screw driver ஸ்டோரீஸ்
"ஒய்.. என்ன.. கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..??" என கிண்டலான குரலில் கேட்டான்.

"எ..என்ன உளர்ற.. எதை கண்டுபிடிக்க முடியாதா..??" சங்கீதா அசோக்கை பார்த்து குழப்பமாக கேட்டாள்.

"என்னதான் ஆயிரம் குயில்களுக்கு மத்தில கூவ ட்ரை பண்ணாலும்.. காக்காவோட வாய்ஸ் தனியா காட்டிக் கொடுத்துடும் சிஸ்டர்.. கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி.. ஹாஹா..!!" சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். அவ்வளவுதான்.. அண்ணனின் நக்கலில் சங்கீதா இன்ஸ்டன்டாய் டென்ஷன் ஆனாள்.

"யாருடா காக்கா.. யாரு காக்கா..?? குடிக்காரப்பயலே..!!" என்று அவன் தலையில் குட்டு வைக்க முயன்றாள்.

"நீதாண்டி காக்கா.. அண்டங்காக்கா.. மண்டைக்காக்கா.. கொண்டைக்காக்கா.. கொர்ர்ர்ர்... கொர்கொர்ர்ர்...!!"

காக்கா மாதிரி கத்தி காட்டிய அசோக், அவள் கையிலிருந்த ரிமோட்டை படக்கென பறித்தான். தங்கை தன்னை எரித்து விடுவதைப்போல் பார்ப்பதை, சற்றும் சட்டை செய்யாமல் டிவி பக்கமாய் திரும்பி சேனலை மாற்றினான்.

"இப்போ அந்த சாங்கை வைக்கப் போறியா இல்லையா நீ..??" சங்கீதாவின் குரலில் அனல் தெறித்தது.

"முடியாது.. என்ன பண்ணுவ..??" அசோக்கின் குரலில் அலட்சியம் மிகுந்திருந்தது. எந்த சேனலிலும் நில்லாமல் ஒவ்வொரு சேனலாக தாவிக்கொண்டே சென்றவன், எரிச்சலில் முணுமுணுத்தான்.

"ச்சே.. எல்லா சேனல்லயும் ஏதாவது ப்ரோக்ராம் போட்டு உசுரை வாங்குறானுக.. ஒரு சேனல்லயும் அட்வர்டைஸ்மன்டே காணோம்..!!"

என்று சலிப்பாக முணுமுணுத்து தங்கையின் டென்ஷனை பல மடங்காக்கினான். அப்புறம் ஒரு தமிழ் சேனலில் 'ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்..' என்று ஏர்டெல் விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க, உடனே முகம் மலர்ந்து போய்,

"ஆங்.. இது சேனல்..!!"

என்று சந்தோஷமாக சொன்னவன், ஆர்வமாக அட்வர்டைஸ்மன்ட் பார்க்க ஆரம்பித்தான். சங்கீதா அவனிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயல, படக்கென கக்கத்தில் செருகிக்கொண்டான். அண்ணனின் செய்கையில் கடுப்பான சங்கீதா,

"ரிமோட்டை குடுறா.. குடிக்காரா.. நான் சாங் பாக்கணும்..!!" என்று சண்டை போட்டாள்.

"குடுக்க முடியாது போடி.. நான் ஆட் பாக்கணும்..!!"

"ஆ..மாம்.. இவர் பெரிய ஆட் ஃபில்ம் அய்யாச்சாமி.. ஆட் மட்டுந்தான் டிவில பாப்பாரு..!!" சங்கீதா நக்கலாக சொல்ல,

"ஆ...மாம்.. இவுங்க பெரிய சாதனா சர்ர்ர்றுக்கம்.. சாங் மட்டுந்தான் டிவில பாப்பாங்க.. போடி போடி..!!" என்று கவுண்ட்டர் கொடுத்தான் அசோக்.

[Image: RA+4.jpg]

சங்கீதா உச்சபட்ச கடுப்புடன் அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக் தங்கைக்கு டென்ஷன் ஏத்திவிட்டதில் எக்கச்சக்க குஷியாகிப்போய், மனதுக்குள்ளேயே ரகசியமாய் சிரித்துக் கொண்டான். அப்போதுதான் டிவியில் அந்த விளம்பரம் போட்டார்கள். அசோக்கின் கம்பெனியில் இருந்து தயாரான ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தை பார்த்ததுமே, அசோக் புரையேறிப்போன மாதிரி பதறிப் போனான். கக்கத்தில் இருந்த ரிமோட்டை உடனே எடுத்து, அவசரமாய் சேனலை மாற்ற முயன்றான். பதட்டத்தில் வேறேதேதோ பட்டன்களை அவன் விரல்கள் அழுத்த, சங்கீதா இப்போது ரிமோட்டை பிடுங்கிக் கொண்டாள்.

"எதுக்கு மாத்துற..?? ஓடட்டும் ஓடட்டும்.. உன் லட்சணம் இந்த உலகத்துக்கு தெரியட்டும்..!!" என்று திடீர் உற்சாகத்துடன் சொன்னாள்.

