நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
மகேந்திரன் வாங்கி வந்த மாத்திரையை சாப்பிட அடம்பிடித்தான்.

“இதப் பாரு. நீ மாத்திரை எல்லாம் சாப்பிட்டாதான் சீக்கிரம் சரியாக முடியும். உன்னோட அண்ணன் நீ இந்த செமஸ்டர்ல நல்ல மதிப்பெண்கள் எடுத்தாதான் நீ விருப்பப்பட்டதை படிக்க முடியும் என்று சொன்னார். நீ இப்படி படுத்திருந்தா எப்படி நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும்?”
“அண்ணன் சொல்றது இருக்கட்டும். நான் நிறைய மதிப்பெண் வாங்கினா நீ எனக்கு என்ன தருவே?”
உனக்கு என்ன வேணுமோ கேளு. தர்றேன்.”

“இப்ப சொல்லிட்டு அப்புறம் வாக்கு மாறக்கூடாது.”

“வாக்குன்னு என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்றே?”

“பேச்சை மாத்தாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.”

“சரி. நீ என்ன கேட்டாலும் தர்றேன். ஆனால் அதுக்கு நீ என்னைவிட ஒரு பாடத்திலாவது ஒரு மதிப்பெண்ணாவது அதிகமா வாங்கனும்.”

“ஒரு பாடத்தில் இல்லை. எல்லா பாடத்திலும் நான் உன்னைவிட அதிக மதிப்பெண் வாங்குவேன். அதன் பிறகு நான் கேட்கிறதை மறுக்காமல் எனக்க தரனும்.”

“தருவேன்.”

“யோசிக்காம சொல்லாதே. இவன் எங்கே நிறைய மார்க் வாங்கப்போறான்னு அலட்சியமா நினைத்து சொல்லாதே.”

“அலட்சியமா நினைக்கலை. நீ என்னைவிட அதிகமான மார்க் வாங்கனும்கிற ஆசையில்தான் சொல்றேன்,”

“சரி. அப்ப கொண்டா அந்த மருந்தை. நான் சாப்பிடறேன்.”

யுகேந்திரனுக்கு உடல்நிலை சீராக ஒருவாரமாயிற்று. இன்னும் முழுக்க சரியாகவில்லை. ஆனால் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டான்.
கிருஷ்ணவேணி தான் பார்த்துக்கொள்வதாகக் கூற வனிதாமணி கவலை படாமல் நிம்மதியானார்.
இந்த ஒருவாரமும் அவள் எப்படி அவனைக் கவனித்துக்கொள்கிறாள் என்று கூட இருந்தே பார்த்தவர்தானே?

ருசியாக சாப்பிடுவதில் யுகேந்திரன் எத்தனை ஆர்வமானவன் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அப்படிப்பட்டவனை வெறும் கஞ்சியைச் சாப்பிடச் சொன்னால் என்ன செய்வான்.

அதனால் சாப்பிட அடம் பண்ணுவான். வனிதாமணி அவனோடு போராட முடியாமல் மிகவும் சிரமப்படுவார்.

இப்போது கிருஷ்ணவேணி அவனைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றதால் அவரால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

அவனுக்கு எளிய உணவாக அத்துடன் கொஞ்சம் ருசியாகவும் இருக்கும்படி அவரை சமைத்துத்தரச்சொன்னாள்.

அவளே அவனுக்கு பரிமாறிவிட்டு அவனுடன் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டாள்.

மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்குச் சரியாக கொடுத்தாள்.

அவளுக்காகவே அவன் எழுந்துவிட்டான்.

வீட்டினர் அனைவருக்குமே ஆச்சர்யம்தான்.

அன்று அவர்களுக்குப் பழக்கமான குடும்பம் ஒன்றில் விருந்து. அதற்கு அவர்கள் குடும்பத்தை அழைத்திருந்தனர்.

அன்றைய விழாவிற்கு வனிதாமணி கிளம்பவில்லை. ரவிச்சந்திரன் உடல்நிலை சரியில்லை என்று வீட்டில் இருந்ததால் அவரும் கிளம்பவில்லை.

வரமாட்டேன் என்று சொன்ன கிருஷ்ணவேணியை அவன் கட்டாயப்படுத்தி அழைத்தான்.

