10-02-2022, 05:51 AM
காகித பூக்கள்
நல்ல அரக்கு நிறத்தில் ஆரஞ்சு வர்ண பார்டர் வைத்த பட்டுப் புடவையில் மதுமிதா தேவதையாக ஜொலித்தாள். கிறிஸ்டல் மற்றும் மணி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற ஜாக்கெட் இன்னும் அவளின் அழகை கூட்டியது. இடையை மீறி நீண்டிருந்த கருநாகம் போன்ற நீண்ட ஜடையில் மூன்று வரிசைகளாக தொங்கவிடப்பட்டிருந்த மொட்டு மலராத மல்லி சரசமாடி கொண்டிருந்தது. குறுகிய நெற்றியும், வகிட்டில் வைக்கப்பட்ட சிகப்பு நிற குங்குமமும் அவள் அழகை மேலும் துலங்கச் செய்து பிரகாசமாக்கின. அவள் அழகிற்கு தானும் சளைத்தவனில்லை என காட்டிக் கொண்டான் வாசுதேவன். வானம் கொண்ட நீலநிறத்தில் கறுப்பு கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், அடர்ந்த கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்டும், தூக்கி வாரிய ஹேர் ஸ்டைலும் அவனை ஆணழகனாக்கின.
“என்னடா மது, ரெடியா? இதோ, அதோன்னு சொல்லி ஒரு மணி நேரமாச்சு. உன் அண்ணன் குழந்தையை தொட்டிலில் போட தான் போறோம். நீ வரும் வேகத்தை பார்த்தால் பிறந்த நாளுக்கு தான் போவோம் போலிருக்கே” என்று பரிகாசம் செய்தான்.
”சாரிபா. இதோ ரெடியாயிட்டேன். புது பட்டுப்புடவையில கொசுவம் வைக்க வரல. அதான் லேட் ஆய்டுச்சி. நீங்க காரை ஸ்டார் பண்ணி வைங்க. நான் வீட்டை பூட்டிட்டு வரேன்”
மதுமிதாவும், வாசுதேவனும் காதல் மணம் புரிந்தவர்கள். இருவரும் ஒரே ஜாதியாக இருந்ததால் திருமணம் யார் தடையுமில்லாமல் இனிதே முடிவு பெற்று வருடம் பத்தாகி விட்டது. யார் கண்பட்டதோ இந்த ஆதர்ச தம்பதிகள் கொஞ்சி மகிழ குழந்தை செல்வம் இல்லை. வாசுதேவன் செல்வத்தில் திளைப்பவன். வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லாதவன். இருந்தாலும், தந்தை விட்டுச் சென்ற ஏற்றுமதி, இறக்குமதி தொழிலை திறம்படவே நடத்தி வருகிறான். உடன் பிறந்தவர்கள் என்று யாருமில்லை. வாசுவுக்கு பத்து வயதாக இருக்கும் போதே அவனை பெற்றவள் உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டாள். தந்தையும் இவனுக்கு மணம் முடித்த கையோடு புண்ணியஸ்தலங்கள் நோக்கி பயணப்பட்டார்.
மதுமிதா முற்போக்கு சிந்தனை கொண்டவள். குழந்தை இல்லை என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்த போதிலும் அதை வெளிக்காட்டி கொண்டதில்லை. அப்படி வெளி காட்டிக் கொண்டால பார்ப்பவர்களின் இரக்கத்திற்கு ஆளாக கூடும் என்பதால் அதை தவிர்த்தாள். குழந்தை இல்லை என்பதற்காக ஒருபோதும் சாமியையோ, சாமியாரையோ நாடிச் சென்றதும் இல்லை. அவளுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு தங்கை. அண்ணனுக்கு போன தையில் தான் திருமணம் முடிந்திருந்தது. இதோ குழந்தையும் பெற்று தொட்டிலில் போட போகிறான். தங்கைக்கு திருமணமாகி பத்தாவது மாதமே பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். இப்போது அந்த குழந்தைக்கு ஒரு வயதாகிறது.
