Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
திக் திக் நிமிடங்களில் திருமாவளவன் - 4 பெட்டிகள் மிஸ்ஸிங்; திருப்பத்தை ஏற்படுத்திய 18-வது சுற்று
[Image: thiruma_election_11488.jpg]
சிதம்பரம் தொகுதியில், திருமாவளவனை பின்னடைவு என திட்டமிட்டு தகவல் பரப்பப்பட்டுள்ளது. தேர்தல் எண்ணிக்கையின்போது,  4 பெட்டிகள் எண்ணப்படவில்லை என்றும் 18-வது சுற்றில் திருமாவளவனுக்குக் கிடைத்த ஓட்டுகள், அ.தி.மு.க-வுக்கு கிடைத்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று மணியளவில்தான் திருமாவளவன் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க சார்பில் சந்திரசேகர் இரட்டை இலைச் சின்னத்தில் களமிறங்கினார். அ.ம.மு.க சார்பில் இளவரசனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவியும், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவஜோதியும் போட்டியிட்டனர். ஆரம்பம் முதலே திருமாவளவனுக்கும் சந்திரசேகருக்கும் இடையே இழுபறி நீடித்துவந்தது. திடீரென சந்திரசேகர் முன்னணியில் இருப்பதாகவும், திருமாவளவனுக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும் ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து தகவல் அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் காலை முதல் காத்திருந்த திருமாவளவனும் அவரின் ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். 


திருமாவளவனுக்கும் சந்திரசேகருக்கும் இடையே இரவு வரை இழுபறி நீடித்தது. ஒருக்கட்டத்தில், சந்திரசேகர் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த பா.ம.க-வினரும் அ.தி.மு.க-வினரும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகிலேயே பட்டாசு வெடித்தனர். அந்த சத்தம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்களின் காதுகளில் இடியாக விழுந்தது. 
 இந்தச் சமயத்தில்தான் திருமாவளவனுக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. அந்தத் தகவலை அவர் உறுதிப்படுத்தினார். உடனடியாக வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்த அதிகாரிகளிடம் அந்தத் தகவலை அவர் கூறினார். இதையடுத்துதான் திருமாவளவன் வெற்றிமுகம் கண்டார் என்கின்றனர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். 
 [Image: thiruma_election_2_11118.jpg]
இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க-வின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தோற்கடிக்க அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்த்தனர். குறிப்பாக, திருமாவளவன் பேச்சுக்களை ஒரு தரப்பு  சி.டி-யாகப் போட்டு, மக்களுக்குக் கொடுத்தது மற்றும் திருமாவளவனை தோற்கடிக்க, சில 'சி'க்கள் தொகுதியில் இறக்கப்பட்டன. இதனால் தேர்தல் பிரசாரத்தின்போதே திருமாவளவன், 'கவனமாகச் செயல்படுங்கள், நமக்கு எதிரிகள் அதிகம்' என்று தேர்தல் பொறுப்பாளர்களிடம் கூறினார். அதோடு தொகுதியில் உள்ள ப்ளஸ், மைனஸ் குறித்து கலந்து ஆலோசித்த திருமாவளவன், தேர்தல் பொறுப்பாளர்களிடம் மைனஸை சரிசெய்யக் கூறினார். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தோம்.


 வாக்குப் பதிவுக்குப் பிறகும், தவறுகள் நடக்காமலிருக்க கவனத்துடன் இருந்தோம். ஓட்டு எண்ணிக்கையின்போது, கோளாறு காரணமாக 4 இயந்திரங்களின் வாக்குகளை எண்ணவில்லை. பிறகு எண்ணிக்கொள்ளலாம் என்று தேர்தல் அலுவலர்கள் கூறி இயந்திரங்களை, ஓரமாக வைத்துவிட்டனர். 18-வது சுற்றில் திருமாவளவன் 3,000 ஓட்டுகள் பின்னடைவு என்று வாக்கு எண்ணும் மையத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால், நாங்கள் கவலையடைந்தோம். இந்தச் சமயத்தில்தான், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கையை நாங்கள் பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில், திருமாவளவன் 3000 ஒட்டுகள் முன்னிலையில் இருப்பதாகத் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக திருமாவளவனின் கவனத்துக்கு இந்தத் தகவலை எடுத்துச் சென்றோம். அவரும், தேர்தல் அதிகாரிகளிடமும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளிடமும் பக்குவமாகப் பேசினார். அதன்பிறகுதான், தவற்றை அதிகாரிகள் கண்டறிந்து அதைத் திருத்தினர். 
[Image: thiruma_11340.jpg]
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை முடிந்து அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி என்று அறிவிக்க அதிகாரிகள் தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போதுதான், எங்கள் பூத் ஏஜென்ட்டுகளிடம் திருமாவளவன் பேசினார். அப்போது ஒருவர், தலைவரே, 4 பெட்டிகளை எண்ணவில்லை என்று கூறினார். அதைத் தேர்தல் அலுவலர்களிடம் கூறியபோது, எல்லாவற்றையும் எண்ணிவிட்டோம் என்று கூறினார்கள். ஆனால், ஆதாரத்துடன் பூத் ஏஜென்ட்டுகள் கூறிய பிறகு அந்தப் பெட்டிகள் எண்ணப்பட்டன. அதில் எங்களுக்கு 2,500 ஓட்டுகள் கிடைத்தன. இதனால்தான் திருமாவளவன் வெற்றிபெற முடிந்தது. 
 அதிகாலை 2.45 மணியளவில்தான் திருமாவளவன் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக  அறிவித்தனர். 3 மணியளவில் சான்றிதழை திருமாவளவன் பெற்றார். வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியில் வந்த திருமாவளவன், தேர்தல் பொறுப்பாளர்களைக் கைக்குலுக்கி கட்டிப்பிடித்து  பாராட்டினார்'' என்றனர். 
[Image: vck_11598.jpg]
திருமாவளவனை வெற்றிபெற வைத்ததில், காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற தொகுதியும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியும் முக்கியமானதாக வி.சி.க -வினர் தெரிவித்தனர். அதாவது, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வி.சி.க-வுக்கு 32,000 ஓட்டுகள் கூடுதலாக கிடைத்துள்ளன. சிதம்பரம் தொகுதியில் 6,000 ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. ஆனால் புவனகிரி, அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய 4 தொகுதிகள் திருமாவளவனுக்கு கைகொடுக்கவில்லை. சிதம்பரம் தொகுதியில், கடந்த தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்த நிலையிலும், சிதம்பரம் நகரப்பகுதியில் படித்தவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் இருப்பதால்தான் இந்த முறை திருமாவளவனுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. திருமாவளவன், 5,00,229 ஓட்டுகளும், சந்திரசேகர் 4,97,010 ஓட்டுகளும் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், 3,219 ஓட்டுகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 1,828 தபால் ஓட்டுகள் கிடைத்தன.
சிதம்பரம் தொகுதியில், காலை 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை திருமாவளவனுக்கு திக் திக் நிமிடங்களாகவே கடந்துள்ளன.  
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-05-2019, 06:43 PM



Users browsing this thread: 99 Guest(s)