நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அவள் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

சாருலதா மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள்.
கிருஷ்ணவேணி வனிதாமணியோடவே முடங்கிவிட்டதால் அவள்தான் வீட்டு வேலைக்காரர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லி பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
னது அறையில் அமர்ந்திருந்த மகேந்திரனுக்கு இன்னமும் தன் தம்பியின் மறைவு அதிர்ச்சியானதாகத்தான் இருந்தது.

அவனை விளையாட்டுப்பிள்ளையாகத்தான் அவன் எண்ணியிருந்தான். அவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டுப்போவான் என்று அவனால் நம்பக்கூட முடியவில்லை.

ஏன் அப்படிச் செய்தான்?

அன்று பார்க்கும்போது கூட தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டவன் மாதிரியே தெரியவில்லை. என்னவோ தூங்குவது போன்றேதான் தெரிந்தது.

தூக்கிலிட்டு இறந்தால் அவர்கள் முகம் எந்த அளவிற்கு கோரமாக இருக்கும் என்று அவன் அறிந்திருந்தான்.

அந்த அடையாளங்கள் எதுவுமே இல்லாமல் முகத்தில் அந்தக் குழந்தைத்தனம் மாறாமல் படுக்கவைக்கப்பட்டிருந்த யுகேந்திரனின் முகம்தான் கண்ணுக்கு முன்னே வந்து நிற்கிறது.

‘இந்த முடிவிற்கு நீ போகும் முன் எங்களைப் பற்றியெல்லாம் நினைத்துப்பார்க்கவில்லையா யுகா? உன்னைப் பெரிதாக பாதித்த விசயம் எது? நீ என்னிடம் சொல்லியிருந்தால் அதை எப்பாடு பட்டாவது கொண்டு வந்து உன்னிடம் சேர்த்திருப்பேனே?’

அவனால் வேலையில் ஈடுபடவே முடியவில்லை.

தலையில் கையை வைத்து அப்படியே சோர்ந்து படுத்துவிட்டான்.

வரமாட்டேன் என்று சொன்னவனை சாருலதாதான் கட்டாயப்படுத்தி அவனை அலுவலகத்திற்கு அழைத்து வந்தாள்.

“வேண்டாம். இனி யாருக்காக சம்பாதிக்க வேண்டும். எனக்குப் பிடிக்கலை.”
“அத்தான் நீங்க சொல்றது சரிதான். இது மாமா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்து. நான் அதுக்காக மட்டும் சொல்லலை. நம்மளை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கு? அவங்களை நடுரோட்டில் விடமுடியுமா? நீங்க புதுசா ஒன்னும் சேர்க்க வேண்டாம். ஏற்கனவே உள்ளதை மட்டும் காப்பாத்துங்க போதும். இந்த நிலைமையில் மாமாவை வரச்சொல்றது நல்லாயிருக்காது. அத்தை கூட மாமா இப்ப இருக்கிறது ரொம்ப அவசியம்.”
அவள் இத்தனைப் பேசிய பிறகுதான் அவன் கிளம்பி வந்ததே.

அவனது சிந்தனையை தொலைபேசியின் சத்தம் கலைத்தது.

அவனுக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. இவன் எடுக்கவில்லை என்றால் சாருலதா எடுக்க வாய்ப்புள்ளது. இதை இணைப்பு அவளது அறையிலும் உண்டு. அவளே எடுக்கட்டும் என்று பேசாமல் விட்டான்.

யாரும் எடுத்தபாடு இல்லை. மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

ஒருவேளை சாருலதா அவன் எடுப்பான் என்று விட்டுவிட்டாளா?

இல்லை. அவள் தனது அறையில் இல்லாமல் எங்காவது சென்றுவிட்டாளா?

சற்றே எரிச்சலுடன் தானே எடுத்தான்.

மறுபக்கம் பேசியது சாருலதாவின் தாய்.

சாருலதாவும் எடுத்துவிட்டாள். அவள் எடுத்தது தெரிந்து வைக்கவேண்டும் என்று நினைத்தவன் செயலாற்றும் முன் தங்கள் குடும்ப விசயம் அடிபடிவே யோசனையோடு வைக்காமல் காத்திருந்தான். தவறு என்று புரிந்தது. ஆனால் அதில் தனக்குத் தேவையான செய்தியொன்று இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

“இன்னும் எத்தனை நாள்மா நீ அங்கேயே இருக்கப்போறே?”

“என்னை என்னம்மா பண்ணச் சொல்றே? எல்லாரும் யுகேந்திரனோட இழப்பைத் தாங்கிக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்குத்தான் அத்தானை கம்பெனிக்கு அழைச்சுட்டு வந்துருக்கேன். எனக்கு மனசாட்சி உறுத்துதும்மா.”