மகேந்திரன் அவனை கடிந்துகொண்டபோது கிருஷ்ணவேணி இது மாதிரி பெரிய இடத்து விழாக்களுக்குச் சென்று பழகுவது அவள் நல்லதற்குதான் என்று சொன்னான்.

“உனக்கு இப்போதுதான் உடல்நிலை சரியாகியிருக்கிறது. இப்போது அங்கே வந்து அந்த உணவு வகைகள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்று தடுத்துப் பார்த்தான்.

அவனுக்கு தாங்கள் விருந்திற்குப் போகப் போகும் குடும்பத்துப் பையன்கள் மீது அத்தனை நம்பிக்கையில்லை.

அதனாலேயே கிருஷ்ணவேணி அங்கே வருவதை அவன் விரும்பவில்லை.

யுகேந்திரன் வரவில்லை என்றால் அவளும் வரமாட்டாள். என்று எண்ணினான்.

அதை புரிந்துகொள்ளாமல் யுகேந்திரன் கிருஷ்ணவேணியையும் கிளப்பினான்.

அவன் இன்னும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறானே? கோபமாய் வந்தது.

ஆனால் கிளம்பி வந்து நின்ற கிருஷ்ணவேணியைப் பார்த்து அவனுக்கு மூச்சடைத்தது.

வெண்ணிற ஆடை. அதுவும் அவள் வழக்கமாய் அணியும் சுடிதார் இல்லாமல் புதுமாதிரியான உடை. அவனுக்கு அந்த உடையின் பெயர் தெரியவில்லை.



அத்துடன் கழுத்தில் என்ன வைரமா? அவளிடம் ஏது அத்தனை விலை உயர்ந்த நகை? அவனுக்குப் புரியவில்லை.
அவளைப் பார்த்து வனிதாமணியே வாயடைத்துப்போனார்
“நம்ம கிருஷ்ணவேணியா இது?”

அவரது ஆச்சர்யமான குரலைக் கேட்டதும் அவளுக்கு வெட்கம் வந்தது.
“அம்மா. நான்தான் இந்த உடையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். எப்பப்பாரு அந்த சாருலதா கிருஷ்கிட்ட ரொம்ப மட்டமா பேசறா. அவ வாயை அடைக்கத்தான் இந்த உடையைத் தேர்ந்தெடுத்தேன்.”
மகேந்திரனுக்கு கவலை அதிகரித்தது.

இத்தனை அழகாய் இருக்கிறவளை எப்படி அவன்கள் கவனிக்காமல் விடுவான்கள். எந்த கலாட்டாவும் நடக்காம இருக்கனுமே.

அவன் பயந்த மாதிரியே தான் நடந்தது.

எல்லோரது பார்வையும் அவள் மீதேதான்.

சாருலதா கூட அதிர்ச்சியில் வாய்பிளந்தாள்.

இல்லாதவள் என்று அவள்தான் எப்போதும் அவளை சீண்டுவாள். அதற்காக அவளுக்கு பதிலடி கொடுக்க என்றே இவ்வாறு அவளை அழைத்து வந்திருக்கிறான் யுகேந்திரன்.

கிருஷ்ணவேணி கூடவே யுகேந்திரனும் இருந்ததால் அவள் கலகலவென இருந்தது வேறு பார்ப்போரை ஈர்த்தது.

“அந்தக் குட்டி யாருடா? செமையா இருக்கால்ல.”

அந்த வீட்டுப் பையன் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது மகேந்திரன் காதில் விழ அவன் மனம் கொதித்தது.

அவனருகே சென்றான்.

“அவ எங்க வீட்டுப் பொண்ணு. கொஞ்சம் பார்த்துப் பேசு.”
அழுத்தமான குரலில் மகேந்திரன் சொல்ல அவன் வெலவெலத்துப்போனான்.
மகேந்திரன் எத்தகயைவன் என்று அவன் அறிந்தே வைத்திருந்தான். தொழிலில் அவனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. மிகவும் கண்டிப்பானவன்.

“சாரி சார். தெரியாம சொல்லிட்டேன்.”

அவனும் அத்துடன் விட்டுவிட்டான்.

சாருலதாவிற்கு மனம் கொதித்தது.

