27-05-2019, 06:51 PM
"ஓ..!! யாரு அவ..??"
"அவ பேர்லாம் தெரியாது மம்மி.. அவ கூட நான் பேசினது கூட கிடையாது..!!"
"ம்ம்.. அப்புறம்..??"
"நாங்க டெயிலி லஞ்ச் சாப்பிட போவோம்ல.. அந்த ஃபுட் கோர்ட்கு அவளும் வருவா.. அப்போ அவளை அடிக்கடி பாத்திருக்கேன்..!!"
"ஓ..!! சரி.. இப்போ அவளுக்கு என்ன பிரச்னை..??"
"ஐயோ.. அவளுக்கு ஒன்னும் பிரச்னை இல்ல மம்மி..!!"
"அப்புறம்..??"
"அ..அது.. எப்படி சொல்றது...?? ம்ம்ம்ம்.... அன்னைக்கு நீ சொன்னேல..?? 'யாராவது பொண்ணை பாத்து.. அழகா இருப்பான்னு தோணிருக்கும்.. நல்ல பொண்ணா இருக்காளேனு தோணிருக்கும்.. பேசிப்பழகலாம்னு தோணிருக்கும்..' அப்டின்னு மூணு விஷயம் சொன்னேல..??"
"ஆமாம்..!!"
"அந்த மூணுமே எனக்கு அவளை பாத்து தோணுச்சு மம்மி..!!"
"ம்ம். நல்ல விஷயந்தான..??"
"ஆ..ஆனா.."
"ஆனா..??"
"ஆனா.. இப்போ.. நேத்துல இருந்து.. மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!"
"என்ன சந்தேகம்..??"
"அந்த மூணு விஷயத்துல ரெண்டாவது விஷயம்..!!"
"எது..?? அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இல்லையான்னா..??"
"அ..அப்படி சொல்ல முடியாது..!! அந்தப் பொண்ணு எனக்கு ஒத்து வருவாளா இல்லையான்னு..!!"
"ஓ.. ஏன் அப்படி நெனைக்கிற..??" பாரதி அப்படி கேட்கவும், அசோக்கும் ஏதோ ஒரு ஆர்வத்தில்
"செருப்ப எடுத்து இப்படி காட்டுறா மம்மி.. இப்படி.. இங்க.. மூஞ்சிக்கு முன்னாடி..!!"
என்று தன் முகத்துக்கு நேராக கை நீட்டிக்காட்டி சொல்லியே விட்டான். பாரதி சற்றே அதிர்ந்து போனாள்.
"யாரு..?? உன் மூஞ்சிக்கு முன்னாடியா..??" என்று அவள் அவசரமாய் கேட்கவும், அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான்.
"ஐயையே.. எ..என் மூஞ்சிக்கு முன்னாடி இல்ல மம்மி..!! யா..யாரோ.. வேறொரு பையன்.. அவன் மூஞ்சிக்கு முன்னாடி..!! நான் கொஞ்சம்.. தூரமா இருந்து.. இதெல்லாம் பாத்துட்டு இருந்தேன்..!!"
"ஓ..!! அதுசரி.. அவ ஏன் அப்படி பண்ணினா..??"
இப்போது அசோக் முந்தைய நாள் நடந்த அந்த சம்பவத்தை, பாரதிக்கு பொறுமையாக எடுத்துரைத்தான். நண்பர்கள் வைத்த பந்தயத்தையும், செருப்பு நீண்டது தன் முகத்துக்கு முன்புதான் என்பதையும் மட்டும் மறைத்து விட்டான். மகனுக்கு தலை துவட்டுவதை நிறுத்திவிட்டு, எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டாள் பாரதி. கேட்டு முடித்து சில வினாடிகள் யோசனையாய் இருந்தவள், பிறகு அசோக்கை ஏறிட்டு நிதானமான குரலில் கேட்டாள்.
"ம்ம்ம்...!! சரி.. இதுக்கும்.. அந்த பொண்ணு உனக்கு ஒத்துவருவாளான்னு உனக்கு சந்தேகம் வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??"
