16-10-2024, 06:33 PM
(16-10-2024, 05:03 PM)snegithan Wrote: பாகம் - 140
மன்னர் காலம்
ராஜேந்திர சோழன் அரண்மனைக்குள் சிங்கள அரசன்,மற்றும் அவன் மனைவி இளவரசி ரோஹிணி அழைத்து வரப்பட்டனர்.
சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த ராஜேந்திர சோழன் சிங்கள மன்னனுக்கும் உரிய சிம்மாசனம் கொடுத்து அமர செய்தான்.அவனை நோக்கி,"சிங்கள அரசே..உங்களுக்கும் எங்களுக்கும் பழைய பகை விரோதம் இல்லை.ஒரு தமிழ் மன்னனின் மணிமுடி தங்களிடம் சிறைப்பட்டுள்ளதே..!அதை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.அதற்காக தான் நாங்கள் உங்களிடம் மூன்று தலைமுறையாக யுத்தம் செய்தோம்.எங்களுக்கு தேவையானது கிடைத்தாகி விட்டது.இப்பொழுது உங்கள் நிலப்பரப்பை நாங்கள் ஒப்படைக்க வேண்டிய தருணம் இது"என ராஜேந்திர சோழன் வாய்மொழி வார்த்தைகளை கேட்ட உடன் சிங்கள மன்னன் கண்கள் ஒளிர்ந்தது.
"ஆனால்..!"என ராஜேந்திர சோழன் சற்று இடைவெளி விட்டார்.
"உங்களிடம் யுத்தம் செய்ததின் விளைவு எங்களுக்கு பெருமளவு உயிர்சேதம்,மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது.அதை சீர்செய்ய வேண்டும் அல்லவா...அதனால் உங்கள் நிலப்பரப்பை சில காலம் எம் தளபதிகள் ஆண்டு மக்களிடம் வரி வசூலித்து வரட்டும்.நேரம் வந்த உடன் உங்கள் அரசை நான் உங்களிடமே ஒப்படைக்கிறேன்.அதுவரை தாங்கள் என் விருந்தினர் மாளிகையை அலங்கரியுங்கள்"என்று சோழன் சொல்ல சிங்கள மன்னன் முகம் வாடி போனது.
"ரோஹிணிக்கு இதை கேட்டு ஆச்சரியம்.வழக்கமாக எதிரி நாட்டு மன்னன் சிறைபட்டால் ஒன்று கொன்று விடுவார்கள்.இல்லையெனில் பாதாள சிறையில் தள்ளி விடுவார்கள்.இதென்ன ஆச்சரியம்..!விருந்தினர் போல உபசரிக்கிறார்களே..!என திடுக்கிட்டாள்..
ராஜேந்திர சோழன் தன் உதவியாளரை அழைத்து,"தாங்கள் சென்று அருள்மொழியை அழைத்து வாருங்கள் என்று சொல்ல அங்கிருந்து அவர் அகன்றார்.
சில நொடிகளிலேயே அருள்மொழி சபையில் பிரவேசிக்க,ராஜேந்திர சோழன் அவளிடம்,"மகளே,இவர்கள் நம் விருந்தினர்.இவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்,அது உன்னுடைய பொறுப்பு,விருந்தினர் மாளிகை அழைத்து செல்..என சொல்ல அருள்மொழி அவர்கள் முன்னே வந்தாள்..
ஒரே நேரத்தில் இரு பவுர்ணமி நிலவுகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன.அருள்மொழியின் தெய்வீக அழகை பார்த்து ரோஹிணி ஒரு கணம் மலைத்தாள்.ரோஹிணி மனதுக்குள்,நான் தான் உலகத்திலேயே மிகவும் அழகானவள் என்று இறுமாந்து இருந்தேன்..இவள் அழகில் என்னுடனே போட்டி போடும் அளவுக்கு அல்லவா இருக்கிறாள் என உள்ளுக்குள் பேசி கொண்டாள்.
