24-04-2024, 11:27 PM
அறுபதிலும் ஆசை வரும்
【02】
【02】
நானும் என் மனைவியும் வார விடுமுறை நாட்களில் பார்க்கில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் செலவிடுவது வழக்கம்.
அவள் இறந்த பிறகு நான் தனியாக சில வாரங்கள் அதே நேரங்களில் போய் உட்காருவேன். என் மன பிரம்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் தனியாக இருந்தால் மக்கள் கெட்டவன் போல பார்கிறார்கள். அதனால் நான் இப்போது வாக்கிங் செல்லும் நேரம் தவிர வேறு நேரங்களில் பார்க் போவதில்லை.
இப்படித்தான் நானும் என் மனைவியும் சேர்ந்து செய்த காரியங்கள் நிறைய பிறர் கண்ணுக்கு நான் செய்யும் போது தவறாக தெரிகிறது..
இரண்டு நாட்களுக்கு பிறகு...
என்னை சுற்றியிருக்கும் அனைவரும் என்னை பிரிந்து செல்லும் காலம் என நினைகிறேன். கல்லூரி மாணவர்கள் இருக்கும் அந்த குடும்பமும் வீட்டை அடுத்த மாதம் காலி செய்கிறார்கள். நாங்கள் இந்த வீட்டை கட்டி குடியேறிய 2 வாரங்களில் அவர்களும் குடிவந்தார்கள்.
சில நாட்களுக்கு பிறகு, நான் என் உறவினர் ஒருவர் விசேஷம் அட்டென்ட் செய்துவிட்டு சென்னைக்கு வந்தால், எனக்கு சமையல் செய்து தரும் வத்சலாவுக்கு விபத்து. கால் முறிந்து விட்டது. தற்காலிமாக வேறு ஆள் ரெடி பண்ணி தருவதாக சொன்னார்கள். ஒரு மாத சம்பளம் அவளது மகனை வரவைத்து கொடுத்து விட்டேன். எதாவது தேவை என்றால் கேட்க சொன்னேன்.
தனிமை என்னை வதைக்கிறது. என் கோபம் இப்போது எல்லை மீறி போகிறது. இன்று காலை காய்கறி வாங்க சென்ற இடத்தில் அவசரம் என்ற பெயரில் காய்கறி கூடையை யால் இடித்த பெண்ணை திட்டினேன். இந்த காலத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் மேல் தவறு இருந்தாலும் மன்னிப்பு கேட்பது கிடையாது.
வழக்கிற்கும் மாறாக குற்றம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பது போலவே நடந்து கொள்கிறேன். மொத்தமாக சொன்னால் சின்ன சிடு மூஞ்சியாக இருந்த நான் முழுநேர சிடு மூஞ்சியாக மாறிக் கொண்டிருக்கிறேன்.
நான் ஊரிலிருந்து வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் சமையலுக்கு புது ஆள் வரவில்லை. நான் ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி சமையல் செய்து சாப்பிட்டேன்.
2 மணியளவில் புதிதாக குடி வந்திருக்கும் வெற்றி தன் மகளை கையில் தூக்கிக் கொண்டு வந்தான். எனக்கு அவன் எதுக்கு வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ளும் முன்னரே எரிச்சல் தான் வந்தது. சொல்லுப்பா என்று கேட்க, வீடு காலி ஆகுவது பற்றியும் அட்வான்ஸ் விவரங்கள் பற்றி கேட்டான். அவன் கோலீக் வீடு தேடுவதாக சொன்னான். அவனிடம் பேசிவிட்டு தகவல் சொல்கிறேன் என்றான், நானும் சரி என்று சொல்லி விட்டேன்.
இன்னொரு விஷயம் என்று சொல்லி, ஒரு அக்கா தேடி வந்தாங்க. இதுக்கு முன்ன சமையல் செய்த வத்சலா அக்கா அனுப்பி விட்டாங்கன்னு சொன்னாங்க என்றான்.
அரை மணி நேரத்தில் காலிங் பெல் அடிக்க, நான் காமிராவில் பார்க்கும் போது இருபதுகளின் முடிவில் அல்லது முப்பதுகளின் தொடக்கத்தில் வயதிருக்கும் ஒரு நின்று கொண்டிருந்தார்.
