கண்ணாமூச்சி ரே ரே
#58
“ம்ம்.. ட்ரை பண்றேன்..!!”

“அப்புறம்.. உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்.. கேக்கட்டுமா..??”

“கேளுங்க..!!”


1

“தாமிரா காணாம போனதை நீங்க எப்படி எடுத்துக்குறீங்க..??”

“எப்படினா..?? எனக்கு புரியல..!!”

“எப்படி சொல்றதுனா.. அவ காணாம போனதுல எனக்கு நெறைய கொழப்பம் இருக்கு.. நெஜமாவே குறிஞ்சிதான்..” ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

“இல்லைங்க.. குறிஞ்சிதான் காரணம்னு எனக்கு தோணல..!!”

என கதிர் இடையில் புகுந்து பட்டென்று சொன்னான்..!! அதைக் கேட்டதும் ஆதிராவிடம் மெலிதாக ஒரு ஆச்சர்யம்.. முகத்திலும் குரலிலும் அந்த ஆச்சரியத்தின் பிரதிபலிப்போடு திரும்ப கேட்டாள்..!!

“ஏ..ஏன் அப்படி சொல்றீங்க..?? அ..அதான்.. உங்க அம்மாவே.. அதை கண்ணால..”

“இல்லைங்க ஆதிரா.. அம்மா ரொம்ப பயந்தவங்க.. சும்மாவே எதை பாத்தாலும் குறிஞ்சி குறிஞ்சின்னு சொல்லிட்டு இருப்பாங்க.. எந்த மாதிரி சூழ்நிலைல எதை பாத்து அவங்க அந்த மாதிரி சொல்றாங்கன்னு எனக்கு தெரியல..!! அவங்க சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு நாம நம்ப வேணாம்..!!”

“ஓ..!! அப்படினா.. குறிஞ்சின்ற விஷயம் மேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..??”

“அப்படி இல்ல.. குறிஞ்சின்ற விஷயம் மேல எனக்கு எந்த அபிப்ராயமும் இல்ல.. உங்களை மாதிரிதான்.. நம்பலாமா வேணாமான்னு கன்ஃப்யூஷன்ல இருக்குற சராசரி ஆள்தான் நான்..!! ஆனா குறிஞ்சியோட ஆவி தாமிராவை தூக்கிட்டு போய்டுச்சுன்னு சொல்றதைத்தான் என்னால நம்ப முடியல..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..??”

“எப்படி சொல்றது.. இந்த ஊரே குறிஞ்சியை பத்தி தப்பா பேசுறப்போ.. ராட்சசி, சூனியக்காரின்னுலாம் கேவலமா திட்டுறப்போ.. குறிஞ்சியை நல்லவன்னு சொன்ன ஒரே ஆள் தாமிராதான்..!! அப்படிப்பட்ட தாமிரா மேல குறிஞ்சிக்கு என்ன கோவம்..?? குறிஞ்சி பத்தி தாமிரா சொன்னதெல்லாம் இன்னும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. அதெல்லாம் கேட்டப்புறம் அந்த குறிஞ்சியோட ஆவிதான் தாமிராவை தூக்கிட்டு போயிருக்கும்னு.. என்னால நம்ப முடியலங்க ஆதிரா..!!”

கதிர் மிக இயல்பாகத்தான் பேசினான்.. ஆனால் அவன் பேச பேச ஆதிராவிடம் ஒரு மாற்றம்.. அவளுடைய மூளையில் பளீர் பளீரென ஒரு மின்னல் தாக்குதல்.. முகத்தில் ஒருவித திகைப்பு கலந்த இறுக்கம்..!! தொலைந்து போன சில நினைவுகள் அவளது மனதுக்குள் இப்போது ஊற்றெடுக்க.. அவளிடம் மெலிதாக ஒரு தடுமாற்றம்..!!

“எ..என்ன சொல்றீங்க கதிர்..??”

“குறிஞ்சியை பத்தி இந்த ஊர்க்காரங்க சொல்றதெல்லாம் தப்புன்னு நிரூபிக்க.. தனியா நின்னு போராடுனவ தாமிரா..!! அவளுக்கு அந்த குறிஞ்சியாலேயே ஆபத்துனா.. நம்புறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!”

