♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
Episode - 190

[Image: 1790516528720.png]

ஆம்! அன்று நடந்த அதே குருதிக் கபாலப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக, அவன் எதிர்பார்த்த சிற்பிகா அவனுக்குக் கிடைக்கவில்லை.

அவனுக்குக் கிடைத்தது...

தங்க முக்கோணப் பாம்பின் விஷம் தோய்ந்த அந்தக் கொடிய அம்பு மட்டுமே!

அன்று அவனுக்குக் கிடைத்த பரிசாக இருந்த அந்த அம்புதான், இப்போது அவனது உயிரைப் பறிக்க வந்த சாபமாக மாறியிருந்தது.

மூவரில் இருவர் அவனோடு ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

மூவரும் மணலில் புரண்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த மரணப் போராட்டத்தின் நடுவே, அவனது இடுப்பில் சொருகப்பட்டிருந்த அம்புறை திடீரென நழுவியது.

அதிலிருந்து அந்த விஷம் தோய்ந்த அம்பு வெளியே வந்து மணலில் விழுந்தது.

ஆனால்...

அடுத்த கணமே விதி தனது கொடிய விளையாட்டைத் தொடங்கியது.

அவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒருவனின் தாக்குதலைத் தவிர்க்க அவன் உடலைத் திருப்பியபோது, மணலில் கிடந்த அந்த அம்பின் கூர்மையான முனை எதிர்பாராத விதமாக அவனது இடுப்புத் தசையை லேசாகக் கீறிப் பாய்ந்தது!

அவ்வளவுதான்...

தங்க முக்கோணப் பாம்பின் நச்சு விஷம் அவனது உஷ்ணமான குருதியோடு கலந்தது.

முதலில் அவனது உடல் லேசாகத் துடித்தது.

அடுத்த நொடியே—

ஒரு பயங்கரமான உலுக்கல்!

அவனது உடல் முழுவதும் விறைத்துப் போனது.

கைகால்கள் இறுகின.

தொண்டைக்குள் எழுந்த அலறல் அங்கேயே அடங்கியது.

கண்கள் சொருகத் தொடங்கின.

சில கணங்களுக்கு முன்பு வரை எதிரிகளைப் பிடித்துத் தள்ளிய அவனது கரங்கள், இப்போது மணலின் மீது சக்தியற்றுப் பட்டு விழுந்தன.

விஷம் நரம்புகளில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.

அவனது உயிர்ப்பும் அதே வேகத்தில் அவனை விட்டு விலகிக் கொண்டிருந்தது.

மல்லாந்து கிடந்த அவனது உடல் ஒருமுறை பலமாகத் துடித்தது.

பின்னர்...

அமைதி.

அவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்த இருவரும் ஒரே நேரத்தில் தங்களது தாக்குதலை நிறுத்தினர்.

மூச்சுவாங்கியபடி, என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருவரும் அவனைப் பார்த்தபடி நின்றனர்.

அந்த அமைதியான சில விநாடிகளில்...

குடிசைக்குள் இருந்த காத்தவராயனின் அசுர ஆன்மாவின் கண்கள் மட்டும் விழித்திருந்தன.

விஷம் ஏறி, உயிர் பிரியும் விளிம்பில் கிடந்த அந்த உடலை அவை உற்றுப் பார்த்தன.

அந்தக் கண்களில் கோபமில்லை...

அச்சமில்லை...

ஒரு கொடூரமான பசி மட்டுமே இருந்தது!

அன்று சிற்பிகாவுக்குப் பதிலாக அவனுக்குக் கிடைத்த அந்தத் தங்க முக்கோணப் பாம்பின் விஷ அம்பு...

இன்று அவனது உயிரையே காவு வாங்கியிருந்தது.

காத்தவராயன் தன் இரு கைகளையும் விரித்தான்.

அவனது முகத்தில் வெற்றியின் வெறித்தனமான புன்னகை விரிந்தது.

அடுத்த கணம்—

“ஹா... ஹா... ஹா...!”

அண்டமே அதிர்ந்துபோகும் அளவுக்கு அவன் உரக்கச் சிரித்தான்.

