Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: `இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி

[Image: _107496605_gettyimages-1151106873.jpg]படத்தின் காப்புரிமைARUN SANKAR
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எளிய மனிதர்கள் இரவு முழுக்க வெற்றுக் குடங்களோடு தெருவில் காத்துக் கிடக்கின்றனர்.
நாளுக்கு நாள் தனியார் தண்ணீர் டேங்குகளில் விற்கப்படும் தண்ணீரின் விலை கூடிக் கொண்டே போகிறது. வியாழக்கிழமை மாலை பெய்த மழை தொடரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் , நேற்று சுத்தமாக மழை பெய்யவில்லை. இருக்கின்ற தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியாத நிலையில் இந்த சிக்கல்களில் இருந்து சென்னை எப்படி மீண்டெழும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த சிக்கல்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் என்ன, இந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் காத்துக்கொள்ள அரசும் , மக்களும் செய்ய வேண்டிய முதன்மையான செயல்கள் என்னென்னெ போன்ற கேள்விகளோடு, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசியரும் நீரியல் நிபுணருமான ஜனகராஜன் அவர்களை சந்தித்தது பிபிசி தமிழ்.
அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல் பின்வருமாறு.
கடுமையான வறட்சியினை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். இது மழைப்பொழிவு இல்லாமல் ஏற்பட்ட வறட்சி அல்ல, மனிதர்களின் பொறுப்பின்மையாலும் அலட்சியத்தாலும் ஏற்பட்ட வறட்சி. சென்னை கடந்த நாற்பது ஐம்பது வருடங்களில் காணாத அளவு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டினை சந்தித்துக் கொண்டு வருகிறது

இதற்கு முதன்மையான காரணம், அரசின் கவனமின்மைதான். கடந்த இருபது வருடங்களாக சென்னைக்கான குடிநீர் திட்டங்களுக்காக ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகிறது. குறிப்பாக கடந்த எட்டு வருடங்களில் பார்க்கும்போது அமைச்சரின் அறிக்கை படி குடிதண்ணீருக்காக கிட்டத்தட்ட 38,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் சாமானிய மனிதர்களுக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால், இந்த பணமெல்லாம் எங்கு போனது, இவ்வளவு கோடிகள் செலவு செய்த பின்னரும் குடிப்பதற்கு நீர் இல்லையே என்பதுதான். இதனால் ஏதேனும் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா, அதனால் அடைந்துள்ள பயன்கள் என்ன என்று பல கேள்விகள் நம் முன்னே இருக்கிறது.
[Image: _107496904_ff788c12-fd9e-419e-9bf2-3439e7bd513b.jpg]
மக்களுக்கான குடிநீர் வாரியத்தினை நிலையாக கட்டமைக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையான சில ஆய்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். எந்த மாதிரி சிக்கல்கள் நம்மிடம் உள்ளன, நம்முடைய பூகோள அமைப்பு என்ன, மழையின் அளவு என்ன இப்படி பல விஷயங்களை அரசு கவனிக்க வேண்டும். ஆனால், அரசு தரப்பில் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. ஏரிகள் தானாக நிரம்பினால், ஏரிகள் நிரம்பி விட்டது என்பர். இதற்காக எந்த சிரத்தயினையும் எடுப்பதில்லை.
உதாரணத்திற்கு 6 வருடங்களுக்கு முன்பு , தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் சுமார் 400 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதில் 1 டி எம் சி தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் நிலை என்ன என்று தற்போது தெரியவில்லை.
தேர்வாய் கண்டிகை திட்டம் என்பது சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவையினை எதிர்கொள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான திட்டம் என்றும், ரூ 330 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்திற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியுள்ளதாகவும் 2013 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
[Image: _107496607_gettyimages-1150657031-1.jpg]படத்தின் காப்புரிமைARUN SANKAR
மேலும், 1000 கோடிக்கு மேல் செலவு செய்து கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்டமும் என்னவாயிற்று என்று தெரியவில்லை. அதில் வருடத்திற்கு 12 டி எம் சி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் எந்த வருடத்திலும் 1 டிஎம்சிக்கு மேல் நமக்கு வந்ததில்லை.
சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆந்திர பிரதேசத்தில் உள்ள கண்டலேறு நீர்த் தேக்கத்தில் இருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதி நீர் ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி பெறப்பட வேண்டும். ஆனால், 2018-19ம் ஆண்டில் 1.98 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்று அரசும் குறிப்பிட்டு உள்ளது.
இது போக வீராணத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடல் நீரினை குடிநீராக்கும் திட்டத்திற்காக இரண்டு ஆலைகள் நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ளன. இவைதான் சென்னைக்கான நீராதாரங்கள். இதை நம்பி நாம் வாழ முடியுமா, இவை நிரந்தரமாக நம்முடைய சிக்கல்களை தீர்த்து விடுமா என்றால் நிச்சயமாக இல்லை. ஏனெனில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே உள்ளது. சென்னையில் மட்டுமே எட்டு கோடி மக்கள் வாழ்கின்றனர். சென்னை மெட்ரோபாலிட்டன் பகுதிகளையும் சேர்த்தால் ஒரு கோடிக்கும் மேல். ஒரு கோடிக்கும் மேல் உள்ள இந்த மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்க வேண்டும் எனில் நிலையான, வற்றாத நீராதாரங்கள் தேவை.
நமக்கு நன்கு மழை பெய்யக் கூடிய பருவம் வட கிழக்கு பருவமழை. அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை உள்ள மூன்று மாதம். அந்த மூன்று மாதத்தில் புயலோடு கூடிய மழைதான் நமக்கு கிடைக்கும். புயல் வரும், உடனே ஒரு மழை வரும். அப்படிதான் நமக்கு மழை கிடைக்கிறது என்பது , நமக்கு தெரிந்த செய்திதான். குறைந்த நாட்களில் நமக்கு பெய்யும் மழைதான், அதனை எப்படி சேகரித்து வைப்பது என்பதனை நாம் சிந்திப்பதே இல்லை.
மாறாக மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது நமது கவனமெல்லாம் தண்ணீரினை வெளியேற்றுவதில் தான் இருக்கும். வீட்டில் தண்ணீர் நின்றால் சாலையில் விட வேண்டும், சாலையில் தண்ணீர் நின்றால் கூவத்தில் விட வேண்டும் என்ற மனநிலைதான் மக்களிடமும் உள்ளது, அரசிடமும் உள்ளது. அடுத்த ஒரு நான்கு மாதத்தில் டேங்கர் லாரிகள் நகரத்திற்குள் வர ஆரம்பித்து விடும். தண்ணீர் இல்லை தண்ணீர் இல்லை என்று புலம்புவது நமக்கு வழக்கமான செயலாகி விட்டது. இது மிகத் தவறு.
[Image: _107496610_gettyimages-678569692-1.jpg]படத்தின் காப்புரிமைMANJUNATH KIRANImage caption"தண்ணீரினை சேமிக்க ஏதுவான மிக அருமையான பூகோள அமைப்பு உடையது சென்னை மாநகரம்"
மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரினை நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முன்னேற்பாடு திட்டங்கள் அரசிடம் இருக்க வேண்டும். இந்த வருடம் செயற்கை மழையினை உருவாக்க இருக்கிறோம் என்று ஒரு அமைச்சர் கூறியதாக படித்தேன். செயற்கை மழையினை தோற்றுவிப்பதில் உள்ள தொழில்நுட்பங்களுக்குள் எல்லாம் போவதற்கு முன்பு அடிப்படையான ஒரு கேள்வியினை முன்வைக்கிறேன். செயற்கை முறையில் மேகங்களை தூண்டிவிட்டு மழை பொழிய வைத்து விட்டீர்கள். 200 மிமீ மழை பெய்கின்றது, அதனை எங்கே சேமிப்பீர்கள்,அதனை வெள்ளமாகத்தான் பார்ப்பீர்கள். இந்த நான்கு மாதங்களை விட்டு விடுவோம், அக்டோபரில் நல்ல மழை பெய்ய இருக்கின்றது ,அந்த நீரினை எல்லாம் எங்கு சேமிக்க இருக்கின்றோம். இந்த கேள்விகள் எதற்கும் அரசிடம் பதில் இல்லை.