“எ..எனக்கு புரியல.. அவ என்ன போராடுனா..??”

“ஓ..!! உ..உங்களுக்கு அதுலாம் ஞாபகம் இல்லையா..?? குறிஞ்சியோட உண்மைக்கதை என்னன்னு தாமிரா ஒரு ஆராய்ச்சி செஞ்சாளே.. ஞாபகம் இல்ல..??”

இப்போது கதிர் குழப்பமாக கேட்க, ஆதிராவுக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது.. முகத்தை அவஸ்தையாக சுருக்கியவள், நெற்றியை பற்றி பிசைந்து கொண்டாள்.. காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தின் வலி இப்போது இன்னும் அதிகரிப்பது போல ஒரு உணர்வு.. கால்கள் மெலிதாக தடுமாற, அருகிலிருந்த கல்த்தூணை ஆதரவாக பற்றிக் கொண்டாள்..!! தாமிராவின் ஆராய்ச்சி பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாக அவளுக்கு ஞாபகம் வர.. சற்று மூச்சிரைத்தவாறே அமைதியாக அந்த ஞாபகங்களை சேகரித்துக் கொண்டாள்..!!

2

“ம்ம்.. ஞாபகம் இருக்கு..!!” என்றாள் சில வினாடிகளுக்கு பிறகு.

“அதான் சொல்றேன்.. குறிஞ்சிதான் காரணம்னு என்னால நம்ப முடியல..!!”

“கு..குறிஞ்சி இல்லன்னா.. அப்புறம்..??”

கேட்க வந்தததை முழுதாக முடிக்காமலே நிறுத்தினாள் ஆதிரா..!! அவளுடைய முகத்தையே கதிர் ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு தயங்கி தயங்கி தடுமாற்றமாக அவளிடம் கேட்டான்..!!

“எ..எனக்கு.. எனக்கு ஒரு சந்தேகம் இருக்குங்க ஆதிரா.. சொ..சொல்லட்டுமா..??”

ஆதிரா வேறெங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. கதிரின் முகத்தை ஏறிடாமலே ‘வேண்டாம்’ என்பது போல தலையசைத்தாள்.. மெலிதான, வறண்டுபோன குரலில் சொன்னாள்..!!

“வே..வேணாம் கதிர்.. நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு தெரியும்..!!”

அவ்வளவுதான்.. அதன்பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை.. ஆளுக்கொரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.. அசைவேதுமின்றி உறைந்து போயிருந்தனர்..!! சூரியனின் வெளிச்சம் இப்போது சுத்தமாக வற்றியிருக்க.. சூழ்நிலையில் இருளின் அடர்த்தி அகிகமாகிக்கொண்டே சென்றது..!!

“நேரமாயிடுச்சுங்க ஆதிரா.. கெளம்பலாமா..??”

“ம்ம்.. கெ..கெளம்பலாம்..!!”

மண்டபத்தின் வாயிலை நோக்கி இருவரும் மெல்ல நடந்தனர்.. நடக்கும்போதே ஆதிரா கதிரிடம் கேட்டாள்..!!

“எ..எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..??”

“சொல்லுங்க..!!”

“நாளைக்கு ஒருநாள் எனக்கு கார் ட்ரைவ் பண்ணனும்..!!”

“கண்டிப்பா..!!”

“தேங்க்ஸ்..!!”

“எ..எங்க போகணும்..??”

“வேக்ஸின் ஃபேக்டரி..!!”

3

அத்தியாயம் 14

அடுத்தநாள் காலை எட்டு மணிக்கே கதிர் ஆதிராவின் வீட்டுக்கு வந்தான்.. ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த சிபி, அவனை புன்னகையுடன் வரவேற்றான்..!!

“ஹாய் கதிர்.. எப்படி இருக்க..??”

“நல்லா இருக்கேங்க.. நீங்க எப்படி இருக்கீங்க..??”

“எனக்கென்னப்பா.. நல்லா இருக்கேன்..!! என்ன.. காலாங்காத்தாலேயே வீட்டுக்கு வந்திருக்குற..??” சிபி கேட்டுவிட்டு கதிரை கேள்வியாக பார்க்க, அவன் இப்போது சற்று தடுமாற்றமாகவே பதில் சொன்னான்.

