02-01-2019, 10:31 AM
![[Image: 1546257164.jpg]](https://www.kamadenu.in/uploads/common/2018/12/31/common/1546257164.jpg)
6 - MISSION: IMPOSSIBLE - FALLOUT
டாம் க்ரூஸ் என்றாலே மிஷன் இம்பாசிபிள் என்ற ரீதியில் இந்தப் பட வரிசையோடு ஒன்றிப் போய்விட்டார். கடந்த வருடம் மம்மி படம் மூலம் ஏமாற்றம் தந்தவர் இந்தப் படத்தில் காலை உடைத்துக் கொண்டு ரசிகர்களுக்கு பரபரப்பையும் கவலையையும் ஒருசேர கொடுத்தார். சூப்பர் மேன் ஹென்றி காவில்லின் வில்லத்தனும் இம்முறை ரசிகர்களுகு போனஸ். முந்தைய மிஷன் இம்பாசிபிள் படங்களை விட வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் முந்தியது இந்த ஃபால் அவுட். 791 மில்லியன் டாலர் வசூலுடன் அடுத்த பாகத்துக்காக ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்கச் செய்துள்ளது.
5 - VENOM
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வெனம் கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு சூப்பர் ஹீரோ படம் என்ற அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஸ்பைடர்மேன் உலகத்திலிருந்து ஒரு வில்லன் கதாபத்திரம் எப்படி தனிப்படமாக வெற்றியடையும் என்ற கேள்வியே இருந்தது. ஆனால் சோனி நிறுவனமே வெனம் படத்தின் வெற்றியைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கும். விமர்சகர்கள் ஆதரவு இல்லை என்றாலும் 854.4 மில்லியன் டாலர்களை வசூலித்து அசரடித்தது. சீனாவிலும் படம் மெகா ஹிட் அடிக்க படத்தின் அடுத்த பாகத்துகான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.
4 - INCREDIBLES 2
15 வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அது வசூல் சாதனையையும் படைக்கும் என்று எவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பெரும்பான்மையான விமர்சகர்கள் இப்படத்தைக் கொண்டாட, ரசிகர்கள் அதற்கும் அதிகமாகவே கொண்டாடித் தீர்த்தார்கள். முந்தைய பாகம் 633 மில்லியன் டாலர்களை வசூலித்திருந்தது. இரண்டாம் பாகம் 1.24 பில்லியன் டாலர்களை வசூலித்தது. சர்வதேச அளவில் அதிக வசூல் செய்திருக்கும் இரண்டாவது அனிமேஷன் படம் இது. அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் அதிகம் வசூலித்த படம் என முதலிடத்தைப் பிடித்தது. இந்தப் பட்டியலில், முதலிடத்தில் இருக்கும் இன்க்ரடிபிள்ஸ் 2-வுக்கும், அடுத்த இடத்தில் இருக்கும் ஃபைண்டிங் டோரிக்கும் வசூலில் இருக்கும் வித்தியாசம் கிட்டத்தட்ட 50 மில்லியன் டாலர்கள். இதுவே இந்தப் படத்தின் வெற்றி எந்த அளவு என்பதைச் சொல்லும்.
3 - JURASSIC WORLD: FALLEN KINGDOM
2015-ல் வந்த ஜுராசிக் வேர்ல்ட் வெற்றியையும், வசூலையும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இரண்டாம் பாகத்தால் விமர்சன ரீதியாக முதல் பாகத்தோடு போட்டியிட முடியவில்லை என்றாலும் 1.30 பில்லியன் வசூலோடு, கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. நாயகன் கிறிஸ் பிராட்டுக்கு அவெஞ்சர்ஸோடு சேர்த்து ஒரே வருடத்தில் இரண்டு மெகா ஹிட் படங்கள். இயக்குநர் பயோனாவின் ஹாரர் பட பாணி திரைக்கதைக்கு கலவையான எதிர்வினைகளே வந்தாலும் படத்தின் வெற்றி அடுத்த பாகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டது.
2 - BLACK PANTHER
மார்வல் சூப்பர் ஹீரோ படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்வது என்ன புதிதா எனப் பலரும் நினைக்கலாம். ஆனால் மார்வல் நிறுவனமே எதிர்பார்க்காத அளவு ஒரு வெற்றி என்றால் அது ப்ளாக் பேந்தரின் 1.35 பில்லியன் டாலர் வசூல் வெற்றி தான். கருப்பின மக்களின் சூப்பர் ஹீரோ என்று அடையாளப்படுத்தப்பட்டத்து படத்துக்கு சாதகமாகப் போக, சிறப்பான விமர்சனங்களைப் பெற்ற சூப்பர் ஹீரோ படம், முன்பதிவில் அதிக வசூல் செய்த சூப்பர்ஹீரோ படம், பிப்ரவரி மாத வெளியீட்டில் அதிக வசூல் செய்த படம் என அடுத்தடுத்து சாதனைகளை உடைத்துக் கொண்டே போனது. அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த காமிக் புக் திரைப்படம் என்ற சாதனையையும் ப்ளாக் பேந்தரே வைத்துள்ளது.
1 - AVENGERS: INFINITY WAR
10 வருடங்களாக கட்டமைக்கப்பட்ட மார்வல் உலகின் க்ளைமேக்ஸ். ஐயர்ன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, தார், ஹல்க், ப்ளாக் பேந்தர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என முக்கிய சூப்பர் ஹீரோக்களும், இவர்களுக்கெல்லாம் இணையாக, தனியாளாக நின்று வில்லத்தனம் காட்டிய தானோஸும் சேர்ந்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தனர். இந்த வருடத்தின் இன்னொரு சொல்லி அடித்த ஹிட். சர்வதேச அளவில் 2.05 பில்லியன் வசூல். why kattappa killed bahubali என்ற கேள்விக்கு இணையாக ஒரு ட்விஸ்டுடன் முதல் பாகம் முடிந்து, 2019-ன் Avengers: End Game படத்துக்கு ரசிகர்கள் காத்திருக்க பொறுமையின்றி தவித்து வருகின்றனர். தானோஸை நமது ஹீரோக்கள் வெல்லப்போவது எப்படி என்பதே அடுத்த சில மாதங்களுக்கு மார்வல் ரசிகர்களின் கேள்வி.