"ஏய்.. சேனலை மாத்துடி..!!" அசோக் அவமானத்தில் கத்த,

"முடியாது போ..!!" பழிப்பு காட்டிய சங்கீதா, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். டிவியில் ஓடிய விளம்பரத்தை பார்த்து பார்த்து கைகொட்டி சிரித்தாள்.

"ஹாஹாஹாஹா..!! 'என்ன வெண்மை.. என்னென்ன வெண்மை.. என்ன புதுமை.. என்னென்ன புதுமை..'..!! ச்சே.. என்ன சாங்கு.. சான்சே இல்ல ப்ரதர்.. கொன்னுட்ட போ..!! ஹாஹாஹாஹா..!!"

"ஏய்.. ரிமோட்டை குடுடி..!!"

"ஹாஹாஹா..!! ஏன் ப்ரதர்.. இந்த கேவலமான வெளம்பரத்தை பாத்தபிறகும்.. எந்த கேனைப்பயலாவது அந்த வாஷிங் பவுடரை வாங்குவான்னு நீ நெனைக்கிற..?? ம்ம்..?? ஹாஹா.. வெளம்பரம் எடுத்திருக்கான் பாரு.. கருமம்..!! த்தூ..!!!"

"ப்ச்.. இங்க பாரு.. இது ஒன்னும் எங்க ஆட் இல்ல.. நாங்க வெறும் ஆடியோ மிக்சிங் மட்டுந்தான் பண்ணினோம்..!!"

"அது போதுமே.. ஆடியோதான இந்த ஆட்லயே ஹைலைட்டு..!! ஹாஹா..!!" என்று சிரித்தவள்,

"என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை..!!" என்று அந்த விளம்பர மெட்டிலேயே பாட, அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான்.

"அடி வாங்காதடி சங்கு..!! ஒழுங்கா சேனலை மாத்து..!!" என்று கத்தினான்.

"முடியாது..!! என்னோட அறிவு ஜீவி அண்ணன் எடுத்த அட்வர்டைஸ்மன்டை.. நான் பாத்தே ஆகணும்..!!"

"ஹேய்.. நான் ஒன்னும் எடுக்கல.. அது ஹிந்தி விளம்பரம்டி.. ஒரிஜினல் சாங்கை தமிழ்ல டப் பண்றப்போ.. அப்படி பண்ணிட்டானுக.. அதுக்கு நான் என்ன பண்றது..??"

"இதுலாம் செல்லாது செல்லாது..!! இது உன் விளம்பரந்தான்..!! 'என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை'..!!" சங்கீதா மீண்டும் பாட, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.

"ஏண்டி சொல்ல சொல்ல..?? உன்னை..???? என்ன பண்றேன் பாரு..??"

என்று கோவமாக கத்திக்கொண்டே சோபாவில் இருந்து படக்கென எழுந்தான். அண்ணனின் ஆத்திரத்தை அளவுக்கதிகமாய் கிளறிவிட்டோம் என்று புரிந்து போனதும், சங்கீதாவும் இப்போது அவசரமாய் சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். அசோக் அவளை அடிப்பதற்காக கையை ஓங்க, அவள் 'டாடீஈஈ..!!' என்று கத்திக்கொண்டே, உள்ளறைக்குள் ஓடினாள். அசோக்கும் விடாமல் அவளை ஆத்திரத்துடன் விரட்டினான்.

சங்கீதாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், அசோக்கின் அப்பா அடிக்கடி நாக்கூசாமல் சொல்கிற ஒரு பொய்யை பற்றி தெரிந்து கொள்ளலாம். 'என் பொண்ணு பொறந்த கொழந்தையா இருந்தப்போ.. அவ பசியில அழுறது கூட.. பாட்டுக்கச்சேரி கேக்குற மாதிரி அவ்வளவு இனிமையா இருக்கும்..!! அதனாலதான் அவளுக்கு சங்கீதான்னே பேர் வச்சுட்டோம்..!!' - இதுதான் அந்த பொய்..!! அப்பாவின் பொய்யை உண்மை என்றே சங்கீதா நம்ப ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தான் பிறந்ததே பாடுவதற்குத்தான் என்று அவள் முடிவு கட்டியபின், சிறுவயதிலேயே அவளுக்கு இசையிலும், பாடலிலும் ஆர்வம் வந்து தொலைத்ததில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இசையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறாள். கர்நாடக சங்கீதத்தையும், ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் பயின்று முடித்து, இப்போது வெஸ்டர்ன் க்ளாசிக்கையும் ஒரு கை பார்ப்பது என்று களத்தில் இறங்கியிருக்கிறாள். தன்னுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் பேச்சின் ஊடே, சின்ன கேப் விட்டால் கூட போதும்.. 'சிங்'க ஆரம்பித்துவிடுவாள் சங்கி..!! தனது இசை என்னும் இன்ப வெள்ளத்தால், இந்த உலகையே மூழ்கடித்து மூச்சு திணற வைக்கவேண்டும் என்பதுதான் அவளது முழுமுதற் லட்சியம்..!!

