நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 15 - ராசு
[Image: nivv.jpg]
ருவத் தேர்வுகள் நெருங்குகின்றன என்பதால் கிருஷ்ணவேணியும், யுகேந்திரனும் படிப்பில் மூழ்கினர்.
அன்றைய தினம் யுகேந்திரன் கிருஷ்ணவேணியை விழாவிலிருந்து பாதியிலேயே விட்டுவிட்டு வந்து அவளிடம் யாரோ போதை கலந்த பானத்தைக் குடிக்க வைத்துவிட்டதால் இனி அவளைக் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி தன் தம்பியிடம் அறிவுறுத்தியிருந்தான் மகேந்திரன்.
யுகேந்திரனுமே அதை எதிர்பார்த்திருக்கவில்லை.

யார் அதை செய்திருப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தான். கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்றைய தினம் அவனுக்கு நீண்ட நேரம் விழாவில் இருக்க முடியவில்லை. அதனால் அவன் சீக்கிரமே கிளம்பி வந்துவிட்டான்.

அதுவும் மகேந்திரன் இருக்கிறான் என்ற தைரியத்தில்தான் அவன் வந்ததே.

அவன் இருந்துமே அவளிடம் யாரோ விளையாடியிருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே கோபம் வந்தது.

இது மாதிரி விழாக்களுக்கு சென்று பழகிக்கொள்வது கிருஷ்ணவேணியின் எதிர்காலத்திற்கு நல்லது என்றுதான் அவளை அவன் கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்றதே.

அவள் படிப்பை முடிக்கும் வரையில்தான் சிறிய பெண். அவளுக்கென்று கடமை இருக்கிறது. அதை அவள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவளை ஏமாற்றுவதற்கு ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

அவளும் அந்தக் கூட்டத்திடம் செல்வதற்கு ஆசைப்படவில்லை. அவளை விட்டால் இங்கேயே தங்கிவிடுவாள்.

ஆனால் அருணோ, அவனது தந்தையோ அதற்குத் தயாராயில்லை.

அவளது பொறுப்பை வந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அடிக்கடி அறிவுறுத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

எதையாவது கண்டு பயந்து ஓடினால் அதன் பிறகு எப்போதும் நாம் ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும். அதனால் நடப்பதை எதிர்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பாராம் அருணின் தந்தை கதிரவன்.
கதிரவன் அவளது தந்தையின் நண்பர்.
பெற்றோர் இல்லாத கிருஷ்ணவேணியை தானே அழைத்துச்சென்று வளர்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு.

பெண் குழந்தை இல்லாததால் அவர் மனைவியும் அவள் மேல் மிகவும் பிரியமாக இருப்பார். ஆனால் அவளது சொந்தத்திற்கு பயந்தே தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளாமல் கிருஷ்ணவேணியை பாதுகாப்பாக விடுதியில் தங்கிப் படிக்குமாறு அவர் ஏற்பாடு செய்ததே.

தேர்வுகள் முடிந்ததும் கிருஷ்ணவேணி செல்லாவிட்டால் அவளை அழைக்க அவர்களே வந்துவிடுவர். ஆனால் அவனுக்கு அவளை அனுப்பிவைக்க மனம் இல்லை.

அதனால் பரிட்சை முடியும் நாள் அன்று தனது விருப்பத்தை அவளிடம் கூறி அதன் பிறகு கதிரவனிடம் பேசலாம் என்றிருக்கிறான்.

அவரும் அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது என்றால் நிச்சயம் மறுக்கமாட்டார்.

யோசனையுடன் அமர்ந்திருக்கும் யுகேந்திரனைப் பார்த்தாள் கிருஷ்ணவேணி.

“அப்படி என்ன பலமான யோசனை?”

கிருஷ்ணவேணி அவனது தோளைத் தட்டினாள்.

அவன் சுயநினைவுக்கு வந்தான்.

“ஒன்னுமில்லை.”

“பொய் சொல்லாதே.”

“இல்லை. பொய் சொல்லலை.”

“சரி. நம்பிட்டேன்.”

அவள் சிரித்தாள்.

அப்போது வனிதாமணி சாப்பிடக் கூப்பிட இருவரும் சென்றனர்.

“கிருஷ்மா. இதை டேஸ்ட் பண்ணு. நல்லாருக்கு.”

எதையோ எடுத்து அவள் தட்டில் வைத்தான்.

அவள் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிறே?”

“நான் உன்கிட்ட ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சுக்கிட்டேயிருக்கேன். ஆனா மறந்துடுறேன்.”

“அப்படி என்ன கேட்கனும்?”

“ஆரம்பத்தில் என்னை நீ கிருஷ்ணான்னு கூப்பிட்டே. வாடி போடின்னுதான் கூப்பிட ஆரம்பிச்சே. இப்போ கொஞ்ச நாளா அப்படி கூப்பிடறது இல்லை. அத்தோட கிருஷ் அப்படின்னு சுருக்கி கூப்பிட ஆரம்பிச்சே. இப்ப என்னன்னா கிருஷ்மான்னு புதுசா கூப்பிடறே?”