“காத்து... நீ உண்மையில் ஆசைப்பட்டதெல்லாம் உனக்கு உடனுக்குடன் கிடைக்கிறது! அந்த மதிவதனி மட்டும் தான் ஆரம்பத்தில் எனக்கு பெரும் ஆட்டம் காட்டினாள்... ஆனால் என்ன? நீ ஆசைப்பட்டபடியே அவளும் உனது வலைக்குள் விழுந்துவிட்டாள்!”

தன் மார்பில் தானே தட்டிக்கொண்டான்.

[Image: FB-IMG-1790508916559.jpg]


“அடித்தூள்! நீயெல்லாம் ஒரு யோகக்காரப் பயடா!”

அவனது வெற்றிக் களிப்பு இன்னும் அடங்கவில்லை.

திடீரென அவன் முகம் மாறியது.

வானத்தை நிமிர்ந்து பார்த்தான்.

அவனது கண்களில் வெறியும் ஆணவமும் கலந்தன.

“அக்ரூரரே...!”

அந்தப் பெயரை உச்சரித்த விதத்திலேயே அவனது நூற்றாண்டுக் கோபம் வெளிப்பட்டது.

“நீங்கள் எனக்குக் கொடுத்துச் சென்ற அந்தச் சாபம்... இனி என்னிடம் வேலை செய்யாது!”

அவன் பற்களை நறநறவெனக் கடித்தபடி சிரித்தான்.

“உயிருள்ள மனிதனின் உடலுக்குள் நான் பிரவேசிக்க வேண்டுமென்றால், அவனது அனுமதியைப் பெற்றாக வேண்டும்... அதுதானே உங்கள் சாபம்?”

அவன் மெதுவாகத் தன் பார்வையை வெளியே கிடந்த அந்தக் காட்டுவாசியின் உடல்மீது திருப்பினான்.

“ஆனால்...”

அவனது உதடுகளில் மீண்டும் அந்தக் கொடிய புன்னகை மலர்ந்தது.

“மூச்சு அடங்கி... உயிர் பிரிந்து... வெறும் சடலமாக மாறப்போகும் இந்த உடலுக்குள் நுழைய எனக்கு எவனுடைய அனுமதியும் தேவையில்லை!”

அவன் இரு கைகளையும் விரித்தான்.

“இதோ...”

அவனது குரல் இப்போது குடிசை முழுவதும் அதிர்ந்தது.

“இவனது ஆன்மா இந்த உடலை விட்டுப் பிரியும் அந்த ஒரு நொடி...”

ஒரு கணம் இடைவெளி விட்டான்.

“அதே நொடி...”

அவனது கண்கள் கொடூரமாகப் பிரகாசித்தன.

“இந்த வெற்றுடலுக்குள் நான் பிரவேசிப்பேன்!”

அவனது மிரட்டலான முழக்கம் குடிசையின் சுவர்களைத் தாக்கி எதிரொலித்தது.

வெளியே...

மணலில் கிடந்த அந்தத் துரோகக் காட்டுவாசியின் உயிர், உடலோடு தனது இறுதிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

அவனது விழிகள் நிலைகுத்தி நின்றன.

மார்பின் ஏற்றத் தாழ்வு...

மெதுவாக...

மெதுவாக...

குறைந்துகொண்டே வந்தது.

இன்னும் ஒரு மூச்சு...

இன்னும் ஒரு கணம்...

அதற்குப் பிறகு—

உயிர் உடலை விட்டுப் பிரிந்துவிடும்.

அந்த இறுதி நொடியை எதிர்பார்த்து, குடிசைக்குள் காத்தவராயனின் அசுர ஆவி பதுங்கியிருந்தது.

வேட்டைக்குத் தயாராகும் வேங்கையைப் போல...

அவன் முழு இருப்பும் அந்த ஒரே கணத்தை நோக்கி இறுகத் திரண்டது.

உயிர் பிரியும் நொடி வந்துவிட்டால்...

அடுத்த நொடி அந்த உடல் காத்தவராயனுடையதாகிவிடும்!

விஷம் ஏறி உயிருக்கும் மரணத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருந்த அந்தத் துரோகியின் உடலையே பயத்தோடும் திகைப்போடும் பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த இரு காட்டுவாசிகளும்.

அவர்களுக்குள் நடந்த சண்டை முற்றிலுமாக மறந்துபோயிருந்தது.