சங்கீதா எம்.ஏ படித்துக் கொண்டிருக்கையிலேயே, அண்ணனின் நண்பன் அண்ட் பிசினஸ் பார்ட்னர் என்ற முறையில், அடிக்கடி வீட்டுக்கு வருகை தந்த கிஷோர் அவள் கண்களில் விழுந்தான். அவனுடைய குழந்தைத்தனமான முகமும், வசீகர சிரிப்பும்தான் முதலில் அவளை அவன்பால் ஈர்த்தன. 'நீங்க நல்லா பாடுவீங்களாமே.. அங்கிள் சொன்னாரு..' என்று அவன் ஒருநாள் சொன்னபோது, 'ம்ம்.. ஆமாம்..' என்று வெட்கப்பட்டாள். 'ப்ளீஸ்ங்க.. எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்..' என்று அவன் இன்னொரு நாள் கேட்டபோது, 'ஐயோ.. நான் மாட்டேன்பா..' என்று போலியாக மறுத்தாள். வேறொரு நாள் அவனிடம் ஒரு கீர்த்தனை பாடிக்காட்ட, அவன் 'வாவ்.. லவ்லி வாய்ஸ்ங்க உங்களுக்கு..!!' என்று சொல்லிவிட்டான். இவளும் 'ரியல்லி..?? தேங்க்ஸ்..!!' என்று அப்படியே பூரித்துப் போனாள்.

அப்புறம் இவளாகவே அடிக்கடி அவனிடம் பாடிக்காட்டுவாள். அவன் வீட்டுக்கு வராத நாட்களிலும், ஃபோன் போட்டாவது தன் சொந்த காசில் அவன் காதுக்குள் கானமழை பொழிவாள். அவனும் வஞ்சகமில்லாமல் வாய் நிறைய இவளை பாராட்டுவான். ஒருநாள் அப்படித்தான்.. பார்க் பெஞ்சில் தனியாக அவனுடன் அமர்ந்திருந்த வேளையில் ஒரு பாடல் பாடினாள். பாடி முடித்ததும் அவன் 'லவ்லி வாய்ஸ்..' என்று சொல்வான் என்று, அவள் தலைகுனிந்து ஆசையுடன் காத்திருக்க, அவனோ 'லவ் யூ..!!' என்று சொல்லி குண்டை தூக்கி போட்டான்.

அவ்வளவுதான்..!! சங்கீதா மிரண்டு போனாள். வெறிநாய் ஒன்று பின்னாலேயே விரட்டுவது போல, திடுதிடுவென ஒரே ஓட்டமாய் வீட்டுக்கே ஓடிப்போனாள். பெட்டில் விழுந்து, இரண்டு தலையணைகளை எடுத்து நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டும், மார்புக்குள் எழுந்த படபடப்பு அடங்கவே மறுத்தது. 'டெம்ப்ரேச்சர்லாம் நார்மலாத்தான் இருக்கு.. அப்புறம் ஏன் உடம்பு மட்டும் உனக்கு இப்படி நடுங்குது..??' என்று கவலையாக கேட்ட அப்பாவை பார்த்து, தெர்மாமீட்டர் கவ்விய வாயுடன் திருட்டுமுழி முழித்தாள்.

அன்றிலிருந்து ஒரு நான்கைந்து நாட்களுக்கு. அவள் கிஷோரை பார்க்கவில்லை.. பேசவில்லை.. முக்கியமாக அவன் காதில் பாடவில்லை..!! ஆனால்.. அவளுடைய எண்ணம் முழுவதும் அவனே நிறைந்திருந்தான்..!! அந்த நான்கைந்து நாட்களும் அவளுடைய மனதுடன் சண்டை போட்டு.. கேள்வி கேட்டு.. விவாதம் செய்து.. விரல் நகங்களை எல்லாம் கடித்து துப்பி.. அதன்பிறகுதான் அந்த உண்மையை அவள் கண்டுபிடித்தாள்..!! உடனே.. அவளுடைய அறையை விட்டு ஓடிவந்து.. கண்டு பிடித்த உண்மையை.. நடுஹாலில் நின்று சத்தம்போட்டு கத்தினாள்..!!

"YESSSS....!! I'M IN LOVE....!!!!!"

கண்டுகொண்ட காதலை காதலனிடம் அறிவிக்காமல், ஹாலில் நின்று அவள் அவ்வாறு கத்தியதற்கு காரணம் இருக்கிறது. அது என்னவென்று ஏற்கனவே உங்களுக்கு புரிந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் இன்னும் சிறிது நேரத்தில் நீங்களே புரிந்து கொள்வீர்கள். சங்கீதாவும், கிஷோரும் இப்போது இருவீட்டார் சம்மதத்தோடு சுதந்திரமாய் காதலித்துக் கொண்டிருக்கிறாள். 'மூத்தவனுக்கு முடிச்சுட்டுத்தான் எளையவளுக்கு..!!' என்று அம்மா கறாராய் சொல்லிவிட்டதால், அசோக்கின் திருமணத்திற்காக இப்போது சங்கீதாவும், கிஷோரும் வெயிட்டிங்..!!

