30-06-2019, 10:57 AM
’’ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி, எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்’’ என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த ஆப்கான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் வீரர் ஷகின் அப்ரிதி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
எளிதான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 156 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த இமாத் வாசிம் நிலைத்து நின்று ஆடி, பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசிநேர பதற்றம் காரணமாக, ஆப்கானிஸ்தான் வீரர்கள் சில கேட்ச்களை கோட்டைவிட்டனர். ரன் அவுட் வாய்ப்புகளையும் தவறவிட்டனர். இந்த வெற்றி மூலம் 9 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடக்கும் இந்தியா- இங்கிலாந்து போட்டியில், இந்தியா வென்றால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு சாதகமாக இருக்கும். இல்லை என்றால் சிக்கல்தான்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறும்போது, ’’இது சிறப்பான வெற்றி. இந்த பிட்சில் ஆடுவது எளிதானதில்லை. இமாத் வாசிம் நன்றாக ஆடினார். அவருக்கு தலைவணங்குகிறேன். ஆப்கான் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக வீசி, நெருக்கடி கொடுத்தனர். எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், இமாத் அதை நிறைவேற்றினார். ஷாகின் அப்ரிதி, ஒவ்வொரு நாளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்து இந்தியா- இங்கிலாந்து போட்டியை நாங்கள் பார்க்கப் போகிறோம். ஆனால் அதை பற்றி அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கவில்லை. சிறந்த அணி கண்டிப்பாக வெற்றி பெறும்’’ என்றார்
first 5 lakhs viewed thread tamil