03-06-2019, 10:05 AM
சமூக வலைதளத்தில் 50 பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் கொடூரன்
சமூக வலைத்தளம் மூலம் பழகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் எட்டுமானூர் அருகே உள்ள அரீபறம்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் (வயது 25). இவர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீஷ் குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இயங்கி வரும் குடும்பத்தலைவிகளை குறிவைத்து பிரதீஷ் குமார் பழகுவார். அவர்களிடம் அழகாக பேசி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி விடுவார்.
பின்னர் அந்த பெண்களிடம் தொடர்ந்து பேசி அவர்களின் குடும்ப பிரச்சினைகளை தெரிந்து கொள்வார். அடுத்ததாக அந்த பெண்களின் கணவர்கள் மீது மோசமான பிம்பத்தை ஏற்படுத்துவார். இதற்காக சமூக வலைத்தளங்களில் பெண்களின் பெயரில் போலி கணக்குகளை தொடங்கி குறிப்பிட்ட அந்த குடும்பத்தலைவிகளின் கணவர்களை மடக்குவார்.
அவர்களிடம் பாலியல் ரீதியாக பேசி பல விவரங்களை பெற்றுவிடுவார். பின்னர் இந்த உரையாடலை புகைப்படமாக (ஸ்கிரீன்ஷாட்) எடுத்து அவர்களின் மனைவியருக்கு அனுப்பி விடுவார். இதைப் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடையும் அந்த பெண்களிடம் ஆறுதலாக பேசுவது போல நடிப்பார்.
இவ்வாறு அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு செல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் பேச அந்த பெண்களை வற்புறுத்துவார். இதை ஏற்று அந்த பெண்களும் பேசுவார்கள். அப்போது அதை பதிவு செய்யும் பிரதீஷ் குமார், அந்த பெண்களின் புகைப்படத்தை ஆபாச படங்களுடன் மார்பிங் செய்து உண்மையான படம்போல மாற்றிவிடுவார்.
பின்னர் அந்த ஆபாச படங்களை அந்த பெண்களிடமே காட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துவார். அவ்வாறு இணங்கவில்லை என்றால் அந்த புகைப்படங்களை இணைதளத்தில் வெளியிடுவேன் எனவும், அவர் களின் கணவருக்கு அனுப்பி வைப்பேன் என்றும் மிரட்டுவார்.
இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடையும் பெண்கள் பிரதீஷ் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி விடுகின்றனர். இவ்வாறு 50-க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை பிரதீஷ் குமார் சூறையாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவரிடம் ஏமாந்து போன பெண்கள் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால், தங்கள் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் மவுனமாக இருந்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் தைரியமாக புகார் கொடுத்ததால் தற்போது போலீசார் பிரதீஷ் குமாரை கைது செய்துள்ளனர். அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பை ஆய்வு செய்த போது அவற்றில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளம் மூலம் நூதன முறையில் பழகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.