நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#97
இடையில் யுகேந்திரன் வந்து சாப்பிட அழைத்த போது அவன் பசி தாங்க மாட்டான் என்று அவனை சாப்பிடச் சொல்லிவிட்டாள். அவள் மணமக்கள் சாப்பிட வரும்போது வருவதாகச் சொல்லிவிட்டாள்.

சாருமதிக்கு அவளைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.
அவளை ஒரு சில முறைகளே பார்த்திருக்கிறாள். தான் சொன்னதற்காக கூடவே நிற்கிறாள்.
அவளுக்கு இருக்கும் பாசம் கூட தன் உடன் பிறந்த தங்கைக்கு இல்லையே. தமக்கை திருமணமாகி புகுந்த வீட்டிற்குப் போகப் போகிறாள். அவளுடன் நேரம் செலவிடுவோம் என்று அவளுக்குத் தோன்றுகிறதா?

அவள் சாருலதா எங்கே என்று பார்த்தாள். அவள் மகேந்திரன் குடும்பத்தாரோடு உணவருந்தச் செல்வது தெரிந்தது.

ஒரு விரக்திப் புன்னகையுடன் மேடைக்கு வந்தவர்களிடம் கடனே என்று பரிசுப் பொருட்களைப் பெற்று புகைப்படம் எடுப்பதற்கு நின்றாள்.

ஒரு வழியாக உறவினர்கள் கூட்டம் குறைய மணமக்களை உணவருந்த அழைத்தனர். சாருமதி தன்னுடனே நின்றுகொண்டிருந்த கிருஷ்ணவேணியை விட்டுவிடாமல் அழைத்துச்சென்றாள்.

அவளும் வனிதாமணியிடம் சொல்லிக்கொண்டு சாப்பிட சென்றாள். அவள் எப்போது தனியாக மாட்டுவாள் என்று காத்திருந்த சாருலதாவும் அவர்களைப் பின்தொடர்ந்தாள். தன்னுடன் ஒரு தோழியையும் அழைத்துச்சென்றாள். இல்லை என்றால் அவள் நினைத்த காரியத்தை எப்படி செய்வது?

மணமக்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் கிருஷ்ணவேணி. அப்போது அங்கே பரிமாறுவது போன்று சாருலதா வந்து சேர்ந்தாள். அதைக் கண்ட சாருமதிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ஆனால் அவள் பேச ஆரம்பித்ததும் தங்கை மேல் வெறுப்பு அதிகமாகியது.

“சில பேர் பணக்கார வீட்டுத் திருமணத்திற்கு கூப்பிட்டா பல்லை இளிச்சுக்கிட்டு கையை வீசிக்கிட்டு வந்துடறாங்க. பாவம். இந்த மாதிரி எல்லாம் சாப்பாடு சாப்பிட்டு பழக்கம் இருக்காதுல்ல‘. போனாப் போயிட்டு போறாங்கன்னு விடறமாதிரி இருக்கு. நல்ல நாளும் அதுவுமா அன்னதானம் செய்தா நல்லதுதானே?”

சாருலதா தனது தோழியிடம் பேசிக்கொண்டே கிருஷ்ணவேணியை ஜாடையாகப் பார்த்தாள்.

கிருஷ்ணவேணியின் உடல் விரைத்தது. உணவு சாப்பிடுவதை நிறுத்தினாள். இது மாதிரி எத்தனையோ பேச்சுக்களை கேட்டவள்தான். இப்போது எழுந்துபோனால் சாருமதி வருத்தப்படுவாள். ஆனால் உணவு தொண்டைக்குழியை விட்டு தாண்ட மாட்டேன் என்று அடம்பிடித்தது.

சாருமதிக்கு கோபம் வந்தது.
இப்போது ஜாடையாகப் பேசுகிறாள். அவளிடம் கேட்கப் போனால் நான் என்ன கிருஷ்ணவேணியையா பேசினேன். பொதுவா சொன்னேன் என்று மறுப்பாள்.
மற்றவர்களுக்கு இப்போது அவள் யாரைச் சொல்கிறாள் என்று தெரியாது. நான் கேட்கப் போய் கிருஷ்ணவேணிதான் என்று மற்றவர்களுக்குத் தெரிந்துபோனால் அவள் கூனிக்குறுகிப்போவாள்.

அவள் மெதுவே கிருஷ்ணவேணியைத் தட்டிக்கொடுத்தாள். அவளும் சுதாரித்துக்கொண்டாள்.

சாருமதி தனது தங்கையை அழைத்தாள்.

“அக்கா. வேண்டாங்க்கா. என்னால் பிரச்சினை வேண்டாம்.”

கிருஷ்ணவேணி தடுத்தாள். அதை சாருமதி கண்டுகொள்ளவில்லை. மீண்டும் சாருலதாவை அழைத்தாள். அதுதானே அவளுக்கும் வேண்டும். தன்னை தமக்கை திட்டப்போகிறாள். நான் என்ன கிருஷ்ணவேணியைப் பற்றியா பேசினேன். என்று மற்றவர்களுக்கு அவளைத்தான் நான் திட்டினேன் என்று காட்டிவிடவேண்டும் என்ற உத்வேகத்தில் வந்தவளிடம் சாருமதி ஒரு மோதிரத்தைக் கழட்டி நீட்டினாள்.