“நீ என்ன பண்ணே?”

“அன்னிக்கு கிருஷ்ணா ஒத்துக்கலைன்னு யுகேந்திரன் அத்தனை வருத்தத்தோட சொன்னான். நான் அப்ப அவன் தவறான முடிவிற்குப் போவான்னு நினைக்கலை. அப்ப மட்டும் நான் அப்படி நினைச்சிருந்தா அவனை தனியா விட்டுருக்க மாட்டேன். அத்தானை அனுப்பி வச்சிருப்பேன். இல்லைன்னா, அத்தைக்கிட்டயாவது அவனைத் தனியா விடவேணாம்னு சொல்லியிருப்பேன்.”

“அதுக்கு நீ என்ன பண்ணுவே? உன்னை இந்த அளவிற்கு புலம்ப வச்ச அவ இன்னும் என்ன பண்றா? போக வேண்டியதுதானே?”

“அவ தான்மா அத்தையைப் பார்த்துக்கிறா?”



“செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு இப்ப என்னவாம் அவளுக்கு? அவளால்தானே எல்லாமும். அவ மட்டும் யுகேந்திரனுக்கு நல்ல பதிலை சொல்லியிருந்தா அவன் ஏன் இந்த மாதிரி தவறான முடிவை எடுக்கப் போறான்? அவன்தான் அவ அந்த வீட்டுக்கு வர காரணமானவன். அவனே இப்ப இல்லைங்கிறப்ப, அவ எதுக்கு இன்னும் இங்க இருக்கனும்?”
“அம்மா. பேசாம இரும்மா. அவளை யுகா அழைச்சுட்டு வந்திருக்கான். அவளை எப்படி மத்தவங்க அனுப்ப முடியும்?”
“ஒரு வருடம் படிப்பு முடியற வரைக்கும்னுதானே அவன் சொன்னான். அதுவும் நல்லபடியா முடிஞ்சுடுச்சே. இன்னமும் என்னாவாம் அவளுக்கு?”

“அவளும் பாவம்தான்மா. அவளுமே யுகேந்திரனோட இந்த முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டா. அவன் இப்படி செய்ததற்கு அவ என்ன செய்வா? பாவம்மா அவ.”
“நீ அவளுக்காக பரிஞ்சு பேச வேண்டாம். அவளால்தான் இன்னிக்கு உன் மாமாவோட குடும்பமே இப்படி இருக்கிறதுக்கு காரணம்.”
“எனக்கும் புரியுதும்மா. அதுக்காக நான் என்ன பண்றது?”

“நீதான் உன் அத்தானுக்குப் புரியற மாதிரி எடுத்துச் சொல்லி அவளை வீட்டை விட்டு அனுப்பற வழியைப் பார்க்கனும். அவ போயிட்டான்னா வீடு விளங்கிடும்.”

அதன் பிறகு நடந்த உரையாடலை கேட்க அவனுக்கு மனமில்லை.

அன்று கிருஷ்ணவேணி கதறி அழுதது கண் முன்னே வந்தது.

யுகேந்திரன் தற்கொலை செய்திருக்க மாட்டான் என்று எத்தனை நிச்சயமாக சொன்னாள்.

ஆனால் அவனது மரணத்திற்கு அவளது மறுப்புதான் என்று கொஞ்சமாவது எண்ணியிருப்பாளா?

வீட்டிற்குச் சென்ற உடன் தன் தந்தையிடம் சொல்லி அவளை ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

வீட்டிற்குள் நுழையவே மகேந்திரனுக்குப் பிடிக்கவில்லை.

அவன் எப்போது வீட்டிற்குள் நுழைந்தாலும் யுகேந்திரன் கண்ணில் படுவான். தன் தாயின் மடியில் படுத்து வம்பிழுத்துக்கொண்டிருப்பான்.

அவன் இல்லை என்றால் அவனைக்கண்டதும் அவனுக்குப் பருகுவதற்கு என்று எதையாவது எடுத்துக்கொண்டு வனிதாமணி வந்து நின்றிருப்பார்.

இப்போது அத்தகைய காட்சி எதுவும் நேரப்போவதில்லை.
வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு அவனது தாயார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விசயம் தெரிந்தது.
இதை ஏன் முன்னமே சொல்லவில்லை என்று கோபப்பட்டான்.

அவன் இன்றுதான் அலுவலகத்திற்குச் சென்றிருப்பதால் அவன் மெதுவாகத் தெரிந்துகொள்ளட்டும் என்று அவனது தந்தை சொல்லியிருந்தார்.

