06-03-2024, 04:49 AM
【01】
நம்ம ஊருக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு, இதென்ன நீங்க இப்ப இருக்குற டவுனா, உங்க இஷ்டதுக்கு எல்லாம் இங்க பண்ண முடியாதும்மா..
இப்போ என்ன சொல்ல வர்றீங்க ஐயா? என தன் கண்களில் கண்ணீர் மல்க வளனின் தாய் வள்ளி அந்த ஊர் தலைவரிடம் கேட்டாள்.
அட என்னம்மா நீ, நம்ம ஊரு கட்டுபாடு உனக்கு தெரியாத விஷயமா என்ன?
எனக்கு அது தெரியும் ஐயா. ஆனா, அவன் சிட்டியில் வளர்ந்தவன், அவனுக்கு இதெல்லாம் தெரியாது.
ஊருக்கு வரமாட்டேன்னு சொன்னவனை நாங்க தான் வலுக்கட்டாயமாக கூட்டிட்டு வந்தோம் என்றார் வளனின் தந்தையான வாசு என்னும் வாசுதேவன்.
அது சரிங்க, யாரு தப்பு பண்ணினாலும் தப்பு தப்பு தான். அதுவும் ஊர் திருவிழா நடக்கும் போது கட்டுப்பாடு வேற இருக்கு.
நேற்றே எல்லாம் முடிஞ்சிட்டடே என சொல்ல வந்த வாசுவை தடுத்தாள் வள்ளி.
ஐயா மன்னிச்சிருங்க என வள்ளி மற்றும் வாசு இருவரும் கெஞ்ச, அவர்களது மகன் வளன் அமைதியாக நின்று, இதிலிருந்து எப்படி தப்பிப்பது என யோசிக்க ஆரம்பித்தான்.
அப்படியெல்லாம் விட முடியாது. நாளைக்கு ஊருக்கு எதாவது ஆனா என்ன பண்றது?
ஏப்பா ஏய், நல்ல நேரம் எப்போ ஆரம்பிக்கிறது என அருகில் இருந்த நபரிடம் கேட்க.
இன்னும் அரை மணி நேரத்துல நல்ல நேரம் ஆரம்பிக்கும் ஐயா..
ஏம்மா வள்ளி, உன் பயகிட்ட பேசி இன்னும் அரை மணி நேரத்துல தாலி கட்டுற வழிய பாரு..
அவங்க ரெண்டு பேரும் தப்பு எதுவும் நடக்கலைன்னு சொல்றாங்களே ஐயா.
புரிஞ்சுக்க வள்ளி, அவங்க ரெண்டு பேருக்காக ஊருல உள்ள எல்லா உசுருரையும் பணயம் வைக்க முடியாது. போ, போய் அவன தயார் பண்ணு.
சில மணி நேரங்களுக்கு முன்னால்...
சுமார் 10 வருடங்களுக்கு பிறகு அம்மா அப்பாவின் வற்புறுத்தலால் தன் அம்மா பிறந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழா அட்டென்ட் செய்ய ஊருக்கு வந்தான் வளன். அவனது தாத்தா உயிர் போகும் நிலையில் இருப்பதால் பார்க்க ஆசைப்பட்டார். மேலும் விரைவில் லண்டன் செல்லவிருக்கும் நிலையில் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைன்னு சொல்லிட்ட, ஊருக்கு எங்க கூட ஒரு நேரம் வா என அவனை வற்புறுத்த அவனும் வேறு வழியில்லாமல் வந்தான்.
தாயாருக்கு தன் மகனை ஊருக்கு கூப்பிட்டுக் கொண்டு வந்து வேண்டிக் கொண்டால் அவன் கல்யாணத்துக்கு சம்மதிப்பான என்ற நம்பிக்கை.
நேற்று இரவே திருவிழா முடிந்தவுடன் காலையில் கிளம்ப வேண்டும் என வளன் சொன்னான். மதிய உணவு முடித்த பிறகு கிளம்பலாம் என சொல்ல விருப்பம் இல்லாமல் சரி என்றான்.
காலை 9:30 மணி அளவில் பவர் கட் ஆக, வீட்டுக்கு வெளியில் போகலாம் என எழுந்தான் வளன்.
கோவிலுக்கு பின்புறம் தங்கள் வீட்டுக்கும் கோவிலுக்கும் நடுவே இருந்த வீட்டில் குளித்து முடித்து சுடிதார் டாப் மட்டும் அணிந்தபடி வீட்டுக்குள் நுழைய முயன்ற ஒரு பெண்ணின் (வித்யா) அலறல் கேட்க, உதவிக்காக ஓடினான். 10 வினாடிகளில் அந்த பெண்ணும் வளனும் கோவில் திருவிழா பொருட்கள் இருந்த அறையில் இருந்தனர். அவள் பாம்பு என சொல்ல அவன் கையில் ஒரு கம்பை எடுத்தான்.