அருள்மொழி அவளிடம்,"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.வாருங்கள் மாளிகை நோக்கி செல்லலாம்.."என்று அழைத்து சென்றாள்.
விருந்தினர் மாளிகையில்,அருள்மொழி பணியாட்களிடம் சரியாக வேலை வாங்கிய விதம் அவளின் திறமை பளிச்சிட்டது..இதை எல்லாம் ரோஹிணி உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தாள்.விருந்தினர் மாளிகை சுத்தம் செய்யப்பட்டு,வண்ணமயமான திரைச்சீலைகள் மாற்றப்பட்டு,நறுமண திரவியங்கள் தூவப்பட்டு,
சில மணித்துளிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ப மாளிகை தயார் ஆகி விட்டது..ஒரு மாபெரும் பேரரசின் இளவரசி என்ற தலைக்கனம் கொஞ்சம் கூட இல்லாமல் பணியாட்களிடம் சகஜமாக பழகி என்ன அழகாக அவர்களிடம் வேலை வாங்கி விட்டாள்..கொஞ்ச நேரத்தில் இந்த விருந்தினர் மாளிகையே இவள் சொர்க்கலோகம் போல் அல்லவா ஆக்கி விட்டாள் என்று ரோஹிணி வியந்தாள்.
ஒரு குறிப்பிட்ட பணியாளை ரோஹினியிடம் அருள்மொழி காட்டி," இவரிடம் உங்களுக்கு என்ன தேவையோ கூறுங்கள்.அவர் உடனே செய்து தருவார். நான் அவ்வப்போது இங்கே வந்து சரிபார்த்து கொள்கிறேன்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் நவராத்திரி விழா விசேஷமாக நடைபெறும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க,நீங்கள் காண பிரத்யேகமாக தங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன்.." என சொன்னாள்.
"ம்...சரி "என்று ரோஹிணி கூற அருள்மொழி விடைபெற்றாள்.
உடனே ரோஹிணி,"ஒரு நிமிஷம் நில்லுங்க.."என்றாள்.
அருள்மொழி திரும்பி,"ம்..சொல்லுங்க...!" என கேட்க,
ரோஹிணி அவளிடம்,"பட்டாபிஷேகம் முடிந்த உடன் உங்களுக்கும் வேங்கி நாட்டு இளவரசன் நரேந்திரனுக்கும் திருமணம் என்று பேசி கொள்கிறார்களே..!..?என கேட்டாள்..
இந்த கேள்வி கேட்டதும் அருள்மொழி முகம் மாறியதை ரோஹிணி கண்டுகொண்டாள்."மன்னிக்கவும்..இது என்னோட தனிப்பட்ட விசயம்..இதை தாங்கள் கேள்வியாக கேட்பது நன்றாக இருக்காது.."என நாசூக்காக பதில் அளித்து விட்டு அருள்மொழி சென்று விட ரோஹிணி தவித்தாள்..
"ஆகா..இவளை போன்ற பேரழகி ஒருத்தி இருப்பதால் தான் இலங்கையில் என்னை இளங்கோ ஏறேடுத்தும் பார்க்கவில்லையோ..!இவள் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று புரியவில்லையே..இவளுக்கும்,நரேந்திரனுக்கும் மணம் முடிந்து விட்டால் என் பிரச்சினை தீர்ந்து விட்டது என நினைத்தேனே..!இளங்கோவை வழிக்கு கொண்டு வர தாமே தான் களத்தில் இறங்க வேண்டும்.நாளை தளிக்குலத்தார் ஆலயத்தில் விசேஷம் என்று அருள்மொழி சொன்னாளே..ஒருவேளை அங்கு இளங்கோ வருவானா..கண்டிப்பா வரக்கூடும்..கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விடக்கூடாது.."என மனதில் நினைத்து கொண்டாள்..