"என்ன மம்மி இப்படி கேக்குற..?? ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ்வளவு பேர் பாத்துட்டு இருக்குறப்போ.. ஒருத்தனை செருப்பை கழட்டி அடிக்கப் போறா..!! யப்பா.. எனக்கு அவளை பாக்குறதுக்கே.. அப்படியே திக்குன்னு இருந்தது..!!" அசோக் அவ்வாறு ஒரு மிரட்சிப் பார்வையுடன் சொல்ல,
"ஹாஹாஹாஹாஹாஹா..!!" பாரதி சிரித்தாள்.
"ப்ச்.. என்ன மம்மி.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. நீ சிரிக்கிற..??"
"பின்ன என்ன..?? நீ சொல்றதை கேட்டா சிரிப்புதான் வருது..!! ம்ம்ம்ம்.... அம்மா ஒன்னு சொல்லவா..??"
"என்ன..??"
"பாவம் செஞ்சவங்கதான் சாமியை பாத்து பயப்படனும்.. தப்பே செய்யாதவங்க எதுக்கு பயப்படனும்..?? நீ பயப்படுறதும் எனக்கு அந்த மாதிரிதான் இருக்கு..!! மனசுல தப்பான எண்ணம் இருக்குறவங்கதான்.. அந்தப் பொண்ணை கண்டா மெரளனும்.. நீ எதுக்கு மெரள்ற..?? நல்லவங்களுக்கு சாமி எப்போவுமே கைக்கொழந்தை மாதிரி..!!"
"என்ன மம்மி நீ.. அவளை போய் சாமி கூட கம்பேர் பண்ணிட்டு இருக்குற..??"
"ஏன்.. என்ன தப்பு..?? தப்பை தட்டிகேக்குற எல்லாருமே சாமிக்கு சமானம்தாண்டா..!!"
"அப்போ.. அவ அந்த மாதிரி நடந்துக்கிட்டது சரிதான்னு சொல்றியா..??"
"அதுல என்ன உனக்கு சந்தேகம்..?? அம்மா இன்னொன்னு சொல்லவா..??"
"சொல்லு..!!"
"ஆம்பளைங்களுக்கு அழகுன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே.. தெரியுமா..??"
"ம்ஹூம்..!!"
"அதாண்டா.. ஏதோ புருஷலட்சணம்னு சொல்வாங்க..!!"
"ஆமாம்.. உத்தியோகம் புருஷலட்சணம்..!!"
"ம்ம்ம்.. கரெக்ட்..!! ஆம்பளைங்களுக்கு அழகு உத்தியோகம்.. அதாவது உழைப்பு...!! அதுமாதிரி பொம்பளைங்களுக்கு எது அழகு தெரியுமா..??"
"எது..??"
"தைரியம்..!!!!!" பாரதி சற்றே அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
"ம்ம்..!!"
"தைரியமா இருக்குறவதாண்டா பொம்பளை.. அந்த தைரியமே அவளுக்கு ஒரு தனி அழகை கொடுக்கும் தெரியுமா..!! அவ்வளவு பேர் இருக்குற ஒரு பொது எடத்துல.. ஒருத்தன் செஞ்ச தப்பை தாங்கிக்க முடியாம செருப்பை கைல எடுத்தா பாத்தியா.. அவதாண்டா பொண்ணு... எந்தப் பொண்ணுக்குமே அந்த தைரியம் அவசியமா இருக்கணும்..!!"
"ம்ம்..!!"
அம்மா சொல்கிற விஷயங்கள் அசோக்கின் புத்திக்குள் இறங்கிக் கொண்டிருக்க, அவன் அமைதியாக 'உம்' கொட்டிக் கொண்டிருந்தான். பாரதியோ இப்போது பட்டென பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள். எங்கேயோ பார்த்தபடி தனது இளமைப்பருவ அனுபவத்தை மகனிடம் சொன்னாள்.
"அப்போ... எங்க வீட்டுக்கு பின்னாடி வைகை ஆறு ஓடும் அசோக்.. பக்கத்துல இருக்குற ஆத்துக்கு தண்ணி எடுக்குறதுக்கு கூட.. எங்க வீட்டுல என்னை தனியா அனுப்ப மாட்டாங்க..!! அதே பாரதிதான்.. ஒத்தை ஆளா.. உசுரை கைல புடிச்சுட்டு.. தன்னந்தனியா மெட்ராஸ் வந்து சேர்ந்தேன்..!! எப்படி..?? தைரியம்..!!!"
"ம்ம்..!!"