அவன் பதில் சொல்லாமல் சிரித்தான்.



“சரி. சரி. பேசாம சாப்பிடுங்க. சாப்பிடறது உடம்பில் ஒட்டாது.”
வனிதாமணி கொஞ்சம் அதட்டலாகக் கூறவே அப்போதைக்கு அந்தப் பேச்சு ஓய்ந்தது.

ருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன.

இடையில் ஒருநாள் மட்டும் இருவருக்கும் ஒரே தேர்வு அறை. அன்றைக்கு அவன் எழுதுவதைப் பார்த்தவளுக்கு திருப்தியாய் இருந்தது.
அவன் எந்தப் பக்கமும் திரும்பாமல் எழுதுவதிலேயே குறியாக இருந்தான்.
அப்போது அவன் தன்னிடம் கேட்ட வாக்கு நினைவிற்கு வந்தது.

அதை நினைத்ததும் அவளுக்குச் சிரிப்பு கூட வந்தது.

அப்படி என்ன அவனிடம் இல்லாததை என்னிடம் கேட்டுவிடப் போகிறான்?

அவன் கேட்டால் கேட்ட மறுநிமிடமே கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிடுவர் அவன் வீட்டார்.

அப்படியிருக்கையில் அப்படி என்ன பெரிதாக கேட்டுவிடப்போகிறான்.

‘இந்த மூன்று வருடங்களில் நான் எனது வேதனையை மறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்ததற்கு அவன்தானே காரணம்.’

‘அவன் கேட்டால் நான் என்ன மாட்டேன் என்றா சொல்லப் போகிறேன்?’

என்று நினைத்தவள் அவன் கேட்கும் போது தான் பதில் சொல்ல முடியாத நிலையில் தவித்து நிற்கப் போவதை அப்போது அறியவில்லை.

ன்றுடன் பருவத் தேர்வுகள் முடிகின்றன.

வனிதாமணியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் கிருஷ்ணவேணி.

பின்னேயே வந்த யுகேந்திரனை கேள்வியாகப் பார்த்தார்.
“அம்மா. இன்னிக்கு நான் பரிட்சை முடிந்த உடன் கிருஷ்ணாகிட்ட பேசிடுவேன்.”
“அவ ஒத்துக்கிடுவாளா யுகா.”

“எனக்கு அப்படித்தான் தோணுது. எதுக்கும் நான் உங்களுக்கு போன் செய்து தர்றேன். அந்த நேரத்தில் நீங்களும் அவகிட்ட பேசுங்க.”

“அவளுக்குப் பிடிக்கலைன்னா கட்டாயப்படுத்தக்கூடாது.”

“அப்படியே செய்யலாம்மா. நீங்க அப்பாகிட்ட சொன்னீங்களா?”

“நான் பேச்சுவாக்கில் சொல்லியிருக்கேன். நீ அவகிட்ட பேசிட்டு வந்த பிறகுதான் தெளிவா சொல்ல முடியும். அதன் பிறகுதான் மகேன்கிட்டயும் சொல்ல முடியும்.”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா.”

தாயிடம் விடைபெற்றுச் சென்று காரில் ஏறினான்.

“என்ன அத்தைக்கிட்ட ஸ்பெசலா ஆசிர்வாதம் வாங்கிட்டு வர்ற மாதிரி இருக்கு. அப்ப நீ படிச்சு நிறைய மார்க் வாங்கலையா?”

அவள் கிண்டலாகக் கூறினாள்.

“என்னதான் படிச்சாலும் பெரியவங்க ஆசிர்வாதம் வேணும்.”

அவன் பவ்யமாகக் கூறினான்.

கல்லூரி வந்துவிட இருவரும் மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி தங்களது தேர்வறையைக் கண்டுபிடித்துச் சென்றனர்.

தேர்வெழுதி முடித்துவிட்டு யுகேந்திரனுக்காக காத்திருந்தாள் கிருஷ்ணவேணி.

அவன் தயக்கத்தோடு வந்தான்.

“என்ன பரிட்சையை ஒழுங்கா எழுதலையா?”

“அதெல்லாம் நல்லாதான் செய்திருக்கேன்.”

“அப்புறம் ஏன் ரொம்ப தயக்கமா வர்றே?”

“நாம முதல்ல சாப்பிடலாம். அப்புறம் உன்கிட்ட பேச வேண்டியிருக்கு.”

“அதெல்லாம் வீட்டில் போய் பேசிக்கலாம். நான் ஊருக்கு போறதுக்கு ஏற்பாடு செய்யனும்ல. மறந்துட்டியா?”

“அதைப் பத்திதான் பேசனும்.”

“உனக்குதான் வெளிசாப்பாடு ஒத்துக்காதே.”

“இன்னிக்கு ஒருநாள் சாப்பிடறதுனால் எதுவும் ஆயிடாது.”

“டேய். அப்படி என்ன முக்கியமான விசயம் பேசப்போறே?”

“அதான் சாப்பிட்ட பிறகு சொல்றேன்னு சொன்னேன்ல.”