அடுத்த நாள் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுக்க அமர்க்களப்பட்டது.அதுவும் பட்டாபிஷேகம் ஒரு நாளுக்கு முன்பாக வந்த நவராத்திரி கொண்டாட்டம் இன்னும் விமர்சியாக மக்கள் கொண்டாடி கொண்டு இருந்தார்கள்.
தளிக்குலத்தார் ஆலயம் கோட்டையின் உள்ளே இருப்பதால்,(வேலூர் கோட்டையில் உள்ளே ஜலகண்டேஸ்வரர் ஆலயம் போல)அரசினர் குடும்பம் வந்து கும்பிட தனி வழி இருந்தது..மேலும் அரச குடும்பம் வந்து செல்லும் கோவில் என்பதால் அலங்காரங்கள், பூ மற்றும் ஒளி வேலைப்பாடுகள் மிக பிரமாதமாக இருந்தது.
மேலும் ஆடல் நிகழ்ச்சிகளை கண்டு களிக்க ஆடல் மண்டபமும் மிக பெரிதாக இருந்தது. ஒவ்வொரு ஊரில் உள்ள தலைமை கோவில்களில் மேடை போல் அமைத்து இருப்பார்கள்.அங்கு எப்பொழுதும் சொற்பொழிவு ,ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும்.அதற்கு தான் அதை அமைப்பது.அந்த மேடை முன்பு மக்கள் அமர விசாலமான இடம் இருக்கும்.அதில் மக்கள் அமர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள்.அந்த மேடையில் தான் நவராத்திரிக்கான கொலு அமைத்து இருந்தார்கள்.
இளங்கோவை காணும் ஆவலுடன் ரோஹிணி சென்றாள்.ஆனால் அங்கே இளங்கோ இன்னும் வரவில்லை.அரச குடும்பத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அவளுக்கும் கிடைத்தது.சற்று நேரத்தில் ராஜேந்திர சோழன் தன் அரசி மற்றும் மகள் உட்பட அவர்களுக்கான பிரத்யேகமான வழியில் வந்து முதலில் இறைவனை வழிபட்டனர்.
ரோஹிணியை பார்த்த அருள்மொழி,"எங்கே உங்கள் பெற்றோர்கள் வரவில்லையா" என கேட்டாள்.
"இல்லை..
அவர்கள் வரவில்லை.நான் மட்டும் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க வந்தேன்.."
ராஜேந்திர சோழன் தன் மகளிடம்,அவளுக்கே உரிய நாட்டிய திறமையை அரங்கேற்ற சொன்னார்.
அங்கே நரேந்திரனும் வந்து இருந்ததால்,"இப்போ வேண்டாமே" என அவள் மறுதலிக்க,இளங்கோ ஆலயத்தின் உள்ளே நுழைந்தான்.மக்கள் அவனை வரவேற்கும் சத்தம் கேட்டது.
ரோஹிணி அதை கவனித்து,இளங்கோவை கவர மேடை ஏறி தன் நாட்டியத்தை ஆட தொடங்கினாள்.அவளுக்கு தெரிந்த அனைத்து கலைகளையும் செய்து காட்டினாள்.மக்கள் அனைவரும் மெய்மறந்து அவள் நாட்டியத்திற்கு கை தட்டினர்.
ஆட்டம் முடிந்த பிறகு ராஜேந்திர சோழனும் பாராட்ட,ரோஹிணி சற்று திமிருடன்,"நான் ஆடிய ஆட்டத்தை போல இதே மேடையில் ஆட இந்த சோழ நாட்டில் யாரும் இருக்கிறார்களா.."என கேட்டாள்.