அவன் உடனே மருத்துவமனைக்கு விரைந்தான். அவனோடு சாருலதாவும் விரைந்தாள்.

“பயப்படறதுக்கு ஒன்னுமில்லைப்பா.”

அவனைக் கண்டதும் ரவிச்சந்திரன் வந்து ஆறுதலாகக் கூறினார்.

யுகேந்திரன் இறந்ததில் இருந்தே அவர் உணவு எடுத்துக்கொள்ளவில்லை.

வாய் விட்டு கதறி அழுதிருந்தால் அவரது துக்கம் குறைந்திருக்கும். அவர் அப்படி செய்யவும் இல்லை.

மருத்துவமனையில் யாராவது ஒருவர்தான் இருக்க வேண்டும் என்ற நிலையில் கிருஷ்ணவேணி தான் இருப்பதாகச் சொல்லிவிட்டாள்.

அதனால் மற்றவர்கள் கிளம்பிவிட்டனர்.

அன்றைய இரவு மகேந்திரனுக்கு உறக்கமே வரவில்லை.

உடனே தனது தாயைக் காண வேண்டும் என்று மனம் தவித்தது.

கிளம்பிவிட்டான்.

அவனை அந்த நேரத்தில் எதிர்பார்த்திராத கிருஷ்ணவேணி அதிர்ந்து போனாள். இருந்தும் ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கி நின்றாள்.

அவன் தன் தாயின் அருகில் வந்தான்.

“அம்மா.”

அழும் குரலில் அழைத்தான்.

அது அவரது செவியை எட்டியதோ இல்லையோ? எந்த சலனமும் இல்லை.

“அம்மா. நீங்க என்னிக்குமே என்னைவிட யுகாகிட்ட பாசமா நடந்துக்குவீங்க. நான் அப்ப அதைப் பெரிசா எடுத்துக்கலை. அவனுக்கு விட்டுக்கொடுத்தேன். ஆனால் இப்ப என்னால் முடியாதும்மா. நீங்க எனக்கு வேணும். எனக்காக எழுந்து வாங்கம்மா. எனக்கு உங்க மடியில் படுக்கனும். நான் இத்தனை நாளா அனுபவிக்காத பாசத்தை எல்லாம் உங்ககிட்ட பார்க்கனும். இப்பயும் அவனைப் பெரிதா நினைச்சு அவன்கிட்ட போக துடிக்கிறீங்களாம்மா. அதை அவன் விரும்ப மாட்டான்மா. நான் அப்ப அவனுக்கு விட்டுக்கொடுத்த மாதிரி இப்ப அவன் எனக்கு உங்களை விட்டுக்கொடுத்துடுவான்மா. தயவுசெய்து எனக்காக எழுந்து வாங்கம்மா.”

மேலும் புலம்பியபடியே அவரது மடியில் தலையை வைத்துக்கொண்டான்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணவேணிக்கும் கண்கள் கண்ணீரைச் சொறிந்தன.

அப்போது வனிதாமணியைக் கண்ட அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தது.

அவர் அப்போது தனது மகனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

இதுவரைக்கும் கண்விழிக்காமல் இருந்தவர் கண்விழித்துவிட்டார்.



“சார். அத்தை உங்களைப் பார்க்கிறாங்க.”
சந்தோசக் கூச்சலிட்டாள்.
அவனும் சந்தோசத்துடன் நிமிர்ந்துபார்த்தான்.

அவர் கண்களில் எந்த சலனமும் இல்லை.
மகனை வெறித்துப்பார்த்தவர் கையை நீட்டினார்.
அவனும் தனது கையை அவர் கைகளில் ஒப்புவித்தான்.

கிருஷ்ணவேணியின் கையைப் பற்றி இருவரது கையையும் இணைத்தார்.

அவர் தலை ஒருபக்கமாக சாய்ந்தது.

“டாக்டடடடடர்..”

அவனது கத்தலில் வந்து பார்த்த மருத்துவர் அவர் மயக்கத்தில்தான் இருக்கிறார் ஆபத்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அவன் தன் கையைப் பார்த்தான். இன்னும் அவன் கை கிருஷ்ணவேணியின் கையைப் பற்றியிருந்தது.

‘அம்மா ஏன் அவளது கையைப் பற்றி என்னிடம் ஒப்படைத்தார்?’

கேள்வி அவனுக்குள் எழுந்தது.