பெண்ணின் அலறல் கேட்டு ஓடிவந்த சிலர் அங்கே வர, வித்யாவின் ஆடையை பார்த்து நிலைமையை தவறாக புரிந்து கொள்ள, வளன் மற்றும் வித்யா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், ஊருக்கு எதுவும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கல்யாணம் செய்து வைப்பது என தீர்மானம் செய்து விட்டார்கள்.
வித்யாவுக்கு பக்கத்து வீட்டு பாட்டி பேரன் சென்னையில் இருக்கிறான், அவன் பெயர் வளன் என்று தெரியும். வளனுக்கு அவள் பெயர் யார் என்ன என எதுவும் தெரியாது
இப்பொழுது...
ஊர் தலைவரிடம் பேசுவதால் எதுவும் மாறாது என புரிந்து கொண்ட வாசு குடும்பம் தங்கள் வீட்டுக்குள் வந்தார்கள்.
இதுக்குத்தான் இந்த பட்டிக் காட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னேன் என அனலாய் கொதிக்க ஆரம்பித்தான் வளன்.
இங்க நடக்குற விசயத்தை பார்த்தா நீங்க எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்குற மாதிரி இருக்கு என கடுமையாக சாடினான்.
என்ன மாதிரி ஊரு இது, அவ டிரஸ் கம்மியா போட்டுருந்தவுடனே தப்பு நடந்துருக்கும்னு முடிவு பண்ணிடுவாங்களா என அந்த வீடே அதிரும் அளவுக்கு திரும்ப திரும்ப கத்தினான்.
அவன் அம்மா வள்ளி பட்டு வேட்டி சட்டை எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் கொடுக்க, வளன் தன் கையில் கிடைத்த வேறு எல்லா பொருட்களையும் நாலாபுறமும் வீட்டுக்குள் வீசி எறிந்தான்.
பேசாம கல்யாணம் பண்ணிக்க, எங்களை அசிங்கப் படுத்த வேண்டாம் என்றாள் வள்ளி.
நான் கல்யாணம் பண்ணுனா, நான் தப்பு பண்ணிட்டேன்னு ஒத்துக்கிட்ட மாதிரி ஆயிடும்.
இங்க இப்ப நாம கல்யாணம் பண்ணாம நாம எங்கேயும் போக முடியாது, வேற பிரச்சனைகள் எதுவும் ஆகாம கல்யாணம் பண்றது நல்லது என்றார் வாசு.
அப்பா பேச்சை சமீப காலங்களில் வளன் கேட்பதில்லை. அவர்மேல் அப்படி ஒரு வெறுப்பு. கல்லூரியில் பேராசிரியர், நளன் பள்ளி படிக்கும் காலங்களில் வந்த அவர் படிக்க சொல்லி டார்ச்சர் செய்ததால் வந்த வெறுப்பு.
நிலைமையை புரிந்து கொண்ட வளன் வீட்டுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். தப்பித்து ஓட வழி இல்லை. வேறு வழியில்லாமல் அந்த பட்டு ஆடைகளை அணிந்தான்.
நல்லா பிளான் பண்ணி நீ நினைச்ச விஷயத்தை சாதிச்சுட்ட என தன் அம்மாவை பார்த்து சொன்னான்..
டேய் ஏண்டா இப்படி பேசுற? உன்னை கல்யாண கோலத்துல பார்க்க ஆசைப்பட்டு அடிக்கடி கல்யாணம் பத்தி பேசினேன். அதுக்காக இப்படி நடக்கும்னு நான் நினைக்கல..
வித்யா பக்கத்து வீட்டுப் பெண், நல்ல துடிப்பான பெண் என்பதை தன் தாயார் அவ்வப்போது சொல்வதன் மூலம் வள்ளி நன்கு அறிவாள். அவள் மனதுக்குள் ஒரு வழியாக தன் மகனுக்கு கல்யாணம் நடக்கிறதே என்ற சந்தோஷம். பெண் வேறு நன்கு தெரிந்தவள்.
நல்ல நேரம் ஆரம்பிக்க, ஊர் தலைவர் அனுப்பிய ஆள் கூப்பிட வளன் குடும்பத்தார் வெளியே வந்தார்கள். சில நிமிடங்களில் வித்யா தயாராகி ஒரு எளிய பட்டு சேலை உடுத்தி வந்தாள். இருவருக்கும் மாலை அணிவித்தனர்.