ஆனால் எல்லோரும் அமைதியாக இருக்க ரோஹிணி சிரிப்புடன்,"ஆயகலைகள் அறுபத்து நான்கு,அதில் சிறந்த நாடு சோழ நாடு என்று கேள்விபட்டு இருக்கிறேன்.ஆனால் என்னோட இந்த ஒரு கலைக்கே சோழ நாட்டினால் பதில் சொல்ல முடியவில்லையே.ஆடல் அரசன் ஈசனின் தலைமை தலம் சிதம்பரம் இருக்கும் சோழ நாட்டில் என் நாட்டியத்திற்கு பதில் சொல்லும் ஒருவர் கூட இல்லையா..கேவலம்..மிக கேவலம்"என்று இகழ்ந்து பேச,
ராஜேந்திர சோழன் உடனே"அவசரப்பட வேண்டாம் இளவரசி,உன் நாட்டியத்திற்கு என் மகள் அருள்மொழி மறுமொழி அளிப்பாள்"என்று அவர் சொன்ன உடன் அருள்மொழி,இளங்கோவை பார்க்க,அவன் பார்வையால் அனுமதி கொடுத்தான்.
அடுத்த நொடியே அருள்மொழி மேடை ஏறினாள்.திருவெம்பாவையை மனதில் நினைத்து கொண்டாள்.ஏனெனில் திருவெம்பாவை இறைவனை காதலனாகவும்,தன்னை காதலியாகவும் மாணிக்கவாசகர் நினைத்து கொண்டு பாடியது.அந்த வரிகள் மனதில் ஓட,தகுந்த தாளங்கள் வாசிக்க அதற்கேற்ப நளின அசைவுகளை அருள்மொழி ஆட ,மக்களுக்கு ரெட்டிப்பு சந்தோசம்.ரோஹிணியின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் அதில் தான் என்ற திமிர் வெளிப்பட்டது.ஆனால் அருள்மொழியின் ஆட்டத்தில் ஒரு நளினம் மற்றும் உயிர்த்தன்மை வெளிப்பட்டது..காரணம் அவள் நாயகனாக மனதில் இளங்கோவை வைத்து கொண்டு ஆடியதால் அந்த காதலின் தன்மை நன்றாகவே தெரிந்தது.
எல்லோருக்கும் சந்தேகமே இன்றி அருள்மொழி ஆட்டம் தான் சிறந்தது என கூற தொடங்கினர்...அருள்மொழி கண்கள் அடிக்கடி இளங்கோ பக்கம் சென்றதை ரோகிணி கண்டு பிடித்து விட்டாள்."ஆகா..!எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடக்கிறதே..!என அவள் மனம் சஞ்சலபட்டது.
ராஜேந்திர சோழன் எழுந்து,"உனக்கு பதில்மொழி கிடைத்து இருக்கும் என நம்புகிறேன் இளவரசி..!ஆனால் உங்கள் நடன திறமையும் அபாரம்.ஈடு இணையில்லாதது."என்று அவளையும் உயர்த்தி பேசினார்.
ஆட்டம் முடிந்த உடன்,இளங்கோ கோவிலின் பின்புறம் சென்றதை பார்த்த ரோஹிணி,உடனே அவனை தன் வசப்படுத்த வேண்டும் என பின்தொடர்ந்து,"ம்ஹீம்...!என்று குரலை செருமி கொண்டு அழைக்க,இளங்கோ திரும்பினான்..
"என்ன தேவி..!இங்கே தனியா வந்து உள்ளீர்கள்..தங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா..இந்த கோவிலை சுற்றி பார்க்க வேண்டுமா.."என கேட்டான்..
"நான் தங்களிடம் சற்று பேச வேண்டுமே..கொஞ்சம் தனிமையில்.."என்று அவள் கூற..,
"சரி வாருங்கள்.."பக்கத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே அழைத்து சென்றான்.
"இப்பொழுது சொல்லுங்கள்..!என்ன விசயம்..உங்கள் தம்பி எங்கள் படையினரிடம் இருந்து தப்பி ஒடி விட்டான்.அவரை கண்டுபிடித்து தரவேண்டும்,அதுதானே தாங்கள் கேட்க வந்தது.."என கேட்டான்.
