20-04-2019, 06:01 PM
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்ச்சி வீதம் பட்டியலில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர், நாகை, திருவாரூர், விழுப் புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட மற்றும் கடலோர மாவட் டங்களே எப்போதும் போல இந்த ஆண்டும் பின்னடைவை சந்தித் துள்ளன. அரசுப் பள்ளிகள் தேர்ச்சி வீதத்திலும் மேற்கண்ட மாவட் டங்கள் மிகவும் பின்தங்கியுள் ளன.
2,404 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி
கடந்த கல்வியாண்டில் மொத் தம் 2, 697 மாற்றுத்திறனாளி மாணவர் கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 2,404 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக பார்வையற்ற மாணவர்கள் 95.83 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காது கேளாதவர்கள் பிரிவில் 88.89 சதவீதம் பேரும், உடல் ஊனமுற்றோர் பிரிவில் 87.86 சதவீதம் பேரும், இதர பிரிவுகளில் 87.27 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடைசி இடத்தில் வேலூர்
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 40,714 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 34,800 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 85.47 சதவீதமாகும். ஒட்டு மொத்த பள்ளிகள் தேர்ச்சியில் மாவட்ட வாரியாக வேலூர் கடைசி இடத்தில் உள்ளது. இதேபோல், அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் 79.31 சதவீதம் பெற்று வேலூர் கடைசி இடத்துக்கு சென்றுள்ளது.
கலைப்பிரிவில் தேர்ச்சி சரிவு
பாடப்பிரிவு வாரியாக தேர்ச்சியில் கலை மற்றும் தொழிற் பிரிவு மாணவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதன்படி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கலைப்பிரிவில் 80.13 சதவீதமும், தொழிற்பிரிவில் 82.70 சதவீதமும்தான் உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவாகும். கடந்த தேர்வில் கலைப்பிரிவில் 87.64%, தொழிற்பிரிவில் 86.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். பிளஸ் 2 தேர்வு முறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மற்றும் தேர்வு வினாத்தாள்கள் கடினமாக இருந்ததால் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. மறுபுறம் அறிவியல் பிரிவில் 92.75 சதவீதமும், வணிகவியல் பிரிவில் 90.78 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னரே வெளியான முடிவு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்தது. ஆனால், 6 நிமிடங்கள் முன்னதாகவே பத்திரிகை அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் மாணவர்களுக் கும் குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் வந்தன. அதேநேரம் தேர்வுத்துறை இணையதளத்தில் 9.30 மணிக்கு தான் தேர்வு முடிவுகள் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
வெறிச்சோடிய பள்ளிகள்
கடந்த காலத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிய மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளிகள் மற்றும் இணையதள மையங்களை நோக்கி படை எடுப்பது வாடிக்கையாக இருந்தது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு இப்போது தேர்வு முடிவுகளை இணையதளம் மற்றும் குறுந்தகவல் மூலம் அறிய மாணவர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டன. இதனால் பல மாணவர்கள் வீட்டில் இருந்தபடி தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொண்டனர். இதனால் பள்ளிகள், பிரவுசிங் சென்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதே போல், தேர்வு முடிவுகள் வெளி யிடும் நாளில் சென்னை நுங்கம் பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்கு நரக அலுவலகமும் பத்திரிகை யாளர்கள், பெற்றோர்கள் கூட்டத் தால் பரபரப்பாக காணப்படும். ஆனால், அங்கும் நேற்று பெரும் அமைதியே நிலவியது. புனித வெள்ளி விடுமுறை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிகளுக்கு ஆசிரி யர்கள் வருகையும் குறைவாகவே இருந்தது.
104-ஐ அழையுங்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. குறைந்த மதிப்பெண், தோல்வி என்பதெல் லாம் நிலையல்ல. தோல்வியால் நம்பிக்கை இழந்த மாணவர்கள், ஆலோசனைக்கு 104 இலவச உதவி மையத்தை அழைக்கலாம். தோல்வி மனப்பான்மையில் விரக்தி அல்லது தவறான எண்ணம் தோன்றும் மாணவர்கள் தயங்காமல் எண் 104-ஐ அழைத்தால் உங்களுடன் பேசி உங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையான வழிகாட்ட ஆலோசகர்கள் தயாராக உள்ள னர். மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஏற்படும் மன உளைச்சல், உறவினர்களிடம் எப்படி தலைகாட்டுவது என்பது போன்ற எண்ணங்கள் இருந்தால், அவர்களும் தயக்கமின்றி 104-யை அழைத்தால் தகுந்த ஆலோசனை கிடைக்கும்.
அரசு பள்ளிகள் தேர்ச்சி விவரம்
மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகள் தேர்ச்சி வீதத்தில் 92.64 சதவீதம் பெற்று கன்னியாகுமரி முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியான 2, 3-ம் இடங்களில் ஈரோடு (92.38%), பெரம்பலுார் (91.80%) மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இடத்தில் வேலுார் மாவட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது