Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ரிக்கெட்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி


[Image: 201905280417147897_England-Australia-tea...SECVPF.gif]

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லண்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவர்களில் 160 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முகமது நபி 44 ரன்னும், நூர் அலி ஜட்ரன் 30 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தவ்லத் ஜட்ரன் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜோரூட் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி வேகமாக ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 7.2 ஓவர்களில் 77 ரன்னாக இருந்த போது பேர்ஸ்டோ (39 ரன்கள், 22 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முகமது நபி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரமத் ஷாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்து ஜோரூட் களம் இறங்கினார்.

17.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 46 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 89 ரன்னும், ஜோரூட் 37 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 29 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது.

சவுதம்டனில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக திரிமன்னே 56 ரன்னும், தனஞ்ஜெயா டி சில்வா 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், நாதன் லயன், ஸ்டீவன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 44.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 89 ரன்னும், மேக்ஸ்வெல் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி தரப்பில் ஜெப்ரி வாண்டர்சே 2 விக்கெட்டும், நுவான் பிரதீப், தனஞ்ஜெயா டி சில்வா, மிலின்டா ஸ்ரீவர்தனா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இலங்கை அணி அடுத்தடுத்து சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்து இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 28-05-2019, 10:21 AM



Users browsing this thread: 77 Guest(s)