"இல்லை..உங்கள் வீரதீர சாகசத்தை என் கோட்டையில் இருந்து பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன் நான்.."
இளங்கோ அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான்.
உண்மையில் உங்கள் ஒருவர் வீரத்தினால் தான் நாங்கள் வீழ்ந்தோம்.நீங்கள் மட்டும் எங்கள் பக்கம் இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் தான் வென்று இருப்போம்..என் அழகில் மயங்கி
என் காலடியில் பள்ளி கொள்ள உலகத்தில் உள்ள ராஜகுமாரர்கள் ஒவ்வொருவரும் ஏங்கி தவிக்கின்றனர்.ஆனால் ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என நான் கற்பனை செய்து வைத்து இருந்தேனோ அப்படியே நிஜத்தில் தாங்கள் உள்ளீர்கள்.இந்த தங்கப்பாவையின் அங்கங்கள் யாவும் உங்களுக்கு சொந்தம்.அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னை மணம் முடித்து கொள்ள சம்மதம் என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதும்.ஆறுதல் பரிசாக இலங்கை மணிமுடியும் தங்களுக்கு கிடைக்கும்."
"அப்போ உங்கள் தம்பி..!இளங்கோ கேட்க,
"அவன் என் பேச்சை தட்டாமல் கேட்கும் பொம்மை போன்றவன்.. இலங்கை அரசின் சக்கரவர்த்தியின் மணிமுடி மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தின் பேரழகியே உங்களை நாடி வந்து உள்ளாள்.இதற்கு தேவை ஒரேயொரு வார்த்தை சம்மதம் தான்..."என ரோஹிணி கூற இளங்கோ கலகலவென சிரித்தான்..
"மன்னிக்கவும் தேவி..!நீங்கள் அழகில் சிறந்தவர் மறுப்பதற்கு இல்லை..ஆனால் உங்களை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை.
நான் இங்கே கொடும்பாளூர் என்ற ஊரின் சிற்றரசன் அவ்வளவே..!"என்று இளங்கோ புறப்பட..
"நில்லுங்கள் இளவரசே..."என ரோஹிணி கத்த,அந்த குரல் அவ்வழியே சென்ற அருள்மொழியை இவர்களை நோக்கி வரவழைத்தது.
"என்னுடைய காலடியில் ஒரு இடம் கிடைக்குமா என ஏங்கும் பல நாட்டு ராஜ குமாரர்கள் உள்ளனர்.ஆனால் என்னை முதன்முதலில் நிராகரித்தது நீங்கள் தான் இளவரசே.இலங்கை மணிமுடியை விட்டு தள்ளுங்கள்.ஆனால் இந்த பொன்னிற மேனியின் விரலை மட்டுமாவது தொட முடியுமா என ஏங்கி தவிக்கும் பல ஆண் மகன்களை நான் கண்டுள்ளேன்..ஆனால் நீங்கள் என்னை உதாசீனப்படுத்துவது எனக்கு மிகுந்த கோபத்தை தூண்டுகிறது.நீங்கள் என்னை நிராகரிக்க வேறொரு காரணம் உள்ளது.அதை தாங்கள் இங்கே சொல்லியே ஆக வேண்டும்."
இளங்கோ திரும்பி அவளை பார்த்து,"தேவி,நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்..அவளை தவிர வேறு யாரையும் என் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது..போதுமா.."
"யார் அந்த அருள்மொழியா..!என ரோஹிணி கேட்க,
இளங்கோ அதிர்ச்சி அடைந்தாலும்,"ஆமாம்"என்றான்
இந்த வார்த்தைகளை கேட்ட அருள்மொழியின் காதில் தேன் வந்து பாய்ந்தது.கால்கள் தரையில் படவில்லை.
