Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
1. மாயாறு அருவி


வனவிலங்குகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் முதுமலை அடர் வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள மாயாறு அருவி, சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல, உள்ளூர் பழங்குடிகளே அருகில் நெருங்க முடியாத அருவி. ஊட்டி மலைகளில் உற்பத்தியாகும் ஓடைகள் சீகூர் வனப் பகுதிகளில் ஒன்றிணைந்து மாயாறாக வனவிலங்குகளின் தாகம் தீர்க்கிறது. வனவிலங்குகள் நிறைந்த மாயாறு பள்ளத்தாக்கில் சுமார் 160 மீட்டர் உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.




தெப்பக்காட்டிலிருந்து கக்கநல்லா செல்லும் வழியில் சர்க்கிள் ரோடு வழியாக வனத்துக்குள் சிறிது தூரம் பயணித்தால், மிகப் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் மாயாறு அருவி. இதைக் கண்டு ரசிக்க, கருங்கற்கள் மற்றும் தேக்குமரங்களைக்கொண்டு காட்சிக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்து பள்ளத்தாக்கில் பாய்ந்து ஓடும் அருவியின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.
16 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுமுறைக் காலம் என்பதால், ரூ.300 செலுத்தி மாயாறு அருவியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதி ஆற்றுநீர் முதலைகள் மற்றும் நன்னீர் நாய்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. அருவியின் அழகில் மயங்கி அருகில் செல்ல ஓர் அடி முன்னே வைத்தால், உடல்கூட மிஞ்சாது. எனவே, மிகுந்த கட்டுப்பாடுகளுக்குப் பிறகே அனுமதிக்கின்றனர்.
 [Image: _%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0..._15319.JPG]
2. கேத்ரின் அருவி
மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையின் உள்ளே தேயிலைத் தோட்டங்களின் சிறிய சாலையில் சிறிது தூரம் பயணித்தால், அளக்கரை சோலைக் காடுகளில் உற்பத்தியாகி ஆண்டு முழுவதும் வற்றாது சில்லென ஆர்ப்பரித்துக் கொட்டும் கேத்ரின் அருவி உள்ளது. 250 அடி உயரத்திலிருந்து பள்ளத்தாக்கில் இரு நிலைகளாக அருவி ஆர்ப்பரித்துக் கொட்டுவதைப் பார்த்தால், தலைச்சுற்றிவிடும்.
[Image: _%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0..._15113.JPG]
குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனையிலிருந்து பார்த்தால்தான் கேத்ரின் அருவியின் முழு பிரமாண்டத்தையும் கண்டு ரசிக்க முடியும். கோத்தகிரியில் முதன்முதலாக காபி பயிரிடக் குடியேறிய காக்பர்ன் என்பவரின் மனைவி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. பள்ளத்தாக்குகள் நிறைந்த ஆபத்தான பகுதி என்பதால், இங்கு நடைப்பயணம் மேற்கொள்ளவும் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 [Image: _%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0...15537.jpeg][Image: _%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0...15222.jpeg]
3. காட்டேரி அருவி
நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி அருவி. உயரமான இரண்டு மலைகளுக்கு நடுவே 150 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டும் நீர், அருகிலிருந்து காண்போரை மெய்மறக்கச் செய்யும். காட்டேரி அருவிக்கு மிக அருகில் சாலை செல்வதால் கீழிருந்து அருவியின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்கு அணைகள் கட்டப்பட்டு நீரின் விசையிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம் இங்கு உள்ளது. தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்றாலும், காட்டேரி அணை பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.


