14-02-2025, 02:58 PM
பாகம் - 13
மங்களாவும் ருக்மணியும் உள்ளே சென்று, பத்து மாமியிடமும், அவர் மகள் விஜயாவிடமும் உரையாடிவிட்டு அங்கு அமர்ந்திருந்த மற்ற மாந்தர்களுடன் அமர்ந்தனர். ஏற்கனவே சிலர் முன்வரிசையில், அமர்ந்திருந்ததால் பின்னால் சென்று அமர்ந்தார்கள்.
கீழே அமர்ந்திருக்கும் மாந்தருக்கு பின்னால், நடுவில் போடப்பட்ட பெரிய நாற்காலியில் அகிலாண்டேஸ்வரி அமர்ந்திருந்தார். அவருக்கு வலது புறத்தில் உள்ள நாற்காலியில் சாமுண்டீஸ்வரியும், இடது புறத்தில் உள்ள இரு நாற்காலிகளில் இரட்டை கிழவிகளும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னே மற்ற நவரத்தினங்கள் அமர்ந்திருந்தனர். மங்களாவும், ருக்மணியும் அவர்கள் பக்கத்திலேயே அமர்ந்தனர். ருக்மணி மங்களாவின் வலது பக்கம் அமர, இடது பக்கம் கமலம் அமர்ந்திருந்தாள். விஜயா மனைக்கட்டையில் அமர்ந்திருக்க, அவள் முன் இரு குத்துவிளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த குத்து விளக்குகளின் முன் பல விதமான மங்கள பொருட்களும், பழங்களும், பூக்களும், மாலைகளும், தின்பண்டங்களும், வளைகாப்பிற்கு தேவையான வளையல் போன்ற மற்ற விஷயங்களும் வைக்கப்பட்டிருந்தன.
மங்களா பின்னால் அமர்ந்திருப்பதைப் பார்த்த பத்து மாமி அவளை பார்த்து கை அசைத்து,
பத்து மாமி: ஏன்டி அங்க போய் உக்காந்துண்டுருக்க? முன்னாடி வா!
என்று அழைக்க,
மங்களா: இருக்கட்டும் மாமி! மத்தவாக்கெல்லாம் மறைக்க போகறது!
பத்து மாமி: அடி வாடி!
மங்களா: இருக்கட்டும் மாமி!
பத்து மாமி: சொன்னா கேக்க மாட்டியே!
பத்து மாமி அங்கிருந்து வந்து,
பத்துமாமி: நீ நம்மாத்து பொண்ணு. முன்னாடி உக்காராம இங்க வந்து இத்தன பின்னாடி வந்து உக்காராலாமாடி?! வாடி!
என்று அவள் கையைப் பிடித்து அவளை இழுத்துக்கொண்டு போக,
மங்களா ருக்மணியின் கையைப் பற்றி ருக்மணியையும் கூடவே கூட்டி சென்று முன்வரிசையில் அமர்ந்தாள்.
மங்களாவிற்கு பத்து மாமி கொடுத்த முன்னுரிமை கமலத்திற்கு சிறிதும் பிடிக்கவில்லை.
முன்வரிசையில் அமர்ந்த மங்களாவை சுற்றி இருக்கும் பெண்களில் ஒருவர்,
அந்த மாமி: மங்களா! நீ நன்னா பாட்டுபாடுவியோண்ணோ! ஒரு பாட்டு பாடேன்!
என்று கேட்க,
மங்களா பாட, ருக்மணி பின்பாட்டு பாட, சுற்றி இருப்பவர்களில் சிலரும் சேர்ந்து பின்பாட்டு பாட மற்றவர்கள் அனைவரும் ரசித்து கொண்டிருந்தனர்.
பாடல் முடிந்தவுடன் அங்கிருந்த மற்றோரு மாமி,
மாமி: எவ்ளோ அழகான பாடுறேடி! பாக்கவும் சிற்பம் மாதிரி இருக்க! குரலும் குயில் மாதிரி, குணமும் தங்கம் மாதிரி டி! என் கண்ணே பட்டுடும் போல!
என்று அவர் மங்களாவிற்கு புகழாரம் சூட்ட, கமலத்திற்கு மேற்கொண்டு பொறாமையைத் தூண்டியது.
கமலம் எழுந்து அம்புஜத்தின் காதில் அவளை தனியே வர சொல்லி அழைத்தாள். அம்புஜத்தை தனியே அழைத்துச்சென்று,
கமலம்: மாமி! நீங்க பெரியவா! நான் உங்களுக்கு இத சொல்லக்கூடாது!