அந்த நேரத்தில்—

கிர்ர்ர்...

பின்னால் குடிசைக் கதவு மெதுவாகத் திறக்கும் சத்தம் கேட்டது.

இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.

குடிசையின் வாசலில்...

ஒரு நிழல்!

முதலில் அது வெறும் நிழலாகத்தான் தெரிந்தது.

அசைவற்ற இருளுக்குள் இருந்து, அந்த உருவம் மெல்ல மெல்ல முன்னோக்கி நகர்ந்தது.

ஆனால்...

அது சாதாரண நிழலாக இல்லை.

“நிழலுக்கு வெளிச்சம் எங்கே இருக்கும்?”

ஒருவனின் மனதுக்குள் அந்தக் கேள்வி மின்னியது.

குடிசைக்குள் இருந்த இருளிலிருந்து வெளிவந்த  உருவத்தின் முகம் முழுநிலவு போல  இருந்தது.

நிலவின் வெள்ளி ஒளி அவளது மேனியைத் தொட்டபோது, அந்த நிழல் மெதுவாக உருவம் பெறத் தொடங்கியது.

முதலில் நீண்ட கூந்தலின் நிழல்...

பின்னர் தோள்களின் வடிவம்...

அதன்பின் பெண்ணின் கம்பீரமான உடல்வாகு...

இருவரின் கண்களும் விரிந்தன.

“அது...”

ஒருவன் வார்த்தையை முடிக்க முடியாமல் தடுமாறினான்.

இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த சிற்பிகா நினைவுக்கு வந்தாள்.

‘ஒருவேளை... சிற்பிகா இங்கு தான் இருக்கிறாளோ?’

இருவரின் மனதிலும் ஒரே கேள்வி எழுந்தது.

ஆனால் பதில் கிடைக்கவில்லை.

அந்த உருவம் இன்னும் சில அடிகள் முன்னே வந்தது.

இப்போது நிலவொளி அவளது முகத்தைத் தொட்டது.

நிழல் முழுமையாக விலகியது.

அந்தப் பெண் குடிசையின் வாசலைக் கடந்து வெளியில் வந்து நின்றாள்.

அடுத்த கணம்—

அவளைப் பார்த்த இருவரின் முகங்களிலும் இருந்த சந்தேகம், பயமாக மாறியது.

அவர்களின் மூச்சு தொண்டைக்குள்ளேயே நின்றுவிட்டது.

கண்கள் இமைக்க மறந்தன.

அவர்கள் பார்த்தது...

சிற்பிகா அல்ல!

அது...

இஷிதா!

[Image: FB-IMG-1790508858440.jpg]

ஆனால் அவள் எப்படி அங்கே வந்தாள்?

குடிசைக்குள் இருந்தது யார்?

அப்படியானால் இத்தனை நேரம் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த அந்த நிழல் யாருடையது?

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட மறந்து, அந்த இரு காட்டுவாசிகளும் அசைவின்றி நின்றனர்.

அவர்களுக்குத் தெரியாமல்...

அந்த இருண்ட இரவில் இன்னொரு பெரிய மர்மத்தின் கதவு திறந்துவிட்டிருந்தது!

அந்த இரண்டு காட்டுவாசிகளின் பார்வையும் இஷிதாவின் மீதே நிலைத்து நின்றது.

அவளிடமிருந்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை.

ஆனால் அவர்களது மனதுக்குள் மட்டும் ஆயிரம் கேள்விகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன.

அவள் யார்?

அந்த இரு காட்டுவாசிகளும் ஒரே நேரத்தில் அவளைப் பார்த்தனர்.

ஒரு கணம் அவர்கள் அசைவின்றி நின்றனர்.

அடுத்த கணமே அவர்களது கண்களில் சந்தேகம் மின்னியது.

அவர்கள் அந்தப் பெண்ணை இதற்கு முன் பார்த்ததே இல்லை.

ஆனால் அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவள் தோன்றிய விதம் அவர்களுக்குள் எந்த நல்ல எண்ணத்தையும் உருவாக்கவில்லை.

குடிசைக்குள் சிற்பிகா இல்லை.

துரோகி உயிருக்கு போராடி கொண்டு கிடந்தான்.