Quote:முதலில் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். யுகாவின் மரணம் கனவாகத்தான் இருக்க வேண்டும் என்று உங்களில் நிறைய பேருக்கு விருப்பம். அதை என்னால் நிறைவேற்ற மூடியாமல் போய்விட்டது.
இந்தக் கதையை நான் எழுத ஆரம்பித்ததே யுகேன் கதாபாத்திரத்தின் முடிவை எண்ணித்தான். அவன் சீக்கிரம் நம்மிடம் இருந்து போய்விடுவான் என்றுதான் அவனை கொஞ்சம் துறுதுறுப்பாக உலவ விட்டேன். உங்களுக்கு மட்டுமல்ல. எனக்கும் மிகவும் பிடித்தவனாக அவன் மாறிப்போனான்.
இந்த கதை உருவாக முக்கியமான காரணம் ஒரு பள்ளியிறுதி மாணவனின் தற்கொலைதான்.
நான் அந்த துக்க வீட்டிற்குச் சென்றிருந்தேன்.


வீடு முழுவதும் கூட்டம் நிறைந்திருந்தும் துக்க வீட்டிற்கான எந்த அடையாளமும் இல்லை. நீங்கள் கிராமத்தில் இருந்தவராய் இருந்தால் அறிவீர்கள். துக்கம் விசாரிக்க வருபவர்கள் பேருக்கு கதறி அழுது ஒப்பாரி வைத்துவிட்டு அந்தப் பக்கம் நகர்ந்ததும் அக்கம் பக்கம் அமர்ந்திருப்பவர்களோடு கதையளக்க ஆரம்பித்துவிடுவர்.
அந்த மாதிரி சூழல் அங்கே இல்லை. மாறாக அனைவர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது. ஒரே ஒரு தீனக்குரல் மட்டும் புலம்பலாய் கேட்டுக்கொண்டேயிருந்தது. அது அவனது தாயின் குரல்.
பிரேதப் பரிசோதனை முடிந்து அவனது உடல் வந்ததுதான் தாமதம், அதுவரைக்கும் அடக்கி வைத்திருந்த துக்கத்தை அத்தனை கூட்டமும் கதறித் தீர்த்தது. அதில் நானும் ஒருத்தி.
நான் அந்த மாணவனை அறிந்ததில்லை. அவனுடன் பழகியதில்லை.
இருந்தும் அந்த துக்க நிகழ்ச்சி என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
என்னை உறங்கவிடாமல் செய்தது. அதுதான் இந்தக் கதையின் வெளிப்பாடு.
அதனால்தான் யுகாவின் முடிவை என்னால் மாற்ற முடியவில்லை.
நான் எப்போதுமே கதையின் முடிவை எண்ணிவிட்டுதான் அதை நோக்கி கதையை நகர்த்துவேன்.
அவன் மீண்டும் நமது நினைவலைகளில் வருவான். அவனை எண்ணாமல் மகேந்திரனோ கிருஷ்ணவேணியோ இருக்க முடியாது. அதனால் அவன் மீண்டும் வருவான்.
நீங்கள் எல்லோரும் இதை கதையாகப் பாராமல் என் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போனது எனக்கு மகிழ்ச்சிதான்.
நிறைய பேருக்கு கோபம்.
இனி இந்தத் தொடரை படிக்கவேப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கீங்க.
உங்களுக்கு வேறு வேலையில்லையா? கதைக்குக் கதை யாரையாவது போட்டுத் தள்ளிக்கிட்டேயிருக்கீங்க? அப்படின்னும் கோபப்படறீங்க.
வெறுமனே நன்றின்னு சொல்லி எங்ககிட்டயிருந்து தப்பிக்க கூடாதுன்னு சொன்னதால் நான் யாருக்குமே சென்ற அத்தியாயத்தில் நன்றி சொல்லவில்லை.
வனிதாமணியின் முடிவை இந்த அத்தியாயத்தில் எழுத இருந்த நான் உங்களின் கோபம் கண்டு அவரை விட்டுவிட்டேன். ஆனாலும் யுகாவின் முடிவிற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். கோபப்படாமல் தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.
பொழுதுபோக்கிற்காகப் படிக்கும்போது அதில் எதற்கு சோகத்தைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நேர்மறை எண்ணங்களை கொடுங்களேன் என்று நீங்கள் கேட்டது நூறு சதம் சரியானது. இனி அதற்கேற்றவாறு தர முயற்சி செய்கிறேன்.
எந்த விதத்திலாவது உங்களை காயப்படுத்தியிருந்தால்? மீண்டும் ஒரு முறை எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போதும் உங்களுக்கு சரியான விளக்கத்தைதான் கொடுத்திருக்கிறேனா என்பது எனக்கு சந்தேகம்தான்.
நன்றி.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 14-05-2019, 08:21 PM



Users browsing this thread: 20 Guest(s)