வாசுவும், மதுமிதாவும் விசேஷத்துக்கு வந்து இறங்கிவிட்டார்கள். சம்பிரதாய விசாரிப்புகள் எல்லாம் முடிந்து அனைவரும் குழந்தையோடு தொட்டிலருகே சூழ்ந்தனர். வயதில் மூத்த பழம் ஒன்று குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு அதன் காதில் பெயரையும் கிசுகிசுத்துவிட்டு சென்றது. "கொழந்தைக்கு அத்தைங்க வந்து கொழந்தே காதுல பேரை சொல்லிட்டு போங்கோ" என்று அழைத்தவுடன் மதுமிதா கணவனுடன் தொட்டிலருகே சென்றாள். அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் குசுகுசுவென பேசிக்கொண்டனர். அந்த சமயம் பார்த்து மதுமிதாவின் தாய் பொற்கொடி அவளை தடுத்து, "மது, நீ முதல்ல போக வேண்டாம்மா. உன் தங்கை போகட்டும். எல்லாரும் முடிச்ச பிறகு நீ போ. நான் சொல்ல வர்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன். எல்லாம் குழந்தையோட நன்மைக்கு தான்மா சொல்றேன்" என்றதை கேட்டு மதுமிதாவிற்கு நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போன்றிருந்தது. அப்படியே பின்னோக்கி வந்து நின்றாள்.
தங்கை கனிகா கையில் தன் குழந்தையோடு தவித்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு மதுமிதா அவளிடம் சென்று, " கனி, நீ போய் குழந்தைக்கு பேர் சொல்லிட்டு வா. அதுவரைக்கும் நான் உன் பொண்ணை பார்த்துக்கறேன்" என்றாள்.
"அய்யோ.... இல்ல மது.... அவ யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டா. அழுவ ஆரம்பிச்சுடுவா. உனக்கு எதுக்கு வீண் சிரமம். நானே வச்சுக்கறேன்" என்று நாசூக்காக குழந்தையை தராமல் தவிர்த்தாள்.
இந்த கூத்தையெல்லாம் வாசுதேவன் கண்டும் காணாதவன் போல இருந்தான். மதுமிதாவுக்கு ஆறுதல் சொல்ல போக அது மேலும் அவளை கழிவிரக்கம் கொள்ளச் செய்யுமே என்று அமைதியாக இருந்தான். இனிமேல் அங்கிருப்பதில் பிரயோசனமில்லை என்று உணர்ந்தவளாய் மதுமிதா தாயிடமும், அண்ணன் மனைவிடமும் சொல்லிவிட்டு கிளம்பலாம் என அவர்களிடம் சென்றாள். "அண்ணி, எனக்கு குழந்தையை தூக்கும் தகுதி தான் இல்லாம போச்சு. இந்த செயினையாவது குழந்தைக்கு போடுவீங்களா?" என்று கேட்டவுடன் அண்ணி அவசர அவசரமாக, " என்ன மது அப்படி கேட்டுட்ட? தாராளமா செயினை போடலாம்" என்றாள் வாயில் முப்பத்திரண்டு பற்களும் தெரியும்படி.
மதுமிதா அந்த செயினை குழந்தைக்கு அணிவிக்காமல் அண்ணியின் கையில் கொடுத்துவிட்டு, தாயிடம் சொல்லிவிட்டு கணவனுடன் கிளம்பிச் சென்றாள்.
"என்னங்க, வண்டிய பீச்சுக்கு விடுங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்"
"எனக்கு தெரியும் மது, கண்டிப்பா பீச்சுக்கு போக சொல்லுவேன்னு" என்றபடி உதட்டில் மெல்லிய புன்னகையை தவழவிட்டு காரை பீச் ரோடு பக்கம் திருப்பிச் சென்றான்.
இருவரும் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தை தேர்வு செய்து அமர்ந்தார்கள். சிறிது நேரம் பலவித எண்ணங்கள் மனதில் அலைமோத கடலலைகளை வெறித்து பார்த்து விட்டு சகஜ நிலைக்கு மீண்டு பேச தொடங்கினாள் மதுமிதா.
"குழந்தை இல்லாம இருக்கறது அவ்வளவு பெரிய சமூக குற்றமாங்க? நாமா குழந்தை பிறப்பை தள்ளி போடுறோம்? நமக்கு மட்டும் குழந்தையை கொஞ்சும் ஆசை இல்லையா என்ன? இன்னைக்கு பங்சன்ல கவனிச்சீங்களா? என்னை பெத்த தாயே அண்ணன் குழந்தையை நான் முதல்ல தூக்கி பேர் வைக்க கூடாதுன்னு சொன்னாங்க.கூட பிறந்த தங்கையே அவ குழந்தையை என்கிட்ட தந்தா குழந்தைக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து தர தயங்கினா. பெத்தவங்களும், கூட பிறந்தவங்களுமே என் மனசை புரிஞ்சிக்காத போது இந்த ஊரும் உலகமும் புரிஞ்சுக்காம போனதுல என்ன தப்பு இருக்க முடியும்? இவங்களோட இந்த ஈனத்தனமான செய்கையால என் மனசு எந்த விதத்துலயும் காயப்படல. குழந்தை இல்லையேன்னு மண்ணோட மண்ணாகி போற அளவுக்கு நான் தளர்ந்தும் போகல. அது பிறக்கும் போது பிறக்கட்டும். எனக்கு நம்ம மேல நம்பிக்கை இருக்கு. இதனால கோயில் கோயிலாவும் நான் அலைய போறதில்ல. இவங்களுக்கு பதில் சொல்ற காலம் வரும்போது நான் இவங்கள பார்த்துக்கறேன். கடைசி வரைக்கும் உங்களோட அன்பும், புரிதலும், அரவணைப்பும் இருந்தா அதுவே போதுங்க எனக்கு" என்று ஆதரவாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, அவளுடைய முன் நெற்றி முடிகளை ஒதுக்கி விட்டபடி, " எனக்கு தெரியும் டா மது, இன்னைக்கு பங்க்சன்ல நீ கண்டிப்பா மூட் அப்செட் ஆவேன்னு. உனக்கு அங்கேயே ஆறுதல் படுத்த நினைச்சேன். அது மேலும் உன்னை கவலைப்பட செய்யுமேன்னு சொல்லாம விட்டுட்டேன். உன்னோட இந்த தன்னம்பிக்கையும், தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே. உனக்கு எந்த துறையில் ஆர்வமிருக்கோ அதுல நீ உன்னை ஈடுபடுத்திக்க. உன் எல்லா முன்னேற்றங்கள்லயும் நான் துணையா இருக்கேன். குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும். அதுவரை நமக்கு நாமே குழந்தைகளா இருப்போம்" என்று அவளின் மென்மையான கைகளை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
மேலும் இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் மதுமிதா, தனக்கு பதினைந்து நாட்கள் தள்ளி போனதை தெரிந்து கொண்டு பதட்டப்படாமல், உணர்ச்சி வசப்படாமல் கணவனிடம் சொன்னாள். அவனும் அவ்வாறே உணர்ச்சியை வெளிகாட்டிக் கொள்ளாமல், தாமதிக்காமல் அன்று மாலையே அவர்களின் குடும்ப டாக்டரிடம் சென்றார்கள். செக்கப்பெல்லாம் முடிந்து அவள் தாய்மையடைந்திருப்பதை உறுதி செய்தார். இருவரும் அப்போதும் உணர்ச்சிகளை வெளிகாட்டிக் கொள்ளாமல், வரும் வழியில் ஒரு தரமான இனிப்பகத்தில் இனிப்புகளை வாங்கி குவித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த அனாதை இல்லத்திற்கும், முதியோர் இல்லத்திற்கும் சென்று அவர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன் மனதில் இத்தனை நாள்பட்ட அவமானங்கள், வேதனைகளை கண்ணீரால் கழுவினாள். அவள் கர்ப்பமாக இருப்பதை கூட பிறந்த வீட்டிற்கு தெரியப்படுத்த விரும்பவில்லை. சரியாக பத்தாவது மாதம் அவள் அழகையும், வாசுவின் அழகையும் சரிபாதியாக கொண்டு இளவரசன் பிறந்தான். அந்த குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷத்திற்கு பிறந்த வீட்டினரை அழைத்திருந்தாள். அனைவரும் வந்திருந்தனர். அவளுடைய தாய் பொற்கொடி குழந்தையை தூக்கி கொஞ்ச ஆவலோடு அருகில் வந்தாள். உடனே மதுமிதா, "அம்மா, ஒரு நிமிஷம், என்னுடைய விருந்தாளிகள் வந்துடட்டும். அவங்க தூக்கி ஆசிர்வதிச்சு பேர் வச்சி தொட்டில்ல போட்ட பிறகு நீங்க தூக்கினா போதும்" என்றாள் அமைதியாக. பொற்கொடி அதை கேட்டு விதிர்விதிர்த்து போய் நின்றாள். இருக்கும் அத்தனை முக்கிய உறவுகளும் வந்துவிட்டார்கள். இன்னும் இவள் யாருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.