இப்போதும் சங்கீதா தினமும் கிஷோரின் காதில் பாடுகிறாள். அவன் பாராட்ட மறந்து போனாலும், இவள் மறவாமல் கேட்டு வாங்குகிறாள். 'சினிமால ப்ளேபேக் பாடனுண்டா.. நீதான் எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்..' என்று அவனை நச்சரிக்கவும் ஆரம்பித்திருக்கிறாள். சரி.. இப்போது..

"பாருங்க டாடி.. சும்மா சும்மா என்னை அடிக்க வர்றான்..!!" என்று கத்திக்கொண்டே அப்பாவின் பின் சென்று பம்மினாள் சங்கீதா.

"பாரு மம்மி.. சும்மா சும்மா அவ என்னை கேலி பண்ணிட்டே இருக்குறா..!!" என்று குழைந்துகொண்டே அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு முறையிட்டான் அசோக்.

"ஏண்டா சின்னப்புள்ளையை போட்டு அடிக்க வர்ற..??" அசோக்கிடம் எகிறினார் அவன் அப்பா.

"ஏண்டி எந்த நேரமும் பச்சைப்புள்ளையை போய் கேலி பண்ணிட்டே இருக்குற.. கொழுப்பா உனக்கு..??" சங்கீதாவிடம் சீறினாள் அவள் அம்மா.

"ஆமாம்.. பச்சைப்புள்ளையாம் பச்சைப்புள்ளை..!! உன் பச்சைப்புள்ளை என்ன வேலை பண்ணிட்டு வந்திருக்குன்னு தெரியுமா உனக்கு..??" சங்கீதா அந்த மாதிரி திருப்பி கேட்கவும்,

"எ..என்ன.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??" என்று ஒருகணம் குழம்பிய அம்மா, அப்புறம் அவனிடமே திரும்பி,

"என்னடா பண்ணிட்டு வந்த..??" என்று கேட்டாள்.

"நா..நான்.. நான் என்ன பண்ணுனேன்.. நான் ஒண்ணும் பண்ணலையே..??" அசோக் தடுமாற்றமாய் சமாளிக்க முயன்றான்.

"நடிக்கிறான் பாரு.. திருட்டுப்பய.. திருட்டுப்பய..!! உண்மையை சொல்லுடா..!!" சங்கீதா கத்தினாள்.

"ஏய்.. எதுக்குடி இப்ப அவனைப்போட்டு திட்டுற.. சரி நீ சொல்லு.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??"

"ம்ம்ம்..?? நல்லா தண்ணி போட்டுட்டு வந்திருக்கான் மம்மி உன் புள்ளை..!!" சங்கீதா சொல்லவும் அசோக்கின் அம்மா அதிர்ந்தாள்.

"என்னடா சொல்றா இவ..??" என்று மகனை திரும்பி பரிதாபமாக பார்த்தாள்.

"ஐயோ.. இ..இல்ல மம்மி.. இவ சும்மா சொல்றா..!!"

"ஏய்.. யாருடா சும்மா சொல்றா..?? எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு.. கிஷோர் எல்லாம் சொல்லிட்டான்..!!"

சங்கீதா ஒருமாதிரி பெருமையாக சொன்னாள். கிஷோர் உளறிவிட்டான் என்று தெரிந்ததுமே, அசோக் அப்படியே நொந்து போனான். அதற்கு மேல் எப்படி சமாளிப்பது என்று புரியாமல், இமைகளை மூடி நெற்றியை பிசைந்தான். பிறகு தலையை மெல்ல தொங்கப் போட்டுக் கொண்டான்.

"பாரு.. உன் பச்சைப்புள்ள லட்சணத்தை..!!"

அம்மாவுக்கு சூட்டை கிளப்பிவிட முயன்றாள் சங்கீதா. ஆனால் அவளோ 'என்னடா மகனே இதெல்லாம்..?' என்பதுபோல அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அசோக்கின் அப்பா சற்றே கடுமையான குரலில் அவனிடம் சீறினார்.

"ஏண்டா.. பொறந்த நாளும் அதுமா போய்.. குடிச்சுட்டு வந்திருக்கியா..?? நீலாம் எப்படிடா உருப்படப் போற..??" என்று ஆரம்பிக்கவுமே, அசோக்கின் அம்மாவுக்கு பொறுக்கவில்லை.

"ப்ச்.. இப்போ எதுக்கு தேவை இல்லாம கத்துறீங்க..?? ஏ..ஏதோ.. பொறந்த நாளுன்னு ஒரு ஆசைல பண்ணிட்டான்.. விடுங்க..!! உங்கள மாதிரி வாரத்துக்கு ஒருதடவைன்னு கணக்கு வச்சா குடிச்சுட்டு இருக்கான்..??" என்று கணவரை பார்த்து கத்தி, அவரை கப்சிப் ஆக்கினாள். மகளையும் 'ஐயையே.. அவ்ளோதானா..??' என்று மண்டை காய விட்டாள். அப்புறம் மகனிடம் திரும்பி,

"சரி போ.. கை கழுவிட்டு வா.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடு..!!" என்று எதுவுமே நடவாத மாதிரி கனிவாக சொன்னாள்.

