நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#90
“நேத்து அந்த கிருஷ்ணவேணி யாரோ ஒரு பணக்காரனோடு ரொம்ப நெருக்கமாய் காரில் ஏறிப்போனாள். அந்த ஆள் யாருன்னு உனக்குத் தெரியுமா?”

அவன் தன் அண்ணனைப் பார்த்தான்.
அவன் முகத்திலும் கேள்வி இருந்தது.
“அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு நீ பதில் சொல்லு சாருக்கா? கிருஷ்ணவேணி ஒரு பணக்கார ஆணோட நெருக்கமா காரில் ஏறிப்போனதைப் பற்றி யார் உன்கிட்ட சொன்னா?”

“அதை யாராவது வந்து சொல்லியிருந்தா நாங்க நம்பியிருக்கவே மாட்டோம். இல்லையா அத்தான்?”

அவள் தன்னுடன் மகேந்திரனையும் கூட்டுச் சேர்த்தாள்.

“அப்படின்னா அவ போனது உங்களுக்கு எப்படி தெரியும்?”

கூர்மையான விழிகளுடன் பார்த்தவாறே அவளிடம் கேட்டான்.

“நாங்கதான் நேராவே பார்த்தோம்.”

“உங்களுக்கு எங்கள் கல்லூரி இருக்கும் இடம் சம்பந்தமே இல்லாதது. அப்படியிருக்க நீங்க எப்படி பார்த்தீங்க?”

“அது வந்து நீ வரலைன்ன உடனே கிருஷ்ணவேணியை அழைக்கப் போனோமா? அப்பதான் பார்த்தோம்.”

“நீங்க அழைக்க வர்றீங்கன்னு கிருஷ்ணாக்கிட்ட சொன்னீங்களா? இல்லை அவ உங்களை அழைக்க வாங்கன்னு கூப்பிட்டாளா?”

“அவ எப்படி கூப்பிட முடியும்? நாங்க என்ன அவ வேலைக்காரங்களா? அவ ஒன்னும் கூப்பிடலை. எனக்கு அவ போன் நம்பர் தெரியாததால் அவகிட்ட நானும் கூப்பிட்டுப் பேசலை.”

“என்ன திடீர்னு அவ மேல் அக்கறை? கிருஷ்ணாவைக் கண்டாலே உங்களுக்குப் பிடிக்காது. அப்படியிருக்க அவ தனியா வருவான்னு நினைவு வைத்து அவளை அழைக்கப் போயிருக்கீங்களே?”
கேட்டுவிட்டு நக்கலாய் ஒரு பார்வைப் பார்த்தான்.
அவள் விழி பிதுங்கிவிட்டது.

“அது… அது வந்து…”

அவள் இழுத்தாள்.

“நீங்க கிருஷ்ணாவைப் பத்தி ரொம்பக் கவலைப்பட வேண்டாம். அவ என்னோட தோழி. அவ மேல் அக்கறை காட்டுறதுக்கு எங்க குடும்பம் இருக்கு. நான் அவளைப் பார்த்துக்கிறேன். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க.”   

அழுத்தம் திருத்தமாய் சொன்னான். தன் அண்ணன் பக்கம் திரும்பினான்.

“அண்ணா. உனக்கு என்கிட்ட ஏதாவது கேட்கனும்னா நீ நேராவே கேட்கலாம். நாம ரெண்டு பேரும் உடன்பிறந்தவங்க. நமக்குள்ள ஆயிரம் இருக்கும். அதுக்கு நடுவில் வேற யாரையும் விடக்கூடாது.”

அவன் சமாதானமாய் தம்பியின் தோளைத் தட்டினான்.

“நீ கிருஷ்ணாவை சந்தேகப்படறியா அண்ணா?”

அவன் மறுப்பாய் எதையும் சொல்லவில்லை. அதைக் கண்டதும் யுகேந்திரனுக்கு வருத்தமாய் இருந்தது.

“அண்ணா. அவளை நேற்று காரில் அழைத்துச் சென்றது அவளோட அங்கிளோட சன் அருண்தான். ஊருக்கு எப்பவாவது வரும்போது கல்லூரி விடுதிக்குச் சென்று அவளைப் பார்த்துட்டுப் போவார். எனக்கும் நல்லா தெரியும். இப்ப கிருஷ்ணா நம்ம வீட்டில் இருக்கிறதால் அவளை கல்லூரியில் வந்து பார்த்துட்டு போயிருக்கிறார். என்னிடம் கூட போனில் பேசினார்.”

“ஏன் நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்திருக்கலாமே?”

சாருலதா கேட்க அவன் பல்லைக் கடித்தான்.

‘இவ அடங்கவே மாட்டாளா? நம்ம வீடாமே?’

“கிருஷ்ணா எங்க வீட்டில் தங்கியிருக்கிறாள்னு அவருக்குத் தெரியும்தான். இருந்தாலும் பழக்கப்படாத இடத்திற்கு வர அவருக்கு ஒரு மாதிரியாக இருந்ததாக என்னிடம் சொன்னார். எங்க கிருஷ்ணாவை நீங்க பார்த்துக்கிறதே பெரிசு. இதில் நாங்க வந்து உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பலைன்னு சொன்னார். நான்தான் அவரைத் திட்டினேன். கிருஷ்ணாவோட உறவுக்காரங்க எங்களுக்கும் உறவுக்காரங்கதான்னு அவரிடம் சொல்லி கண்டிப்பா வீட்டுக்கு வரனும்னு சொன்னேன். இப்ப ஏதோ முக்கியமான வேலையா வந்திருக்கிறதாகவும், அடுத்த முறை வரும்போது நிச்சயமாக வருவதாகவும் சொன்னார்.”

நீண்டதாகப் பேசி முடித்து பெருமூச்சு வாங்கினான்.
அதன் பின்னர் அவரவர் கடமை அழைக்க கிளம்பிவிட்டனர்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 15-04-2019, 11:12 AM



Users browsing this thread: 19 Guest(s)