அப்போது வீட்டினுள் ஒரு பெண்கள் கும்பல் வந்து நுழைந்தது. அவர்களை பார்த்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் கேலியும், கிண்டலும் செய்து முகம் சுளித்து நகைத்தார்கள். ஏனென்றால் வந்திருந்த பாதி பேர் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பாதி பேர் சமுதாயத்தால் மேடையின்றி 'ஏழரை ஒன்றரை', 'ஒன்போது', 'ரெண்டுங்கெட்டான்', 'அரவாணிகள்' என பல பட்டங்கள் சூட்டப்பட்ட திருநங்கைகள். அதில் வந்திருந்த வயதில் மூத்த திருநங்கையில் ஒருவரிடம் மதுமிதா, குழந்தையை எடுத்து தந்து ஆசிர்வதிக்க செய்து பெயரிடச் சொன்னாள். அந்த அம்மாளும் மிகுந்த சந்தோஷத்துடனும், கண்களில் கண்ணீரோடும் குழந்தையை ஆரத்தழுவி உச்சி முகர்ந்து பெயரிட்டு தன்னாலான அன்பளிப்பை மதுமிதா மறுத்த போதும் குழந்தையின் கைகளில் தந்துவிட்டு மதுமிதாவிடம், "அம்மா, தாயே உன்னோட இந்த உயர்ந்த குணத்துக்கு, நீ புருஷன் புள்ளைகளோட நூறு வருசம் நல்லாயிருக்கணும். வட இந்தியாவுல யார் வீட்ல எந்த நல்ல விசேஷங்கள் நடந்தாலும் எங்களை தான் முதல்ல கூப்பிட்டு மரியாதை பண்ணுவாங்க. இந்த ஊர்ல தான் எங்களை யாரும் மதிக்கறது இல்ல. மதிக்கலனாலும் பரவாயில்லமா. மனுசங்களா கூட நினைக்கறதில்ல. எங்க போனாலும் எங்களுக்கு கேலியும், கிண்டலும், தவறான பார்வையும் தான் மிஞ்சும். எரியுற கொள்ளில எண்ணெய ஊத்துற மாதிரி இந்த சினிமாக்காரங்களும் எங்களை நிரந்தரமா கேலி பொருளாவே ஆக்கிட்டாங்க. இந்த மாதிரி பிறப்பெடுத்தது எங்க குத்தமா? எங்கள பெத்தவங்க குத்தமா? எங்களுக்கு குடும்பமா வாழனும்னு ஆசையா இருக்குமா. இந்த சமுதாயம் எங்களை அப்படி வாழ உடாதே. எல்லாரும் உன்னை மாதிரியே நல்ல மாதிரி சிந்திச்சா எங்களுக்கு இந்த நிலைமை ஏன் வர போவுது? எங்க சொந்தங்கள் கூட எங்களை வீட்டு விசேஷத்துக்கு அழைச்சதில்ல. நீ இத்தன வருசம் கழிச்சு குழந்தை உண்டாகி பெத்தெடுத்திருக்க. எங்களையும் ஒரு மனுசியா மதிச்சு கூப்பிட்டு பெத்தவங்களையும் ஒதுக்கி வச்சுட்டு எங்களை முன்னாடி சபைல நிக்க வச்சி கெளரவ படுத்திட்ட மா. எங்களுக்கு இந்த மரியாதையே போதும். ரொம்ப சந்தோஷமா இருக்குமா" என்று கண்களில் நீர் பெருக்கோடு உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
மதுமிதா அடுத்தடுத்து நீண்டகாலம் குழந்தைபேறு இல்லாத பெண்களை அழைத்து குழந்தைக்கு பெயரிடச் சொல்லி வாழ்த்தி செல்லும்படி கேட்டுக் கொண்டாள். அவர்களும் அளவிலா மகிழ்ச்சி கரைபுரண்டோட குழந்தையின் பெயரை காதில் சொல்லி ஆசை தீரும் மட்டும் குழந்தையின் அழகை கண்டு ரசித்து கொஞ்சி விட்டு சென்றனர்.
