19-11-2025, 12:49 PM
59
நவநீதனும் ஒரு பெருமூச்சுடன் பிரமிளாவைப் பின் தொடர்ந்தான்..!!
அரை மணி நேரம் கடந்திருந்தது. அடிக்கடி நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா. அவள் கையில் கடிகாரம் இருக்கிறது என்பதற்காகவே பார்த்துக் கொள்வதைப் போலிருந்தது அவள் செய்கை.!
"எவ்ளோ அமைதியா... அருமையா இருக்கு" என்று நவநீதனைப் பார்த்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் திவ்யா.
அவளது முன் நெற்றி முடிகள்.. இதமான தென்றல் காற்றுக்கு அவளது முகத்தில் வந்து விழுந்து.. தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்க.. அலட்டிக் கொள்ளாத வனப்புடன் இளமை வசீகரிக்க எளிமையாக இருந்த.. அவளின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை நவநீதனால்.!
"ஏன் இருக்காது?" என்று கிண்டல் செய்தாள் பிரமிளா. "பக்கத்துல ஆளு இருந்தா எல்லாம் அருமையாவும் அழகாகவும்தான் இருக்கும் "
"ஆளா..?" நவநீதன் பிரமிளாவைப் பார்த்தான்.
"ம்ம்ம்.. சாதாரண ஆளா.. ஹீரோவாச்சே..?" பிரமிளா திவ்யாவை கேலியாகப் பார்த்தபடி சிரித்தாள்.
அவர்கள் இரண்டு பேரும் உள்ளர்த்தத்துடன் பேசிக் கொள்வதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
"ஹீரோவா.? யாரு.. நானா..?"
'ம்ம்ம்.. பக்கா ஜென்டில் மேன் ஹீரோ.! சரி.. இவளுக்கு என்னதான் சொல்ல போறிங்க.?" நேரடியாகவே கேட்டு விட்டாள்.
"நான் என்ன சொல்றது பிரமி?"
"ஐ லவ் யூ.. சொல்லுங்க.! எனக்கில்ல... அவளுக்கு..!" சிரித்தாள்.
திகைப்புடன் திவ்யாவைப் பார்த்தான்.
திவ்யா முழு மனதாக அவன் காதலுக்காக காத்துக் கொண்டிருந்தாள். அவன் நல்ல வார்த்தையாக சொல்ல மாட்டானா என்று தவித்துக் கொண்டிருந்தாள்.
"அவ உங்கள ரொம்ப டீப்பா.. லவ் பண்றா.." என்று மீண்டும் சொன்னாள் பிரமிளா.
திவ்யாவை ஆழமாகப் பார்த்து விட்டு அமைதியாகச் சொன்னான்.
"வேண்டாம்னு சொன்னேனே திவ்யா.? நமக்குள்ள இந்த லவ் எல்லாம் ஒத்து வராது..! ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.!"
பிரமிளா "என்ன ஒத்து வராதுங்கறிங்க..?"
"பிரெண்டோட தங்கச்சி.."
'பிரெண்டோட தங்கச்சின்னா.. அவ பொண்ணில்லையா.? அவளுக்கும் மனசு இல்லையா..? அந்த மனசுல காதல் இல்லையா.?"
"ஸாரி பிரமி.. இதெல்லாம் வாதம் பண்ற விஷயம் இல்ல.."
“என்ன சார் நீங்க... அவகிட்ட..."
"விடுறீ..!" சட்டெனக் குறுக்கிட்டாள் திவ்யா,
"பொறந்த நாளும் அதுவுமா என்னை அப்செட் பண்ணாத. வேற பேசு..!"
"இத.. இப்ப விட்டா.. வேற எப்படீ பேசறது..?"
'’விடு.. விடு..! இதெல்லாம் மனசுல இருந்து தானா வரனும்..!" என்று விட்டு நவநீதனை நேராகப் பார்த்துச் சொன்னாள் திவ்யா,
"எனக்கு புரியுது நவநீ.. ஆனா.. என் மனசுக்குத்தான் சுத்தமா புரியவே மாட்டேங்குது..!"
என்ன பேசுவதெனப் புரியாமல் அமைதியாக அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நவநீதன்..!!!
அரை மணி நேரத்துக்கும் மேல் ஆகி விட்டது.
இரண்டு இளம் பெண்களுடன் வந்து இப்படி ஒரு ஆளரவமற்ற வனப் பகுதியில்.. தனிமையான.. உயரமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பது என்பது மகிழ்ச்சியான ஒன்று தான். ஆனால் இந்த காதல் தான் இப்போது பெரிய சிக்கலாக இருக்கிறது..!!
திவ்யாவின் இறுக்கமான முகத்தைப் பார்த்துக் கொண்டு அந்த இடத்தில் நீண்ட நேரம் அமைதியாய உட்கார்ந்திருக்க முடியவில்லை நவநீதனுக்கு.
அந்த இடத்தை விட்டு எழுந்து வேறு எங்காவது சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அப்போது தான் தாவணியை விசிறியபடி பிரமிளா கேட்டாள்.
"எத்தனை நேரம்தான் இப்படியே மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டு உக்காந்திட்டிருக்கறது.?"
"போலாமா?" அவளைப் பார்த்து உடனே கேட்டான் நவநீத
"எங்க ?"
"வீட்டுக்குத்தான். வேற எங்க.?"
"உடனேவா..?”
“ஏய்.. நாம வந்து எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா ?"
‘'அட இருங்க... சார். இப்ப அவசரமா வீட்டுக்கு ஓடிப்போய் என்ன பண்ண போறீங்க.?"
நவநீதனுக்கு பிரமிளா மீது எரிச்சலாக வந்தது. ஓங்கி அவள் மண்டையில் 'நங்'கென்று கொட்ட வேண்டும் போல் இருந்தது.
சும்மா இருக்காமல் வாயைக் கிளறியது இவள்தான். கலகலப்பாக இருந்த திவ்யாவை இப்போது இறுக்கமானவளாக மாற்றி விட்டு.. மூஞ்சியை மூஞ்சியை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறோமாம்.!!
நவநீதனின் கோபப் பார்வை தன் மேல் பாய்வதை புரிந்து கொண்டவளை போல புன்னகைத்தாள் பிரமிளா.
"ஓகே சார்.. கோபப் படாதிங்க. உள்ள போலாமா.? அந்த குதிரை பாறை இட்ட.?"
இந்த மலை மீது அது ஒரு நல்ல இடம். நிறைய பெரிய பாறைகள் இருக்கும் இடம். அதில் ஒரு பாறை குதிரை வடிவில் இருக்கும். அதுவும் பக்கத்தில்தான் இருந்தது.
கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் அந்தப் பாறைக்கும் ஒரு நடை போய் வருவார்கள். கீழே உட்கார்ந்து பேச இடமும் நிழலாக.. நன்றாக இருக்கும்.
"இப்ப அங்க போய் என்ன பண்ண போறோம் ?" என்றான் நவநீதன். மெதுவாக எழுந்தபடி.
பிரமிளாவும் எழுந்தாள்.
"கொஞ்ச நேரம் பேசிட்டு.. ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்” எழாமல் உட்கார்ந்து கொண்டிருந்த திவ்யாவை அழைத்தாள்,
"ஏய்.. வாடி
"ப்ச்.. நான் வரலடி " சலித்துக் கொண்டாள் திவ்யா.
அவள் நெஞ்சில் இருந்து ஒரு நீண்ட மூச்சு வெளியேறியது.
‘'ஏய்.. ஏன்டி ?"
"ப்ச்.. நான் வரல போ. எனக்கு கால் வலிக்குது. நீங்க போய்ட்டு வாங்க. நான் இங்கயே உக்காந்திருக்கேன் "
அவள் சொல்லும் காரணம் பொய்யானது என்பது மற்ற இரண்டு பேருக்குமே நன்றாகத் தெரிந்திருந்தது.
அதற்கு மேல் அவளை நோகடிக்க விரும்பாத பிரமிளாவும் அவளை வற்புறுத்தவில்லை.
"சரி வாங்க.. நாம போலாம் "
நவநீதன் மிகவும் வருத்ததுடன் திவ்யாவைப் பார்த்தான். அவள் மிகவும் பாவமாகத் தோன்றினாள்.
"வா திவ்யா" என மெதுவாக அழைத்தான்.
"இல்ல.. பரவால்ல நீங்க போய்ட்டு வாங்க.." அவன் கண்களை வலியோடு பார்த்தபடி சொன்னாள்.
"என் மேல கோபமா ?"
"உங்க மேல கோபப் பட எனக்கு என்ன உரிமை இருக்கு..?"
“என்னை மன்னிச்சிரு திவ்யா. நட்பு முறைல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா இந்த காதல் வேண்டாம்.."
"தேங்க்ஸ்..! பரவால்ல போய்ட்டு வாங்க..! எனக்கு கொஞ்சம் அமைதி வேணும்."
பிரமிளா மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
"அவளுக்கு வலி கால்ல இல்ல.. மனசுல.."
பிரமிளாவை முறைத்தாள் திவ்யா.
"ஆமா.. போடி..! நாசமா போனவளே.. நீ வாய் வெச்சு எதுவுமே வெளங்கினதில்ல.."
'’ அடிப்பாவி..! இப்படி அபாண்டமா பேசுறியே நீ நல்லா..... இல்ல வேணாம்.. உன் பொறந்த நாளும் அதுவுமா... ஸாரிடி நீ நல்லா இரு .! என்னைத்தான திட்ற.? திட்டிக்கோ..!" என்றாள் சிரித்தபடி.
நவநீதன் திவ்யாவையே சில நொடிகள் வெறித்துப் பார்த்தான்.
அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"நீங்க வாங்க. அவ பாவம். மூடு அப்செட்ல இருக்கா. கொஞ்ச நேரம் அமைதியா இருக்கட்டும்." என்று நவநீதனிடம் சொல்லி விட்டு மெல்ல நடந்தாள் பிரமிளா.
நவநீதனும் ஒரு பெருமூச்சுடன் பிரமிளாவைப் பின் தொடர்ந்தான்..!!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)