Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அதானி துறைமுகத்துக்காக 6,200 ஏக்கர் நிலம்... சென்னையின் அடுத்த சூழலியல் பேராபத்து?

இப்போதிருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் பரப்பளவு 330 ஏக்கர்கள். அதை 6200 ஏக்கர்களுக்கு விரிவாக்கப் போகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர்களைக் கரைக்கடலில் ஆக்கிரமிக்கப்போகிறார்கள்.
[Image: 155307_thumb.jpg]
மீன்களை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்கள். பல்வகையான மீன்களைக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருந்த மீனவர்களின் முகங்கள் செலவுக்கேற்ற வரவு கிடைக்காத கவலையை அப்பட்டமாகக் காட்டின. முன்பிருந்த அளவுக்கு அவர்களுக்குத் தற்போது மீன்வளம் அவ்வளவு திருப்திகரமானதாக இருக்கவில்லை. பழவேற்காட்டு ஏரியின் சேற்று நிலங்களில் வலைகள், தூண்டில்கள் என்று எதுவுமே இல்லாமல் வெறும் கைகளால் நண்டுகளையும் இறால்களையும் பிடித்துக்கொண்டுவந்த இருளர் பழங்குடியின மக்களையும் அங்கு பார்க்க முடிந்தது. அந்தச் சந்தையில்தான் அவரையும் பார்த்தேன். அவர் பெயர் சீனிவாசன். சாத்தான்குப்பத்தைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். காட்டுப்பள்ளி துறைமுகம் உட்பட சென்னைக் கடற்கரையில் அமைந்திருக்கும் மூன்று துறைமுகங்கள் உண்டாக்கிய சூழலியல் தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.
அவருடைய சிறுவயதில் தன் நண்பர்களோடு ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த கடற்கரை இன்று காட்டுப்பள்ளி துறைமுகம் இருக்கும் பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள்ளே இருக்கிறது. அவர் இளமைப்பருவம் எய்தி, தன் தந்தையைப்போல் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லத் தொடங்கியபோது தன் கிராமத்திலிருந்த மூன்று தெருக்கள் ஏற்கெனவே கடலுக்குள் மூழ்கிப் போயிருந்தன. இப்படிச் சிறிது சிறிதாகத் தன் கிராமத்தை இழந்துகொண்டிருந்த அவரும் சாத்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மற்ற மக்களும் 2004-ம் ஆண்டு சுனாமியின்போது மிகப்பெரிய சேதங்களைச் சந்தித்தனர். அதன் பிறகு அந்தக் கிராமமே இடம் மாற்றப்பட்டது. பழவேற்காட்டுக்கு அருகில்தான் இப்போது இருக்கிறார்கள்.
[Image: ANIL1417_17357.JPG]
சென்னை துறைமுகம் வந்ததும் வந்துச்சு. எங்க இடத்தையே அழிச்சிடுச்சு. சின்ன வயசுல நான் விளையாடின இடமெல்லாம் நான் தொழிலுக்குப் போகத் தொடங்கிய காலத்துலயே கடலுக்குள்ள போயிருச்சு. அதுக்கு அப்புறம் எண்ணூர், காட்டுப்பள்ளின்னு ரெண்டு துறைமுகம் வந்துடுச்சு. நான் தொழிலுக்குப் போக ஆரம்பிச்ச கொஞ்ச காலத்துல எங்க கிராமத்தோட மூணு தெருக்கள் கடலுக்குள்ள போயிருந்துச்சு. சுனாமி வந்தப்புறம் நான் விளையாடின, தொழிலுக்குப் போயிட்டு வந்து படகு நிறுத்துன இடமெல்லாம் இப்ப கடலுக்குள்ள. எங்க கிராமம் கடலுக்குள்ள போனது போனதுதான். இப்போ இங்கயே மூணு துறைமுகங்கள் இருக்கு. இப்படியே போச்சுன்னா இன்னொரு சாத்தான்குப்பமா பழவேற்காடு மாறி நிற்கும்" என்றார் மீனவரும் தன் பூர்வாங்கமான வாழ்விடம் கடலுக்குள் போவதைத் தன் கண்களால் கண்டவருமான சீனிவாசன். அவரது அச்சமும் வருத்தமும் நியாயமானதுதான். ஏற்கெனவே, சென்னை துறைமுகமும் எண்ணூர் காமராஜர் துறைமுகமும் சேர்ந்து வடசென்னைக் கடற்கரையை முற்றிலுமாக அரித்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் பழவேற்காடுவரை அமைந்துள்ள கடற்கரைப் பகுதிகளுக்குப் பேராபத்தாக வந்து நிற்கின்றது. இந்தத் திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால் பழவேற்காடு முழுவதும் கடலின் ஒருபகுதியாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காட்டுப்பள்ளி பகுதியில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விரிவாக்கத் திட்டத்துக்குச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய அனுமதி வழங்கும்முன், முதலில் அந்தப் பகுதியை ஆய்வுசெய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைமுக விரிவாக்கத் திட்டம் என்ற போர்வையில் இப்போதிருக்கும் பரப்பளவைவிடச் சுமார் இருபது மடங்கு அதிகமான பகுதிகளை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது அதானி குழுமம். இந்தத் திட்டம் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் சூழலியல் வரலாற்றில் என்றென்றும் மீட்டெடுக்க முடியாத அளவுக்குப் பேரழிவுகளைக் கொண்டுவர வல்லவை. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான எண்ணூர் கழிமுகம், பழவேற்காடு ஏரி, கருங்காளி கழிமுகம், கொற்றலை ஆறு, சதுப்பு நிலங்கள் போன்ற கடற்கரை நில அமைப்புகளை மாற்றியமைப்பதால் கடல் அரிப்பு, மீன்பிடிப் பகுதிகளின் அழிவு, அதனால் சிறு குறு மீனவர்களின் வாழ்தார அழிவு என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். சரி, அப்படி என்னதான் இந்தத் திட்டத்தில் செய்யப்போகிறார்கள். துறைமுகத்தை விரிவாக்குவதால் ஏற்றுமதி இறக்குமதியை அதிகப்படுத்தலாம். பொருளாதாரத்தில் மேன்மையடையலாம். உண்மைதான். ஆனால், அதற்காக நாம் கொடுக்கப்போகும் விலையைப் பொறுத்தே அந்தப் பொருளாதார வளர்ச்சி யாருக்கானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அந்த விலை என்னவென்பதைப் பார்ப்போம்.
[Image: Adani-M-P-Map_17002.png]

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் வரைபடம்
[color][font]
இப்போதிருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் பரப்பளவு 330 ஏக்கர்கள். அதை 6,200 ஏக்கர்களுக்கு விரிவாக்கப்போகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர்கள் கரைக்கடலில் ஆக்கிரமிக்கப்போகிறார்கள். காட்டுப்பள்ளிகுப்பம் பகுதியின் கரைக்கடல் முழுவதும், ஆழமற்ற சேற்று நிலங்களைக் கொண்டது. இங்குதான் நண்டுகள், இறால்கள், சில மீன் வகைகள், சிறு சிறு ஆமை வகைகள் அனைத்தும் கிடைக்கின்றன. அந்த இடத்தை மணல்கொட்டி முற்றிலும் நிலமாக்கிவிடுவார்கள். கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகள் மணல் கொட்டப்பட்டு நிலமீட்பு செய்யப்படும். அதன்பிறகு அங்கு பல்வேறு துறைமுகப் பணிகளுக்கான கட்டுமானங்கள் நடைபெறும். நடுவில் ஒரு பகுதிக் கடலை ஆழப்படுத்திக் கப்பல் வந்து நிற்பதற்கான வசதிகளைச் செய்துகொடுப்பார்கள். சுனாமி போன்ற பேரலைகளின்போது இதுபோன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகள்தான் அங்கு அதிக சேதம் ஏற்படாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அழித்து இயற்கையான நில அமைப்பையே மாற்றுவதைச் சூழலியல் பேரழிவு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நில அமைப்பையே செயற்கையாக மாற்றியமைத்தால் என்ன நடக்கும் என்பதற்கான சாட்சியங்களாக நம்முன் ஏற்கெனவே இரண்டு துறைமுகங்கள் நிற்கின்றன. அந்தச் சேதங்களையே நம்மால் இன்னும் சரிசெய்ய முடியாமலிருக்க மூன்றாவதாக இருக்கும் இந்தத் துறைமுகத்தையும் விரிவாக்குகிறேன் என்ற போர்வையில் மேன்மேலும் அழிவுகளை உண்டாக்குவது அறிவுடையமையல்ல.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாதிக்கப்படப்போகும் ஆப்பிரஹாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிகுப்பம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது பெரும் அச்சத்தில் உள்ளனர். காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து பழவேற்காடு வரை நீளும் கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே சில நூறு மீட்டர்கள் மட்டுமே கடற்கரை இருக்கிறது. சில கிலோமீட்டர் தூரத்துக்கு இருந்த இந்தக் கடற்கரை இவ்வளவு சிறுத்துப் போனதற்குச் சென்னையில் உருவான துறைமுகங்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இப்போது திட்டமிடப்பட்டிருக்கும் இந்த விரிவாக்கம் நடைபெற்றால் மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு கொற்றலை ஆறும் கடலோடு கலந்துவிட்டால்கூட ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அதானிக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து வருபவரும் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படப்போகும் பகுதிகள் மற்றும் அதன் வாழ்வாதாரத்தை வரைபடமாக்கியவருமான சரவணனைச் சந்தித்துப் பேசியபோது, 
[/font][/color]
[Image: ANIL1436_17241.JPG]
[color][font]
"MIDPL என்ற பெயரில் இயங்கிவரும் அதானிக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகம், கடந்த நவம்பர் மாதம் விரிவாக்கத் திட்டத்துக்கான சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்குக் குறிப்பாணை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு டிசம்பர் மாதம் முழுவதும் அதைக் கிடப்பில் போட்டது. இந்நிலையில், ஜனவரி 18-ம் தேதி கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் 2019-ஐ மத்திய அரசு வெளியிடுகிறது. நான்கு கடலோர மண்டலங்களுக்கு இருந்த அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரண்களையும் உடைத்து லாப நோக்கத்தோடு அதைப் பயன்படுத்தும் வகையில் 2019-ம் ஆண்டு விதிகள் கொண்டுவரப்படுகின்றன. உடனடியாக ஜனவரி 20-ம் தேதி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கான கோப்பு எண் ஒதுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான அவர்களின் திட்ட வரைபடத்தில் காட்டியுள்ள இடங்களைப் பார்த்தால், துறைமுகத்திலிருந்து ஆறரைக் கிலோமீட்டர்வரை கடலில் மணல்கொட்டி சுமார் 2000 ஏக்கர் நிலமீட்பு செய்யப்போகிறார்கள். அந்த இடத்தின் நில அமைப்பையே மாற்றியமைக்கப் போகிறார்கள். இதனால், கூடன்குப்பத்தில் தொடங்கி காட்டுக்குப்பம்வரை பல கிராமங்களைச் சேர்ந்த பாரம்பர்ய மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்காக அவர்கள் நிலமீட்பு செய்யவிருக்கும் கடல்பகுதியும் கொற்றலை ஆற்றின் உப்பங்கழிப் பகுதியும் இந்தப் பாரம்பர்ய மீனவர்களின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பகுதி. அவையனைத்தின் மீதும் கைவைக்கிறார்கள். இது மீனவர்களுக்கு விழும் மிகப்பெரிய அடி. அங்கிருக்கும் கடல்பகுதியில் ஷோல் (Shoal) என்ற இயற்கையான திட்டு உருவாகியிருக்கும். சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களால் சில ஆண்டுகளிலேயே பல கிலோமீட்டர்களுக்குக் கடற்கரை அரிப்பு ஏற்பட்டது. அந்த அளவுக்குப் பெரிய பாதிப்புகள் இங்கு நிகழாததற்குக் காரணம், இந்தத் திட்டுகள்தான். இப்போது அதைச் சுத்தமாக அழிக்கப்போகிறார்கள். பழவேற்காட்டுக்கும் கடலுக்கும் இடையில் சிறிய நிலத்திட்டுதான் இருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அங்கு வேகமாகக் கடல் அரிப்பு நிகழும். அதனால் பழவேற்காடு ஏரி கடலோடு கலந்துவிடும் பேராபத்து இருக்கிறது" என்று கூறினார்.
[/font][/color]
[Image: Koraikuppam_Sea_Map2_17054.png]

"காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க வரைபடத்தில் ஆக்கிரமிக்கப்போகும் பகுதிகளின் தற்போதைய நிலையும் அவர்கள் நிலமீட்பு செய்யப்போகும் கரைக்கடல் பகுதியிலுள்ள மீன் வளமும் இந்த வரைபடத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. வரைபடத்தில் சுட்டப்பட்டிருக்கும் கருங்காளி சேறு என்ற பகுதியிலிருந்து தற்போது துறைமுகத்தின் அலைதடுப்புச் சுவர்கள் இருக்கும் இடம்வரை மீன் மற்றும் மற்ற கடல் வளங்கள் அதிகமுள்ளன. அந்த நிலம் மொத்தத்தையும் மணல் கொட்டி நிலமாக்கி துறைமுகப் பயன்பாட்டுக்குத் திருப்புவதுதான் திட்டம். அது நடந்தால் மேற்குப் பக்கமாக இருக்கும் கொற்றலை ஆறு மற்றும் கிழக்கே கரைக்கடல் தொடங்கி வடக்கே இருக்கும் பழவேற்காடு வரை அதன் பாதிப்புகள் அளவிட முடியாத அளவுக்கு இருக்கும் என்பதை இந்த வரைபடம் தெளிவாகக் காட்டுகின்றது."