"ஹாஹா.. அதெல்லாம் தொரை வெளிலயே நல்லா கொட்டிட்டு வந்துட்டாரு மம்மி..!! கிஷோர் அதையும் சொல்லிட்டான்..!!" சொல்லிவிட்டு சிரித்த தங்கையை, அசோக் இப்போது நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

"என்னடா.. சாப்பிட்டு வந்துட்டியா..??" அம்மாவுடைய குரல் இப்போது நிஜமாகவே ரொம்ப பரிதாபமாக ஒலித்தது.

"ம்ம்..!!"

"ப்ச்.. என்னடா நீ.. பொறந்த நாளும் அதுவுமா.. நான் உனக்காக எல்லாம் ஆசையா சமைச்சு வச்சுட்டு உக்காந்திருக்கேன்..?? சரி.. மம்மி உனக்காக ஸ்பெஷலா ஹப்ஷி அல்வான்னு ஒன்னு பண்ணுனேன்.. அதையாவது கொஞ்சம் சாப்பிடுறியா.??" அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்தப்பக்கம் சங்கீதா களுக் என்று சிரித்தாள்.

"ஏய்.. என்னடி இளிப்பு..??" அம்மா திரும்பி பார்த்து சீறவும் சங்கீதா வாயை மூடிக்கொண்டாள். அசோக்கின் அப்பா இப்போது கிண்டலாக சொன்னார்.

"ப்ச்.. பொறந்த நாளும் அதுவுமா கப்ஸி பெப்ஸின்னு ஏண்டி அவனைப் போட்டு வதைக்கிற.. எங்களுக்குத்தான் வேற வழி இல்ல.. அவனையாவது விடு.. பாவம்..!!"

"ம்ம்.. ஏன் பேச மாட்டீங்க.. அப்பாவும், மகளும் நல்லா தின்றதையும் தின்னுப்புட்டு..?? குடுக்குறப்ப வேணான்னு சொல்றதுக்கு என்னவாம்.. வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருந்தீங்க..??"

'ம்க்கும்.. நீ கிண்டுன அல்வாவைத்தான் வச்சிருந்தேன்..!! வேணாம்னா விடுற ஆளா நீ..' அப்பா வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார்.

"என்னது..?? என்ன சொன்னிங்க இப்போ..??"

"அவங்க கெடக்குறாங்க விடு மம்மி.. நீ போய் அல்வா எடுத்துட்டு வா.. நான் சாப்பிடுறேன்..!!"

அசோக் அந்த மாதிரி இடையில் புகுந்து சாந்தமாக சொன்னதும், அவன் அம்மாவின் டென்ஷன் சுத்தமாக வடிந்து போனது. அவளுடைய முகம் முழுதும் பூரிப்பும் மலர்சியுமாய் மாறிப்போனது.

"ம்ம்ம்.. ஒரு நிமிஷம்டா கண்ணா.. உக்காரு.. மம்மி எடுத்துட்டு வர்றேன்..!!" என்றவாறு கிச்சனுக்கு ஓடினாள்.

அசோக்கின் அப்பா அம்மாவைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், உங்களுக்கு ஒரு கெஸ் குவிஸ்..!! அசோக்குக்கு அவனுடைய பெயரை யாருடைய நினைவாக அவன் பெற்றோர் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?? கெஸ் செய்யுங்கள்..!!

நாராயணசாமி அசோக்கின் அப்பாவுக்கு வைத்த பேர் பிச்சுமணி..!! ஆனால்.. அசோக்கின் வீட்டுக்கு யாராவது வந்து 'பிச்சுமணி இருக்காரா..??' என்று கேட்டால்.. வீட்டில் இருப்பவர்களே சில வினாடிகள் குழம்பி, பிறகு யோசித்துதான் 'ம்ம்.. இருக்காரு இருக்காரு.. உள்ள வாங்க..' என்பார்கள். இதே 'இங்க மணிபாரதி வீடு எதுங்க..?' என்று அந்த ஏரியாவில் சென்று எவரைக் கேட்டாலும் இவர்கள் வீட்டை நோக்கி சரியாக கை நீட்டிவிடுவார்கள்..!!

பி.யு.ஸி படிக்கிற காலத்திலேயே பிச்சுமணிக்கு கதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் வந்து தொலைத்தது. எந்த நேரமும் எதையாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார். கல்லூரி படிக்கிற காலத்தில் தான் கிறுக்கியதை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்புகிற பாவச்செயலையும் செய்யத் துணிந்தார். ஆனால் நல்லவேளையாக இவர் அனுப்பிய கதைகள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்தாக இவரிடமே திரும்பி வந்து சேர்ந்தன. கல்லூரி முடித்து கனரா வங்கியில் காசாளராக சேர்ந்தபின்னும், கதை எழுதும் ஆர்வம் அவரை விட்டு காணாமல் போனதா என்றால்.. போகவில்லை..!! தொடர்ந்து பத்திரிக்கைகளை நோக்கி கதை அம்பு எய்து கொண்டே இருந்தார்.

