Fantasy தெய்வ யட்சி (முடிவுற்ற கதை) - சகோதரன்
#2
கிருஷ்ணன் சட்டையை இழுத்துவிட்டபடி கோபுரவாசலை நோக்கிச்சென்றான். மிகப்பழைய கோயில், திருப்பணிகள் நடந்தும் பல வருடங்களாகியிருக்கலாம். எல்லா கோபுரங்களையும்போல அதுவும் மண்ணுக்குள் புதைந்திருந்தது. கோபுரவாசலின் கால்பட்டு அம்மி போல தேய்த கல்படிகள் சாலையைல் விடக் கீழே இருந்தன. கனத்த இரும்புச்சங்கிலிகளும் பித்தளைக்குமிழ்களும் வரிவரியாக விரிசலிட்ட மரச்செதுக்குச் சிற்பங்களும் கொண்ட உயரமான மரக்கதவுகள் இரும்புக் கீல்களில் சிக்கி கற்சட்டத்தில் தொற்றிக்கொண்டு சாய்ந்து நின்றன. புஷ்பயட்சி காவல்காத்த கல்நிலையில் நிறைய வெற்றிலைச்சுண்ணாம்பு தீற்றப்பட்டிருந்தது.

 
கோயிலுக்குள் மனிதநடமாட்டமே இருப்பதாகத்தெரியவில்லை. அவன் தன் நிழல் மௌனமாகக் கூடவர சரிந்தெழுந்த கற்பாளங்களாலான தரை மீது மெல்ல நடந்தான். சிலநாட்களுக்கு முன்பு மழைபெய்திருக்கவேண்டும், கல்லிடுக்குகளில் புற்கள் பசுமையாக பீரிட்டிருந்தன. கற்பாதை ஓரங்களில் எழுந்த நெருஞ்சியும் பசுமையாகவே இருந்தது. கிருஷ்ணன் நிழல்கள் செறிந்து தூண்களின் காடாக விரிந்துகிடந்த கோயிலுக்குள் கண்ணோட்டி நோக்கினான். யாருமே இல்லை. அத்தனை காலியாக அது இருப்பது பிரமிப்பாகவும், கூடவே அது அப்படித்தான் இருக்கமுடியும் என்பதுபோலவும் இருந்தது. அந்த அமைதியின் ஒரு பகுதிபோல குர்ர் குர்ர் என்று புறா குறுகும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
 
பிரம்மாண்டமான கோயில். ஏழெட்டு ஏக்கர் பரப்பு இருக்கும். நான்கு திசைக்கோபுரங்கள். யானைவரிசை போல கருங்கல்லாலான நாலாள் உயர சுற்றுமதில். உள்ளே மங்கிப்போன நாமங்களுடன் சிறுமதில். இரு மதில்களுக்கும் நடுவே கோணலாக வளைந்து நடடமிட்டு நின்ற தென்னைமரங்களும் கீழே அவற்றின் ஓலைகளும் மட்டைகளும் சிதறிக்கிடக்க ஊடே சில அரளிப்புதர்களும் மந்தாரைகளும் கொண்ட நந்தவனம். இடதுபக்கம் ஒரு பெரிய தெப்பக்குளம். ஏரிக்கரை பனைமரக்கூட்டம் போல தூண்கள் எழுந்து வரிசையமைத்த கல் மண்டபம் சூழ பிளாஸ்டிக் குப்பைகள் அடித்தரையின் பச்சைப்பாசி வண்டலில் மிதக்க, நீரோடிய கறைகள் உலர்ந்த படிக்கட்டுகளுடன் வெறிச்சிட்டுக் கிடந்தது அது.ஒரு சிறிய பறவை சிர்ர்ர் என்று சிறகதிர தென்னையில் இருந்து காற்றில் சறுக்கி இறங்கி குளத்து மதிலில் அமர்ந்தது.
 
கிருஷ்ணன் நின்றான். சுற்றி வருவதில் பொருளில்லை. உள்ளே சென்று சிலைகளைப் பார்க்கவேண்டியதுதான். அவன் திரும்பி முகமண்டபத்தருகே வந்தான். ஒளியைப்பார்த்து வந்ததனால் உள்ளே நிறைந்திருந்த இளம் இருட்டு கண்களை மறைத்தது. கண்கள் பழகியபோது நீருக்குள் இருந்து பெரிய மீன்கள் எழுந்து வருவது போல கரிய சிலைகள் இருட்டிலிருந்து எழுந்து தெரிந்தன. இரண்டாளுயரமான பெரிய வழவழப்பான கற்சிலைகள். அவன் எந்தச்சிலையையும் பார்க்காமல் மொத்தமாக அந்தச் சிற்ப வெளியை பார்த்தபடி ஒருசில கணங்கள் பிரமித்து நின்றிருந்தான்.
 
யாரு?” என்ற பெண்குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். குதிரைக்காரன் சிலைக்கு அப்பாலிருந்து அந்தப்பெண் இறங்கி இடுப்பில் செருகிய முந்தானையை எடுத்து இழுத்துவிட்டுக்கொண்டு, நெற்றியில் சரிந்த கூந்தலிழையை ஒருகண நேர நளினமான அசைவால் சரிசெய்தபடி கேட்டாள். கிருஷ்ணனுக்கு கண்டா மணியோசை போல மனம் அதிர்ந்தது. அச்சிலைகளில் ஒன்று இறங்கியது போல் இருந்தாள் அவள்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: தெய்வ யட்சி by சகோதரன் - by sagotharan - 03-07-2019, 09:00 PM



Users browsing this thread: 3 Guest(s)