கண்ணாமூச்சி ரே ரே
#29
பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறமே பரவிப் படர்ந்திருந்தது.. மலைகளில் முளைத்திருந்த மர, செடி, கொடிகளின் பச்சை..!! சிகரங்கள் அனைத்தும் குளிருக்கு இதமாய் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தன.. முகடுகளை சுற்றிலும் அடர்த்தியாய் வெண்பனி மூட்டங்கள்..!! உடலை ஊசியாய் துளைக்கிற ஈரப்பதம் மிக்க குளிர்காற்று.. நாசிக்குள் நுழைந்திட்ட அந்த குளிர்காற்றில் யூகலிப்டஸின் வாசனை..!! பச்சைமலையை பொத்துக்கொண்டு வெள்ளையாய் வெளிக்கொட்டுகிற தூரத்து அருவி.. அந்த அருவியின் சீற்றத்தை இங்குவரை கேட்ட அதன் சப்தத்திலேயே புரிந்துகொள்ள முடிந்தது..!!


OLYMPUS DIGITAL CAMERA

பாறையை செதுக்கி அமைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில்.. பாம்பென ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு தொடர்வண்டி..!! பக்கவாட்டில் குறுகலாய் கிடந்த அந்த தார்ச்சாலையில்.. பனிசூழ பயணித்துக் கொண்டிருந்தது வெண்ணிற ஸ்கார்ப்பியோ..!! கொண்டையூசி வளைவுகள் நிரம்பிய சிக்கலான மலைப்பாதை அது.. கவனத்துடன் நிதானத்தையும் கலந்து காரோட்டிக் கொண்டிருந்தான் சிபி..!! மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவாறு.. மலைச்சரிவு மரங்களில் மனதை செலுத்தியிருந்தாள் ஆதிரா..!! குளிருக்கு வெடவெடத்த அவளது தளிர் உதடுகளை எதேச்சையாக பார்த்த சிபி..

“ஸ்வெட்டர் வேணா எடுத்து போட்டுக்கடா..!!” என்றான் கனிவாக.

“இல்லத்தான்.. பரவால.. இன்னும் கொஞ்ச நேரந்தான..??” அமர்த்தலாக சொன்னாள் ஆதிரா.

பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. குழலாறு குறுக்கிட்ட அந்த இடத்தில்.. பாதை இரண்டாக பிரிந்து கொண்டது..!! இடது புறம் செல்கிற பாதை அகழிக்கு இட்டுச்செல்லும்.. வலது புறம் திரும்பினோமானால் களமேழி வந்துசேரும்..!! சிபி காரை இடதுபுறம் செல்கிற சாலையில் செலுத்தினான்..!!

ஆதிரா ஜன்னலுக்காக சற்றே தலைசாய்த்து தூரமாக பார்வையை வீசினாள்.. மலையுச்சியை செதுக்கி வடிக்கப்பட்ட சிங்கமுக சிலையொன்று.. இங்கிருந்தே தெளிவாகவும், பிரம்மாண்டமாகவும் காட்சியளித்தது..!! குபுகுபுவென மேனியெங்கும் பற்றிக்கொண்ட நெருப்புடன்.. குறிஞ்சி குதித்து கீழுருண்ட அதே மலையுச்சி..!!

ஐம்பது வருடங்களுக்கு முன்பாக.. குறிஞ்சியின் அட்டகாசத்தை தாங்கமாட்டாத அகழி மக்கள்.. மலையுச்சியில் நரசிம்மருக்கு சிலைவடித்து வணங்க ஆரம்பித்தனர்..!! அப்போது உச்சிமலை என்று அழைக்கப்பட்ட அந்த இடம்.. அதன் பிறகிலிருந்து சிங்கமலை என்று வழங்கப்படுகிறது..!! அந்த சிங்கமலையின் அடிவாரத்தில் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்தது.. குறிஞ்சியை உள்வாங்கிக்கொண்ட குழலாறு..!!

“ஆத்துல தண்ணி ரொம்ப அதிகமா போற மாதிரி இருக்கு.. இல்லத்தான்..??” கேட்ட மனைவிக்கு,

“ம்ம்.. ஆமாம் ஆதிரா.. அப்படித்தான் தெரியுது..!!”

பாதையில் இருந்து பார்வையை எடுக்காமலே பதில் சொன்னான் சிபி..!! சற்று தூரம் சென்றதும்.. குழலாறை கடக்கும் குறுகலான ஆற்றுப்பாலம் வலதுபுறமாக வந்தது..!! சிபி காரின் வேகத்தை வெகுவாகவே குறைத்து.. அந்தப்பாலத்தை நிதானமாக கடந்தான்..!! அதன்மேலும் இரண்டு மைல் தூரம்.. மலைப்பாதையில் மெல்ல மெல்ல மேலேற.. அழகும் அமானுஷ்யமும் கொஞ்சும் அகழி வந்து சேர்ந்தது..!!

