Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
முதல் பார்வை: நட்புனா என்னானு தெரியுமா
[Image: Natpunaa-Ennanu-Theriyumaa-Movie-Stills-2JPGjpg]

ஒரே பெண்ணைக் காதலிக்கும் மூன்று நண்பர்களின் கதை 'நட்புனா என்னானு தெரியுமா'.
கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் 10-ம் வகுப்பில் பெயிலாக, அத்தோடு படிப்புக்கு குட் பை சொல்கிறார்கள். ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்று யோசித்து யோசித்தே ஏழு வருடங்களை வீணாக்குகிறார்கள். அதற்குப் பிறகு நம்ம வீட்டு கல்யாணம் என்ற பெயரில் திருமண ஏற்பாடுகளைச் செய்து தரும் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். இதே தொழிலை பல ஆண்டுகளாக நடத்தி வரும் தொழிலதிபர் இளவரசு இதை எதிர்க்கிறார். இதனிடையே ரம்யா நம்பீசனைப் பார்த்ததும் காதல் வயப்படுகிறார் ராஜூ. தன் நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறார். ஒருதலைக் காதல் என்று தெரிந்ததும் கவினும் ரம்யாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அருண்ராஜாவையும் காதலிக்கத் தூண்டி விடுகிறார்.
இந்த மூன்று பேரில் ரம்யா நம்பீசன் யாரைக் காதலிக்கிறார், மற்ற இருவர் என்ன ஆகிறார்கள், மூவரும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததற்குக் காரணம் என்ன, இவர்கள் நட்பு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
அலட்டிக்கொள்ளாமல் கலகலப்பாக திரைக்கதையை நகர்த்திச் செல்லும் அளவுக்கு ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் சிவா அரவிந்த். மாஸ் ஆடியன்ஸைக் கவர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் வைக்காமல் நேர்த்தியாக கதை சொன்ன விதத்தில் அறிமுக இயக்குநரை தாராளமாக வரவேற்கலாம்.
'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' சீரியல்கள் மூலம் பிரபலமாகி, 'சத்ரியன்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த கவின் நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோ ஆகியுள்ளார். படத்தில் கவினுக்குப் பெரிய சவால்கள் எதுவும் இல்லை. புத்திசாலித்தனமான செயல்பாடுகளும் இல்லை.  முகபாவனைகளில் கூட முத்திரை பதிக்கவில்லை. முதல் படம் என்கிற தடுமாற்றமும் தயக்கமும் கவினிடம் எதிரொலிக்கிறது. அதை இனி வரும் படங்களில் சரிசெய்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.
'கனா காணும் காலங்கள்' ராஜூவுக்கு இது முக்கியமான படம். மூன்று நண்பர்களில் நடிப்பால் அழுத்தமாகத் தடம் பதிக்கிறார். காதலிக்காகப் பொங்குவது, நட்பே இல்லை என வெடிப்பது, மருத்துவமனையில் நண்பனிடம் பணம் இல்லை என்பதற்காக செயின் கொடுத்துப் பணம் புரட்டச் சொல்வது என நட்புக்கு இலக்கணம் வகுத்த விதத்தில் ராஜூவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரக்கூடும்.
அருண்ராஜா காமராஜ் குணச்சித்திரம் கலந்த நகைச்சுவை நடிப்பை  நல்கிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார். கவினிடம் அவரின் வீட்டு மொட்டைமாடியில் பேசும்போது நல்ல நண்பனாக ஸ்கோர் செய்கிறார்.
ரம்யா நம்பீசன் தான் படத்தின் மையம். படம் முழுக்க அவர் இருக்கிறார். ஆனால், அவரது நடிப்பு படத்துக்கு எந்தவிதத்திலும் பலம் சேர்க்கவில்லை.
அழகம்பெருமாள், மன்சூர் அலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், சுஜாதா, ரமா, தீப்பெட்டி கணேசன், இளவரசு என்று படத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். இதில் வழக்கமான கேரக்டர் என்றாலும் இளவரசு கொஞ்சம் தனித்துத் தெரிகிறார்.
யுவாவின் ஒளிப்பதிவு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. தரண் இசையில் ஜெயச்சந்திர ஹஷ்மியின் வரிகளில் அந்தர் பல்டி அடிக்க மாட்டேன் ரசிக்க வைக்கும் ரகம். பின்னணி இசையில் உறுத்தல் இல்லை. நிர்மல் முதல் பாதியில் சில இடங்களில் தயங்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.
படம் கதைக்களத்துக்குள் பயணிக்க வெகு நேரமாகிறது. இளவரசுவின் ஆரம்பகட்டப் பேச்சுகள் அலுப்பையும் சோர்வையும் வரவழைக்கின்றன. நம்ம ஊரு கல்யாணம் என்று ஷட்டரைத் திறந்த  பிறகே கதை சூடுபிடிக்கிறது. ரம்யா நம்பீசனின் வருகைக்குப் பிறகு கதையின் பயணம் மாறுகிறது.
நட்புக்கான முக்கியத்துவம் குறித்தோ, அவர்களுக்குள் இருக்கும் மறக்க முடியாத நினைவுகள் குறித்தோ படம் பேசவில்லை. பிரிவுக்கான வலியை சரியாகச் சொல்லவில்லை. ஆனால், இதையெல்லாம் மறக்கச் செய்கிற அளவுக்கு நகைச்சுவை வொர்க் அவுட் ஆகியிருப்பது படத்தின் பெரும் பலம்.
ஜாலியாகப் படம் பார்க்க நினைப்பவர்கள் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தை ரசிக்கலாம்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 20-05-2019, 05:39 PM



Users browsing this thread: 12 Guest(s)