ரோஹிணி வெறுப்புடன்,"அவள் தான் வேங்கி நாட்டு இளவரசனுடன் மணம் புரிய போகிறாளே..",
"இங்கே பாருங்கள் தேவி,உங்களை ஏற்று கொள்ளாதற்கான காரணத்தை கேட்டீர்கள்..நான் சொல்லி விட்டேன்..இதற்கு மேல் இந்த விசயத்தை பேசுவது முறை ஆகாது.."என விறுவிறுவென திரும்பி நடக்க,
ரோஹிணி கத்தினாள்."என்னை உதாசீனம் செய்ததற்காக நீ மிகவும் வருத்தபடுவாய்"என அவள் கத்தினாள்.
எதிரில் அவன் தோழன் வீரமல்லன் வந்தான்..
"என்ன நண்பா..!என்ன விசயம் சிங்கள இளவரசியின் முகம் சிவந்து காணப்படுகிறது.."வீரமல்லன் கேட்க,
'ஒன்றும் இல்லை நண்பா..காதலை அவள் சொன்னாள். நான் மறுதலித்தேன்.."
"அடப்பாவி..அவள் நடமாடும் பூலோக சொர்க்கமடா.. அவளையா வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாய்.. உலகத்திலேயே உன்னை போன்ற மூடன் யாரும் பார்க்க முடியாது."
"சரி அப்படியே இருக்கட்டும் போலாமா...."என்றான் இளங்கோ.
"நண்பா..நீ தான் யாரையும் காதலிக்கவில்லையே..அவளை ஏற்று கொள்வதில் உனக்கு என்ன தயக்கம்.இந்த வாய்ப்பு யாருக்குடா கிடைக்கும்.."
"இருக்கட்டும் வீரமல்லா..என் மனதில் வேறொரு நங்கை இருக்கிறார்."
"யாருடா..அந்த அதிர்ஷ்டசாலி..."வீரமல்லன் கேட்க
"அது தான் சொன்னேனே..!நங்கை என்று"
"அடேய் இளங்கோ..!பெண்கள் எல்லோரையுமே நங்கை என்று அழைப்பது தானே வழக்கம்..குறிப்பிட்டு எந்த பெண் என்று சொல்லடா என் உயிர் நண்பனே.."
"என் முட்டாள் நண்பனே..!அவள் பெயரே நங்கை தானடா..செவ்விதழ் தேன் மொழியாள்.செந்தாமரை, செந்தேன் மழை, சிற்றிடை உடையாள்.ரோஹிணி அழகில் கண்ணை கூசும் காட்டுத்தீ என்றால்,அவள் அழகில் அகல் விளக்கு போன்று கண்ணுக்கு இனிமையாக சுடர்விட்டு எரிபவள்.அவள் எனக்கு எட்டாக்கனி என்று தெரிந்தும் அவள் காண்பித்த ஒரு கடைக்கண் பார்வை போதும் என் ஜென்மம் முழுதும் வாழ "என்ற இளங்கோ சொன்னான்.
"நீ சொல்வது நம் அரசரின் புதல்வி அருள்மொழி நங்கையா.."என வீரமல்லன் கேட்டான்.
அப்பொழுது அருள்மொழியின் தோழி ஓடிவந்து இளங்கோவிடம்,"தேவி உங்களை அரண்மனை நந்தவனத்திற்கு அழைத்து வர சொன்னார்.உங்களுக்காக அவர் காத்து இருக்கிறார்."
வீரமல்லன் வாழ்த்துக்கள் சொல்ல,இளங்கோ மின்னல் போல அரண்மனை நந்தவனம் நோக்கி சென்றான்.
தொடரும்...
ஆஹா மிகவும் அருமையான பதிவு நண்பா. சோழர் காலம் பற்றிய உங்கள் உரைநடை மிகவும் அற்புதம் நண்பா. தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் அதுவும் ஆடல், பாடல் பற்றிய வரிகள் அருமை நண்பா. இந்த பதிவு சோழர் காலத்திற்கே எங்களை கொண்டு சென்று விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ஆவலாக. நல்ல பதிவிற்கு நன்றி.