நூறு வருடங்களில் அகழி மிகவும் மாறியிருந்தது.. அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் அகழியை மட்டும் விட்டுவைக்குமா என்ன..?? மலைமரங்களுக்கு நடுவே கால் அகற்றி கம்பீரமாக நிற்கும் மூன்று செல்ஃபோன் டவர்கள்.. வீடுகளின் மேற்கூரைகளில் சேட்டிலைட்டுக்கு சமிக்ஞை அனுப்புகிற டிஷ் ஆன்டனாக்கள்.. காய்கறி மார்க்கெட்டுக்கு பக்கத்து சந்தில் ஒரு கணினி மையம் கூட உண்டு..!!

அகழியின் மக்கள்தொகை இப்போது ஆயிரத்தை நெருங்கியிருந்தது..!! புதிய தலைமுறையினர் புகலிடம் தேடி வேலைக்காக வெளியூர் சென்றிருக்க.. அதற்கு முந்தைய தலைமுறையினரே அந்த ஆயிரத்தில் பெரும்பங்கினர்..!! குடிசைகள் வெகுவாக குறைந்து போயிருந்தன.. ஓட்டு வீடுகள் அதிகமாக முளைத்திருந்தன..!! ஊரைச் சுற்றி ஆங்காங்கே தேயிலை தோட்டங்கள்.. ஊருக்கு வெளியே ஒரு தேயிலை தொழிற்சாலையும், ஒரு தடுப்பூசி மருந்து தொழிற்சாலையும்..!! அதுமட்டுமில்லாமல் காளான் வளர்த்தல், கம்பளி நெய்தல் என்று சுயதொழில் செய்வோரும் இருக்க.. அகழி மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் வந்ததில்லை..!!

17

கார் ஊருக்குள் நுழைந்து மெல்ல பயணிக்க ஆரம்பித்த நேரம்.. கார்மேகம் திரண்டிருந்த வானமும் தூறல் போட ஆரம்பித்திருந்தது..!! மதிய நேரத்திலும் மங்கலான வெளிச்சத்திலேயே காணக்கிடைத்தது அகழி..!! நூறு வருடத்துக்கு முந்தைய கரடுமுரடான சாலைகள் எல்லாம்.. இப்போது தரமான தார்ச்சாலைகளாய் மாறிப்போயிருந்தன..!! சாலைக்கு பக்கவாட்டில் அடுக்கடுக்காய் வீடுகள்..!! ஒவ்வொரு வீட்டுக்கு முன்பாகவும்.. வெள்ளெருக்கம் வேரில் செய்யப்பட்ட ஒருவகை பொம்மைகள் தொங்கவிடப் பட்டிருந்தன.. பேய், பிசாசு, காத்து, கருப்பு என எல்லாவற்றையும் அண்டவிடாமல் செய்கிற சக்தி.. அந்த பொம்மைகளுக்கு உண்டென்பது அகழி மக்களின் நம்பிக்கை..!!

உடலுக்கு ஸ்வெட்டரும், தலைக்கு மப்ளருமாக காட்சியளித்தனர் ஊர்ஜனங்கள்.. எல்லோருடைய முகங்களிலும் இயல்பாகவே ஒரு இறுக்கம் குடியிருந்தது.. ஆண்களின் உதடுகளில் சுருட்டு.. பெண்களின் கண்களில் மிரட்சி..!! எதிர்ப்பட்டவர்களில் ஒருசிலர் காருக்குள்ளிருப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் செய்தனர்.. இவர்களும் காருக்குள் இருந்தவாறே அவர்களுக்கு பதில் வணக்கம் வைத்தனர்..!! ஊரைப்பற்றி ஏதேதோ பேசிக்கொண்டே வீட்டை நோக்கி பயணித்தனர்..!!

“புதுசா ஏதோ ஹோட்டல் வந்திருக்கு அத்தான்..!!”

“புதுசுலாம் இல்ல ஆதிரா.. அது ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு..!!”

அகழியை விட்டு சற்றே ஒதுங்கி.. தன்னந்தனியாக நின்றிருக்கும் தணிகை நம்பியின் மாளிகை வீடு..!! அகலமாகவும், நீளமாகவும் வேயப்பட்ட ஓட்டுக்கூரை.. கடுக்காய், முட்டையின் வெள்ளைக்கருவெல்லாம் கலந்த கலவையை பூசிக்கொண்டு பளபளக்கும் பக்கவாட்டு சுவர்கள்..!! வீட்டை சுற்றி விரவியிருக்கும் பச்சைப் பசேலென்ற புல்வெளி.. அந்த புல்வெளியினூடே வளைந்தோடி வீட்டு முகப்பில் சென்றுமுடியும் சிமெண்ட் சாலை..!! வீட்டுக்கு ஒருபுறம் அமைதியான குழலாறு.. மறுபுறம் ஆளரவமற்ற அடர்ந்த காடு..!! அந்த காட்டுக்குள் மேலேறும் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றால்.. சிங்கமலையின் உச்சியை சென்றடையலாம்..!!