என்று தன் தலையை குனிந்து கொண்டு பம்மியபடி பேச,
அம்புஜம்: என்னடி போடி வச்சு பேசுற?
கமலம்: புத்திர பாக்கியம் இல்லாதவ மங்களா. அவ வளைகாப்புல முன்னாடி உக்காந்துண்டுருக்கிறது நன்னாவா இருக்கு? அவ நலங்கு வச்சா குழந்தைக்கு ஏதாவது ஆகிட போகுதோண்ற அக்கரைல தான் மாமி சொல்றேன்.
அம்புஜம்: இதெல்லாம் நீ சொல்லி தான் நேக்கு தெரியணுமாடி?! அவ நலங்கு வைக்காத மாதிரி நான் பாத்துக்கிறேன் விடு. நன்ன மனசுடி நோக்கு!
என்று அம்புஜம் கமலத்திற்கு பாராட்டு மலை பொழிய, கமலமும் அதை சிரிப்புடன் ஏற்றுக்கொண்டாள்.
இருவரும் மீண்டும் அவர்கள் இடத்தில் வந்து அமர்ந்தனர். நலங்கு வைப்பது துவங்கியது.
முதலில் அக்ராஹாரத்தின் தலைகாட்டான அகிலாண்டேஸ்வரியை நலங்கு வைக்கும்படி பத்துமாமி அவரிடம் வந்து பணிவுடன் அழைக்க, அகிலாண்டேஸ்வரி சென்று நலங்கு வைத்துவிட்டு வந்தார்.
அடுத்து சாமுண்டீஸ்வரியையும் பணிவுடன் அழைத்து நலங்கு வைக்க சொல்ல, அவரும் சென்று நலங்கு வைத்துவிட்டு வந்து அமர்ந்தார்.
அவருக்கு பிறகு இரட்டை கிழவிகள் இருவரும் சென்று நலங்கு வைக்க,
அடுத்தபடியாக பத்து மாமி மங்களாவை நலங்கு வைக்க அழைக்க, மங்களாவும் சிரித்துக்கொண்டு எந்திரிக்க, அம்புஜம் இடைமறித்து,
அம்புஜம்: மங்களா! நீ உக்காருடி! வேற யாராவது வைக்கட்டும்.
பத்து மாமி: ஏன் மாமி அவள உக்கார சொல்றேள்? அவ வைக்கட்டுமே.
அம்புஜம்: பத்து! நோக்கொண்ணும் தெரியாது. அவ வைக்க வேண்டாம்.
அம்புஜம் ஏன் மங்களாவை நலங்கு வைக்க கூடாது என்று சொல்கிறார் என்று மங்களா புரிந்து கொண்டு அவள் முகம் வாட, மங்களா பத்து மாமியைப் பார்த்து,
மங்களா: இருக்கட்டும் மாமி! வேற யாராவது வைக்கட்டும்.
மங்களா அப்படி பேசியதை கேட்டு பத்து மாமியின் முகம் வாடியது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார். பத்து மாமி அம்புஜத்தை பார்த்து,
பத்து மாமி: மாமி! என்ன மாமி இப்படி பன்றேள்?
பங்கஜம்: நீ சும்மாரு பத்து! அக்கா சொல்றத கேளு! 5 தலைமுறைய பாத்தவா. அவ சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும்.
பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மங்களாவிடம் மேற்கொண்டு வாட, மறுபுறம் ருக்மணியின் முகமோ கோபத்தில் கொந்தளித்தது.
பத்துமாமி: மாமி! அவளும் என் பொண்ணு மாதிரி தான் மாமி. அவ முகம் எப்படி வாடி போயிடுத்து பாருங்கோ மாமி!
அம்புஜம்: அவ முகம் வாடி போகுதுனு கவல படுற நோக்கு அவ உன் மகளுக்கு நலங்கு வச்சா உள்ள இருக்க பிஞ்சு வாடி போய்டுமேன்னு கவலை இல்லையாடி?
என்று பாத்து மாமியை திட்ட, பத்து மாமி அதிர்ச்சிகொண்டாள். மங்களா கண்களில் நீர் வடிய, பத்துமாமி அம்புஜம் பேசியது தவறு என புரிய வைக்க முயன்றார்.
பத்துமாமி: அவ தொட்டா ஏன் மாமி உள்ள இருக்க பிஞ்சுக்கு ஏதாவது ஆகப்போகுது? அவ அப்படிலாம் நெனைக்கிற ஆளா மாமி?