அவளும் மகேந்திரன் பேசுவதைக் கேட்டிருந்தாள். எங்க வீட்டுப் பொண்ணாமே. அந்த கிருஷ்ணவேணியை சும்மா விடலாமா?

அவள் தனியே மாட்டுவதற்காக காத்திருந்தாள்.

யுகேந்திரன் மகேந்திரனிடம் வந்தான்.

“அண்ணா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் வீட்டுக்குப் போறேன்.”

“இரு எல்லாரும் போயிடலாம்.”

“இல்லண்ணா. சாப்பிடாமல் போனா கோவிச்சுப்பாங்க. கிருஷ் இங்கேதான் இருக்கா. நீ அவளை அழைச்சுட்டு வந்துடு.”

“நீ எப்படிடா போவே?”

“என்னோட ப்ரண்ட் ஒருத்தன் கொண்டு வந்து விடறேன்னு சொன்னான். நான் அவனோட கிளம்பறேன்.”

அவன் கிளம்பிச்சென்றுவிட்டான்.

அவன் கிருஷ்ணவேணி எங்கே என்று பார்க்க அவள் ஏதோ குளிர்பானம் அருந்திக்கொண்டிருப்பது தெரிந்தது.

யாரோ ஒருவர் வந்து அவன் தோளைத் தட்ட திரும்பிப்பார்த்தான்.

தொழில் முறை நண்பர். அவனிடம் நலம் விசாரித்தார். அவனும் மரியாதைக்காக அவரிடம் நலம் விசாரித்துவிட்டு திரும்பிப்பார்த்தான்.

கிருஷ்ணவேணி ஏற்கனவே இருந்த இடத்தில் காணவில்லை.

அவளை எங்கே என்று தேடினான்.

அவள் எதற்கோ தடுமாறியவாறு நடந்துகொண்டிருந்தாள்.

அதைக் கண்டுவிட்டு அவளிடம் ஓடினான்.

அப்போது யாரோ ஒருவன் அவளை நெருங்க முயன்றபோது

“ஏய்! என்னைத் தொடாதே.” என்று கத்திவிட்டு ஒதுங்கினாள்.

மகேந்திரன் அவளை நெருங்கியதும் அவன் நழுவிவிட்டான்.

“கிருஷ்ணா. என்னாச்சு?” அவள் தோளைத் தொட்டான்.

தன்னைத் தொட்டது அவன்தான் என்று கண்டதும் அவள் ஏதும் பேசவில்லை.

அவள் எதனால் தடுமாறுகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவளுக்கு குடிக்கிற பழக்கம் இருக்குமா என்றே எண்ணிப்பார்க்க முடியவில்லை.

அவள் போதையில் இருக்கிறாளா? மயக்கத்தில் இருக்கிறாளா? என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.



அதை ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் அவளை இந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்று அவனது அறிவு சொல்ல அவளை கைத்தாங்கலாக காருக்கு அழைத்துச்சென்றான்.
அதைக் கண்ட சாருலதாவிற்கு மனம் கொதித்தது.
அவ எங்க வீட்டுப் பெண் என்று மகேந்திரன் சொன்னதற்காக அவள் கிருஷ்ணவேணியை பழிவாங்க வேண்டும் திட்டம் போட்டுதான் அந்த பானத்தைக் குடிக்க வைத்தாள்.

அவள் போதையில் தடுமாறுவாள். அசிங்கமாக நடந்துகொள்வாள்.
அவள் மகேந்திரன் வீட்டுப்பெண் என்று அவனே தன் வாயால் சொல்லிவிட்டான். அதனால் அவன் குடும்பத்திற்கு அவமானம் வருமாறு நடந்து கொண்ட கிருஷ்ணவேணி மீது கோபம் கொண்டு அவளை வீட்டை விட்டு விரட்டிவிடுவான்
என்று எண்ணியிருந்தாள்.

அவனோ மற்றவர் அறியும் முன்னரே அவளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

கார் ஓட்டுகையில் அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யாராக இருக்கும்? என்ற எண்ணம் எழுந்தது.

ஒருவேளை அந்த வீட்டுப் பையனாக இருப்பானோ? இல்லை இப்போது கிருஷ்ணவேணியை நெருங்க முயன்றானே? அவனா?

யார் என்று தெரியாமல் யாரிடம் சண்டைக்குச் செல்வது?