அவள் கண்களில் சுத்தமாக உயிர் இல்லை. அவளுக்கும் வேறு வழியில்லை. கல்யாணம் பற்றி எத்தனை கனவுகள் எல்லாம் ஒரு நிமிடத்தில் தவிடு பொடியான ஒரு எண்ணம் தான் அவள் வெறுமைக்கு காரணம்.
நடந்த விஷயங்களை பல நேரம் சொல்லி அழுது புலம்பி விட்டாள். அவளது அப்பாவை தவிர வேறு யாரும் நம்ப தயாராக இல்லை. ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டாய திருமணம் அங்கே அரங்கேற போகிறது.
எப்படியாவது இந்த ஊரை விட்டு போகணும் என்ற எண்ணம் மட்டுமே இருந்த வளன் தன் எதிரில் நின்ற பெண்ணை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை.
ஊர் தலைவர் எடுத்துக் கொடுத்த தாலியை வித்யா கழுத்தில் கட்டினான் வளன்.
தாலி கட்டி முடித்த பிறகும் "எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்பதை போல வளனும் வித்யாவும் நின்று கொண்டிருந்தார்கள்.
வித்யா தன் அருகே நிற்கும் வளனை பார்க்க கொஞ்சம் வெட்கபபட்டாள். நடக்கும் விஷயங்களில் அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரித்தான அந்த வெட்கம் அவளுக்கு. எப்போது இந்த பட்டிக்காட்டை கிளம்புவோம் என்ற எண்ணம் வளனுக்கு...
விதி வலியது என்பதைப் போல இரண்டு மணி நேரத்தில் கடந்த பத்து வருடங்களில் ஒரு முறை கூட பார்த்திராத இருவர் அங்கே கணவன் மனைவி ஆகிவிட்டார்கள்.
அம்மா இல்லாமல் வளர்ந்த தன் மகளுக்கு இப்படி கல்யாணம் செய்து வைக்கும் நிலமை வந்த கவலை வித்யாவின் தந்தை சிவமணிக்கு. அவரும் பாவம்தான், வேறு வழியில்லை என்ன செய்ய?
மருமகன் குடும்பம் நல்ல குடும்பம். அவனது பாட்டி தாத்தா பெருமையாக சொல்வார்கள். ஆனால் வளன் பற்றி அவர்கள் பேசும்போது அவ்வப்போது சொன்னது தவிர அவருக்கும் பெரிதாக தெரியாது. கட்டாய கல்யாணத்தால் மிகுந்த வேதனையில் இருந்தார்.
வாசு, வள்ளி அண்ட் வளனை கூப்பிட்ட ஊர்த் தலைவர், கட்டாய கல்யாணம் என்று அந்த பெண்ணை எதாவது கொடுமை செய்தால் ஊர் மக்கள் பார்த்தக்கொண்டு இருக்க மாட்டார்கள் என் எச்சரிக்கை செய்தார். இந்த புள்ளைங்களை மன்னிச்சு, எங்களை நீ தான் காப்பத்தணும் தாயே என வேண்டிக் கொண்டவர். எல்லாரும் சாமிய கும்பிட்டுவிட்டு கிளம்புங்க என்றார்.
காலையிலேயே நாம கிளம்பியிருந்தா, இதெல்லாம் நடந்திருக்குமா என மீண்டும் தன் கோபத்தை தாயிடம் காட்டினான் வளன். தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தவன், என்ன நினைத்தான் என தெரியவில்லை மனம் மாறி தெப்பக்குளம் நோக்கி சென்றான்.
வாசு சார் என்றார் வித்யாவின் அப்பா சிவமணி.
அவன விடுங்க, கொஞ்சம் முன் கோபம், நல்லவன் தான் என ஆறுதல் வார்த்தை வாசு சொல்ல..
அது இல்லை என் மகள்..
அய்யோ, அண்ணா, நான் என் மகள் மாதிரி பார்த்துக் பேன் என்றாள் வள்ளி.
அது தெரியும் வள்ளி. என்ன இருந்தாலும் தாய் இல்லாமல் வளர்ந்த பொண்ணு, படிக்குறதுனால எந்த வேலையும் செய்ய சொன்னது இல்லை. கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்றார் கண்களில் கண்ணீருடன்..
அய்யோ அண்ணா. அவன் மட்டும் கல்யாணத்துக்கு சரி சொன்னா நான் முதலில் உங்க பொண்ணை தான் கேட்டிருப்பேன், ஏங்க உங்க கிட்டேயும் சொன்னேனே என கணவனைப் பார்த்தாள். வள்ளியின் அம்மா அவளது அப்பா இறப்பதற்கு முன்பு வித்யாவை வளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டாள்.