“ஏன் பேசிட்டு அதன் பிறகு சாப்பிட்டா என்ன?”

“நான் பேசறது உனக்குப் பிடிக்காம போகலாம். இல்லைன்னா, நீ சொல்ற பதில் எனக்குப் பிடிக்காம போகலாம். அப்ப சாப்பிடத் தோணாது. அதான் இப்பவே சாப்பிட்டுக்கலாம்னு.”

அவன் சொல்ல சிரித்தாள்.

“டேய். சாப்பாட்டு ராமா. இப்ப உனக்குப் பசிக்குது. அதை நேரடியா சொல்லேன்.”

அவனைக் கிண்டல் பண்ணினாள்.

கல்லூரியிலேயே இருந்த உணவு விடுதியில் இருவரும் நுழைந்து தங்களுக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.

யுகேந்திரன் யோசனையோடே சாப்பிட்டான்.



அவனது முகத்தில் தெரிந்த தீவிரம் கண்டு அவளும் விளையாட்டை விட்டு அவனைப் பார்த்தவாறே சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடித்த உடன் கல்லூரியில் இருந்த தோட்டத்திலே இருந்த ஒரு கல்லில் அமர்ந்தான். அவளும் அவன் கூடவே வந்த அமர்ந்தாள்.

அவன் தயக்கத்துடன் அவளை ஏறிட்டான்.
“அப்படி என்னடா பேசப்போறே?”
அப்படி என்னதான் பேசப்போகிறான் என்ற ஆவல் அவளுக்கு எழுந்தது.
கிருஷ்மா. உனக்கு ஞாபகம் இருக்கா? நான் இந்தப் பருவத்தில் உன்னைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்தால் நான் கேட்பதை நீ தருவதாக சொல்லியிருக்கிறாய்.”

“ஆமா. அதுக்கென்ன? இப்பதானே பரிட்சை எழுதியிருக்கிறோம். ரிசல்ட் வந்த பிறகு நீ கேளு. நான் தர்றேன்.”

“இல்லை. நான் இப்பவே கேட்கப் போறேன். நீ ஊருக்குப் போயிட்டா நான் எப்படி கேட்கிறது?”

சிறுபிள்ளை அடம்பிடிப்பது போல் பேசிய அவனை கேலியாகப் பார்த்தாள்.

“ஏய். உண்மையைச் சொல்லு. நீ பரிட்சை எல்லாம் ஒழுங்கா எழுதினியா இல்லையா? ரிசல்ட் வந்த பிறகு உன் குட்டு உடைஞ்சிடும்னுதானே இப்பவே கேட்கறே?”

“அதெல்லாம் இல்லை. நான் பரிட்சை ஒழுங்காதான் எழுதியிருக்கேன்.”

“அப்ப என்ன அவசரம்?”

“அவசியம் இருக்கு. அதனால்தான் அவசரப்படறேன்.”

அவன் முகத்தில் தெரிந்த தீவிரம் கண்டு அமைதியானாள்.

அவனும் பேச முயலவில்லை. அப்படி என்னதான் கேட்கப் போகிறான்?

கொஞ்சம் கவலையோடு அவனையேப் பார்த்தாள்.
அவன் அமைதியைக் கலைத்துவிட்டு பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு “கிருஷ்ணா. உனக்கே தெரியும். உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு?”
“அதுக்கென்ன?”

அடுத்து அவன் பேச ஆரம்பித்ததுமே பயம் வந்தது.

அவன் கண்களில் தெரிந்த புதுசொந்தம் அவளை திகைப்படையச் செய்தது. அவள் தனது திகைப்பை மறைக்கவும் இல்லை. அதைப் பார்த்தவாறே தனது பேச்சைத் தொடர்ந்தான்.

‘வேண்டாம். யுகா. நீ கேட்கப் போறது என்னன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. நீ கேட்கிறதுக்கு என்னால் மறுக்க முடியாது.’

மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டாள்.

அவன் கடைசியில் கேட்டேவிட்டான். அத்துடன் அவனது தாயையும் பேசச்சொன்னான்.

அவள் அதிர்ச்சியில் திகைத்து அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

பதிலுக்காக எதிர்பார்த்த அவனிடம் அவகாசம் கேட்டாள். அந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவன் முகத்தை நிமிர்ந்தே பாராமல் அமர்ந்திருந்தாள்.

“சரி வா போகலாம்.”

“இல்லை. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.”

“அதுதான் நீ அவகாசம் கேட்டேல்ல. மெதுவா யோசிச்சுக்கலாம். வா.”

“ப்ளீஸ் யுகா. எனக்குக் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்.”

“சரி. நான் போறேன். நீ பத்திரமா வந்துடு.”

தன் காரை நோக்கிச் சென்றவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்ணீர் அவள் கண்களை மறைத்தது.
அவன் கார் சென்றுவிட தேற்ற ஆள் இல்லாததால் அவள் கண்ணீர் கரை கடந்தது. ஆற்றமாட்டாமல் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 05-05-2019, 01:08 PM



Users browsing this thread: 31 Guest(s)