20-12-2018, 09:39 AM
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாள்களுக்கு ஆன மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய். இதில் உணவு செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய். ``ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்தால்கூட இவ்வளவு ரூபாய் உணவுக்கு செலவாகியிருக்காது. இது ஜெயலலிதாவுக்கு மட்டும் வழங்கப்பட்ட செலவாக இருக்க வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தினர் அங்கேதான் தங்கியிருந்தார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி விசிட் அடித்தார்கள். அவர்களுக்கான உணவு, தேநீர் அனைத்தும் இந்தச் செலவில் சேர்க்கப்பட்டிருக்கலாம்” எனவும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போலோவில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் உணவு வழங்கினார்கள். அந்தச் செலவும் இதில் சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 1.56 லட்சம் ரூபாய் உணவுக்காக செலவழித்திருக்கிறார்கள்.
அப்போலோவின் உணவு அவ்வளவு விலை உயர்ந்ததா ஐந்து நட்சத்திர ஹோட்டலைவிட கூடுதலாக விலை இருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு தொகை வந்திருக்கும். உண்மையில் அப்போலோவின் உணவு விலைப்பட்டியல் என்ன என்பதைக் கண்டறிய நேரடியாக அப்போலோவுக்கு விசிட் அடித்தோம். மெயின் பிளாக்கிலும் சிந்தூரி பிளாக்கில் தலா ஒரு ரெஸ்ட்டாரன்ட் அப்போலோவில் உள்ளது. கீழ்த் தளத்தில் இருக்கிற ரெஸ்ட்டாரன்ட்டுக்கு முதலில் போனோம். இது செல்ஃப் சர்வீஸ் ரெஸ்ட்டாரன்ட்டு. டாக்டர்கள் சாப்பிட தனிப் பகுதி உள்ளது. நோயாளிகளின் அட்டன்டர்களும் விசிட்டர்களும் டாக்டர்களும்தான் இங்கே சாப்பிட வருகிறார்கள். சாதாரண ஹோட்டல்களில் கிடைக்கும் அத்தனை உணவும் இங்கே கிடைக்கிறது. நிறைய சாப்பிட்டோம். பார்சலும் வாங்கினோம். சப்பாத்தி 53 ரூபாய். பிளைன் தோசையும் 53 ரூபாய்தான். மினரல் வாட்டர் பாட்டல் 19 ரூபாய். வெஜ் பிரியாணி 105 ரூபாய். டின்னர் தால் 105 ரூபாய். என ஒவ்வொரு உணவுக்கு ஒரு விலை. இதில் ஜி.எஸ்.டி 5 சதவிகிதம் வேறு. இங்கே விலைப்பட்டியல் போர்டு எல்லாம் இல்லை. கேஷியர் பின்னால் இருக்கும் போர்ட்டில் தயாராகிற உணவை வைத்து அவ்வப்போது உணவு பெயரை எழுதிப் போடுகிறார்கள். உணவுப் பெயருடன் விலையும் எழுதி வைக்கிறார்கள்.