"உங்க தாத்தா வீட்டுல.. காம்பவுண்டு சுவர் நல்லா ஏழடி உசரத்துக்கு இருக்கும்.. சுவர் மேல கொஞ்சம் கூட இடைவெளி விடாம.. கண்ணாடி பீங்கான் வச்சு பூசிருப்பாங்க.. அந்த சுவரை ஏறி குதிக்கனும்னா எவ்வளவு ரத்தத்தை கீழ சிந்தனும் தெரியுமா..?? கை கால்லாம் கிழிஞ்சுபோய்.. ரத்தக்களரியாதாண்டா உன் அப்பாகிட்ட வந்து சேர்ந்தேன்..!! ஏன்..?? தைரியம்..!!!"
"ம்ம்..!!"
"அன்னைக்கு எனக்கு அந்த தைரியம் இருந்ததாலதான்.. இன்னைக்கு எனக்கு கைல வச்சு தாங்குற புருஷன் கெடைச்சிருக்காரு.. கண்ணுமணிக மாதிரி ரெண்டு புள்ளைங்க கெடைச்சிருக்கீங்க.. கவலைன்னா என்னன்னே தெரியாத மாதிரி ஒரு குடும்பமும், வாழ்க்கையும் கெடைச்சிருக்கு..!!"
பாரதி மிக உணர்ச்சிவசப்பட்டுப்போய் சொல்லிக்கொண்டிருந்தாள். அசோக்கோ எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்தப் பெண்ணின் நினைவில் மூழ்கியிருந்தான். கொஞ்ச நேரம் இடைவெளிவிட்ட பாரதி மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.
"ம்ஹ்ஹ்ஹ்ம்...!! உங்க தாத்தா.. பச்சைக்கலர்ல பட்டையா ஒரு பெல்ட் இடுப்புல கட்டிருப்பாரு.. ட்ரன்க் பெட்டிக்குள்ள நான் ஒளிச்சு வச்சுருந்த போஸ்ட் கார்ட்லாம் அவர் கைல கெடைச்ச அன்னைக்கு என்ன செஞ்சாரு தெரியுமா.. அந்த பெல்ட்டை கழட்டி.."
"ஐயையையெ... போதும் மம்மி.. மொக்கை தாங்க முடியல..!!" அசோக் இப்போது பொறுமையில்லாமல் சொன்னான். பாரதி சலிப்பானாள்.
"ம்க்கும்... ஏண்டா சொல்ல மாட்ட.. நான் பட்ட வேதனைலாம் உனக்கு மொக்கையாத்தான் தெரியும்..!!"
"ப்ச்... உன் கதையை விடு மம்மி.. அந்தப் பொண்ணை பத்தி சொல்லு..!!"
"இன்னும் அவளை பத்தி என்ன சொல்லனும்..?? நான் சொல்லவேண்டியதுலாம் சொல்லிட்டேன்.. இனிமே நீதான் நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும்..!! நான் போய் சட்னியை அரைக்கிறேன்.. நீ சட்டுன்னு கெளம்பி வா..!!"
சொன்ன பாரதி அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள். வாசலை அடைந்தவள் ஒருகணம் தயங்கி நின்றாள். பிறகு அப்படியே திரும்பி மகனை பார்த்து, புன்னகையுடன் சொன்னாள்.
"எனக்கென்னவோ.. அந்தப் பொண்ணு மருமகளா வர்றதுக்கு.. இந்த வீடு குடுத்து வச்சிருக்கணும்னு தோணுது அசோக்..!! உன்னால முடிஞ்சா.. அந்த பாக்கியத்தை இந்த குடும்பத்துக்கு குடு..!!"
அம்மா அந்தமாதிரி தெள்ளத்தெளிவாக சொல்ல, அசோக்கும் இப்போது மனக்கலக்கம் நீங்கியவனாய் அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான். அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அவளுடன் பேசுகிற வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவளை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிட்டுமா என்று ஒரு கேள்வியும் கூடவே மனதில் எழுந்தது. எனக்கென விதிக்கப்பட்டவளாய் இருந்தால், நிச்சயம் என் எதிரே தோன்றுவாள் என்று அந்த மனதை சமாதானம் செய்தான். 'அவளை அனுப்பி வை..!!' என்று ஆண்டவனிடம் ஒருமுறை வேண்டிக் கொண்டான்