24-12-2018, 09:47 AM
கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தியாக, விஷ்ணு விஷால். 'ராட்சசனி'ல் சீரியஸ் போலீஸாக கெத்து காட்டியவர், 'சிலுக்குவார்பட்டி சிங்க'த்தில் வெத்து போலீஸாக சிரிப்பு காட்டியிருக்கிறார். காமெடி படங்களுக்கென அவர் கண்டுபிடித்து வைத்திருக்கும் அதே பழைய எக்ஸ்பிரெஷன்கள்தான் என்றாலும், ரசிக்க வைக்கிறது. வில்லனுக்குப் பயந்து விதவிதமான வேடங்களில் தலைமறைவாய்த் திரிவது, சரவெடி. அதிலும், குடுகுடுப்பைக்காரர் வேடம் போட்டு, பூம்பூம் எருமையோடு திரியும் இடம் அல்டிமேட்!. முறைப்பெண் ராஜீயாக, ரெஜினா கஸான்ட்ரா. அழகாய் இருக்கிறார்! வில்லன் சைக்கிள் சங்கராக, சாய்ரவி. படத்தில் ஒரு ஆஃபாயிலைத் தட்டிவிட்டு அவர் படும் பாடு! ஸ்டேஷன் லாக்கப்பில் சாய்ரவி அடைபட்டுத் தவிக்கும் ஒவ்வொரு ஃப்ரேமும் குபீர் சிரிப்பு. அவரின் வலது கை டோனியாக, யோகிபாபு. பல இடங்களில் காமெடி கவுன்டர்களைத் தெறிக்கவிட்டிருக்கிறார். வேற லெவல் தல! லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், கருணாகரன், லொள்ளு சபா மனோகர், மாரிமுத்து, வடிவுக்கரசி, சௌந்தரராஜா... என எல்லா நடிகர்களும் நிறைவான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். 'கனகா' எனும் கௌரவ வேடத்தில் ஓவியா. சார்... ஓவியா சார்!