அம்புஜம்: நோக்கே இது நன்னா இருக்காடி? 5 வருஷமா குழந்தை இல்லாத அவள உன் பொண்ணுக்கு நலங்கு வைக்க சொல்றியே! அவ போன ஜென்மத்துல பண்ண பாவத்துக்கு தான அவளுக்கு குழந்தை இல்ல? உன் பொண்ணுக்கும் அந்த பாவம் வரணுமாடி?
என்று பேச, கோபத்தை அது வரை அடக்கிக்கொண்டிருந்த, ருக்மணி வெடித்து சிதறினாள்.
ருக்மணி: என்ன மாமி இப்படிலாம் பேசுறேள்? அவ பாவம் பண்ணாத நீங்க பாத்தேளா?
சாமுண்டீஸ்வரி குறுக்கிட்டு,
சாமுண்டீஸ்வரி: ருக்கு! பெரியவா கிட்ட அப்டிலாம் பேசாதே!
என்று கண்டிக்க,
சாமுண்டீஸ்வரி: நீங்க சும்மா இருங்கோ மாமி! நேக்கு தெரியும் யாருக்கு மரியாதை கொடுக்கணும்னு. பெரியவா பேசுற மாதிரியா பேசுறா?
அம்புஜம்: ருக்கு! சொன்னது அவளை மட்டும் இல்லடி. உன்னையும் செத்து தான். நோக்கும் இன்னும் புத்திர பாக்கியம் கெடைக்கலன்றத மறந்துட்டு பேசாதே!
என்று பேச ருக்மணியின் முகமும் ஒரு கணம் வாட, மறுகணமே,
ருக்மணி: நேக்கு புத்திர பாக்கியம் இல்ல தான் மாமி! நான் அத எப்போ உங்களாண்ட வந்து முறையிட்டேன்? அவளும் எப்போ வந்து உங்களாண்ட முறையிட்டா? எங்க பிரச்ன எங்களோட பிரச்ன. அதுல மத்தவாக்கு என்ன இருக்கு? மத்தவா அவாவா வேலைய பாக்க வேண்டியது தான?
அகிலாண்டேஸ்வரி குறுக்கிட்டு,
அகிலாண்டேஸ்வரி: ருக்கு! வரம்பு மீறி பேசாதே! அவா சொல்றதுல என்ன தப்பு?
ருக்மணி: என்ன தப்பு இல்ல மாமி?
அகிலாண்டேஸ்வரி: உங்க ரெண்டு பேரால விஜயா குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க ரெண்டு பெரும் பதில் சொல்வேளா?
ருக்மணி: அப்டி ஏதாவது ஆனாலும் அது எங்களால தான் ஆச்சுன்னு உங்களால எப்படி மாமி உறுதியா சொல்ல முடியும்? நீங்களும் தான் வச்சேள்? ஏன் உங்களால ஆகியிருக்க கூடாதா?
என்று சொல்ல, அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து போனர்.
மங்களா கண் கலங்கிக்கொண்டே,
மங்களா: ருக்கு! அவா பெரியவா! ஏதோ பேசிட்டு போராடி. நீ ஒன்னும் பேசாதேடி!
என்று ருக்மணியின் கைகளை பிடிக்க, ருக்மணி அவள் கைகளை உதறி விட்டு,
ருக்மணி: நீ சத்த நேரம் சும்மா இருடி! இன்னும் எத்தன காலத்துக்கு தான் இவா பேசுறதெல்லாம் கேட்டுண்டு இருக்க போற?
என்று அவளை திட்ட,
சாமுண்டீஸ்வரி குறுக்கிட்டு,
சாமுண்டீஸ்வரி: ருக்கு! எங்களுக்குலாம் புத்திர பாக்கியம் இருக்கு. நாங்க நலங்கு வச்சா என்ன ஆக போகரது? உனக்கும் மங்களாக்கும் தான் இல்ல. அதனால நீங்க வச்சா தான் ஏதாவது ஆகும்.
ருக்மணி: புத்திர பாக்கியம் இல்லாதவா நலங்கு வச்சா உள்ள இருக்க குழந்தைக்கு ஏதாவது ஆகும்னு உங்களுக்கு யாரு மாமி சொன்னா?
என்று வெடித்தெழ,
மங்களா மீண்டும் அவள் கையை பிடித்து,
மங்களா: வேணாம்டி ருக்கு! பத்து மாமிக்காகவாவது கொஞ்சம் சும்மா இருடி!