இவர்களெல்லாம் முடித்தபிறகு தாயின் பக்கம் திரும்பினாள். "என்னமா, நம்ம வீட்டுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதவங்கள அழைச்சு குழந்தைய தொட்டில்ல போல சொன்னேன்னு பார்க்கறீங்களா? என்னை இதுபோல ஒரு நல்ல விஷயத்தை செய்ய உத்வேகமா இருந்தவங்களே நீங்கதானே. அதுக்காக என்னோட நன்றியை தெரிவிச்சுக்கறேன். நீங்க தானே அண்ணனோட குழந்தையை தொட்டிலில் போட்டு பெயர் சொல்ல நான் வந்தபோது குழந்தையில்லாதவள்னு தடுத்தீங்க? நானும் உங்க வயித்துல தானே பொறந்தேன். அண்ணனை போலவும், தங்கச்சிய போலவும் நானும் ஒரு குழந்தைக்கு தாயாவேன்னு ஏன் நம்பல. எப்பவும் பட்ட மரமாவே இருப்பேன்னு முடிவே பண்ணிட்டீங்களாமா? தங்கச்சி கூட அவ குழந்தைய என்கிட்ட தந்தா ஏதாவது ஆகிடுமோன்னு நினைச்சி தரல. இப்படிபட்ட குறுகிய சிந்தனையுள்ள உங்களை அழைச்சு முதல்மரியாதை தருவதை விட, இவ்வளவு நாள் குழந்தையில்லாம நான்பட்ட மனவேதனைகளையும், ரணங்களையும், வலிகளையும் தினம் தினம் சந்திச்சுட்டு இருக்கும் இவங்கள அழைச்சு தந்தா உண்மையான சந்தோஷமும், மனபூர்வ ஆசீர்வாதமும் கிடைக்கும்னு தெரிஞ்சி தான் இவங்கள கூப்டேன். மணமில்லாத காகித மலரை யாரும் தலையிலும் வைக்க மாட்டாங்க. கடவுளுக்கும் மாலையாக்கி போட மாட்டாங்க. குழந்தையில்லாதவங்களும், திருநங்கைகளும் இன்னைக்கு அந்த நிலைமைல தான் இருக்காங்க. வீம்புக்காக உறவுகளை கட்டி அழ நான் தயாராக இல்லை. போதும். இந்த பன்னிரண்டு வருஷத்துல உறவுகளோட உண்மையான முகங்களை நான் பார்த்துட்டேன். நான் பண்ண ஒரே புண்ணியம் எனக்கு கிடைத்த கணவர். அவரோட துணையில்லாம என்னால இத்தனை முள் பாதைகளை கடந்து நான் வந்திருக்கவே முடியாது. எனக்கு இந்த உறவுகளே போதும்" என அவள் உணர்ச்சி பிரவாகமாக மாறி பேசியதை கண்டு அவள் தாய் உட்பட வந்திருந்து அனைத்து உறவுகளும் தலைகுனிந்தனர்.
தன் தாய் பேசுவது முற்றிலும் நியாயமே என்று ஆமோதிப்பது போல தன் பொக்கை வாய் காட்டி சிரித்தது தொட்டிலில் இருந்த குழந்தை