இந்த நிலையில் எப்படி தண்ணீர் கஷ்டம் தீரும் ? தண்ணீரினை சேமிக்க ஏதுவான மிக அருமையான பூகோள அமைப்பு உடையது சென்னை மாநகரம்.
சென்னையினை சுற்றி இருக்கின்ற திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 3600 ஏரிகள் இருக்கின்றன. இதில் அரக்கோணம் தாலூக்காவினையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 4100 ஏரிகள் உள்ளன. அந்த 4100 ஏரிகளை முறையாக பராமரித்தால் மழை பெய்யும் பொழுது சுமார் 170 டிஎம்சி நீரினை சேமித்து வைக்க இயலும்.
அப்படி ஏரிகளில் சேமித்தால் மூன்று வருடம் மழை பெய்யாவிட்டால் கூட நம்மால் சமாளித்து விட இயலும். நிலத்தடி நீர் வளமும் பெருகும்.
இந்த வருடம் வறட்சி என்கின்றனர், கடுமையான வறட்சி என்கின்றனர். ஆனால், இந்த வருடம் பெய்த மழையின் அளவு 800மிமீ. பெங்களூரின் சராசரி மழை அளவே 860 மிமீ தான், ஜெய்ப்பூரில் சராசரி மழை அளவே 550 மிமீ தான். 800 மிமீ மழை பெய்யும் இந்த நகரம் வறட்சியான நகரம் எனில், நாம் எங்கேயயோ தவறு செய்து கொண்டு இருக்கின்றோம் என்றுதானே பொருள்.
[Image: p07dnzj7.jpg]


தண்ணீர் பிரச்சனை: சென்னையின் அவல நிலையை விவரிக்கும் காணொளி
அதனால்தான் அறிவியல் முறைமைகளை அடிப்படையாகக் கொண்ட மழை அளவு கணக்கியல் நெறிமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன். மழை எந்த அளவு பெய்தது, எத்தனை டிஎம்சி தண்ணீர் கிடைக்கப்பெற்றது போன்ற கணக்குகள் நம்மிடம் வேண்டும். மொத்தமாக கடலுக்குள் போய்விட்டது என்று கூறுங்கள். அனைத்தும் ஆவியாகி விட்டது என்று கூறுங்கள், அல்லது அனைத்தும் பூமிக்குள் போய் விட்டது என்று கூறுங்கள், ஏதாவது ஒரு கணக்கு கொடுங்கள் என்று கூறுகின்றேன்.
மெட்ரோ நீர் 750 - 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு அளிக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அனைத்தும் மக்களுக்கு போய் சேருகின்றதா. விநியோகத்தின் போது சுமார் 20 சதவீதம் தண்ணீர் வீணாகிறது.
வறட்சி வந்து விட்டால், வறட்சி நிவாரணம் கொடுத்து விடுவது, வெள்ளம் வந்து விட்டால் வெள்ள நிவாரணம் கொடுத்து விடுவது என்ற நடைமுறையால் தீர்வுகள் கிடைக்காது. இந்த வருடம் முறையான அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஏரிகளை பராமரித்தால் இனியாவது தண்ணீரினை சேமிக்கலாம்.
I am warm திட்டத்தில் கிட்டத்தட்ட 7000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஏரி பராமரிப்பு காரணத்திற்கு, ஆனால், நடைபெறவில்லை.ஏரி பராமரிப்பு காண்ட்ராக்டர்களிடம் கொடுக்கப்படுகின்றது. அவர்கள், மேற்பரப்பில் உள்ள மண்ணை எடுத்து கரையில் போட்டு விட்டு, எங்கெல்லாம் நல்ல மண் இருக்கின்றதோ அதனை எடுத்து விற்றுவிட்டு, பள்ளம் பள்ளமாக உருவாக்கிவிட்டு ஏரிகள் தூர்வாரப்பட்டது என்று கூறிச் செல்வதுதான் நடைபெறுகின்றது.
