நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
நீயும்தான் என்னை விட்டுட்டு எப்படிப் போனே? நான் அப்புறம் வர்றேன்னு சொன்னா நீ போயிடுவியா? இரு அத்தைக்கிட்ட போட்டுக்கொடுக்கிறேன்.’

‘நீ கேட்ட உடனே பதில் சொல்லலைன்னா கோவிச்சுப்பியா?’
‘நீ மட்டும் இத்தனை நாட்கள் உன் மனசில் இருந்ததை என்னிடம் சொன்னியா?’
‘அதற்காக நான் கோபப்படனும்தானே? ஏன் எனக்கு வரமாட்டேங்குது?’
“அம்மா. இதற்கு மேல் ஆட்டோ போகாது போல. இங்கேயே இறங்கிக்கறீங்களா?”
ஆட்டோ ஓட்டுநரின் குரல் அவளை நினைவுலகுக்கு கொண்டு வந்தது.
‘ஏன் ஆட்டோ போகாது?’
அவள் வெளியே பார்த்தாள்.
நிறைய வாகனங்கள் ஆங்காங்கே நின்றிருந்தன.
அது முக்கியப் பெரும்புள்ளிகள் வசிக்கும் பகுதி. ஏதாவது வீட்டில் விசேசமா இருக்கும்.
காலையில் போகும்போது கூட ஒன்னும் தெரியலையே?
யோசனையுடன் பார்த்தவள் ஆட்டோவை விட்டு இறங்கினாள். அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை நெருங்க நெருங்க வாகன நெரிசல் அதிகமாய் தெரிந்தது.
தாங்கள் இருக்கும் தெருவில்தான் யார் வீட்டிலோ விசேசம் போல என்று நினைத்தவாறே வாகனங்களுக்கிடையே ஊர்ந்து சென்றாள்.
வந்தவர்களின் முகங்களைப் பார்க்கும்போதும் அவர்கள் கையில் வைத்திருக்கும் மாலைகளைப் பார்க்கும்போதும் நல்ல விசயம் இல்லை என்று புரிந்தது.
அவள் இங்கே தங்கியிருந்தாலும் அக்கம் பக்கம் யார் என்ன என்று தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.
ஒருவருடத்தில் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து விட்டு சென்றுவிடப்போகிறாள் என்ற அசட்டையினால் எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை.
யாரும் வயதானவர்களுக்கு முடியாமல் இருந்தது போலும்.
தன்னிடம் சொன்னால் தெரியாது என்று அத்தை சொல்லாமல் விட்டிருக்கலாம்.
கண்டிப்பாக அது சாவிற்காக வந்த கூட்டம்தான் என்று தெரிந்த பிறகு வழக்கம் போல் கண் மூடி, இறந்த அந்த ஆத்மாவிற்கு சாந்தி கிடைக்கட்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
யாரோ? எவரோ?
இப்படி வேண்டிக்கொள்வது அவள் வழக்கம். அதே போல் ஆம்புலன்ஸ் வண்டியில் யாரையாவது ஏற்றிச் செல்லும் போதும் தன்னையறியாமல் அவர்கள் பிழைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வாள்.
வீட்டை நெருங்க நெருங்க மனம் நெருடியது.
‘ஏன் என் மனம் இத்தனைப் பதட்டமடைகிறது?’
‘இல்லையில்லை. யாருக்கும் எதுவும் ஆகியிருக்காது.’
தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாள்.

மனம் பதட்டமடைந்த பிறகு சிறிது தூரத்தைக் கடப்பதே பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடந்தது போன்ற களைப்பைத் தந்தது.
கால்களை எடுத்து வைக்க முடியவில்லை. மிகவும் பாரமாய் இருந்தது.
அவள் ஆட்டோவில் வந்து இங்கே இறங்குவதற்கு முன் இருந்த மனநிலை அடியோடு மாறிப்போனது.

அவள் பயந்த மாதிரியே அந்தக் கூட்டம் அவர்கள் வீட்டிலிருந்துதான் வந்து போய்க்கொண்டிருந்தது.
‘யாருக்கு என்னவாயிற்று?’
‘எல்லாரும் நல்லாதானே இருந்தார்கள்?’

யாரையும் அப்படி நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

‘இந்த யுகா எங்கே போனான்?’