“ஆ..ஆதிரா.. ஆதிராதான் வர சொல்லிருந்தாங்க..!!”

கதிர் அவ்வாறு சொன்னதுமே சிபியின் முகம் சட்டென சுருங்கிப் போனது.. அதே நேரத்தில்.. வெளியே கிளம்ப தயாராகி, படியிறங்கி வந்த ஆதிராவை காண நேர்ந்ததும்.. அவனுடைய எரிச்சல் அதிகமாகவே செய்தது.. மனைவியின் முகத்தை ஏறிட்டு முறைத்தான்..!!

“சொன்னா கேக்க மாட்டேல..??”

என்று சன்னமான குரலில் முணுமுணுத்தான்.. ஆதிரா அவனுக்கு பதில் சொல்லவில்லை.. ‘ப்ளீஸ்த்தான்’ என்று பார்வையாலேயே கெஞ்சினாள்..!!

“ஹ்ம்.. என்னவோ பண்ணிட்டு போ..!!”

என்று சலிப்பாக சொல்லிவிட்டு சிபி செய்தித்தாளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்..!! ஆதிராவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. கதிரை ஏறிட்டு ‘வாங்க.. போலாம் போலாம்..’ என்று சைகையால் சொன்னவாறே வாசலை நோக்கி நடந்தாள்..!!

“அ..அப்போ நான் வர்றேன்..!!” என்று கதிர் சொன்னதற்கு சிபியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

தான் செய்கிற காரியங்களில் தனது கணவனுக்கு உடன்பாடு இல்லை என்பது ஆதிராவுக்கு தெளிவாக புரிந்தது.. நேற்று இரவு விஷயத்தை சொன்னபோதே ‘ஏன் இந்த தேவையில்லாத வேலைலாம்..??’ என்று எரிச்சல் பட்டுக்கொண்டான்..!! ஆனால்.. அதையும் மீறி.. தங்கை மீது அவளுக்கிருந்த அன்பும், அவளுக்கு என்னவானது என்று உறுதிப் படுத்திக்கொள்கிற ஆர்வமும்.. அவளை அந்த காரியங்களை செய்ய சொல்லி உந்தித்தள்ளின..!! அதுவுமில்லாமல்.. சும்மாவே அவள் இன்று செல்லவிருக்கிற இடத்துக்கு வர சிபி பிரியப்படமாட்டான் என்பது அவளுக்கு முன்கூட்டியே தெரியும்.. அதனால்தான் கார் ஓட்ட கதிரை துணைக்கு அழைத்திருந்தாள்..!!

மலைப்பாதையில் பயணம் புரிவதற்கு ஏற்றது என.. பல வருடங்களுக்கு முன்பு தணிகைநம்பி வாங்கிய ஜீப் அது..!! ஆதிராவின் குடும்பம் அகழியில் இருந்து சென்றபிறகு.. அதிகமாக உபயோகிக்கப்படாமல் கொட்டாரத்திலேயே நின்றிருக்கும்..!! அதில்தான் இப்போது ஆதிராவும் கதிரும் கிளம்பினார்கள்.. ஆரம்பத்தில் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தனர்..!!

ஆதிரா குறிப்பிட்ட அந்த தடுப்பூசி மருந்து தொழிற்சாலை.. அகழியின் இன்னொரு மூலையில் இருக்கிறது.. அந்த தொழிற்சாலையை அடைய அகழியின் முக்கிய வீதிகளை கடந்துதான் செல்லவேண்டும்..!! அந்த பாதையிலேயே.. ஊருக்குள் நுழைவதற்கு முன்பாகவே.. ஒரு மலைச்சரிவின் உச்சியில் தனியாக நின்றிருந்த, அந்த சிதலமடைந்த வீட்டின் வழியே ஜீப் சென்றது.. நூறு வருடங்களுக்கு முன்பாக குறிஞ்சி வாழ்ந்த வீடு.. இப்போதெல்லாம் அருகில் செல்வதற்கே பலரும் அஞ்சி நடுங்குகிற வீடு..!!
Like Reply


Messages In This Thread
RE: கண்ணாமூச்சி ரே ரே - by ju1980 - 05-05-2022, 03:58 PM



Users browsing this thread: 3 Guest(s)