30-05-2019, 05:21 PM
‘200 ஜாக்கிகள்; 20 தொழிலாளர்கள்!’ - வேலூரில் ‘அலேக்காக’ உயர்த்தப்பட்ட மாடிவீடு
வேலூரில் பள்ளத்திலிருந்த மாடிவீட்டை 200 ஜாக்கிகளைக் கொண்டு நான்கு அடிக்கு ‘அலேக்காக’ உயர்த்திருப்பதைப் பார்த்து பொதுமக்கள் வியப்படைந்தனர்.
வேலூரில் பள்ளத்திலிருந்த மாடிவீட்டை 200 ஜாக்கிகளைக் கொண்டு நான்கு அடிக்கு ‘அலேக்காக’ உயர்த்திருப்பதைப் பார்த்து பொதுமக்கள் வியப்படைந்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரமன். இவரது மாடிவீட்டின் தரைதளம் தெருவின் கழிவுநீர் கால்வாய்க்கும் கீழே குறைவான பள்ளத்தில் இருந்தது. அந்தப் பகுதி சாலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கிநிற்கிறது. கால்வாயில் வரும் கழிவுநீர் கஜேந்திரமன்னின் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகிவந்தனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதால் வீடு மேலும் பள்ளமாகும் நிலை உருவானது. வீட்டை இடித்துவிட்டு பள்ளமான பகுதியில் மண்ணைக் கொட்டி நிரப்பிய பிறகு, அதன் மீது புதிய வீட்டைக் கட்டிக்கொள்ளலாம் என்று உரிமையாளர் முதலில் நினைத்தார்.
ஆனால், 800 சதுர அடியில் கட்டப்பட்ட மாடிவீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதற்கு அதிக செலவாகும். வீட்டை இடித்தால் தூசு பறக்கும். அக்கம், பக்கம் வசிப்பவர்கள் சண்டைக்கு வருவார்கள் என்பதால் வீட்டை இடிக்காமலேயே தரைமட்டத்தை உயர்த்த நண்பர்கள் சிலர் யோசனை கூறினர். இதற்காக, சென்னையில் செயல்பட்டுவரும் வீட்டை இடிக்காமலேயே ஜாக்கி மூலம் தூக்கி உயர்த்தும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தணிகைமலை என்பவர், வேலூர் மாவட்டம் கலவையைச் சேர்ந்தவர். கஜேந்திரமன்னின் வீட்டை இடிக்காமலேயே உயர்த்திக் கொடுக்க அவர் முன்வந்தார். ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டை உயர்த்தும் பணி தொடங்கியது. 200 ஜாக்கிகளைக் கொண்டு 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வீட்டை நான்கு அடி உயரத்துக்குத் தூக்கியிருக்கிறார்கள். வீட்டு சுவர்களில் ஒரு சிறிய வெடிப்புகூட ஏற்படவில்லை. சிறிய அசைவுகூட இல்லாமல் தரைமட்டத்திலிருந்து வீட்டை அலேக்காக உயர்த்தியிருக்கிறார்கள். இதனால், எந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை என்று வீட்டை உயர்த்திய நிறுவனத்தினர் தெரிவித்தனர். வீட்டை இடிக்காமல், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையூறு ஏற்படாமல் குறைந்த செலவில் தரைமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட மாடிவீட்டை, அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கிறார்கள்.