[color][font]
"1996-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தை விரிவுபடுத்தினார்கள். மீண்டும் 1999-ல் எண்ணூர் துறைமுகத்தைக் கொண்டுவந்து கடல் அரிப்பை அதிகப்படுத்தி எங்கள் கிராமங்களையும் வாழ்வாதாரத்தையும் சீரழித்தார்கள். அப்போதே பழவேற்காடு பாதி அழிந்துவிட்டது. அதோடு நிற்காமல் 2007-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2012-ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் திறக்கப்பட்டது. சாத்தான்குப்பம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்தன. அவை இப்போதிருக்கும் நிலையில் இந்த விரிவாக்கத் திட்டத்தால் அவை கடலுக்குள் மூழ்கினாலும் ஆச்சர்யமில்லை. இப்போதே கடல் அரிப்பு அதிகமாகி, வெகுதூரத்துக்கு இருந்த கடற்கரை குறைந்து எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே வந்துவிட்டது. 
காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே உள்ளது. இந்தத் துறைமுக விரிவாக்கம், ஒட்டுமொத்த ஏரியையுமே பாதிக்கும். ஏற்கெனவே இந்தத் துறைமுகங்களால் நாங்கள் பல இழப்புகளைச் சந்தித்து வருகிறோம். இதற்கு மேலும் விரிவாக்கினால் இந்தப் பகுதியின் மீன் மற்றும் மற்ற வளங்கள் முற்றிலுமாக அழிந்து எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும். காட்டுப்பள்ளியில் அவர்கள் விரிவாக்கத் திட்டம் போட்டிருக்கும் பகுதிகள் முழுவதும் சேற்றுத் திட்டுகளைக் கொண்ட கடல் பகுதிகள். அதுதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்றவை அதிகம் கிடைக்கும் பகுதி. அதோடு ஏரிகளின் முகத்துவாரப் பகுதிகளில் இறால் வகைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. சிறு ஆமை வகைகளும் இங்குதான் அருகில் கடற்கரை ஓரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரி நம் பழவேற்காடு. இதற்கு மிக அருகிலேயே இந்தக் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ளது. இதைத் தற்போது விரிவாக்குவது இன்னும் அதிகமான பாதிப்புகளையே ஏற்படுத்தும். ஐம்பது வகையான மீன்கள், பத்து வகையான பாசிகள், பதினைந்து வகையான இறால்கள், நண்டுகள் இங்கு வாழ்கின்றன. உலக நாடுகளிலிருந்து பல்வேறு பறவைகள் இங்கு வலசை வந்து செல்கின்றன. இப்படியானதொரு பல்லுயிர்ச்சூழல் மிக்கப் பகுதியின்மீது கொஞ்சம்கூடக் கரிசனமின்றி நடந்துகொள்கின்றனர். இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது எங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதற்குச் சமம்" என்றார் திருவள்ளூர் மாவட்ட பாரம்பர்ய ஐக்கிய மீனவர் சங்கப் பொதுச் செயலாளர் துரை மகேந்திரன். இதுதொடர்பாக அதானி துறைமுக நிறுவனத்திடம் விளக்கம் கேட்டோம். இதுவரைக்கும் பதில் வரவில்லை.
[/font][/color]
[Image: ANIL1416_17495.JPG]
[color][font]
இங்கு பொருளாதார வளர்ச்சி என்பது பணம் படைத்தவர்களின் லாபங்களைக் கொண்டு கணக்கிடப்படும்வரை, அவர்களுக்காகச் சுரண்டப்படும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினரும் ஏழை மக்களும் அரசுகளின் கண்களுக்குத் தெரிய மாட்டார்கள். பொருளாதார அளவீடுகள் மாற வேண்டும். ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியே சமுதாய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இந்தக் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பிரச்னையில் முதன்மையானது எது?
இங்கு முக்கியமானது, பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரமா, அதானி போன்ற பெருமுதலாளிகளின் லாபப் பெருக்கமா?
[/font][/color]
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 17-04-2019, 05:41 PM



Users browsing this thread: 89 Guest(s)