 [Image: _%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0...15506.jpeg][Image: _%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0...15135.jpeg]
4.கல்லட்டி அருவி
ஊட்டியிலிருந்து மசினக்குடிக்குச் செல்லும் சாலையில் கல்லட்டி வனப்பகுதியில் உள்ளது, கல்லட்டி அருவி. ஊட்டி தலைக்குந்தா பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், காமராஜ் சாகர் அணையிலிருந்து மாயாற்றைச் சென்றடையும் வழியில் கல்லட்டி வனப்பகுதியில் மலையில் அழகிய அருவியாய்க் கொட்டுகிறது. சீகூர் ஹள்ளா எனப்படும் இந்த நீர்தான் வறட்சிக் காலங்களில் முதுமலை வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் அட்சயப்பாத்திரம். கல்லட்டி அருவி எந்த அளவுக்கு அழகாக உள்ளதோ, அதே அளவுக்கு ஆபத்தானதும்கூட. பல சுற்றுலாப் பயணிகள் இந்த அருவியில் குளிக்க ஆசைப்பட்டு, பலியாகியுள்ளனர். மசினக்குடி வனப்பகுதியைச் செழுமையாக்கும் இந்த அருவியை ரசித்தால் மட்டுமே போதுமானது.
.[Image: _%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0..._15117.jpg]
5.பைக்காரா அருவி
எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கப் பார்க்க சலிக்காத ஒன்று, பைக்காரா அருவி. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நன்கு அறிந்த அருவி. நீலகிரியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளில் மிக அகலமான அருவியாக இருப்பது பைக்காரா அருவிதான். பைக்காரா அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், பாறைகளில் சலசலத்து ஓடி, அருவியாக வனப்பகுதியில் கொட்டுகிறது. வழுக்கும் பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், சுற்றுலாப் பயணிகள் அருகில் செல்லாதவாறு இந்த அருவியைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன. 
[Image: _%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0..._15474.JPG]
6. பவானி சிற்றருவி
பவானி நதி உற்பத்தியாகும் இடமான லக்கிடி பகுதியில், பவானி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேல் பவானி என்றழைக்கப்படும் இந்தப் பகுதியில் பரந்து விரிந்து கிடக்கும் புல்வெளிகள் சோலை மரக் காடுகளில் பெய்யும் மழைநீரைப் புல்வெளிகள் சேமித்து ஆண்டு முழுவதும் பல சிற்றோடைகள் இணைந்து பவானி நிதி உற்பத்தியாகிறது. நீலகிரியில் காணவேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. உள்ளூர் மக்கள் மிகப் புனிதமான இடமாகக் கருதுகின்றனர். இங்கு செல்வதற்கு ஊட்டியிலிருந்து தங்கள் வாகனத்தில் சென்றாலும், அவலாஞ்சியிலிருந்து வனத்துறை சார்பில் உள்ள சூழல் மேம்பாட்டுக் குழுவால் அமர்த்தப்பட்டுள்ள வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.
இன்றளவும் மாசடையாத பகுதியாகப் பராமரிக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகளை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றனர். பவானி உற்பத்தியாகும் இடத்தில் பெரிய அருவி இல்லை என்றாலும், பவானி அம்மன் கோயில் அருகே பாறைகளில் சிற்றருவியாய்க் காட்சியளிக்கும்.  
7. `எருமைப் பள்ளம்' எனும் சுண்டட்டி கோம்ஸ் அருவி
கோத்தகிரியிலிருந்து கொடநாடு செல்லும் வழியில் சுண்டட்டி கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கோம்ஸ் அருவி. மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியாக உள்ளது. உள்ளூர் பகுதியைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகள் மட்டும் தேயிலை பறிக்க இந்தப் பகுதிக்குச் சென்று வருகின்றனர். ஆபத்தான பாறைகள் நிறைந்ததாகவும், கரடி, காட்டு மாடு அதிகம் உலவும் பகுதியாகவும் உள்ளது.
கட்டபெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட இந்த அருவி, ஆரம்ப காலத்தில் `எருமைப் பள்ளம்' எனவும், நாளடைவில் `கோம்ஸ்' அருவி எனவும் அழைக்கப்படுகிறது. முழுக்க பாறைகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மது அருந்துவதையும், பாசி படர்ந்த ஆபத்து நிறைந்த பாறைகள் உள்ள பகுதியில் குளிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதனால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த காலங்களில் இந்த அருவியில் குளிக்கச் சென்ற சில இளைஞர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கண்டிராத பல அருவிகள் இன்னும் உள்ளன. `தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி' என்று அழைக்கப்பட்ட நீலகிரி, காடழிப்பு, அதிகரிக்கும் கட்டடங்கள் போன்ற பல காரணங்களால் நீரோடைகள் அற்றுப்போகும் நிலையில் உள்ளது. இருந்தும் உயிலட்டி , ஓட்டகொடார், தாய்சோலை போன்ற பல அருவிகள் உயிர்ப்புடன் இருந்து வனங்களையும் மனிதர்களையும் வாழவைக்கின்றன. எனவே, நீரோடை மற்றும் அருவிகளைக் கண்டு ரசிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பொருள்களை வீசிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 15-05-2019, 10:22 AM



Users browsing this thread: 95 Guest(s)