கார் வீட்டை அடைவதற்குள் மழை வலுத்துக் கொண்டது.. காற்றும் பலமாக வீசியடித்தது..!! காம்பவுண்டுக்குள் நுழைந்து, சிமெண்ட் சாலையில் சீறிய காரின் மேற்கூரையில் மழைத்துளிகளின் சடசட சப்தம்..!! கார் வீட்டுக்குள் வந்து நின்றதுமே.. கையில் விரித்து வைத்த குடையும், காற்றில் படபடக்கிற புடவை தலைப்புமாக.. காரை நோக்கி ஓடிவந்தாள் வனக்கொடி.. அவளுக்கு பின்னாலேயே அவளுடைய பதினெட்டு வயது மகள் தென்றலும்..!! காரில் இருந்து ஆதிரா முதலில் கீழிறங்க.. அவள் நனைந்துவிடாமல் சென்று குடைபிடித்தாள் வனக்கொடி..!!

“ஆதிராம்மாஆஆ..!! இப்போ பரவாலயாம்மா உனக்கு.. இந்த பாதகத்தியால உன்னை வந்து பாக்க கூட முடியல..!! எப்படிமா இருக்குற..??” என்று அன்பாக கேட்டாள்.

“நான் நல்லா இருக்கேன்மா.. நீங்க எப்படி இருக்கீங்க..??”

“எனக்கு என்னம்மா.. இருக்கேன்..!!” வனக்கொடி சலித்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தப்பக்கமாக சிபியும் காரைவிட்டு வெளிப்பட,

“அய்யா.. சிபிக்கண்ணு.. நல்லாருக்கியாய்யா..??” அவனை ஏறிட்டு கேட்டாள் வனக்கொடி.

“ம்ம்.. நல்லாருக்கேன்மா..!!”

“கல்யாணத்தோட கடைசியா பாத்தது.. ஹ்ஹ்ம்ம்ம்..!!! சரி சரி.. சீக்கிரம் உள்ள வாங்க.. நனைஞ்சுற போறீங்க..!! ஹ்ம்.. இந்த மழை சனியன் ஏன்தான் இப்படி பண்ணுதுன்னு தெரியல.. நைட்டு பூரா பெஞ்சுச்சு.. இப்ப மதியமே மறுபடியும் ஆரம்பிச்சிடுச்சு..!!” எரிச்சலாக சொன்ன வனக்கொடி மகளிடம் திரும்பி,

“ஏய் தென்றலு.. டிக்கியை தெறந்து பெட்டிலாம் ரூம்ல கொண்டு போய் வைடி..!!” என்று உத்தரவிட்டாள்.

OLYMPUS DIGITAL CAMERA

அம்மாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு.. காரின் பின்பக்கமாக ஓடினாள் தென்றல்..!! சிபியும், ஆதிராவும் வராண்டாவை அடைந்து நிதானமாக நடைபோட.. அவர்களிடம் புலம்பலாக பேசிக்கொண்டே அவர்களுக்கு முன்னால் பரபரப்பாக நடந்தாள் வனக்கொடி..!!

“திடுதிப்புன்னு ஃபோன் பண்ணி வரேன்னு சொன்னதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. வீட்ல எல்லாம் அப்படியே போட்டது போட்டபடி கெடந்துச்சு.. நானும் தென்றலும் சேந்து இப்போத்தான் எல்லாத்தையும் ஒதுக்கி சுத்தம் பண்ணுனோம்..!! சமையல் இனிமேத்தான் ஆரம்பிக்கனும்.. நீங்க குளிச்சுட்டு வர்றதுக்குள்ள எப்பிடியாவது ரெடி பண்ணிடுறேன்.. சரியா..?? ரெண்டு புள்ளைகளும் ரெம்ப நாள் கழிச்சு வர்றீக.. ஏதாவது கவுச்சி எடுத்துட்டு வந்து ஆக்கி வைக்கலாம்னா.. வெளியிலயே போமுடியாத மாதிரி இந்த மழை வேற.. ச்சை..!!”

“அதுலாம் ஒன்னும் வேணாம்மா.. சிம்பிளா ஏதாவது பண்ணுங்க போதும்..!!” என்றாள் ஆதிரா.

