24-05-2019, 09:56 AM
மம்தாவுக்கு பாஜக கொடுத்த ஷாக்!!!
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மேற்குவங்கத்தில் பாஜக இதுவரை இல்லாத அளவு திரிணாமுல் காங்கிரஸுக்கு அடுத்த இடத்தை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணி, பாஜக ஆகியவை தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், சிபிஎம் 2, காங்கிரஸ் 4, பாஜக 2 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. 17 சதவீத வாக்குகளை வென்ற பாஜக, இம்முறை 2ஆம் இடத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் சவால் விட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸின் வளர்ச்சிதான் இந்த முறை பாஜகவை இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது என்று சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மேற்குவங்கத்தில் பாஜகவின் பிரச்சாரம் மற்ற மாநிலங்களை விட கொஞ்சம் கூடுதலாகவே இருந்துள்ளது. பல வருடங்களாக திரிணாமுல் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே நடந்த பல வன்முறைகள், அவர்கள் மேல் மக்களுக்கு இருந்த கோபம் பாஜகவிற்கு ஓட்டாகவே மாறியது என்கிறார்கள். மற்றொரு பக்கம் 42 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் வைக்காமல் தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு 7 கட்டங்களாக 42 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தியதுதான் காரணம் என்கின்றனர். ஆனால், பாஜகதான் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இடதுசாரிக் கூட்டணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி பாஜக 2ஆம் இடம் பெற்றது கவனிக்கத்தக்கது.
பாஜக கணிசமாக வெல்லும் என்பதை உணர்ந்த அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜகவுடன் கடுமையாக மோதினர். இதனால், மாநிலத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இரு கட்சி தொண்டர்கள் இடையே கடும் மோதல் நிலவியது. மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பாஜக அதிர்ச்சி அளித்ததைப் போலவே, மாநிலத்திலும் கடும் அதிர்ச்சியை மம்தாவுக்கு பாஜக அளித்துள்ளது.