அங்கே கூடியிருந்த ஊர்மக்கள் கிளம்ப, நாம வீட்டுக்கு போகலாமா என பாட்டி கேட்க, வாசு மற்றும் சிவமணி தலையை அசைக்க, வீட்டுக்கு கிளம்பினார்கள். வளன் & வித்யா இதுவரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
வளன் மனம் முழுக்க இவளை எப்படி லண்டன் போகும் முன்னர் விவகாரத்து செய்வது, அது முடியுமா என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
வித்யாவுக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது. தன் வாழ்க்கை ஒரே நொடியில் மாறி விட்டதை எண்ணி உடைந்து போனாள். பட்டாம்பூச்சியாய் சிறகடித்தவளின் சிறகுகளோ இன்று வெட்டப்பட்டு சிறகொடிந்த பறவையாக அந்த வீட்டிற்குள் வளனுடன் அடியெடுத்து வைப்பதை போல உணர்ந்தாள்.
மணமக்களை வேடிக்கை பார்த்த சிலர், ரெண்டு பேருக்கும் ரொம்ப நல்ல பொருத்தம், சுத்தி போட சொல்லி வள்ளியிடம் சொன்னார்கள்.
வீட்டுக்குள் வந்தவுடன் வளன் பூஜை அறைக்கு கூட்டிட்டு போ என பாட்டி சொல்ல, வித்யா பூஜை அறை நோக்கி நடந்தாள். அவளுக்கு அந்த வீட்டில் எல்லாமே தெரியும். வளன் அவள் பின்னால் அவள் பின்புறம் மற்றும் முதுகைப் பார்த்தபடி நடந்து சென்று பூஜை அறையில் நின்றான்.
வித்யா விளக்கேற்றி முடித்து, ஹாலுக்கு வந்து மாலைகளை கழட்டி முடிக்க..
அம்மா, நான் கிளம்புறேன்.
எங்கேடா போற?
சென்னைக்கு..
எதுக்கு இந்த அவசரம்?
புரிஞ்சுதான் பேசுறியாம்மா, உனக்கே தெரியும் நான் எவ்வளவு முக்கியமான வேலையை விட்டுட்டு நீ சொன்ன ஒரே காரணத்துக்காக கடைசி நாள் திருவிழா பார்க்க வந்தேன்னு.
ஒரு நிமிஷம் என்று சொல்லி பாட்டி, வள்ளி, வாசு அண்ட் சிவமணி கலந்து ஆலோசனை செய்தார்கள்.
சரிடா எப்போ கிளம்ப போற என்றாள் வள்ளி..
இப்பவே என்றான் வளன்.
வித்யா, நீயும் வீட்டுக்கு போய் உனக்கு முக்கியமா தேவையான ஐட்டம் பேக் பண்ணு...
அம்மா என்றான் கோபம் நிறைந்து..
என்னடா?
அவ எதுக்கு..
அய்யோ, எதுக்கா? டேய் அவ உன் பொண்டாட்டி. அவள நீ கூட்டிட்டு போகாம வேற யாரு கூட்டிட்டு போவா?
எல்லாம் உன்னால தான் என கத்திவிட்டு அவனது அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.
வளன், ஸ்ரீ வித்யா இருவருக்குமே இன்று சென்னைக்கு திரும்பி வரும் பிளான் இருந்தது. வித்யாவுக்கு எக்ஸாம். அவனுக்கும் வேலை இருந்தது. அதைவிட முக்கியமாக கிராமத்தில் இருக்க விருப்பம் இல்லை. அவர்கள் நினைத்தபடி சென்னை பயணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் துவங்கும் ஆனால் ஒரே காரில் கணவன் மனைவியாக.
திடிர்னு கல்யாணம். சிட்டியில் வளர்ந்தவன். இப்படி ஆனதை சகிச்சிக்க முடியலை. நீ வருத்தப்பட வேண்டாம் என வாடிய முகத்துடன் நின்ற வித்யாவை சமாதானம் செய்தாள் வள்ளி.
வித்யா தன் தலையை சரி என்பதைப் போல அசைத்தாள். வேறு என்ன செய்ய முடியும்?
வித்யா தன் வீட்டிற்கு சென்று தேவையான சில ஆடைகளை எடுத்தாள். இரண்டு சிறிய பைகளில் தன் ஆடைகளை வைத்தாள். அவளின் பெரும்பான்மையான உடைகள் ஹாஸ்டலில் இருந்தது.
தன் மகளை சோகம் நிறைந்து பார்த்துக் கொண்டிருந்தார் சிவமணி. அவரிடமும் ஆறுதல் சொல்ல பெரிதாக வார்த்தைகள் இல்லை.
மகனும் மருமகளும் தங்கள் சொந்தக்காரில் சென்றனர். வள்ளி, வாசு & சிவமணி வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.