12-06-2019, 11:09 AM
மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என முழக்கமிட்ட ரசிகர்கள்
லண்டனில் கிரிக்கெட் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் மல்லையாவை ரசிகர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு திருடன் என கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியை பார்த்து விட்டு வெளியே வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை முற்றுகையிட்ட ரசிகர்கள் “திருடன்” எனக்கூறி கூச்சலிட்டனர்.
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி தராமல் வெளிநாடு தப்பி சென்ற மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு திரும்பிய மல்லையாவை ரசிகர்கள் சிலர் முற்றுகையிட்டு ‘திருடன்’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேநேரம் அவரை பிடித்திருப்பதாக ஒரு சிலர் கூச்சலிட்டனர். தொடர்ந்து சிலர் அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து பாதுகாவலர்கள் உதவியுடன் மல்லையா அங்கிருந்து வெளியேறினார்.