23-04-2019, 11:07 AM
``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..?” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு
கை சின்னத்திற்கு வாக்களித்தபோது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள லைட் ஒளிர்ந்ததை அடுத்து, கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட கோவளம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கை சின்னத்திற்கு வாக்களித்தபோது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள லைட் ஒளிர்ந்ததை அடுத்து, கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட கோவளம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்துவருகிறது. முதல்கட்ட தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்தது. இரண்டாம் கட்டமாக, கடந்த 18 -ம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இன்று மூன்றாம் கட்டமாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளம், கர்நாடகம், கோவா, ஒடிசா, சத்தீஸ்கர், அஸ்ஸாம், திரிபுரா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடந்துவருகிறது.
இதன் அடிப்படையில், கேரள மாநிலத்தின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட கோவளம் செவ்வர வாக்குச்சாவடியில், 151-வது பூத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் சுமார் 76 பேர் ஓட்டு போட்டனர். 77-வது நபர் கை-க்கு வாக்களித்தபோது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள லைட் ஒளிர்ந்ததாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 151-வது பூத்தில் மட்டும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.