இதே நிலை நீடித்தால், 800 மிமீ மழை பெய்த பின்னும் வறட்சி நிலவுவது போல், 900, 1000 மிமீ என மழையின் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றாலும் வறட்சி தான் நிலவும் என்கிறார் இவர்.
[Image: _107496612_gettyimages-968336978.jpg]படத்தின் காப்புரிமைARUN SANKAR
கழிவு நீரினை குடிநீராக்குவது எந்த அளவு சாத்தியம்?
வீட்டில் இருந்து உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீரினை, மீண்டும் குடிநீராக மாற்ற இயலும். பல வெளிநாடுகளில் இந்த மறு சுழற்சி முறை நடைமுறையில் உள்ளது. அதற்கான தொழில் நுட்பங்கள் நிச்சயம் உள்ளது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆகும் பொருள் செலவினை விட , கழிவு நீரினை குடிநீராக்கும் தொழில்நுட்பத்திற்கு செலவு குறைவுதான். மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், கடல் நீரினை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக கடலில் சூழலியல் மிகவும் பாதிப்படைகின்றது. இந்த தொழில்நுட்பத்தில் அதிக உப்பு கலந்த நீரினை கடலில் விடுகின்றோம்; இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும், 2 மீட்டர் தூரம் வரையிலும் கடல் இறந்து போய்விடும் .
கழிவு நீரினை மறு சுழற்சி செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் கடல் சூழலையும் பாதுகாக்கலாம், செலவினையும் குறைக்கலாம். மேலும் , கழிவு நீரினை சுத்திகரிக்கும் போது கிடைக்கின்ற கசடுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கலாம், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இதனை நிரந்தரமாக செய்கின்றனர். சிங்கப்பூரில், மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் செய்கின்றனர். 60 சதவீதம் நீரினை கழிவு நீர் மறுசுழற்சி வழியாக பெற்றுக் கொள்ள இயலும் என பதிலளித்தார்.
இன்று நாம் சந்தித்துள்ள மோசமான தண்ணீர் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான தீர்வினை பெறுவதில் அரசின் செயல்பாடுகள் மட்டும் போதாது, தனிமனிதர்களின் கைகளிலும் அந்தப் பொறுப்பு உள்ளது என்று குறிப்பிடும் ஜனகராஜன், இவ்வளவு பெரிய பிரச்சனையினை நாம் பார்த்து விட்டோம், இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு இனியாவது தண்ணீர் பயன்பாட்டில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.நமக்கு கிடைக்கின்ற நீரின் அளவு என்ன, எங்கிருந்து கிடைக்கின்றது, எவ்வளவு தண்ணீரினை நாம் பயன்படுத்துகின்றோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
குளிப்பதற்கு 20 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறோம் என்றால் அதனை 10 லிட்டர் தண்ணீராக மாற்ற முடியுமா என முயற்சிக்க வேண்டும். ஒருவர் 100லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறார் என்றால் அதனை 50லி ஆக குறைக்க என்ன செய்வது என சிந்தித்து செயல்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு, தண்ணீரின் அவசியத்தினையும், தண்ணீர் பயன்பாட்டில் சிக்கனத்தினைக் கடைபிடிப்பது குறித்தும் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், வீட்டில் உபயோகப்படுத்தும் தண்ணீரினை வீட்டிற்குள்ளேயே மறு சுழற்சி செய்யும் முறைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தனி மனிதர்கள் என அனைவரும் இணைந்து விழிப்புணர்வோடு செயல்பட்டால் மட்டுமே இந்த சிக்கல்களில் இருந்து மீள முடியும்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-06-2019, 09:35 AM



Users browsing this thread: 87 Guest(s)