அதற்கிடையில், எந்த அச்சமும் இல்லாமல் அந்தப் பெண் மட்டும் அமைதியாக வெளியே வந்துகொண்டிருந்தாள்.

அவளது முகத்தில் இருந்த அந்த மெல்லிய புன்னகை...

அவர்களின் சந்தேகத்தை இன்னும் தீவிரப்படுத்தியது.

ஒருவன் திடீரென தனது ஆயுதத்தை உருவி உயர்த்தினான்.

மற்றவனும் தயக்கமின்றி அவனைப் பின்தொடர்ந்தான்.

அவர்களது வாயிலிருந்து சில கடுமையான வார்த்தைகள் பறந்தன.

ஆனால் அந்த மொழி இஷிதாவுக்குப் புரியவில்லை.

அவள் அவர்களைப் பார்த்தபடியே நின்றாள்.

அவர்களது முகத்தில் இருந்த கோபத்தையும், கையில் உயர்ந்திருந்த ஆயுதத்தையும் மட்டுமே அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவள் ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

அதே நேரத்தில்—
முதல் காட்டுவாசி அவளை நோக்கிப் பாய்ந்தான்.

அவனது ஆயுதம் நிலவொளியில் மின்னியது.

இஷிதாவின் கண்கள் விரிந்தன.

அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கையை உயர்த்திய அந்த நொடியில்—

அவள் உதட்டில் இருந்த புன்னகை ஏனோ அவர்களை தடுத்து நிறுத்தியது..

அவள் அமைதியாக நின்றாள்.

அவளது கண்களில் ஒரு விசித்திரமான ஒளி.

உதட்டின் ஓரத்தில்...

மெல்லியதொரு மர்மப் புன்னகை.

அந்தப் புன்னகையில் பதில் இருந்ததா?

எச்சரிக்கை இருந்ததா?

அல்லது...

அவர்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு ரகசியத்தின் வெற்றிக் களிப்பு இருந்ததா?

அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இஷிதா அவர்களைப் பார்த்தபடியே அந்த மெல்லிய புன்னகையை மட்டும் சற்றே விரித்தாள்.

அந்த ஒரு புன்னகை...

அவர்களது குழப்பத்தை இன்னும் ஆயிரம் மடங்கு பெருக்கியது.

அந்தத் துரோகக் காட்டுவாசியின் உடல் இறுதிமுறையாக ஒரு பயங்கரமான உலுக்கு உலுக்கியது.

அவனது விரல்கள் ஒருமுறை துடித்தன.

மார்பு மேலெழுந்தது...

மீண்டும் கீழிறங்கியது.

அவ்வளவுதான்.

அவனது உடல் அப்படியே அமைதியாக அடங்கியது.

உயிர் பிரிந்துவிட்டது.

அந்தக் கணத்தில் இஷிதாவின் பார்வையும் அந்த உயிரற்ற உடலின் மீதே நிலைத்திருந்தது.

ஆனால்...

அவளது முகத்தில் கொஞ்சம்கூட வருத்தமில்லை.

மாறாக, உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய ஏளனப் புன்னகை மட்டுமே மலர்ந்திருந்தது.

அந்தப் புன்னகையில் இரக்கம் இல்லை.

அதிர்ச்சி இல்லை.

மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு ரகசியம் மட்டுமே இருந்தது.

அடுத்த கணமே—

சட்டென்று!

தீவை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பயங்கரச் சூறாவளிக் காற்று ஒரு விநாடியில் நின்றுபோனது!

கடலின் பேரிரைச்சல் அடங்கியது.

அலைகளின் ஆர்ப்பரிப்பு நின்றது.

மரங்களின் கிளைகள் அசைவிழந்தன.

இலைகள் கூட காற்றில் உறைந்துபோனது போல அசைவின்றி நின்றன.

அந்த அளவுக்கு...

எங்கும் மௌனம்!

அது சாதாரணமான மௌனமல்ல.

காதுகளைக் கிழிக்கும் இரைச்சலைவிடவும் கொடூரமான மௌனம்.

இயற்கையே தன் மூச்சை அடக்கிக்கொண்டு ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.

அந்த ஒரு விநாடியில்...