‘என்ன முட்டாள்தனமாய் யோசிக்கிறே?’

‘யாருக்கு என்னவாயிற்றோ? அப்படி இருக்கையில் யுகாவிற்கு உன்னைப் பற்றி நினைக்கத் தோன்றுமா?’

கால்களில் இரும்புக்குண்டை கட்டியது போன்று இருந்தது.

அவளுக்குத் தெரிந்து காலையில் அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும்போது யாரும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னதாகவே நினைவில்லை.

வனிதாமணி கூட மிகவும் சந்தோசமாகதான் அனுப்பி வைத்தார். அதன் பிறகு கூட…

அவளால் மேற்கொண்டு எதையும் யோசிக்க முடியவில்லை.

யாரிடமும் கேட்கும் தைரியமும் இல்லை.

மெல்ல தடுமாறியவாறே உள்ளே நுழைந்தாள்.
அதோ. அங்கே கதறி அழுவது மகேந்திரனா? ஆண் என்பதையும் மறந்து அழுகின்றானே?
யாருக்கு என்னவாயிற்று? மற்றவர்கள் எல்லாம் எங்கே?

பயத்துடன் கண்களை சுழல விட்டாள்.

‘அங்கே நாற்காலியில் அமர்ந்துகொண்டு தேம்பிக்கொண்டிருப்பது மாமாதானே?’

‘அத்தை. அத்தைக்கு என்னவாயிற்று?’

அவளுக்கு வனிதாமணியின் மங்களகரமான முகம் கண் முன்னே வந்தது.

‘யுகா. நீ எங்கேடா இருக்கே? எங்கேயிருந்தாலும் வாடா. என்ன நடந்ததுன்னு சொல்லுடா? எனக்கு பயமா இருக்கு. என்னால் தாங்க முடியவில்லை.’

மனதிற்குள்ளேயே அரற்றினாள்.

கண்ணாடிப்பெட்டி தெரிந்தது. அதன் மேல் மாலை குவியலாய் இருந்தது.

அவளுக்கு அருகே சென்று பார்க்க பயமாய் இருந்தது.

அவளுக்கு நினைவு தெரியாத வயதில் அவள் இந்த மாதிரி இழப்பைச் சந்தித்திருக்கிறாள்.

அதன் பிறகு அவள் மீது உண்மையான பாசம் வைத்தவர்கள் மிக சொற்பமே.

இப்போது. யார்?

சுற்றிலும் நின்றவர்கள் யாரும் அவள் பார்வைக்கே படவில்லை.

அவள் கண்கள் யுகேந்திரனையும் வனிதாமணியையும்தான் தேடின.

இரும்புக்குண்டாய் கனத்த கால்களை மிகவும் சிரமப்பட்டு நகர்த்தி மெதுவாக அடியெடுத்து வைத்தாள்.

கையில் இருந்த பொருட்கள் எல்லாம் எப்போதோ சிதறி விழுந்திருந்தன.

‘அங்கே யார் பித்துப் பிடித்தாற்போல் அமர்ந்திருப்பது? அத்தையா? அத்தையேதானா?’

‘அப்படின்னா . . .  அப்படின்னா . . . யுகா? யுகா?’

மனம் அரற்றியது.

கண்ணாடிப்பெட்டியை நெருங்கியிருந்தாள்.

அப்போது கண்ணாடிப்பெட்டியின் மேல் குவிந்திருந்த மாலைகளை யாரோ அகற்றி எடுத்துச் சென்றார்கள்.

உள்ளே பார்த்தவளின் கண்கள் நிலைகுத்தி நின்றன.

மாலையின் நடுவே தூங்குவது போல் படுக்க வைக்கப்பட்டிருந்தவன் யுகேந்திரனேதான்.

கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தாள்.

நெஞ்சையடைத்தது. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

‘யுகா…’ மெதுவாக அழைத்தாள்.

அந்த அழைப்பு எட்டாத இடத்திற்குச் சென்றுவிட்டான் என்று அவளுக்குப் புரிய நேரமாயிற்று.
அடுத்த கணம் “யுகாஆஆஆ” என்ற கதறலுடன் கால்கள் மடங்க மயங்கிச் சரிந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 08-05-2019, 12:26 PM



Users browsing this thread: 13 Guest(s)