Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`புரியும் மொழியில் பேசிக்கொள்ளுங்கள்!' - தி.மு.க எதிர்ப்பால் பணிந்த ரயில்வே #SouthernRailway

ரயில்வே அதிகாரிகள், தங்களுக்கு புரியும் மொழியில் தகவல் தொடர்பை மேற்கொள்ளலாம் என தென்னக ரயில்வே, ஏற்கெனவே வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொண்டிருக்கிறது. முன்னர் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் உடனடியாக மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கூறி மத்திய சென்னை தி.மு.க எம்.பி. தென்னக ரயில்வே பொதுமேலாளரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
 

[Image: CC_14157.jpeg]
திருமங்கலம் சிக்னல் செயலிழப்பு சம்பவத்தை அடுத்து அங்கு நடக்க இருந்த மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே துறை அதிகாரிகள் இருவர் தங்களுக்குள் மேற்கொண்ட தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பமே இந்த நிலைக்குக் காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில், ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என தென்னக ரயில்வேயின் சென்னைக் கோட்டம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தவிர்க்கச் சொல்கிறதா தென்னக ரயில்வே என பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேபோல், ரயில்வே துறையின் பணிநியமனக் கொள்கையால்தான் இந்தநிலை ஏற்பட்டது என்றும், தென்னக ரயில்வேயில் பணிபுரிய வருபவர்களுக்கு தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என பணிநியமனக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் டி.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் வலியுறுத்தியது. 


[Image: WhatsApp_Image_2019-06-14_at_2.46.29_PM_14573.jpeg]
அதேபோல், இந்த விவகாரத்துக்கு தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. தி.மு.க தலைவர் ஸ்டாலின், `தமிழகத்தில் தமிழ் பேசக் கூடாது, இந்தி பேசு என்பது மொழித் திணிப்பு மட்டுமல்ல, மொழி மேலாதிக்கம், மொழி அழிப்பு' என்று கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அதேபோல், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி-யுமான தயாநிதி மாறன் தென்னக ரயில்வே துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். கனிமொழி, வைரமுத்து உள்ளிட்டோரும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.
[Image: WhatsApp_Image_2019-06-14_at_2.06.53_PM_14258.jpeg]
[Image: edit_14342.jpg]அதேபோல், தென்னக ரயில்வேயின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்னக ரயில்வே அதிகாரிகள், சுற்றறிக்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தனர். அதன்படி, ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது

இதுகுறித்து டி.ஆர்.எம்.யூவின் செயல் தலைவர் இளங்கோவன், `ரயில்வேயின் இந்த நடவடிக்கை மட்டும் போதாது. நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் கவுன்டரில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட மக்களோடு தொடர்பில் இருக்கும் ரயில்வே பணியாளர்கள் அனைவருக்கும் தமிழ் மொழிப் பயிற்சி அளிக்க வேண்டும். திருச்சியில் உள்ள ரயில்வே பயிற்சி மையத்தில் பணியாளர்களுக்கு இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அந்தப் பயிற்சி மையத்தில் தமிழ் மொழி தெரியாத ரயில்வே அதிகாரிகள், பணியாளர்களுக்குத் தமிழ் மொழியும் பயிற்றுவிக்க வேண்டும்' என்றார். 
இந்த நிலையில், ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில்நிலைய அதிகாரிகள் இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு ஆங்கிலம், இந்தி மொழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை தென்னக ரயில்வே மாற்றியிருக்கிறது. அதில், `அதிகாரிகள் குழப்பம் இல்லாமல் புரியும் மொழியில் பேசிக்கொள்ளலாம்' என மாற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 14-06-2019, 04:33 PM



Users browsing this thread: 100 Guest(s)