“ம்ம்.. சாம்பாரும், ரசமும் வச்சுரட்டுமா..?? அப்பளமும், உருளைக்கெழங்கும் பொரிச்சுடுறேன்..!! நாளைக்கு வேணா எதாவது கவுச்சி ஆக்கிக்கலாம்..!!”

“ம்ம்..!!”

“சரி.. நீங்க ரூம்ல போய் குளிச்சு ரெடியாகுங்க.. நான் சமையக்கட்டுக்கு போய் வேலையை பாக்குறேன்..!!”

சொல்லிவிட்டு வேறுபக்கமாக நடந்தாள் வனக்கொடி..!! இரண்டு மூன்று அடி எடுத்து வைத்தவள்.. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் மீண்டும் இவர்கள் பக்கமாக திரும்பி,

“ஆங் ஆதிராம்மா.. கீசரு ரிப்பேரா போச்சும்மா.. வெண்ணி போட்டு பாத்ரூம்ல எடுத்து வச்சிருக்கேன்.. பகுந்து குளிச்சுக்கங்க..!!” என்றாள்.

“ச..சரிம்மா.. நாங்க பாத்துக்குறோம்..!!”

வனக்கொடி சமையல்கட்டிற்கு திரும்ப.. ஆதிராவும், சிபியும் அவர்களது தங்கும் அறைக்கு நடந்தனர்..!! ஆதிராவுக்கு காலில் ஏற்பட்ட வெட்டுக்காயம் இன்னும் முழுமையாக ஆறியிருக்கவில்லை.. அதனால் ஒருவித அவஸ்தையுடனே மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தாள்.. சிபியும் அவசரத்தை விடுத்து மனைவிக்கு இணையாகவே நடந்து சென்றான்..!! காருக்குள் இருந்து அவர்களுடைய பெட்டியை கைப்பற்றியிருந்த தென்றல்.. அவர்களுக்கு முன்பாகவே அவர்களது அறைக்கு ஓடினாள்..!!

வீட்டின் உட்புறம் விஸ்தாரமாக விரிந்திருந்தது.. அபரிமிதமான வேலைப்பாடு மிக்க அலங்கார வளைவுகளுடன் அழகுற காட்சியளித்தது..!! இரண்டு அடுக்குகளை கொண்ட உட்கட்டமைப்பு.. இத்தாலியன் மார்பிள் பதிக்கப்பட்ட தரைத்தளம்..!! நான்கு திசை மேற்கூரையும் உட்புறமாக இறங்குகிற இடத்தில்.. நீள்சதுர வடிவில் அகலமான நடுமுற்றம்..!! நீண்ட வராண்டா.. நிறைய அறைகள்.. அந்த அறைகளை மூடியிருக்கும் பெரிய பெரிய கதவுகள்.. அத்தனை கதவுகளுக்குமான சாவிகளை மொத்தமாக எடை போட்டாலே ஒரு கிலோவுக்கு மேல் தேறும்..!!

யானையின் கால்களென ஆங்காங்கே நின்று, அந்த வீட்டை தாங்கிப் பிடிக்கும் மரத்தூண்கள்.. வெளவால்களை அண்டவிடாமல் செய்ய, அந்த தூண்களில் செருகி வைக்கப்பட்டிருந்த ஈச்சங்கீற்றுகள்..!! ‘எல்லாம் பர்மா தேக்கு’ என்று தணிகை நம்பி எப்போதும் பெருமைப் பட்டுக்கொள்கிற ஊஞ்சல், நாற்காலிகள், மேஜைகள், அலமாரிகள், அணிகலன் பெட்டகங்கள்..!! தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்பை உணர்த்துகிற மாதிரியான.. சுவற்றோடு பொருந்தியிருந்த எழில்மிகு ஓவியங்கள்..!!

ஆதிராவும், சிபியும் மாடிப்படியேறி அவர்களது அறையை அடையவும்.. அறைக்குள் பெட்டியை வைத்துவிட்டு தென்றல் வெளியே வரவும் சரியாக இருந்தது..!! தென்றலை கண்டுகொள்ளாமல் சிபி அறைக்குள் நுழைய.. ஆதிராவோ அவளைப்பார்த்து ஒரு அன்புப் புன்னகையுடன் கேட்டாள்..!!

“எப்படி இருக்குற தென்றல்..??”

“ந..நல்லா இருக்கேன்கா..!!”

“ஹ்ம்ம்.. பொடவைலாம் கட்டிக்கிட்டு பெரிய மனுஷி மாதிரி ஆயிட்ட..??”

“இ..இல்லக்கா.. சும்மாத்தான்.. இ..இன்னைக்குத்தான் பொடவைலாம்..” தென்றல் வெட்கத்தில் நெளிந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: கண்ணாமூச்சி ரே ரே - by ju1980 - 23-04-2022, 09:52 AM



Users browsing this thread: 2 Guest(s)