என்று மீண்டும் அவளிடம் கெஞ்ச, ருக்மணி மீண்டும் மங்களாவின் கைகளை உதறிவிட்டாள்.
கமலம் குறுக்கிட்டு,
கமலம்: ஏன்டி ருக்கு பெரியவா கிட்ட இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசிண்டிருக்க?
ருக்மணி: கமலம்! நீ சத்த நேரம் சும்மா இரு! இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம்னு நேக்கு நன்னா தெரியும். நீ அவாள தனியா கூட்டிண்டு போறப்போவே, ஏதோ நடக்கப்போகறதுனு நேக்கு தெரிஞ்சிடுத்து.
கமலம் அம்புஜத்தை பார்த்து, நீலிக்கண்ணீர் வடித்தபடி,
கமலம்: பாத்தேளா மாமி! கடைசில பழி என் மேல வந்துடுத்து!
என்று அம்புஜத்தை பார்த்து சொல்ல,
அம்புஜம் ருக்மணியை பார்த்து,
அம்புஜம்: அவ என்னடி பண்ணா? நீ ஏன் அவளாண்ட போற?
ருக்மணி: சரி மாமி! அவாளாண்ட போகல! நீங்க சொல்லுங்கோ மாமி!
பங்கஜம்: என்னடி சொல்லணும்!? அதான் சாஸ்திரத்துலலாம் எழுதிருக்கே!
ருக்மணி: எங்க எழுதிருக்குனு காட்டுங்கோ மாமி!
என்று பங்கஜத்தை கேட்க, அப்படி எங்கு எழுதி உள்ளது என்று தெரியாமல் பங்கஜமும் மற்றவர்களும் திணறினர்.
பங்கஜம்: அந்த காலத்துல நாங்கல்லாம் பெரியவா முன்னாடி பேசவே மாட்டோம். அவா முகத்த நிமிந்து கூட பாக்க மாட்டோம். இந்த காலத்துல பெரியவா மேல துளியும் மரியாதை இல்ல. இப்படி எதிர்த்து பேசிண்டுருக்கா! கலிகாலம்!
என்று புலம்ப,
ருக்மணி: நேக்கு மரியாத தெரியாதுன்னே வச்சிப்போம் மாமி! புத்திர பாக்கியம் இல்லாதவா நலங்கு வச்சா உள்ள இருக்க குழந்தைக்கு ஏதாவது ஆகிடும்னு எங்க எழுதிருக்குனு மட்டும் சொல்லுங்கோ! நான் வாய மூடிண்டு போய்டுறேன்.
அம்புஜம்: எங்கடி எழுதணும்? அதான் இதிகாசத்துலயே இருக்கே. மஹாபாரதத்தில காந்தாரி அவ புருஷனுக்கு கண்ணு தெரியலன்னு காலம் முழுக்க தன்னோட கண்ண கட்டிண்டு குருடியா வாழ்ந்தா. அதனால தான் அவளுக்கு 100 புள்ள பொறந்துச்சு.
மங்களாவைப் பார்த்து லேசாக கண்காட்டி,
அம்புஜம்: புருஷன் மேல பக்தி இல்லாம ஆச்சாரம் இல்லாததால தான் உங்க ரெண்டு பேருக்கும் குழந்த பொறக்கலடி.
ருக்மணியின் கோவத்தை இது மேலும் தூண்ட,
ருக்மணி: நாங்க ஆச்சாரமா இல்லன்றத நீங்க எப்போ மாமி பாத்தேள்? நாங்க ஆச்சாரமா இல்லனு கூட வச்சிப்போம்? நீங்க சொன்ன அதே காந்தாரி தான் போர்ல அவ புள்ளையாண்டான் ஜெயிக்கணும்னு தன்னோட கண்கட்ட கழட்டி அவன அம்மணமா பாத்தா. கல்யாணம் ஆன புள்ளையாண்டான அம்மா அம்மணமா பாக்குறது மட்டும் ஆச்சாரமா மாமி?!
அவள் பேசியதை கேட்டு அங்கு கூடி இருந்த அத்தனை பெண்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ருக்மணி: அவ ஆச்சாரம் இருக்கட்டும் மாமி…. உங்க ஆச்சாரத்த……
சிறிது நேரம் தயங்கிய ருக்மணி,
ருக்மணி: வேண்டாம் மாமி! என்ன பேச வைக்காதீங்கோ!
************************************************************************************************************************
Guest users can share their thoughts here,
https://www.secretmessage.link/secret/67aeaa3dd8f07/
************************************************************************************************************************