அப்படித்தான் ஒருமுறை.. அப்போது வெளிவந்திருந்த இருவர் உள்ளம் என்ற திரைப்படத்தின் கதையை.. கொஞ்சம் உல்ட்டா செய்து 'உள்ளம் இரண்டு' என்ற தலைப்பில் இவர் ஒரு கதை எழுதி அனுப்பி வைக்க.. எடிட்டரின் கவனக்குறைவாலோ.. எப்படியாவது பக்கத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ.. அந்த வார வாரமலரில் அந்தக்கதை வெளியாகியது.. ஒரு எழுத்தாளர் பிறந்து தொலைத்தார்..!!

மதுரைக்கருகே ஒரு சிற்றூரில்.. எஸ்.எஸ்.எல்.ஸி படித்து முடித்துவிட்டு.. காலையிலும், மாலையிலும் அடுப்பூதுவதை தவிர.. வேறு எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள் பாரதி..!! வெட்டி நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாது.. கிழிந்த காகிதத்துண்டு எதுவும் கீழே கிடந்தால் கூட.. அது எவ்வளவு சிதிலமடைந்த நிலைமையில் கிடைத்தாலும்.. எடுத்து படித்துக் கொண்டிருப்பாள்..!! வாரமலரில் வெளியான அந்த 'உள்ளம் இரண்டு' பாரதியின் கண்ணில் பட்டுவிட்டது.. உருகிப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. பித்துப் பிடிக்காத குறை..!! கதை ஆசிரியரை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும் என்று தோன்ற.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டையில் தனது பாராட்டை எழுதி அனுப்பினாள்..!!

தன்னுடைய எழுத்துக்கு முதன்முறையாக ஒரு விசிறி.. அதுவும் பெண் விசிறி.. அதனினும் திருமணம் ஆகாத பெண் விசிறி.. பூரித்துப் போனார் பிச்சுமணி..!! உடனே பதில் அனுப்ப நினைத்தார்.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டை வாங்க அஞ்சலகத்துக்கு ஓடினார்..!! அந்த சின்ன அட்டையில் எத்தனை நன்றிகளை அடக்க முடியுமோ.. அத்தனையும் அடக்கி எழுதி.. அப்படியே மட்டையாக மடங்கி.. ஒரு பதில் அனுப்பினார்..!! ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் இருந்து உடனே தனக்கு பதில் வந்துவிட்டதில்.. புளங்காகிதம் அடைந்து போனாள்.. பாரதி..!!

கதை பிரசுரம் ஆன துணிச்சலும்.. பாரதியின் மடல் தந்த உற்சாகமும் சேர்ந்து கொள்ள.. பிச்சுமணி அதன்பிறகு நிறைய கதைகளை சுட ஆரம்பித்தார்..!! சுட்டதில் நிறைய பத்திரிகைகளிலும் வெளிவந்தன.. பிச்சுமணி, பாரதியின் அட்டை பரிமாற்றமும் தொடர்ந்தது.. அரசாங்க கஜானாவிலும் நிறைய அஞ்சு பைசாக்கள் குவிய ஆரம்பித்தன..!! ஆரம்பத்தில் கதை பற்றி பேசிய பேச்சு.. அப்புறம் நட்பாக மாறி.. பிறகு காதலாக கனிந்து.. உருகி.. ஓடி.. அஞ்சல் அட்டை வழியாக ஒழுக ஆரம்பித்தது..!! மாதவரத்தில் இருந்து மதுரை வரை அஞ்சல் அட்டையை தூக்கி சுமக்கும் போஸ்ட்மேன்கள், இவர்களுடைய அட்டைகளுக்கு 'Followers' ஆக ஜாயின் செய்து கொண்டார்கள்..!! அஞ்சலகத்தில் குவிந்து கிடக்கும் அட்டைகளில் இவர்களுடைய அட்டைகளை தேட ஆரம்பித்தனர்..!! 'பாரதியே.. பார் ரதியே.. என்னைப்பார் ரதியே..!!' என்று பிச்சுமணி பாரதியை நினைத்து அச்சுபிச்சுத்தனமாக எழுதுகிற கவிதையை, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற தபால்நிலையத்தில் முத்திரை குத்துகிற ஒருவர் படித்து, 'பேஷ்.. பேஷ்.. கவிதை ரொம்ம்ம்ம்ப நன்னா இருக்கு..' என்று உசிலைமணி ஸ்டைலில் பாராட்டிவிட்டு முத்திரை குத்துவார்..!!

"உன் ஆளு கதை இந்த வாரம் கல்கில வருதாம்மா.. மறக்காம படிச்சுடு..!!" - அஞ்சல் அட்டையை நீட்டியவாறே போஸ்ட்மேன் சொல்லும்போதே, பாரதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும்.