அந்த இரண்டு காட்டுவாசிகளின் நெஞ்சங்களுக்குள் மட்டும் மரணத்தின் குளிர்ந்த நிழல் ஊடுருவியது.

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

யாராலும் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை.

எங்கோ...

அதல பாதாளத்தின் ஆழத்திலிருந்து...

தங்களை நோக்கி ஏதோ ஒரு பேராபத்து ஊர்ந்து வருவதை அவர்களின் உள்மனம் அடித்துச் சொன்னது.

கால்கள் நடுங்கின.

தொண்டை வறண்டது.

மூச்சு கூட வெளியே வரத் தயங்கியது.

செய்வதறியாமல் இருவரும் அங்கேயே உறைந்து நின்றனர்.

ஆனால் இஷிதா மட்டும்...

அந்த அமானுஷ்யமான அமைதிக்குள்ளும் அசையாமல் நின்றாள்.

அவளது உதட்டில் இருந்த அந்த ஏளனப் புன்னகை மட்டும் மறையவில்லை.

அவர்களுக்குத் தெரியாது...

அந்த மௌனம் பேரழிவின் முடிவு அல்ல.

அது...

பேரழிவு பிறப்பதற்கு முந்தைய கடைசி அமைதி!

அந்த உயிரற்றுக் கிடந்த சடலத்தை நோக்கி இஷிதா உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய ஏளனப் புன்னகையைச் சிந்தியதை அந்த இரு காட்டுவாசிகளும் கவனித்தனர்.

அவ்வளவுதான்.

அவர்களின் மனதுக்குள் ஏற்கெனவே இருந்த குழப்பம் இன்னும் பல மடங்கு அதிகரித்தது.

‘இவளுக்கும் நம் குலத்தைச் சேர்ந்த இவனுக்கும் ஏதாவது ஆழமான தொடர்பு இருந்தால்... இவன் விஷம் ஏறித் துடித்துச் சாகும்போது இவள் அலறித் துடித்திருக்க வேண்டாமா?’

‘ஆனால்... இவள் முகத்தில் தெரியும் இந்தப் புன்னகை என்ன?’

அந்தக் கேள்விக்கு அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.

மாறாக, அவர்களது நெஞ்சுக்குள் பயம் மெதுவாகப் பரவத் தொடங்கியது.

“என்னதான் நடக்கிறது இந்தத் தீவில்...?”

ஒருவன் தன்னையும் அறியாமல் முணுமுணுத்தான்.

“சுனாமி வருவதற்கு முந்தைய அமைதியைப் பார்த்திருக்கிறோம்...”

அவன் இஷிதாவை நோக்கிப் பார்த்தான்.

“ஆனா இப்போ நிலவுற இந்த அமைதி... அதைவிடக் கொடூரமா இருக்கே!”

அவன் திடீரென அருகிலிருந்தவனின் கையைப் பற்றிப் பிடித்தான்.

“டேய்... வாடா! தயவுசெய்து இங்கிருந்து ஓடிடலாம்!”

அவன் இழுத்தான்.

ஆனால்...

அவர்களது கால்கள் நகரவில்லை.

பயத்தில் பாதங்கள் மண்ணோடு மண்ணாகப் பதிந்துவிட்டதைப் போல இருந்தன.

அப்போது—

அவர்களது பயத்தை மரண பீதியாக மாற்றும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மணலில் உயிரற்றுக் கிடந்த அந்தத் துரோகக் காட்டுவாசியின் உடலில் ஒரு சிறிய அசைவு தோன்றியது.

முதலில் அவனது வலது கை விரல் மட்டும் லேசாகத் துடித்தது.

பின்னர்...

மணலைப் பற்றியிருந்த அவனது விரல்கள் மெதுவாக இறுகின.

“டேய்...!”

ஒருவன் பயத்தில் மெல்லக் கத்தினான்.

மற்றவன் அவனைப் பார்க்கவில்லை.

அவனது பார்வை முழுவதும் அந்த உடலிலேயே பதிந்திருந்தது.

அடுத்த கணம்—

அந்தச் சடலத்தின் மார்புக்குள் ஒரு விசித்திரமான அசைவு.

மூச்சு நின்று பல நொடிகள் கடந்திருந்த அந்த உடல், திடீரென்று காற்றை உள்ளிழுத்தது.

