07-06-2019, 06:02 PM
இயக்குனர் பாக்கியராஜை புகழ்ந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
கடந்த 1985ஆம் ஆண்டு கமல் இரு வேடங்களில் நடித்த ஒரு கைதியின் டைரி படம் ரிலீஸாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்தது. ரேவதி மற்றும் ராதா இருவர் கமலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தனர். கே. பாக்யராஜ் எழுத்தில் பாரதிராஜா இப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து ஹிந்தியில் எடுக்க திட்டமிட்டார் கே. பாக்யராஜ். ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் அமிதாப் பச்சனை வைத்து இயக்கினார் பாக்யராஜ். இரண்டு வேடங்களில் நடித்த அமிதாப்புக்கு ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.
1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி பாலிவுட்டில் வெளியானது இப்படம். தமிழில் வசூலை வாரிக்குவித்ததை போலவே ஹிந்தியிலும் வாரிக்குவித்தது. நேற்றுடன் இப்படம் வெளியாகி 33ஆம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஹிந்தி அமிதாப் ரசிகர்கள் பலரும் இந்த படம் குறித்து ட்விட்டரில் பதிவுகளிட்டு வந்தனர். இந்நிலையில், “‘ஆக்ரி ரஸ்தா’ படம்தான் அமிதாப் பச்சன் நடித்ததிலேயே மிகச்சிறந்த படம் என என் அம்மா கூறுவார்” என்று ட்விட்டரில் ஒருவர் அமிதாப் பச்சனைக் குறிப்பிட்டு பதிவிட்டார்.
அந்த பதிவிற்கு ரீட்வீட் செய்த அமிதாப், “நன்றி... அதுவொரு மிகச்சிறந்த அனுபவம் மற்றும் அருமையான கதை. கே.பாக்யராஜ், அப்போது எனக்குப் புதியவர். ஆனால், இயக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்” என்று தெரிவித்தார்.