ஏதோ நன்கொடை வசூல் என நினைத்து எரிச்சலுடன் எழுந்து சென்றேன். நானும் என் மனைவியும் குறைந்தது 5% எங்கள் வருமானத்தில் நன்கொடை கொடுக்கும் வழக்கம் உள்ளவர்கள். ஆனால் வீடு வீடாக கையில் பை வைத்துக் கொண்டு அதற்குள் லாமினேட் செய்த அட்டை வைத்திருக்கும் நபர்கள் மீது நம்பிக்கை இல்லை.
என்னம்மா என்று கேட்க, என்னோட பெயர் பாலா, வத்சலா அக்கா அனுப்புனாங்க, நீங்க சமைக்கவும் வீடு பராமரிக்க ஆளு வேணும்னு கெட்டதா சொன்னாங்க என்றாள்.
உள்ளே வாம்மா என்று சொல்லி, பாலாவிடம் எல்லா விவரமும் தெரியுமா என்று கேட்டேன். ஆமா என்று சொன்னாள்.
எப்போ ஸ்டார்ட் பண்றீங்க என்று கேட்க, இப்போ பாத்திரம் கிளீன் பண்றேன் ஈவினிங்ல இருந்து சமையல் பண்றேன் என்றாள். நானும் சரியென்று சொல்ல, கிச்சன் என்று கேட்டு அங்கே சென்றாள். நான் அவளுடைய விவரம் எதுவும் கேட்கவில்லை. என் மனைவி வத்சலாவை முழுமையாக நம்பினாள். வத்சலா வேலைக்கு ஆள் அனுப்பினால் தீர விசாரித்து அனுப்பியிருப்பாள் என்ற நம்பிக்கை.
பாத்திரம் கழுவி வைத்து விட்டு வீட்டை கூட்டிப் பெருக்கினாள். சார் காலையில மாப்பு போடுறேன் என்றாள். சரிம்மா என்று சொல்ல கிளம்பி விட்டாள். சம்பளம் பற்றி எதுவும் அவள் கேட்கவில்லை.
மாலையில் வெற்றி அவன் நண்பன் மறுநாள் வீடு வந்து பார்க்க வரலாமா என்று கேட்டதாக சொன்னான். இப்போது தான் குழந்தை பிறந்திருக்கிறது என்றும் மனைவி வர 2 மாதம் வரை ஆகும் உங்களுக்கு ஓகேவா என்றான். நீ சொல்லு, உனக்கு ஓகே வா என்று கேட்க சிரித்தான். உனக்கு ஓகேன்னா பிரஸீட் பண்ணு என சொல்லிவிட்டேன்.
இரவு சாப்பாடு செய்ய வரும்போது கையில் ஒரு குழந்தையுடன் வந்தாள். உன்னோட குழந்தையா என்று கேட்டேன் "ஆமா" என்றாள். மூன்று வயது பய்யன், பெயர் பிரவீன். ஆளு படு சுட்டி. ரொம்ப நாளைக்கு பிறகு எனக்கு நேரம் போனது தெரியவில்லை. அது என்ன இது என்ன என கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தான்.
எனக்கு சப்பாத்தி செய்யவா என்று கேட்டு எத்தனை வேண்டும் என்றாள். நான் வழக்கமாக சாப்பிடுவதை விட ஒன்று அதிகமாக செய்ய சொன்னேன். ஒரு வேளை குழந்தை சாப்பிட ஆசைப் பட்டால்?
அவள் சாப்பாடு செய்து விட்டு கிளம்ப . குழந்தைக்கு கொடுக்க சொல்லி இரண்டு சப்பாத்தி எடுத்துக் கொடுத்தேன், அதை அப்படியே அவள் கொண்டு வந்த கூடையில் வைக்க, எதாவது பாத்திரம் ஒன்றில் எடுத்துட்டு போக சொன்னேன். சப்பாத்திக் குருமா நன்றாகவே இருந்தது.
சிடுசிடுவென மாலை வரை இருந்த எனக்கு, குழந்தையுடன் இரவு விளையாடியது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...