்பிக்கை மலர்ந்தது.

அவள் யார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

ஆனால்...

காத்தவராயன் இன்னும் அறியவில்லை.

“யார் நீ?”

அவன் கேட்டான்.

பதில் இல்லை.

“என்னைப் பார்த்தும் பேசாமல் நிற்கிறாயா?”

மீண்டும் அமைதி.

காத்தவராயனின் முகத்தில் இருந்த புன்னகை மெதுவாக மறைந்தது.

அதன் இடத்தில் சந்தேகம் தோன்றியது.

அந்த உருவம் இன்னும் அவனுக்கு முதுகையே காட்டிக்கொண்டிருந்தது.

அவளது நீண்ட கூந்தல் காற்றில் அசைந்தது.

நிலவொளி அவளது தோள்களை மட்டும் வருடியது.

காத்தவராயனின் கண்கள் அவளது ஒவ்வொரு அசைவையும் கவனித்தன.

அவன் அறியாமல்...

அவனுக்குள் பல ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு நினைவு மெதுவாக விழித்தெழ முயன்றது.

ஆனால் அந்த நினைவுக்கு இன்னும் உருவம் கிடைக்கவில்லை.

அவன் மீண்டும் கேட்டான்.

“யார் நீ...?”

இந்த முறை அவனது குரலில் கோபத்தைவிட ஆர்வமே அதிகமாக இருந்தது.

அந்தப் பெண் மெதுவாகத் தன் தலையைத் திருப்பத் தொடங்கினாள்.

இரு காட்டுவாசிகளின் இதயம் ஒரே நேரத்தில் வேகமாகத் துடித்தது.

அவர்கள் எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது.

காத்தவராயனும் கண்களைச் சுருக்கி அந்த முகத்தைப் பார்க்க முனைந்தான்.

ஒரு நொடி...

இன்னொரு நொடி...

அந்த இருண்ட இரவில்...

மூன்று ஜோடி கண்களும் ஒரே இடத்தை நோக்கி நிலைத்திருந்தன.

அந்த முகம் வெளிப்படும் அந்த ஒரு கணம்...

இந்த இரவின் அடுத்த அத்தியாயத்தையே மாற்றப்போகிறது.

ஒரு பக்கம்—

மரணத்தை வென்று எழுந்த அசுரன்.

மறுபக்கம்—

தன் முகத்தையே இன்னும் முழுமையாக வெளிப்படுத்தாத மர்மப் பெண்.

இருவருக்கும் இடையில்...

மூச்சை நிறுத்தியபடி நின்றது அந்தத் தீவு.

அவள் யார்?

காத்தவராயனுக்கும்...

அந்த இரவுக்கும்...

அந்தக் காட்டுவாசிகளுக்கும்...

இனி மறைக்க முடியாத ஒரு உண்மை வெளிப்படப் போகிறது.


[Image: FB-IMG-1790509053672.jpg]
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by Geneliarasigan - 27-09-2026, 06:42 PM



Users browsing this thread: 5 Guest(s)