“ஹ்ஹ்ஹ்...”

இருவரும் பின்னால் ஒரு அடி நகர்ந்தனர்.

“இது... எப்படி சாத்தியம்?”

அவர்களில் ஒருவனின் குரல் நடுங்கியது.

அவர்களால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிக்கொள்ளக்கூட முடியவில்லை.

அதே நேரத்தில், அவனது இடுப்பில் இன்னும் ஆழமாகப் பதிந்திருந்த அந்தத் தங்க முக்கோணப் பாம்பின் விஷம் தோய்ந்த அம்பு லேசாக அசைந்தது.

அம்பின் முனை தசைக்குள் சிக்கியிருந்தது.

ஒரு கணம்...

இரண்டு கணம்...

பின்னர்—

சடாக்!

யாருடைய கையும் தொடாமல், அந்த அம்பு திடீரென உடலிலிருந்து வெளியேறி மணலில் விழுந்தது.

தங்க முக்கோணப் பாம்பின் வடிவம் கொண்ட அதன் முனை நிலவொளியில் மின்னியது.

அந்தக் காட்சியைப் பார்த்த இரு காட்டுவாசிகளும் உறைந்து போனார்கள்.

“அம்பு... தானாகவே வெளியே வந்துடுச்சே!”

அவன் முணுமுணுத்தான்.

ஆனால் அவர்களது அதிர்ச்சி அங்கே முடியவில்லை.

அம்பு வெளியேறிய இடத்தில் இருந்த காயத்தை அவர்கள் பார்த்தனர்.

சில நொடிகளுக்கு முன்பு அந்தக் காயத்திலிருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது.

இப்போது...

குருதி நின்றுவிட்டது.

காயத்தின் இரு விளிம்புகளும் மெதுவாக ஒன்றோடு ஒன்று நெருங்கின.

தசைகள் சுருங்கி இணைந்தன.

சிவந்த காயத்தின் தடம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டே போனது.

ஒருவன் தன் கண்களைத் தேய்த்துக்கொண்டான்.

மீண்டும் பார்த்தான்.

அந்தக் காயம் இருந்த இடத்தில் இப்போது ஒரு சிறிய மங்கலான தடம் மட்டுமே.

“இது... மனித உடலா?”

அவனது குரல் கிட்டத்தட்ட கிசுகிசுப்பாக மாறியது.

அவனருகில் நின்றவன் பதில் சொல்லவில்லை.

அவனது உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

அந்த நேரத்தில்...

உயிரற்றுக் கிடந்த உடலுக்குள் காத்தவராயனின் அசுர ஆன்மா முழுமையாக நிலைபெற்றது.

மார்புக்குள் மீண்டும் ஒரு துடிப்பு.

தட்...

இன்னொரு துடிப்பு.

தட்...

பின்னர்—

தட்!

இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

அவனது கழுத்துத் தசைகள் இறுகின.

விரல்கள் மணலைப் பற்றின.

மெதுவாக அவனது உடல் எழ முயன்றது.

அதைப் பார்த்ததும் இரு காட்டுவாசிகளும் பின்னால் நகர்ந்தனர்.

“ஓடலாமா...?”

ஒருவன் கிசுகிசுத்தான்.

“எங்கே ஓடுறது...?”

மற்றவன் பதிலளித்தான்.

அவன் சொன்னதும் இருவரும் மீண்டும் அந்த உடலை நோக்கிப் பார்த்தனர்.

அந்தச் சடலம் இப்போது முழங்காலில் எழுந்திருந்தது.

தலை குனிந்திருந்தது.

சில நொடிகள் அப்படியே இருந்தது.

பின்னர்...

மெதுவாகத் தலையை உயர்த்தியது.

அவனது கண்கள் திறந்தன.

அந்தக் கண்களில் அவர்கள் அறிந்த மனிதனின் உயிர் இல்லை.

குருதிச் சிவப்பில் மிளிர்ந்த அந்தப் பார்வைக்குள் வேறொரு இருப்பு விழித்திருந்தது.

காத்தவராயன்!
[+] 11 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by Geneliarasigan - 27-09-2026, 06:07 PM



Users browsing this thread: 5 Guest(s)