குற்றம் சாட்டுவது என்றால் யுகேந்திரனைத்தான் சொல்ல வேண்டும். இது மாதிரி இடத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றுதானே அவளை அழைத்து வரவேண்டாம் என்றேன். அதைத்தான் புரிந்துகொள்ள மாட்டேன் என்றான். அதன் பிறகு அவன் கிளம்பும்போதாவது எல்லாரும் கிளம்பியிருக்கலாம்.

அதற்கும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை.

வீடு வந்துவிட்டது.

காரை நிறுத்தியவன் கிருஷ்ணவேணியை அழைத்துப்பார்த்தான்.

அவள் எழுந்திருக்கவில்லை.

வேறு வழியில்லாமல் அவளைத் தன் கைகளில் தூக்கிக்கொண்டான்.
கதவைத் திறந்த வனிதாமணி பதறிப்போனார்.
“என்னாச்சுப்பா?”

“ஒன்னுமில்லைம்மா. கொஞ்சம் மயக்கமாகிட்டா. தூங்கி எழுந்தா சரியாகிடும்.”

அவன் பின்னேயே அவரும் வர

“நான் பார்த்துக்கிறேன்மா. நீங்க போய் படுங்க.”

அவரும் சம்மதித்துவிட்டு தனதறைக்குச் சென்றார்.

அவன் அவளைத் தூக்கியவாறே மாடிப்படியில் ஏறினான்.

அவள் அறைக் கதவு பூட்டப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன் அவளைக் கட்டிலில் கிடத்தினான்.

அவளது முகத்தை நெருக்கத்தில் பார்க்கும் போது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

சடாரென்று ஒன்று அவன் மனதில் உதித்தது.

அந்த மயக்கத்திலும் யாரோ ஒருவன் தன்னை நெருங்குவது அறிந்து “தொடாதே” என்று அதட்டியவள் தன் மேல் உள்ள நம்பிக்கையால்தான் தன்னை நெருங்க விட்டாள்.

இப்போது தன் மீதுள்ள நம்பிக்கையால்தான் அம்மாவும் மேலே வராமல் தனதறைக்குச் சென்றுவிட்டார்.

சட்டென்று பின்வாங்கினான்.

அவளது முகம் மட்டும் பூ மாதிரி இல்லை. அவளே பூ போன்று மென்மையாகதான் இருக்கிறாள் என்று அவன் மனம் நினைத்தது.

ஒரு போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டவன் அறைக் கதவை சாத்திவிட்டு தனதறைக்குள் நுழைந்தான்.

ன்று எதார்த்தமாக தன் தாயும் தம்பியும் பேசிக்கொள்வதை மகேந்திரன் கேட்க நேர்ந்தது.

“அம்மா. என் தேர்வு எப்படிம்மா?”

“ம் அருமைதான் யுகா.”

“நான்தான் சொன்னேன்ல. உங்களுக்கு அடுத்து என்னை அக்கறையா கவனிச்சுக்க அவளால் மட்டும்தான் முடியும்னு சொன்னேன்லம்மா.”

“நீ சரியாதான் சொல்லியிருக்கே. நான் அப்பாக்கிட்ட பேசிடுறேன். அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம். ஆமா கிருஷ் என்ன சொல்வான்னு தெரியலையே.”

அவர் கவலையுடன் சொல்ல அவனுக்கு அவள் தன்னிடம் கொடுத்த வாக்கு நினைவுக்கு வர,

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா.”

என்று நம்பிக்கையுடன் சொன்னான்.

“இது விளையாட்டு இல்லை யுகா. வாழ்க்கை. இதில் ஒருத்தியை கட்டாயப்படுத்தி ஒருத்தனோட வாழ வைக்க முடியாது.”

“அம்மா. நான் இதைப்பத்தி யோசித்தது அவளுக்காகவும்தான் அம்மா. அவள் புரிஞ்சுப்பா.”

அவ்விடத்தை விட்டு நகர்ந்த மகேந்திரனுக்கு ‘தாய்க்குப் பின் தாரம்’ என்ற பழமொழி ஏனோ நினைவுக்கு வந்தது.
தம்பிக்காவது நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று மனதார நினைத்தான்
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 30-04-2019, 12:32 PM



Users browsing this thread: 5 Guest(s)