"ஐயோ.. அடுத்தவங்களுக்கு வந்த போஸ்ட் கார்ட்லாம் படிப்பிங்களாண்ணே..?? ப்ளீஸ்ண்ணே.. படிக்காதிங்கண்ணே..!!" - குனிந்த தலை நிமிறாமல் கெஞ்சலாக சொல்வாள். 
"ஹாஹா.. பயப்படாதம்மா.. படிக்க கூடியதை மட்டுந்தான் நான் படிப்பேன்..!!" - அவர் சிரிப்புடன் சொல்லிவிட்டு சைக்கிளை மிதிப்பார்.

பாரதி இந்தமாதிரி முகம் தெரியாத ஒருவருடன் அஞ்சல்வழிக்காதல் பயிலுவது அவளுடைய வீட்டுக்கு ஒருநாள் தெரிந்து போனது. கொதித்துப் போயினர். அவளுக்கு உடனே திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து வீட்டுச்சிறை வைத்தனர். பாரதி சற்றும் மனம் தளரவில்லை. வீட்டு சிறையில் இருந்து தப்பித்து ஓடி, தபால் நிலையத்தில் தஞ்சம் புகுந்தாள். அங்கிருக்கும் அரதப்பழசான டெலிபோனில் சென்னைக்கு ட்ரங் கால் புக் செய்து பேசி, ஒருவழியாக பிச்சுமணியை பிடித்தாள். அவரும் அவளை உடனே மதராசபட்டினத்துக்கு வந்து சேர சொன்னார். சென்னைக்கு ரயில் ஏறிவிட்டாள் பாரதி..!! பிறகு சென்னை வந்து.. காதலனை கைபிடித்து.. பிற்காலத்தில் அசோக், சங்கீதா ஆகிய அரிய செல்வங்களை ஈன்றெடுத்து..

திருமணம் ஆனபிறகு பிச்சுமணி வேறு புனைப்பெயரில் கதை எழுத துவங்கினார்.. தன்னுடைய கதைக்காக படங்கள், பிற புதினங்களில் இருந்து பாதியை உருவுகிற பிச்சுமணி, புனைப்பெயருக்காகவும் பாதியை தன் மனைவியின் பெயரில் இருந்து உருவிக்கொண்டார்.. அப்படி உருவித்தான் மணிபாரதி உருவானார்..!! அன்றிலிருந்து மணிபாரதியின் எழுத்துப்பயணம் நிற்கவே இல்லை.. காசாளராக வேலை பார்த்துக்கொண்டே கதை எழுதுவதை கண்டின்யூ செய்தார்..!! இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.. அவ்வளவும் காதல் கதைகள்தான்.. காதல் ரசத்தின் கடைசி சொட்டையும்.. கருணையே இல்லாமல் கசக்கி பிழிந்து சாறெடுத்துத்தான்.. தனது கதைகளையே அவர் எழுதுவது..!!

சரி.. குவிஸ்க்கு ஆன்சர் கெஸ் செய்தீர்களா..?? நானே சொல்கிறேன்.. விடையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்..!! வீட்டு சிறையில் இருந்த பாரதி.. பிச்சுமணியுடன் இணையவேண்டும் என்று போட்ட ப்ளான்.. நாராயணசாமி - கோமளவல்லி அண்ட் கோ போட்ட ப்ளான் மாதிரி பக்கா ப்ளான் எல்லாம் இல்லை..!! ஒரு அவசரமான அவசியத்தில் போட்ட அரைகுறை ப்ளான்..!! அதனால்தான்.. வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும்போது.. அடுக்களையிலோ, அரிசிப்பானையிலோ அம்மா ஒளித்து வைத்திருக்கிற பணத்தை அபேஸ் செய்துகொண்டு எஸ்கேப் ஆகவேண்டும் என்ற அறிவு.. பாரதிக்கு இல்லவே இல்லை..!! அவளுக்கு வழக்கமாக அஞ்சல் அட்டை நீட்டும் போஸ்ட்மேன்.. தபால் நிலையத்தில் தஞ்சமும் கொடுத்து, மெட்ராசுக்கு ட்ரங் கால் புக் செய்து கொடுத்ததும் இல்லாமல்.. அவளுடன் ரயில்நிலையம் வரை சென்று.. யாரோ மருதப்பனின் மகன் மயில்சாமிக்கு வந்த மணியார்டர் பணத்தில் டிக்கெட்டும் எடுத்து.. அவளை பத்திரமாக ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார்..!! 'அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவ'னின் பெயர்.. அசோகன்..!!