அது சாருலதா பெருமையுடன் தனது சகோதரிக்கு மேடையில் அணிவித்தது.

“இது கொஞ்சம் லூசா இருக்கு லதா. நீ பத்திரமா வச்சுக்கோ. அப்புறம் நகைக்கடையில் கொடுத்து சரி செய்திடலாம்.”

என்று சொன்னவள் அதன் பிறகு அவளைக் கண்டு கொள்ளாமல் கிருஷ்ணவேணி பக்கம் திரும்பினாள்.

“அது எப்படி கிருஷ்? என்னோட தங்கச்சி என் கூடவே இருக்கா. அவளுக்கு என்னோட விரல் அளவு தெரியலை. நீ எப்படி சரியா என்னோட விரல் அளவு தெரிஞ்சு இந்த மோதிரம் வாங்கினே? இந்த மாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தெரியுமா? நான் இனி இதை என் விரலை விட்டு கழட்ட மாட்டேன்.”



மற்றவர்களுக்குக் கேட்கும்படி பேசியவள் கிருஷ்ணவேணியை சாப்பிட வலியுறுத்தினாள்.
தன் தங்கைக்கு இப்போது வைத்த குட்டு போதும் என்று தோன்றியது. அவள் தன்னை முறைப்பதைக் கண்டும் அவள் பயப்படவில்லை. இனி எப்போதும் பயப்பட போவதில்லை என்று நினைத்துக்கொண்டாள். அவள் இப்போது அடுத்த வீட்டு பெண்ணாகி விட்டாள்.
அத்துடன் இப்போது மட்டும் அந்த இடத்தில் யுகேந்திரன் இருந்திருந்தால் சாருலதா பேசிய பேச்சிற்கு என்ன பண்ணியிருப்பானோ? நல்லவேளை அவன் இல்லை என்று நிம்மதி உண்டாகியது.

அவள் சாப்பிட்டுவிட்டு வர மணமக்களை அழைத்துச்செல்ல நேரம் வந்துவிட்டதால் மாப்பிள்ளை வீட்டினர் அழைத்துச்சென்றுவிட்டனர்.

அதன் பிறகு வீட்டாரிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்களும் கிளம்பினர்.

வீட்டிற்கு வந்த உடனே கல்யாண சாப்பாடு சாப்பிட்டது என்னவோ போலிருப்பதாகச் சொல்லிவிட்டு தனது அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டான் யுகேந்திரன்.

தனது அறைக்கு வந்த கிருஷ்ணவேணிக்கு ஏனோ மனம் சரியில்லை.

சாருலதா ஏன் தன்னை விரோதி போல் பாவிக்க வேண்டும்?

தான் அவளுக்கு என்ன கெடுதல் செய்தோம்?

எத்தனைதான் யோசித்தாலும் அவளுக்கு விடைதான் கிடைக்கவில்லை.

ஏனோ உறங்கப் பிடிக்கவில்லை.

மாடிக்குச் சென்று இயற்கைக் காற்றில் நின்றால் தேவலாம் போலிருந்தது.

அங்கே ஏற்கனவே மகேந்திரன் நின்றுகொண்டிருந்தான்.

அவளுக்குத் தனது பிரச்சினை பின்னுக்குப் போனது. அவனிடம் யுகேந்திரன் பற்றி இப்போது பேசலாமா என்று யோசித்தாள்.

உடனேயே பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தவள் அவனை நெருங்கினாள்.

அவன் என்ன என்று பார்வையாலேயே வினவினான்.
அவளுக்கு அப்போதுதான் தான் அதிகப் பிரசிங்கித்தனமாக பேச வந்தது புரிந்தது. என் குடும்ப விசயத்தில் தலையிட நீ யார்? என்று கேட்டுவிட்டான் என்றால்.
அவளுக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

“என்ன?”

அவன் குரல் அதட்டலாய் ஒலித்ததோ?

“நா…நா…ன்… நான் யுகா பத்தி பேச வந்தேன் சார்.”

ஒருவழியாகச் சொல்லி முடித்துவிட்டாள்.

“யுகா பத்திப் பேச என்ன இருக்கு?”

கோபமுடன் கேட்டான்.

அவள் ஒரு வழியாக சொல்லி முடித்துவிட்டாள்.

அவன் அவளை முறைத்தான்.

“அறிவிருக்கா உனக்கு?”
அவன் கேட்ட தொனியில் அவளுக்குள் நடுக்கம் பரவியது. தான் தேவையில்லாமல் அவனிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்டது புரிந்தது. திகைத்து விழித்தாள்
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 22-04-2019, 05:51 PM



Users browsing this thread: 7 Guest(s)