17-05-2019, 09:53 AM
அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு இப்போதைக்கு இல்லை - மீண்டும் ஒத்திவைப்பு
டெல்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட இருந்த இறக்குமதி வரி உயர்வு வரும் ஜூன் 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய அரசு அமைந்த உடன் தான் இது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த இந்திய வந்திருந்த அமெரிக்க வர்ததக செயலாளர் இந்திய அரசு அமெரிக்க நிறுவனங்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை முதலில் நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்று மறைமுகமாக நிர்பந்தப்படுத்திய காரணத்தினால் தான் இந்தியா தனது முடிவை இப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
டெல்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட இருந்த இறக்குமதி வரி உயர்வு வரும் ஜூன் 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய அரசு அமைந்த உடன் தான் இது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த இந்திய வந்திருந்த அமெரிக்க வர்ததக செயலாளர் இந்திய அரசு அமெரிக்க நிறுவனங்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை முதலில் நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்று மறைமுகமாக நிர்பந்தப்படுத்திய காரணத்தினால் தான் இந்தியா தனது முடிவை இப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த ஆடம்பர ஹேர்லி டேவிட்சன் பைக்கிற்கு இந்தியா 100 சதவிகித இறக்குமதி வரி விதித்தது. பின்னர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 50 சதவிகிதமாக குறைத்தது. ஆனாலும் திருப்தி அடையாத அமெரிக்கா போட்டியாக இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது.
இரு நாடுகளும் போட்டி போட்டு இறக்குமதி வரியை உயர்த்தியதால் இரு நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கூடவே இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அளித்திருந்த ஏற்றுமதியாளர்களுக்கான முன்னுரிமை முறைமை திட்டத்தின் (Generalized System of Preferences program) மூலம் வழங்கப்பட்ட அந்தஸ்தையும் திரும்பப் பெறுவதற்கும் அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வந்தது.
ஒருவேளை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கி வந்த முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா திரும்பப் பெறுமானால், இந்தியாவுக்கு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனாலும் மசியாத இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம்பருப்பு உள்ளிட்ட 29 வகையான பொருட்களுக்கான வரியை உயர்த்தியது. இந்த வரி உயர்வானது கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
இருந்தாலும் இந்த வரி உயர்வு முடிவை பின்னர் செப்டம்பர் 18ஆம் தேதி வரையிலும் ஒத்திவைத்து விட்டு இரு நாட்டு வர்த்தக உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்படி மாறி மாறி இறக்குமதி வரி உயர்வை பல முறை இந்தியா ஒத்திவைத்தது,
இதற்கிடையில் வரி உயர்வை திரும்பப் பெறும்படி அமெரிக்கா தீவிரமாக வலியுறுத்தி வந்ததோடு மே 2ஆம் தேதி வரை இறுதிக் காலக் கெடுவும் விதித்தது. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு அளித்து வந்த முன்னுரிமை அந்தஸ்து பறிக்கப்படும் என்று எச்சரித்தது. இதையடுத்து இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்பட இருந்த இறக்குமதி வரி உயர்வை மே 16ஆம் தேதி வரையிலும் ஒத்திவைத்தது.
இறுதியில் கடந்த மே 6ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் இந்தியா வந்தார். மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா கொடுத்து வரும் நெருக்கடியை தளர்த்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருவதால் இறக்குமதி வரி குறைப்பு தொடர்பாக எந்தவித உறுதியான முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இந்தியா உள்ளதை விளக்கிய வர்த்தக அமைச்சரும், இது பற்றிய முடிவை தேர்தல் முடிந்த பிறகே எடுக்க முடியும் என்றும் விளக்கினார்.
இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி உயர்வானது வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒருவேளை இந்தியா இறக்குமதி வரி உயர்வை அமல்படுத்தினால் அமெரிக்கா உடன் மேற்கொண்டுள்ள 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.