தன் காதலுக்கு உதவி செய்த போஸ்ட்மேனின் பெயரையே தன் தலைச்சன் பிள்ளைக்கு வைத்துவிட்டாள் பாரதி. வீட்டில் இருக்கும் அனைவரிடமும் எகத்தாளமாகவும், எரிச்சலாகவும் பேசுகிற அசோக், ஒரு வெகுளித்தனமான குழந்தையாக மாறிப்போய் விடுவான் என்றால், அது அவனுடைய அம்மா பாரதியிடம்தான்..!! அம்மா மீது அவனுக்கு அளவிலா அன்பு.. அவளுக்கும் மகன் மீது..!! சற்றுமுன் அசோக்கின் நண்பர்கள் பயந்த அளவுக்கோ, மணிபாரதி கேலி செய்த அளவுக்கோ.. பாரதி ஒன்றும் சமையல் கொடுமைக்காரி இல்லை.. நன்றாகவே சமைப்பாள்..!! ஆனால்.. அவள் செய்யும் தவறு.. புதுப்புது உணவுப்பண்டங்களை உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பதுதான்..!! சமையல்கலையில் அவ்வளவு ஆர்வம்..!! ஆனால்.. அவளுடைய ஆர்வத்துக்கு தங்களை 'ஆராய்ச்சி எலி' மாதிரி உபயோகிக்கிறாளே என்றுதான்.. அனைவரும் பாரதியைப் பார்த்து தெறித்து ஓடுவதும், சன்னமான குரலில் கேலி செய்வதும்..!! ஆனால்.. அசோக் என்றுமே அம்மாவை குறை சொன்னது இல்லை.. அம்மா தயாரிக்கிற புதுவகை உணவு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், முகம் சுளிக்காமல் முழுவதும் சாப்பிட்டு முடிப்பான்..!!

ம்ம்ம்... அசோக் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பற்றி பார்த்தாயிற்று அல்லவா.. யாராவது விட்டுப்போய் விட்டார்களா..?? ம்ம்ம்ம்... ஆமாம்... இவர்கள் இல்லாமல் அந்த வீட்டில் இரண்டு ஐந்தறிவு ஜீவன்களும் இருக்கின்றன.. நாராயணசாமி-கோமளவல்லி ஆளுக்கொன்றாய் வளர்க்கும் நாய்க்குட்டிகள்.. அதில் ஒன்று ஆண் நாய்.. ஒன்று பெண் நாய்.. அந்த இரு நாய்களும் கூட.. அவ்வப்போது ஒருவர் முகத்தை அடுத்தவர் முகர்ந்து முகர்ந்து பார்த்து.. ரொமான்ஸ் செய்து கொண்டிருக்குங்கள்..!!

இந்தமாதிரி.. கலையும், காதலும் அசோக்கின் வீட்டில் எங்கும் நிறைந்திருந்தது..!! கலை என்பது அசோக்கிற்கு ஓரளவு கைவரப் பெற்றிருந்தாலும், காதல் என்பது தன் கருணைப்பார்வையை அவன் மீது வீசவே இல்லை..!! அந்த ஏக்கத்தையும் நெஞ்சில் வைத்துக்கொண்டு, அடுத்தவர் காதலில் குறைகண்டுபிடித்து மனதை தேற்றியும் கொள்கிற அசோக், ஒரு பரிதாபகரமான ஜீவன்தான்..!!

மூளைக்குள் இன்னும் சற்று போதை மிச்சமிருக்கும் நிலையுடன், அம்மா தட்டில் கொண்டு வந்துகொடுத்த அல்வாவை ஸ்பூனால் விண்டு விண்டு அசோக் விழுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கருகே அமர்ந்திருந்த பாரதி, தன் கையால் செய்த இனிப்பை மகன் ஆசையாக உண்ணும் அழகை, கண்களாலேயே அள்ளி பருகிக் கொண்டிருந்தாள்.

"இதுக்கு பேர் என்ன மம்மி.. தப்ஸி அல்வாவா..??" அசோக் கேட்க,

"தப்ஸி இல்லடா தடிமாடு.. ஹப்ஷி..!!!!" பாரதிக்கு முந்திக்கொண்டு சங்கீதா அவனுக்கு பதில் சொன்னாள்.

"ஹப்ஷி அல்வாவா..??" அசோக் இப்போது முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு கேட்டான்.

"ஆமாண்டா கண்ணா.. பாகிஸ்தான்ல ரொம்ப பாப்புலர்..!!" பாரதி பெருமையாக சொன்னாள்.

"ஓஹோ..!!"

இப்போது மணிபாரதி, அவ்வளவு நேரமாக புரட்டிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணாடியை கழற்றி கையில் எடுத்தவாறே, திடீர் ஞாபகம் வந்தவராய் அசோக்கிடம் கேட்டார்.

"ஏண்டா.. இன்னைக்கு ஏதோ ஒரு ப்ரொட்யூசரை பாக்கப் போறேன்னு சொன்ன.. என்னாச்சு..??"

"ஹாஹா.. அது தெரியாதா உங்களுக்கு.. இவன் செம சொதப்பு சொதப்பிட்டான் டாடி..!!" சங்கீதா மீண்டும் தான் ஒரு முந்திரிக்கொட்டை என்பதை நிரூபித்தாள்.

"ப்ச்.. சொதப்பலாம் ஒன்னும் இல்ல..!!" அசோக் தங்கையை ஏறிட்டு முறைப்பாக சொன்னான்.

"பொய் சொல்லாத.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு..!!"

"இங்க பாரு.. நடந்தது என்னன்னு தெரியாம பேசாத..!!" அசோக் சங்கீதாவிடம் எகிற,

"ஏய்.. அவளை விடுடா...!! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!!" மணிபாரதி இடையில் புகுந்து கேட்டார்.
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 19-05-2019, 12:18 PM



Users browsing this thread: 8 Guest(s)